பக்கங்கள்

இலவச SMS களை உடனுக்குடன் பெற ON TNPTFSVG அல்லது ON TNPTFMuthupandian என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு அனுப்பி இலவச குறுந்தகவல்களை(SMS) பெறுங்கள். DND (Do NOT Disturb) சர்வீஸ்ல் உள்ள எண்கள் அதனை(DND) நீக்கிய பிறகே இச்சேவையை பெறமுடியும். plz call 1909

Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

3/31/2011

கர்ப்பிணிகளையும், "அபார்ஷன்' ஆன ஆசிரியைகளையும் விட்டு வைக்காத தேர்தல் கமிஷன்

பொது மக்கள் பாராட்டும் வகையில், அரசியல் கட்சிகளுக்கு எதிராக பல்வேறு கிடுக்கிப்பிடி நடவடிக்கைகளை எடுக்கும் தேர்தல் கமிஷன், அதே பாணியை, கர்ப்பிணி பெண்கள் மற்றும் இளம் தாய்மார்களிடமும் காட்டுவது, அவர்களிடையே கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. கோவை மாவட்டத்தில், இந்த கொடூரம் அரங்கேறியுள்ளது.தேர்தல் பணியில் அரசு ஊழியர்களும், ஆசிரியர்களும் அதிகளவில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். தேர்தல் பணி என்றாலே, அரசியல் கட்சிகளுக்கு மத்தியில் அல்லாட வேண்டியிருக்கும் என்பதாலும், தேர்தலின்போது அபாயகரமான விளைவுகளை சந்திக்க நேரிடும் என்பதாலும், இந்தப் பணிகளை பெரும்பாலும் யாரும் விரும்பி ஏற்பதில்லை. அரசு ஊழியர்களாக இருப்பதால், வேறு வழியின்றி தேர்தல் பணிகளில் ஈடுபடுகின்றனர்.உடல்நிலை உள்ளிட்ட காரணங்களால், தேர்தல் பணியில் ஈடுபட முடியாத நிலை இருப்பதை ஊழியர்கள் எடுத்துக் கூறினாலும், அதிகாரிகள் கேட்பதில்லை. தேர்தல் பணியில் ஈடுபட்டே ஆக வேண்டும் என, பல இடங்களிலும் நிர்ப்பந்தம் செய்யப்படுகின்றனர். 

கோவை மாவட்டத்தில், அரசு பள்ளி ஆசிரியர்கள் பலருக்கும், தேர்தல் பணி வழங்கப்பட்டுள்ளது. இதில், பல ஆசிரியைகள் எட்டு, ஒன்பது மாத கர்ப்பிணிகளும், பச்சிளம் குழந்தை உள்ள ஆசிரியைகள் உட்பட பலர் உள்ளனர். தேர்தல் பணி ஒதுக்கீட்டு உத்தரவு வந்ததும், பயிற்சி நடக்கும் இடத்திற்கு சென்று, தேர்தல் பணி பார்க்க முடியாத நிலையை, ஆசிரியைகள் விளக்கமாக கூறியுள்ளனர். ஆனாலும், எதையுமே அதிகாரிகள் காதில் வாங்கவில்லை என, கூறப்படுகிறது. சம்பந்தபட்ட ஆசிரியைகள், பயிற்சி வகுப்புக்கு செல்லவில்லை. இந்நிலையில், பயிற்சி வகுப்புக்கு வராத ஆசிரியைகளிடம் விளக்கம் கேட்டு, "நோட்டீஸ்' அனுப்பப்பட்டுள்ளது. 


சிங்காநல்லூரைச் சேர்ந்த ஒரு ஆசிரியைக்கு திடீரென, "அபார்ஷன்' ஆகியுள்ளது. இதனால், டாக்டர் அறிவுரைப்படி ஓய்வெடுக்க விடுமுறை எடுத்துள்ளார். ஆனால், இவருக்கும் தேர்தல் பணி ஒதுக்கப்பட்டுள்ளது. 

இதுகுறித்து, அந்த ஆசிரியை கூறியதாவது: 
எனக்கு,சில தினங்களுக்கு முன் தான், "அபார்ஷன்' ஆனது. எனது உடல்நிலையை ஆய்வு செய்த டாக்டர், ஒரு மாதம் வரை ஓய்வெடுக்க வேண்டும் என கூறினார். அதன்படி, மருத்துவ விடுப்பின் கீழ், ஒரு மாதம் கருச்சிதைவு விடுப்பு எடுத்துள்ளேன். ஆனாலும், தேர்தல் பணிக்கு வந்தே ஆக வேண்டும் என, அதிகாரிகள் வற்புறுத்தினர். தேர்தல் பணி உத்தரவைக்கூட, எனது தந்தை தான் வாங்கி வந்தார். பல நாட்கள் அலையவிட்டதால், எனது உடல்நிலை மிகவும் மோசம் அடைந்துள்ளது. நீண்ட போராட்டத்திற்குப் பின், இன்று தான் (நேற்று) தேர்தல் பணி உத்தரவை ரத்து செய்தனர். 

ஒன்பது மாத கர்ப்பிணியாக உள்ள ஆசிரியைகளுக்கும் தேர்தல் பணி வழங்கப்பட்டுள்ளது. என்ன செய்வதென தெரியாமல், பலரும் கலக்கமாக இருக்கின்றனர்.


பெரியநாயக்கன்பாளையத்தைச் சேர்ந்த மற்றொரு ஆசிரியை கூறும்போது,"எனக்கு நான்கு மாதத்தில் ஆண் குழந்தை உள்ளது. குழந்தைக்கு பால் கொடுக்க வேண்டியிருப்பதால், தேர்தல் பணியில் ஈடுபட முடியாது. மாவட்ட தொடக்க கல்வி அதிகாரியிடம் விவரத்தைக் கூறி, அவரிடம் இருந்து பரிந்துரை கடிதம் பெற்று, மாவட்ட வருவாய் அதிகாரியிடம் கொடுத்தேன். ஆனால், எதையும் கண்டுகொள்ளாமல், தற்போது, "மெமோ' அனுப்பியுள்ளனர்' என்றார்.


கர்ப்பிணி ஆசிரியைகளை விடுவிக்க ஆசிரியர் கூட்டமைப்பு வலியுறுத்தல் : 
ஆசிரியர் கூட்டமைப்பின் தலைவர் சிங்காரவேல் கூறியதாவது: அனைத்து மாவட்டங்களிலும், எஸ்.எஸ்.ஏ., திட்டத்தின் கீழ் செயல்பட்டு வரும் வட்டார வள மைய ஆசிரியர்களும், தேர்தல் பணிகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். ஆனால், கோவை மாவட்டத்தில் உள்ள 220 ஆசிரியர்கள் மட்டும், தேர்தல் பணியில் ஈடுபடுத்தப்படவில்லை. மாறாக, ஆள் பற்றாக்குறை என கூறி, அரசு நடுநிலைப் பள்ளிகளில் பணிபுரியும் கர்ப்பிணி ஆசிரியைகளுக்கும், ஒரு மாதம், இரண்டு மாதம் குழந்தை உள்ள ஆசிரியைகளுக்கும் தேர்தல் பணி வழங்கியுள்ளனர். ஆசிரியைகள், தங்களது பிரச்னையை மாவட்ட வருவாய் அதிகாரி சண்முக சுந்தரத்திடம் எடுத்துக் கூறினர். அவர் கேட்கவில்லை. இந்நிலையில், பயிற்சி வகுப்பில் கலந்துகொள்ளாத ஆசிரியைகளுக்கு, "நோட்டீஸ்' அனுப்பப்பட்டுள்ளது. கர்ப்பிணி ஆசிரியைகளையும், இளம் தாய்மார்களாக உள்ள ஆசிரியைகளையும் தேர்தல் பணியில் இருந்து விடுவிக்க, தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு சிங்காரவேல் கூறினார்.
நன்றி:


 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக