பக்கங்கள்

இலவச SMS களை உடனுக்குடன் பெற ON TNPTFSVG அல்லது ON TNPTFMuthupandian என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு அனுப்பி இலவச குறுந்தகவல்களை(SMS) பெறுங்கள். DND (Do NOT Disturb) சர்வீஸ்ல் உள்ள எண்கள் அதனை(DND) நீக்கிய பிறகே இச்சேவையை பெறமுடியும். plz call 1909

Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks
கட்டுரை லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
கட்டுரை லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

4/03/2014

அரசு பள்ளிக்கூடங்களில் கல்வித்தரம்

ஒரு மனிதனுக்கு என்னதான் செல்வம் இருந்தாலும், கல்விச்செல்வம் இல்லையெனில், மற்ற செல்வங்கள் இருந்தும், பயனில்லை. இதைத்தான் அய்யன் வள்ளுவன் ஈராயிரம் ஆண்டுகளுக்கு முன்பே திருமறையாம் திருக்குறளில், ‘கேடில் விழுச்செல்வம் கல்வி ஒருவற்கு மாடல்ல மற்றை யவை’ என்று எழுதியிருக்கிறார். அதாவது, ஒருவனுக்கு அழிவு இல்லாத சிறந்த செல்வம் கல்வியே ஆகும். மற்ற செல்வங்கள் சிறப்புடைய செல்வம் அல்ல என்பதுதான் அதன் பொருள். அந்த அறிவு செல்வத்தை வழங்குவதற்குத்தான் மத்திய–மாநில அரசுகள் ஆண்டுதோறும் பட்ஜெட்டுகளில் முன்னுரிமை கொடுத்து தாராளமாக நிதி ஒதுக்கி வருகிறது. சமுதாயத்திலும் படிக்காத மக்கள் என்றாலும் சரி, தங்கள் குடும்பத்தில் கல்லாமை என்பது தங்கள் தலைமுறையோடு போகட்டும், அடுத்த தலைமுறை  கல்வி அறிவில் சிறந்து விளங்கவேண்டும் என்பதில் அதிக அக்கறை காட்டி வருகிறார்கள்.
இந்த நிலையில், வசதி படைத்தவர்களெல்லாம் தங்கள் குழந்தைகளை கான்வென்ட் பள்ளிக்கூடங்களில் நிறைய பணம் கொடுத்து படிக்க வைக்கிறார்கள். பள்ளிக்கூடங்களெல்லாம் அடுத்த கல்வி ஆண்டுக்காக ஜூன் மாதம்தான் தொடங்குகிறது. ஆனால், அரசு உதவி பெறாத தனியார் பள்ளிக்கூடங்களில் இப்போதே மாணவர் சேர்க்கை பெரும்பாலும் முடிந்துவிட்டது. இந்திய மனிதவள மேம்பாட்டு ஆய்வு அகில இந்திய அளவில் நடத்தப்பட்டது. அதில், ஒரு அதிர்ச்சிகரமான தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தியா முழுவதும் தனியார் பள்ளிக்கூடங்களில் மாணவர் சேர்க்கை மிக அதிகமாக உயர்ந்துகொண்டே போகிறது என்று தெரிவித்து இருக்கிறார்கள். தனியார் பள்ளிக்கூடங்களுக்கும், அரசாங்க பள்ளிக்கூடங்களுக்கும் இப்படி ஒரு வித்தியாசம் உருவாகிக்கொண்டு இருப்பது நல்லதல்ல.
தமிழ்நாட்டைப் பொறுத்த அளவில், கல்விக்காக ஆண்டுதோறும் அரசு கணிசமாக நிதி ஒதுக்கி வருகிறது. கடந்த நிதி ஆண்டில் 16 ஆயிரத்து 963 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டது. ஆனால், இந்த ஆண்டு 17 ஆயிரத்து 737 கோடியே 71 லட்ச ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது. நமது மாநிலத்தில் மொத்தம் 56 ஆயிரத்து 557 பள்ளிக்கூடங்கள் இருக்கின்றன. இதில், 36 ஆயிரத்து 813 பள்ளிக்கூடங்கள் அரசு பள்ளிக்கூடங்கள், 8,395 பள்ளிக்கூடங்கள் அரசு உதவிபெறும் தனியார் பள்ளிக்கூடங்கள். இது மட்டுமல்லாமல், மத்திய கல்வி திட்டம் அதாவது சி.பி.எஸ்.இ. பள்ளிக்கூடங்கள் ஏறத்தாழ 500 பள்ளிக்கூடங்கள் இருக்கின்றன. மழலை பள்ளிக்கூடங்கள் தொடங்கிய ஏழை மக்கள்கூட தங்கள் சக்திக்கு மீறி, தனியார் பள்ளிக்கூடங்களையே நாடுகிறார்கள். அரசு இவ்வளவு பணம் செலவழிக்கிற நேரத்தில், எதற்காக அரசு பள்ளிக்கூடங்களை விட்டுவிட்டு, தனியார் பள்ளிக்கூடங்களுக்கு செல்ல இவ்வளவு மோகம் இருக்கிறது என்பதை ஆராய்ந்து, நடவடிக்கை எடுக்கவேண்டிய நேரம் வந்து விட்டது. இரு பள்ளிக்கூடங்களிலும் பாடத்திட்டம் ஒன்றுதான். ஆனால், கற்பிக்கும் முறை வேறு வேறாக இருக்கிறது.
தனியார் பள்ளிக்கூடங்களில் பிள்ளைகள் ஆங்கிலத்தில் நன்றாக பேசுகிறார்கள், கூடுதலாக இந்தி போன்ற ஒரு மொழியை படிக்க வாய்ப்பு இருக்கிறது, நூலகங்களை, விளையாட்டு மைதானத்தை பயன்படுத்த கற்றுக்கொடுக்கிறார்கள், கல்வித்தரம் நன்றாக இருக்கிறது, எல்லாவற்றுக்கும் மேலாக அங்கு படிக்கும் மாணவர்கள்தானே அதிக மார்க் எடுக்கிறார்கள், உயர் படிப்புகளில் எளிதாக இடம் வாங்கிவிடுகிறார்கள், ஒளிமயமான எதிர்காலம் அவர்களுக்குத்தானே காத்து இருக்கிறது என்று உறுதியாக மக்கள் நம்புகிறார்கள்.
இந்த நிலையைப் போக்கவேண்டுமென்றால், ஆசிரியர்களும், கல்வித்துறையும் தனியார் பள்ளிக்கூடங்களுக்கு இணையாக அரசாங்க பள்ளிக்கூடங்களிலும் உயர்வான கல்வித்தரம் இருப்பதை உறுதி செய்யவேண்டும். தனியார் பள்ளிக்கூடங்களில் படித்து வெளியே வரும் மாணவர்களுக்கு சரிசமமாக, அரசாங்க பள்ளிக்கூட மாணவர்களும் அதிக மதிப்பெண் பெறவேண்டும், அப்படி நடக்காத பட்சத்தில், ஆசிரியர்களும், கல்வித்துறையும் பதில் சொல்லியாக வேண்டும் என்ற கட்டாயத்தை ஏற்படுத்தவேண்டும். அடுத்து வரும் பொதுத்தேர்வுகளில் அரசாங்க பள்ளிக்கூட மாணவர்கள் ரேங்க் பட்டியலில் இடம் பெறவேண்டும் என்பதையே புது லட்சியமாகக்கொண்டு செயல்பட வேண்டும். எப்படி காவல்துறையில் முக்கிய வழக்குகளில் சிறப்பாக செயல்படுபவர்களுக்கு பதவி உயர்வு அளிக்கப்படுகிறதோ, அப்படி மாநிலத்தில் முதல் இடங்களைப்பெறும் வகையில், மாணவர்களைத்தயார் செய்யும் அரசாங்க பள்ளிக்கூட ஆசிரியர்களுக்கு பதவி உயர்வும், பரிசுத்தொகையும் அளிக்க வேண்டும்.

3/26/2014

கும்பகோணம் டிகிரி காபியும் சமகாலத்துக் கல்விமுறையும்…

நெடுஞ்சாலைகளில் கும்பகோணம் டிகிரி காபிக் கடைகள் நிரம்பிக்கிடக்கின்றன. ஒவ்வொன்றிலும் எப்போதும் கூட்டம். ஆவி பறக்கும் கொதிநிலையில், பித்தளை டபரா-டம்ளரில் காபி வழங்கப்பெறும். அசல் பித்தளையல்ல, பித்தளை வண்ண முலாம் பூசப்பட்டுள்ள பாத்திரங்கள்.
டபரா-டம்ளரைக் கும்பகோணத்தின் அடையாளமாகக் கருதுகிறார்கள். வாயில் காபியை வைத்ததும் சூட்டின் காரணமாக நாக்கு ருசிக்கும் திறனை இழக்கிறது. அதனால், காபியின் ருசியே தெரியாது சாப்பிட்டுவிட்டு கும்பகோணம் டிகிரி காபி சாப்பிட்டதாக நினைத்துக்கொள்கின்றோம். கும்பகோணத்துக்காரர்களைக் கேட்டால், டிகிரி காபி பாலின் தரத்தால் வருவது என்பார்கள்.
நமது குழந்தைகளுக்கு வழங்கப்படும் கல்வியும் டிகிரி காபியைப் போன்றதே. கட்டிடம், பாடநூல்கள், ஆசிரியர்கள் போன்றவை முலாம் பூசப்பட்ட பாத்திரங்கள். மனப்பாடமுறைக் கல்வி சூடான காபியைப் போன்றது. கல்வி கற்கிறோம் என்ற மாயையை ஏற்படுத்துவதுடன், கல்வியின் ருசியை அறியாமல் செய்துவிடும். நல்ல பால்தான் டிகிரி காபியைத் தரும் என்பதுபோல, சிந்தனையைத் தூண்டும் வகுப்பறைக் கற்பித்தல்தான் தரமான கல்வியைத் தரும் என்பதை மறந்துவிடுகிறோம்.
குறுக்குவழிக் கல்வி
சுயநிதிப் பள்ளிகள் அனுமதிக்கப்பட்டவுடன் பெற்றோரைக் கவர வேண்டிய தேவை ஏற்பட்டது. பொதுத்தேர்வில் பள்ளியின் தேர்ச்சி விகிதமும், தனிப்பட்ட மாணவருடைய மதிப்பெண்களும் தரத்துக்கு அளவுகோல்களாயின . உயர் தேர்ச்சியை அடைந்திட பள்ளிகள் பல குறுக்கு வழிகளைக் கடைப்பிடித்தன.
அவற்றில் பிரதானமானது மனப்பாடக் கல்விமுறை. இதன்படி, பாடங்களைக் கற்பிக்காமலோ அல்லது அரைகுறையாகக் கற்பித்தோ பாடநூலில் உள்ள வினாக்களுக்கு விடைகளை மனப்பாடம் செய்ய மாணவரைப் பழக்கப்படுத்த வேண்டும்.
இந்தப் பள்ளிகளில் 10-ம் வகுப்புப் பாடங்களை 9-ம் வகுப்பிலேயும், 12-ம் வகுப்புப் பாடங்களை 11ம் வகுப்பிலேயும் தொடங்கி, 10, 12-ம் வகுப்புகளில் முழுமையாகத் திருப்புதலுக்கும், தின, வார மற்றும் திடீர் தேர்வுகளுக்கும் பயன்படுத்துகிற நடைமுறையைப் பின்பற்றுகின்றன.
மாணவர்களுக்கு ஓய்வு என்பதே இருக்காது. உறைவிடப் பள்ளிகளில் மிகுந்த கட்டுப் பாடுகள். அச்சத்திலேயே 24 மணி நேரமும் மாணவர்கள் வாழ வேண்டிய நிலை பரிதாபத்துக்குரியது. ஐ.நா. குழந்தைகள் உரிமை சாசனம் வற்புறுத்தும் மகிழ்ச்சி கரமான குழந்தைப் பருவம் மறுக்கப்படுகிறது.
உயர் தேர்ச்சி
இம்முறையைத் தடுத்து நிறுத்த வேண்டிய கல்வித் துறையே பொதுத்தேர்வுகளில் நல்ல தேர்ச்சி பெற இதுவே சரியான முறை என்று ஏற்றுக்கொண்டு, அதனைப் பள்ளிகளில் செயல்படுத்த முயல்வதை என்னவென்று சொல்வது? பத்து, பன்னிரண்டாம் வகுப்பு ஆசிரியர்களுக்கு உயர் தேர்ச்சி காட்டிட தனிப்பயிற்சி அளிக்க இயக்குனர் ஆணையிட்டுள்ளார்.
கல்வித் துறையே, மாநிலம் முழுவதற்கும் பொதுவாகப் பருவத் தேர்வுகள் நடத்துவதும், வினா வங்கி என்ற பெயரில் வினாத் தொகுப்புகளை வெளியிட்டு விற்பனை செய்வதும் பொதுத்தேர்வுகளில் உயர் தேர்ச்சி அடைந்திட வேண்டுமென்றே. இவை அனைத்தும் மனப்பாட முறைக் கல்வியை வளர்க்கவே உதவும். இதன் விளைவு, பொறியியல் மருத்துவம் போன்ற தொழிற்படிப்புகளில் சேரும் மாணவர்கள் முதலாம் ஆண்டிலேயே தேர்ச்சி பெறத் தவறுகின்றனர்.
முன்கூட்டியே...
தனியார் பள்ளிகளைப் போல ஒன்பது, பதினொன்றாம் வகுப்புகளிலேயே பொதுத்தேர்வுக்குரிய பாடங்களை முன்கூட்டிக் கற்பிக்காவிட்டாலும் அரசு, அரசு உதவிபெறும் பள்ளிகளில் டிசம்பர், ஜனவரி மாதங்களுக்குள் பாடங்களை முடித்துவிட்டு, மீதிக் காலத்தை மீள்தேர்வுகளுக்குப் பயன்படுத்துமாறு பள்ளிக்கல்வி இயக்ககம் அறிவுறுத்தியுள்ளது.
இதனால், பாடங்களை விரைந்து கற்பிக்க ஆசிரியர்கள் நிர்ப்பந்தப்படுத்தப்படுகின்றனர். 200 வேலை நாட்களில் கற்பிக்க வேண்டியவற்றை 150-160 நாட்களில் நடத்த வேண்டுமென்றால், கற்பித்தலும் குறைபடும் மாணவர்களுடைய கற்றலும் வெகுவாகப் பாதிக்கப்படும். பாடத்திட்டங்கள் வகுக்கும்போது, ஒவ்வொரு பாடப் பகுதியையும் நன்கு கற்பிக்கவும் மாணவர் புரிந்துகொள்ளுதலை உறுதிப்படுத்தவும் தேவையான பிரிவேளைகள் ஒதுக்கப்படும்.
ஒரு பாடப் பகுதிக்கு 10 பிரிவேளைகள் தேவையென்றால், ஆசிரியர் விடுப்பு, அந்தப் பகுதியில் ஒரு அலகுத் தேர்வு ஆகியவற்றையும் கணக்கில் கொண்டு 12 பிரிவேளைகள் ஒதுக்கப்படும். 10 பிரிவேளைகளில் கற்க வேண்டியதை 5, 6 பிரிவேளைகளில் முடிக்க முற்பட்டால், கற்றல் நடைபெறாது. அஜீரணம்தான் ஏற்படும். கற்றல் இல்லாமலேயே தேர்வுகளை எதிர் கொள்ள வேண்டுமென்றால், மனப்பாட முறைக்கு மாணவர்கள் தள்ளப்படுவார்கள். பள்ளியில் முழுமை யாகக் கற்க இயலாததால் காலையும் மாலையும் தனி வகுப்புகளுக்குச் செல்ல வேண்டிய அவசியமும் ஏற்படு கிறது. அதற்கான வசதி இல்லாதவர்கள் அரைகுறை அறிவோடு தேர்வுகளை மட்டுமின்றி வாழ்க்கையையே எதிர்கொள்ள வேண்டியிருக்கும்.
பெரும் சவால்
பொதுத்தேர்வுக்குரிய வகுப்புகளை எடுக்கும் ஆசிரியர்கள் படும் துன்பம் அளவிட முடியாதது. ஒரு ஆசிரியர் வேடிக்கையாக, ஆனால் வேதனையுடன், “மாணவர்கள் கீழ் வகுப்புகளிலிருந்து அறியாமையைத் தொடர்வட்டி விகிதத்தில் சேர்த்துக்கொண்டு வருகின்றார் கள். அடிப்படைகள்கூடத் தெரியாத அவர்களைத் தேர்வுக்கு ஆயத்தப்படுத்துதல் பெரும் சவாலாக இருக்கிறது” என்று கூறினார்.
ஒன்றாம் வகுப்பிலிருந்து தரமான கல்வியை ஒவ்வொரு மாணவருக்கும் உறுதிசெய்வதன் மூலமே, மனப்பாடமுறைக் கல்வியி லிருந்து மாணவர்களை விடுவிக்க முடியும். அதனை உறுதிசெய்வது ஆண்டாய்வு. ஆனால், கல்வித் துறை தனது முதற்பணியான பள்ளி ஆண்டாய்வை முறையாக நடத்துவதைக் கைவிட்டுப் பல ஆண்டுகளாகிவிட்டன. 10, 12 -ம் வகுப்புகள் மட்டும்தான் பள்ளிக்கல்வி, அவற்றைக் கவனித்தால் போதும் என்ற மாயையிலிருந்து கல்வித் துறை விடுபட வேண்டும்.
அப்போதுதான், மாணவர்களுக்கு அர்த்த முள்ள முழுமையான கல்வி கிடைக்கும். அறிவுமிக்க ஒரு சமுதாயத்தையும் நம்மால் உருவாக்க இயலும்.
குழு முறையில் கற்றல்
கோத்தாரிக் கல்விக் குழு, பேரா. யஷ்பாலின் ‘சுமையின்றிக் கற்றல்’ குழு ஆகியவை பள்ளிக் கல்வியில் தேவைப்படும் சீரிய மாற்றங்களை விரிவாகவும் தெளிவாகவும் எடுத்துரைத்துள்ளன. தமிழ்நாட்டில் பாடச்சுமைக் குறைப்புக் குழு, சமச்சீர் கல்விக் குழு ஆகியவையும் பல நடைமுறைச் சாத்தியமுள்ள பரிந்துரை களை அளித்துள்ளன. ஆனால், அவை காற்றில் விடப்பட்டது மாத்திரமின்றி, நேரெதிர் முடிவுகளும் எடுக்கப்பட்டு நடைமுறைப்படுத்தப்படுகின்றன.
மாணவர்களுக்காகப் பள்ளியா, பள்ளிக்காக மாணவரா என்ற வினா எழுகிறது. மாணவர்களுடைய வயது, புரிந்துகொள்ளும் தன்மை ஆகியவை கருத்தில் கொள்ளப்படாமல், உயர் கல்வியின் தேவைகளை முன்வைத்தே பாடத்திட்டங்கள் தயாரிக்கப்படுகின்றன. பெரும்பான்மையோர் உயர் கல்விக்குச் செல்லும் வாய்ப்பை இதுவே குறைக்கிறது என்பது ஒரு முரண்நகை. போட்டி முறையில் கற்றல் என்பதைவிட, குழுமுறையில் கற்றல் என்பதை ஊக்குவிக்கும் வகையில், கல்விமுறை அமைக்கப்பட வேண்டும்.
வகுப்பறை என்பது விவாத அரங்காக மாற வேண்டும். மாணவர் பங்கேற்புடன் வகுப்பறை மாறும்போதுதான் உண்மையான கல்வியை மாணவர்கள் பெற முடியும் என்பதைப் பல ஆய்வுகளும் வலியுறுத்தியுள்ளன.
பள்ளிக் கல்வியில் சீரிய மாற்றங்களைக் கொண்டு வராமல் முன்னேற்றப் பாதையில் செல்ல இயலாது. பளபளக்கும் டபரா-டம்ளர்களைப் பார்த்து டிகிரி காபி என நம்புவதுபோல், அர்த்தமற்ற கல்வி மூலம் அடுத்தடுத்த தலைமுறைகளை நாம் இழந்துவிடக் கூடாது.
-ச. சீ. இராசகோபாலன், கல்வி ஆர்வலர், 
முன்னாள் மாநிலத் தலைவர், 
தலைமை ஆசிரியர் சங்கம். 
தொடர்புக்கு: rajagopalan31@gmail.com

செ.நடேநன், முன்னாள் TNPTF மாநிலப் பொதுச் செயலாளர் அவர்களின் கருத்துரை
‘கும்பகோணம் டிகிரி காபியும், சமகாலத்துக் கல்விமுறையும்’ கட்டுரையில் கல்வியாளர் ச.சீ.இராஜகோபாலன் எழுப்பியுள்ள பிரச்சனைகள் கல்வியாளர்கள், ஆசிரியர்கள், கல்வித்துறை அலுவலர்கள் மற்றும் தமிழ் நாட்டின் கல்விவளர்ச்சியில் அக்கறைகொண்ட அனைவரும் ஆழ்ந்துபரிசீலிக்க வேண்டியவை ஆகும். சுயநிதிக்கல்வி நிறுவனங்கள் பெருகிக் கல்வி ஒரு வியாபாரமாகிவிட்ட இன்றையசூழலில் தேர்வு ஒன்றையே குறிக்கோளாகக்கொண்டு ஆழ்ந்த புரிதலற்ற மனப்பாடக்கல்வியை மையமாகக்கொண்டே இந்த நிறுவனங்கள் செயல்பட்டு வருகின்றன.
கோத்தாரி கல்விக்குழு, பேரா.யஷ்பாலின் ‘சுமையின்றிக்கற்றல்’ தமிழ்நாட்டில் பாடச்சுமைக்குறைப்புக்குழு, சமச்சீர் கல்விக்குழு ஆகியவற்றின் பரிந்துரைகள் காற்றில் பறக்கவிடப்பட்டதுமட்டுமின்றி, அவற்றிற்கெதிரான முடிவுகள் நடைமுறைப்படுத்தப்படுவது அனைவராலும் கவலை உணர்வோடு பரிசீலிக்கப்படவேண்டும்.அதுமட்டுமல்ல, தமிழக அரசு பயிற்றுமொழிக் கொள்கையில் உலக்அறிஞர்கள், கல்விவல்லுனர்கள் கருத்துக்களுக்கு மாறாக முதல்வகுப்பிலிருந்தே ஆங்கிலமொழிமூலம் கல்வி என்ற அபத்தத்தை நடைமுறைப் படுத்திவருகிறது. கெட்டிதட்டிப்போன நமது கல்வித்துறை கல்வியில் சீரியமாற்றங்களைக் கொண்டுவரும் என்று என்ற நம்பிக்கை மெல்லமெல்லப் பொய்த்துவருகிறது
வகுப்பறை என்பது விவாத அரங்கமாக மாறவேண்டும்: மாணவர் பங்கேற்புடன் வகுப்பறை மாறும்போதுதான் உண்மையான கல்வியை மாணவர்கள் பெறமுடியும் என்பதில் மாற்றுக்கருத்துக்கு இடமிருக்கமுடியாது. இந்த நேரத்தில் கல்வியில் அக்கறைகொண்ட கல்வியாளர்களும், எழுத்தாளர்களும் ஆற்றிவரும் பங்கு குறிப்பிடத்தக்கது. ‘எனக்கு ஏன் இல்லை கல்வி?’ ‘இது யாருக்கான வகுப்பறை?’ ‘ஆயிஷா’ முதலான பல நூல்கள் வெளிவருவதும், இவற்றை ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி போன்ற ஆசிரியர் இயக்கங்களே ஆசிரியர்கள் மத்தியில் கொண்டுசெல்வதும் நம்பிக்கை அளிக்கின்றன.
சுயநிதிக்கல்வி நிறுவன்ங்கள் தரும் மனப்பாடக்கல்விமுறை என்ற பளபளக்கும் டபராக்களில் அல்ல: மாணவர்களின் சிந்தனையைத் தூண்டும் விவாத அரங்காக மாறும் வகுப்பறை என்ற பாலில் தான்- கும்பகோணம் காபி என்ற- அர்த்தமுள்ளகல்வி இருக்கிறது. இதை அடுத்ததலைமுறைக்குக் கொண்டுசெல்லும் பணியில் ஆசிரியர்கள் தங்களை ஈடுபடுத்திக்கொள்ளவேண்டும்.
அன்புடன்,
செ.நடேசன்,
20.பாரதி இல்லம்,
திருப்பூர் ரோடு,
ஊத்துக்குளி.ஆர்.எஸ்.638752

3/25/2014

பகத் சிங்கின் இறுதி நாள்...

லாகூர் மத்திய சிறைச்சாலையில் மற்ற நாட்களை போல சாதாரணமாகவே விடிந்தது 23, மார்ச், 1931. வழக்கம்போல காலை வேளையில் அரசியல் கைதிகள் தங்களது சிறைக்கூடங்களிலிருந்து வெளியே அனுப்பப்பட்டார்கள். சாதாரணமாக, அவர்கள் பகற்பொழுதுகளில் வெளியே இருப்பார்கள். சூரியன் மறைந்த பிறகு மீண்டும் சிறையறைகளில் அடைக்கப்படுவார்கள். அதனால் அன்று மாலை நான்கு மணிக்கே வார்டன் சரத் சிங் அவர்களிடம் வந்து சிறையறைகளுக்குத் திரும்பச் செல்லும்படி சொன்னபோது, ஆச்சரியப்பட்டார்கள்.
பிறகுதான், சிறைச்சாலையின் சவரத் தொழிலாளி பர்கத் சிறையின் ஒவ்வொரு அறையாகச் சென்று, அன்றிரவு பகத் சிங், சுகதேவ் மற்றும் ராஜகுரு தூக்கிலிடப்படப்போவதை அடிக்குரலில் சொன்னார்.
கைதிகள் நிலைகுலைந்துபோனார்கள். பகத் சிங்கும் அவரது தோழர்களும் இறந்துவிடுவார்கள் என்று தெரிந்தாலும் அந்த நேரம் நெருங்கும்போது அதிர்ந்துபோனார்கள். சீப்பு, பேனா, கைக்கடிகாரம் போன்ற பகத் சிங்கின் பொருட்கள் எதையாவது கடத்திவர முடியுமா என்று பர்கத்திடம் கேட்டார்கள். ஒரு தேசத்தையே உத்வேகப்படுத்திய இளம் புரட்சியாளரின் நினைவின் பொருட்டு அவர்களுக்கு ஏதாவது தேவைப்பட்டது. அவர்களுக்கு அது வாழ்நாள் முழுவதும் போற்றிப் பாதுகாக்கப்படக்கூடிய பொருளாக இருக்கும். பர்கத், பகத் சிங்கின் சிறையறைக்குச் சென்று ஒரு சீப்புடனும் பேனாவுடனும் திரும்பினார். அதற்கு எல்லோரும் உரிமை கொண்டாடினார்கள். பிறகு, குலுக்கல் நடந்தது. எல்லோரும் மீண்டும் அமைதியானார்கள். தங்கள் அறைகளுக்கு வெளியே இருந்த பாதையிலிருந்து இப்போது அவர்களின் பார்வை விலகவில்லை. பகத் சிங் தூக்கு மேடைக்கு அந்த வழியாகப் போவார் என்று எதிர்ப்பார்க்கப்பட்டது. ஒருமுறை அப்படி அந்த வழியாக பகத் சிங் மற்றும் தோழர்கள் தங்கள் சிறையறைகளுக்கு அழைத்துச் செல்லப்பட்டபோது, லாகூர் சதி வழக்கில் பகத் சிங்கும் அவரது தோழர்களும் நீதிமன்றத்தில் தங்களை ஏன் தற்காத்துக்கொள்ளவில்லை என்று பஞ்சாபைச் சேர்ந்த காங்கிரஸ் தலைவர் பீம்சென் சச்சார் கேள்வி எழுப்பினார்.
“புரட்சியாளர்கள் இறக்க வேண்டும்” என்று பதிலளித்தார் பகத் சிங். “அவர்கள் பிரதிநிதித்துவப்படுத்தும் கொள்கைகள் தியாகத்தின் மூலமாகத்தான் வலுவடையும், நீதிமன்றத்தின் மேல் முறையீடுகள் மூலம் அல்ல.”
ஒரு அத்தியாயத்தை முடிக்க விட மாட்டீர்களா?
பகத் சிங்கின் கடைசி விருப்பத்தைக் கேட்டறிய வேண்டும் என்கிற சாக்கில் தூக்கிலிடப்படுவதற்கு இரண்டு மணி நேரங்களுக்கு முன்பு பகத் சிங்கை அவரது வழக்கறிஞர் பிராணநாத் மேத்தா சந்தித்தார். சிறையறைக்குள், கூண்டில் அடைபட்ட சிங்கம்போல குறுக்கும் நெடுக்குமாக நடந்துகொண்டிருந்த பகத் சிங், வழக்கறிஞரை ஒரு பெரிய புன்னகையுடன் வரவேற்று, தான் கேட்ட ‘தி ரெவெல்யுஷ்னரி லெனின்’ என்கிற புத்தகத்தைக் கொண்டுவந்தாரா என்று அவரிடம் கேட்டார்.
அந்தப் புத்தகத்தைப் பற்றி ஒரு நாளிதழில் வந்திருந்த மதிப்புரையால் மிகவும் கவரப்பட்டிருந்தார் பகத் சிங். அதனாலேயே புத்தகம் கேட்டு வழக்கறிஞருக்குத் தகவல் அனுப்பியிருந்தார். புத்தகத்தை மேத்தா கொடுத்தவுடன் மகிழ்ந்துபோய் உடனே படிக்க ஆரம்பித்துவிட்டார், தனக்கு நேரம் அதிகமில்லை என்பதை உணர்ந்தவர்போல. நாட்டுக்கு எதாவது செய்தி உண்டா என்று மேத்தா கேட்டார். புத்தகத்திலிருந்து பார்வையை விலக்காமல் பகத் சிங் சொன்னார்: “இரண்டு செய்திகள், எதேச்சாதிகாரம் ஒழியட்டும். புரட்சி ஓங்கட்டும்.”
நீங்கள் எப்படி உணர்கிறீர்கள் என்று மேத்தா கேட்டபோது, பகத் சிங் பதில் சொன்னார்: “மகிழ்ச்சியாக இருக்கிறேன், எப்போதும் போல.” ஏதாவது ஆசை இருக்கிறதா என்று மேத்தா கேட்டார். “ஆமாம், மீண்டும் இந்த தேசத்திலேயே பிறக்க வேண்டும். இந்த தேசத்துக்குச் சேவை செய்ய வேண்டும்,” என்றிருக்கிறார். பிறகு, மேத்தாவிடம் தனது வழக்கில் நிறைய அக்கறை காட்டிய நேருவுக்கும் சுபாஷ் சந்திர போஸுக்கும் நன்றி சொல்லும்படி பகத் சிங் சொல்லியிருக்கிறார்.
பகத் சிங்கை சந்தித்ததைத் தொடர்ந்து ராஜகுருவையும் மேத்தா சந்திக்கிறார். ராஜகுரு அவரிடம் சொல்லும் கடைசி வார்த்தைகள்: “நாம் விரைவில் மீண்டும் சந்திப்போம்.”
சுகதேவ் ஒன்றும் சொல்லாமல் தனக்கு சில மாதங்களுக்கு முன்பு மேத்தா தந்த கேரம் போர்டை ஜெயிலரிடமிருந்து பெற்றுக்கொள்ளுமாறு மேத்தாவுக்கு நினைவுபடுத்துகிறார்.
மேத்தா சென்ற பிறகு அவர்களிடம் அதிகாரிகள் குறிப்பிட்ட நேரத்துக்கு 11 மணி நேரங்கள் முன்பே அவர்கள் தூக்கிலிடப்படுவார்கள் என்று தெரிவிக்கிறார்கள். அடுத்த நாள் காலை ஆறு மணிக்கு பதில் அதே நாள் ஏழு மணிக்கு அவர்கள் தூக்கிலிடப்படுவார்கள்.
பகத் சிங் அந்த புத்தகத்தின் ஒரு சில பக்கங்களையே படித்து முடித்திருந்தார்.
“ஒரு அத்தியாயத்தை முடிக்க விட மாட்டீர்களா?” என்று கேட்டார்.
தூக்குமேடை நோக்கி...
மூன்று புரட்சியாளர்களையும் தூக்குமேடைக்குத் தயார் செய்வதற்காக சிறை அறைகளிலிருந்து அழைத்துச் சென்றார்கள். பகத் சிங், சுகதேவ் மற்றும் ராஜகுரு மூவரும் கைகளைக் கோத்துக்கொண்டு காவலாளிகள் பின்னால் நடந்தவாறு தங்களுக்கு மிகவும் பிடித்த சுதந்திரப் பாடலை பாடினார்கள்.
“நாங்கள் சுதந்திரமாக இருக்கும் ஒரு நாள் வரும் 
இது எங்கள் மண்ணாக இருக்கும் 
இது எங்கள் வானமாக இருக்கும் 
தியாகிகளின் உடல்கள் எரிக்கப்பட்ட நிலங்களில் 
மக்கள் கூடுவார்கள் 
மண்ணுக்காக உயிர்நீத்த அவர்களுக்கு 
மரியாதை செலுத்துவார்கள்.”
மூன்று பேருடைய எடையும் தனித்தனியாகப் பார்க்கப்பட்டது. மூவருமே எடை கூடியிருந்தார்கள். அவர்களைக் குளிக்குமாறு சொன்னார்கள். பிறகு, அவர்களுக்குக் கறுப்பு உடைகள் அணிவிக்கப்பட்டன. அவர்கள் முகங்கள் மறைக்கப்படவில்லை. வாகே குருவிடம் வேண்டிக்கொள்ளுமாறு பகத் சிங்கின் காதுகளில் கிசுகிசுத்தார் சரத் சிங்.
“எனது வாழ்நாளில் நான் கடவுளை வணங்கியதில்லை. சொல்லப்போனால், ஏழைகளின் துயரங்களுக்குக் காரணமாக இருக்கிறார் என்று கடவுளைப் பல முறை ஏசியிருக்கிறேன். இப்போது அவரிடம் மன்னிப்புக் கேட்டால், தனது முடிவு நெருங்கிவிட்டதால் மன்னிப்புக் கேட்கிறான் இந்தக் கோழை என்று கடவுள் சொல்வார்” என்று புன்னகையோடு மறுத்துவிட்டார் பகத் சிங்.
தூக்குமேடை பழையது. ஆனால், பருமனாக இருந்த தூக்கிலிடுபவர் புதியவர். மூன்று பேரும் தனித் தனி மரப் பலகைகள் மீது ஏறி நின்றார்கள். அவர்களுக்குக் கீழ் ஒரு ஆழமான பள்ளம் தோண்டப்பட்டிருந்தது. பகத் சிங் நடுவில் நின்றிருந்தார்.
அவர்களது கழுத்துகளில் சுற்றப்பட்டிருந்த தூக்குக் கயிறுகள் இறுக்கப்பட்டன. அவர்களது கைகளும் கால்களும் கட்டப்பட்டன. தூக்குக் கயிறுகளை அவர்கள் முத்தமிட்டார்கள். யாரை முதலில் தூக்கிலிட வேண்டும் என்று தூக்கிலிடுபவர் கேட்டார். சுகதேவ், தான் போக விரும்புவதாகச் சொன்னார். ஒவ்வொரு கயிறாக இழுத்து, பின்னர் அவர்களின் கால்களுக்குக் கீழிருந்த மரப் பலகைகளை உதைத்து விலக்கினார்.
சடலங்கள் தூக்குமேடையில் நெடுநேரத்துக்குத் தொங்கியபடியே இருந்தன. பிறகு, கீழிறக்கப்பட்டு ஒரு மருத்துவரால் பரிசோதிக்கப்பட்டன. பகத் சிங், சுகதேவ், ராஜகுரு மூவரும் இறந்துவிட்டதாக அறிவிக்கப்பட்டது.
புரட்சியால் மட்டுமே முடியும்!
பகத் சிங்கைப் பொறுத்தவரை சுதந்திர இந்தியாவுக்கான போராட்டம் என்பது அடிப்படையில் பொருளாதார முன்னேற்றத்துக்கான போராட்டமே. சுதந்திரம், முன்னேற்றத்துக்கான ஒரு வாய்ப்பை வழங்கும். வறுமையை ஒழிக்க முடியாத சுதந்திர இந்தியா வெறும் பெயரளவிலேயே சுதந்திரமாக இருக்கும். ஏற்கெனவே இருக்கும் ஒரு சூழலுக்குப் பதில் அதேபோல வேறொரு சூழலை உருவாக்குவதில் பகத் சிங்குக்கு விருப்பமில்லை. சுதந்திரப் போராட்ட வீரர்களின் குடும்பத்திலிருந்து வந்த பகத் சிங்குக்கு சுதந்திரப் போராட்டத்தில் பங்குகொள்ள வேண்டும் என்கிற தாகம் இருந்ததில் ஆச்சரியம் இல்லை. ஆனால், அவர் ஜமீன்தார் பரம்பரையிலும் வந்தவர். சமூக வேறுபாடுகள் மனிதர்களால் உருவாக்கப்பட்டு மனிதர்களாலேயே நிரந்தரமாக்கப்பட்டிருப்பதை அவர் வாசிப்பின் மூலம் அறிந்தார். காரல் மார்க்ஸ் அவருடைய குரு. பொருளாதார அதிகாரத்தில் ஏற்படும் மாற்றமே மனித வரலாற்றின் ஏனைய மாற்றங்களுக்கான அடிப்படை என்று மார்க்ஸ் சொல்லியிருக்கிறார். பொருளாதாரச் சுதந்திரம் இல்லாத அரசியல் சுதந்திரத்தில் என்ன அர்த்தம்தான் இருக்க முடியும்? ஏழைகள் ஏழைகளாகவே இருப்பார்கள் என்றால் சுதந்திரத்துக்குதான் என்ன அர்த்தம்? பணக்காரர்களுக்கும் ஏழைகளுக்குமான வித்தியாசங்கள் எப்படி முடிவுக்கு வரும்? சோஷலிசத் தத்துவங்களைத் தெரிந்துகொள்வது அவருக்குப் புதிதாக இருந்தது. பொருளாதாரப் பிரச்சினைகளின் கருவறையிலிருந்துதானே அரசியல் வரலாறு, எண்ணங்களின் வரலாறு, மதங்களின் வரலாறு உள்பட எல்லாமே பிறக்கிறது? அரசியல் பாடம் என்பது அரசியல் உண்மைகளுக்கு முன்னால் இல்லாமல் பின்னால்தான் இருக்கிறது என்கிற இயக்கவியல் பொருள்முதல்வாதத்தின் கருத்தை முதல்முறையாகத் தீவிரமாக உணர்ந்தார் பகத் சிங். அரசியல் நடவடிக்கைகள் என்பன ஒரே ஒரு காரணத்துக்கானவை அல்ல; அவை, பொருளாதார சக்திகளால் உற்பத்திசெய்யப்படுபவை என்று மார்க்ஸ் அவரை உணர வைத்தார்.
ஒரு முறை பகத் சிங், அவரது தாய் வித்யாவதி கௌருக்கு ஒரு கடிதம் எழுதினார்:
“அம்மா, எனது நாடு ஒரு நாள் சுதந்திரமடைந்துவிடும் என்பதில் எனக்கு எந்தச் சந்தேகமும் இல்லை. ஆனால், வெள்ளைக்காரத் துரைமார்கள் விட்டுச்சென்ற நாற்காலிகளில் மாநிறத் தோல் துரைமார்கள் வந்து உட்கார்ந்துவிடுவார்கள் என்று பயமாக இருக்கிறது.”
பிரிட்டிஷ் அரசின் முடிவு என்பது அதிகாரத் தலைமையின் மாற்றம் மட்டும்தான் என்றாகிவிட்டால் மக்களின் கஷ்டங்கள் அப்படியேதான் இருக்கும் என்று நம்பினார் பகத் சிங்.
இந்தியாவின் பழமை வாய்ந்த அமைப்பை முற்றிலுமாகத் தகர்க்கும் வரை எந்த முன்னேற்றமும் சாத்தியம் இல்லை. இந்த அமைப்புதான் முன்னேற்றத்துக்கான தடையாக இருக்கிறது. தத்துவஞானிகள் உலகைப் பல விதங்களில்
புரிந்துவைத்திருக்கிறார்கள். ஆனால், அதை மாற்றுவதுதான் முக்கியம். அதைச் செய்வதற்குப் புரட்சியால் மட்டுமே முடியும்.
குல்தீப் நய்யார் எழுதிய ‘வித்தவுட் ஃபியர்: த லைஃப் அண்ட் ட்ரையல் ஆஃப் பகத் சிங்’ என்ற நூல் கவிதா முரளிதரனின் மொழிபெயர்ப்பில் ‘மதுரை பிரஸ்’ வெளியீடாக வரவிருக்கிறது. அந்த நூலிலிருந்து சில பகுதிகள் இங்கே கொடுக்கப்பட்டிருக்கின்றன.

3/19/2014

பள்ளி மாணவர்களிடையே பரவும் 'ஜாதிக் கயிறு' கலாச்சாரம்!

சமீபத்தில் மூன்று காட்சிகள் என் கண்ணில்பட்டன. ஆசிரியராகிய எனக்கு அது பேரதிர்ச்சியாக அமைந்துவிட்டது. இதை உன்னிப்பாகப் பார்க்கும் யாருக்கும் பேரதிர்ச்சியாகத்தான் அமையும். உம். இந்தப் பிள்ளைகள் வாழ்க்கை என்ன ஆகப்போகிறதோ? என்று நீங்கள் சொல்லத் தோன்றும்.
பள்ளிக்கு வரும் மாணவன் குளித்துவிட்டு, ஒழுக்கமாக உடை அணிந்து, புத்தகங்களைக் கொண்டு வரவேண்டும் என்பதுதான் எல்லாருடைய விருப்பம். அதற்கு மாறாக இன்றைய பெரும்பாலான மாணவர்களின் தலைமுடி முதல் காலணிவரை இருப்பது எல்லாம் நாகரிகம் என்ற போர்வையில் ஒழுக்கமின்மைதான். குறிப்பாக அரசுப் பள்ளி மாணவர்களிடம் இந்த விஷயம் கை ஓங்கி இருக்கிறது. (இது எல்லாம் எங்கள் பள்ளியில் இல்லை என்பவர்களுக்கு வாழ்த்துகள்).
முதல்காட்சி. பள்ளிக்கு வரும் ஒரு சில மாணவர்களின் பாடநூல்களில், எழுதும் குறிப்பேடில் அவருடைய பெயருடன் ஜாதிப்பெயரை எழுதி வருவது. இதை முதன்முதலில் பார்த்த எனக்குத் திக்கென்று வாரிபோட்டது. இந்த உலகம் என்ன என்று புரியாத பிஞ்சு மனதில் ஏதோ ஒரு விஷவிதையை அந்த மாணவனின் ஜாதிய அபிமானிகளால் விதைக்கப்பட்டுவிட்டது. என்னிடம் ஒன்பதாம் வகுப்பு படிக்கும் மாணவனிடம் இதைப் பற்றிக் கேட்டால், பத்தாம் வகுப்பு படிக்கும் என் அண்ணன்தான் எழுதச் சொன்னான் என்கிறான். அவனிடம் கேட்டால், எங்கள் ஊர் ஜாதி அமைப்பைச் சேர்ந்த கல்லூரி அண்ணன்கள் எழுதச் சொன்னார்கள் என்கிறான். எது எப்படியோ, சின்னஞ்சிறு பிஞ்சுக் கையால் பெயருடன் ஜாதி எழுதப்பட்டுவிட்டது. கண்டிப்பாகச் சமூகத்தைக் கெடுக்கும் சீர்கேட்டிற்கு அந்தச் சின்னஞ்சிறு மாணவன் காரணமில்லை என்பது நமக்குத் தெரியும். இப்படி எழுதாலாமா? என்கிற கனிவான கேள்விக்கு, அந்த மாணவனின் பதில், வெறும் அழுகை மட்டும்தான். அவனது அழுகை, இன்னதென்று புரியாமல் தவறு செய்துகொண்டிருக்கும் சமூகத்தின் ஒட்டுமொத்த அழுகையாகத்தான் பார்க்கிறேன்.
இரண்டாவது காட்சி. மாணவனின் வலது கையில், கைப்பட்டை அணிவது. அதுவும் சாதாரணக் கைப்பட்டை அல்ல. ஜாதி நிறத்தில் அமைந்த கைப்பட்டை. இது ஒரு குறிப்பிட்ட ஜாதி மாணவர்கள் மட்டும்தான் செய்கிறார்களா என்றால் இல்லை. அந்தந்த பள்ளியில் இருக்கும் ஒரு சில மாணவர்கள், தம் ஜாதிக் கட்சியின் பட்டையை (பேண்ட் - Band) அணிகிறார்கள். ப்ரெண்ட்ஷிப் பேண்ட் அணிவது, ரெட் ரிப்பன் பேண்ட் அணிவது கேள்விப்படிருக்கிறோம். இந்தப் புதிதான பேண்ட் பேஷனை நினைத்தால். சிரிப்புடன், அந்த மாணவர்கள்மீது பரிதாபம்தான் எழுகிறது. கைகளில் சாமிக் கயிறுபோய், வெள்ளை இரும்பு வளையம்போய், செம்புவளையம்போய், ரப்பர் பேண்ட் போய், தற்போது கருப்பு-வெள்ளை, சிவப்பு-பச்சை, வெள்ளை-மஞ்சள், சிவப்பு-மஞ்சள், நீலம்-வெள்ளை, நீலம்-சிவப்பு கலந்த ஜாதிக் கயிறுகள் அணிந்திருக்கிறார்கள், நாளைய சமுதாயத்த்தை முன்னேற்றப்போகிற மாணவர்கள்.
மூன்றாவது காட்சி. குழுவாக அமையும் மாணவர்கள் தம் பெயரைக் கைகளில் எழுதிக் கொள்வது. ஏதோ பேனாவில் எழுதுவது என்று தயவுசெய்து நினைத்துக்கொள்ளாதீர்கள். முதலில் காம்ப்பஸ் (compass) எடுத்துக் கொள்ளவேண்டும். எழுதப் போகும் மாணவனின் கையை இன்னொரு மாணவன் பிடித்துக்கொள்ளவேண்டும். கை நடுநடுங்கக் கூடாது. காம்பஸை முனையைக் கொண்டு, வலதுகை அல்லது இடதுகையில் மெதுவாக, ரத்தம் அதிகமாக வெளியேறபடி கீறிக்கீறி எழுதவேண்டும். வலியைப் பொறுத்துக்கொள்ளும்படி எழுதவேண்டும். பீட்ருட் நிறம்போல எழுத்து அமையவேண்டும். எழுதி முடித்தபின் சந்தோஷத்தில் குதிக்கவேண்டும். இரண்டுநாள் கழித்துப் புண் ஆறிவிட்டபின், பொக்குவை நீக்கிவிட்டுப் பார்த்தால், உங்கள் பெயர் உங்கள் கையில் தழும்பாக அமையும். எவ்வளவு அற்புதம் இது. இந்த அற்புதத்திற்குத் தலைகுனியவேண்டியவர்கள் நம் பெற்றோர்கள். இரண்டாவதாகத் தலைகுனியவேண்டியவர்கள் ஆசிரியர்கள். பெற்றோர்கள் தம் பிள்ளைகளைக் கண்டிக்கமுடியாததற்காகத் தலைகுனியவேண்டும். அறிவுரை கூறியும் திருந்தாத மாணவர்களை நினைத்து ஆசிரியர்கள் தலைகுனியத்தான்வேண்டும்.
இந்த மூன்று காட்சிகளைப் பார்த்தபின் நமக்குச் சில கேள்விகள் எழத்தான் செய்யும். அதில் முதல் கேள்வி, ஆசிரியர்கள் என்னதான் செய்கிறார்கள்? என்பது. அரசுப் பள்ளியைப் பொறுத்தவரை, ஆசிரியர்கள் அறிவுரையும் கலந்தாலோசனையும்தான் தரமுடியும். அந்த மாணவர்களின் ஜாதிக் கைப்பட்டையை அறுத்தால், ஆசிரியர்களுக்கு ஷாக் அடித்துவிடும். எந்த ஆசிரியர் ஒரு மாணவனின் கைப்பட்டையை அறுக்கிறாரோ, அவர் ஒழுக்கத்தைப் பேணுபவர் ஆகமாட்டார். அவர் அந்த ஜாதியத்திற்கு எதிரானவர். மாற்று ஜாதியைப் பள்ளியில் மறைமுகமாகத் தூண்டுபவர் என்று பார்க்கப்படுகிறது. ஓருவேளை அதே ஜாதி என்றால், உறவுப் பகை உருவாகிவிடுகிறது. எனவே, ஆசிரியர்களின் வார்த்தைகள் – இந்த மாதிரி எல்லாம் பள்ளிக்கு வரக்கூடாது. பள்ளிக்கு வெளியே அணிந்துகொள். பள்ளிக்குள் வேண்டாம். நீ படிக்கிற பையன். உங்கள் வீட்டில் கேள்விப்பட்டால் வருத்தப்பட மாட்டார்களா?. நீ நல்ல பையன்தானே– என்பதுதான். இதை மீறி கண்டித்தாலோ, மாணவனுக்கு ஏதாவது நேர்ந்தாலோ ஆசிரியர்களின் பணிக்கு உத்தரவாதம் இல்லை. அடிப்படையாக ஒரு மனிதனுக்குப் பணி பாதுகாப்பு அவசியம் என்பதை நீங்கள் புரிந்துகொள்ளவேண்டும்.
இதைச் சரி செய்ய நாம் என்ன செய்யவேண்டும்? இதைச் சரி செய்ய ஆசிரியர்கள், மாணவப் பெற்றோர்களின் உறவு முக்கியமானது.
பெற்றோர்களைப் பொறுத்தவரை, தன்னுடைய பிள்ளையின் (மாணவனின்) ஒழுக்கச் செயல்பாடு என்ன? சமீபத்தில் மாறி இருக்கிறதா? அவனுடைய பேச்சில், நடையில் எந்த மாற்றம் நிகழ்கிறது? அவனுடைய நண்பர்களின் தன்மை எப்படி? பிள்ளையின் கவனம் படிப்பிலா, பொறுக்கித்தனத்திலா? அவனைத் தனியாக அழைத்து அன்புடன் பேசுகிறேனா? இது சரி, இது தவறு என்று சொல்கிறேனா? என்பதில் கவனம் கொள்ளவேண்டியுள்ளது.
அறிவுரையுடன் ஆசிரியர்கள் நின்றுவிடாமல், மாணவனை அழைத்துக் கலந்தாலோசிக்கவேண்டும். உங்களால் மாற்றத்தை ஏற்படுத்த முடியவில்லை எனில். தலைமையாசிரியர் வழியாகப் பெற்றோரிடம் தகவலைத் தெரிவித்துவிடவேண்டியதான். தவறு செய்யும் மாணவனைக் கண்டிப்பதோ, தண்டிப்பதோ ஆசிரியரின் பணி இல்லை. மாறாக ஒழுக்கத்தைக் கற்றுத்தரவேண்டும் நாம். ஒழுக்கம் தவறினால், கண்டிப்பாகப் பெற்றோரிடம் முறையிடுவது நமது கடமை. அதுவும் நாம் நேரடியாக இல்லாமல், தலைமையாசிரியர் வழி அமையவேண்டும்.
ஆசிரியர்கள், மாணவப் பெற்றோர்களின் உறவு சரியாக அமையும் பட்சத்தில் பிரச்சினை அதிகமாக வளர வாய்ப்பில்லை. மாணவர்களின் கல்வி அதிகமாகப் பாதிப்பதில்லை. இதுபோன்ற சமூகச் சீர்க்கேட்டினால் பாதிக்கப்படுவது ஆசிரியரோ, பெற்றோரோ, ஜாதியோ இல்லை. மாணவர்கள் மட்டும்தான். அவர்களுடைய ஒழுக்கம், கல்வி பாதிக்கப்படுகிறது.
கோயில் செல்கிறோம். அங்கு அனைவரும் ஒன்றாகத்தான் சாமி கும்பிடுகிறோம். ஹோட்டல் செல்கிறோம். ஒன்றாகத் தான் சாப்பிடுகிறோம். பேருந்தில் ஒன்றாகப் பயணிக்கிறோம். அங்கு சாதிப் பார்க்கப்படுவதில்லை. பள்ளி என்பது கோயில் போன்றது. இங்கு கல்விதான் கடவுள். ஜாதியம் அல்ல. பள்ளியில் மாணவர்கள் கல்வியை வளர்க்க ஆசிரியர்கள் பாடுபடுகிறார்கள். வெளியே பிள்ளைகளை வளர்க்க பெற்றோர்கள் பாடுபடுகிறார்கள். நடுவில் நுழைந்திருக்கும் ஜாதி நரிக்கூட்டம்தான் பிள்ளைகளைக் கெடுக்கிறது.
பெற்றோர்களே! உங்கள் பிள்ளைகளைத் தயவுசெய்து காப்பாற்றிக்கொள்ளுங்கள். ஆசிரியர்களே! எப்போதும்போல், மாணவர்களுடன் அன்புடன் உரையாடி புத்திமதி கூறித் திருத்துங்கள். ஜாதிய அபிமானிகளே! உங்கள் அரசியலுக்கு மாணவர்களைப் பலிகடா ஆக்காதீர்கள். அவர்கள் படித்து முன்னேறவேண்டும். அவர்கள் கைகள் இப்போதைக்குச் சுமக்க வேண்டியது புத்தகம்மட்டும்தான். உங்கள் ஜாதி பேண்ட் அல்ல. ஜாதிகளுக்கு மாணவர்கள் ஒன்றும் ஜாதிப்பரப்புச் செயலாளர்கள் இல்லை. அவர்கள் மாணவர்கள். இந்த பரந்த இந்தியாவைத் தாங்கப் போகிறவர்கள். தயவுசெய்து யாராக இருந்தாலும் ஜாதியத்தை மாணவர்களிடம் புகுத்தாதீர்கள்.
மாணவப் பருவம் என்பது வாழ்க்கையின் முக்கியமான பருவம். அந்த சமயத்தில், அவர்களை ஜாதியின் பெயரால் மடை மாற்றி குழப்பத்தை ஏற்படுத்தாதீர்கள்.
நல்ல எதிர்காலம் அமையவேண்டும் என்றால், தயவு செய்து ஜாதி என்கிற விஷவிதையை மாணவர்களின் மனதில் யாரும் விதைக்காதீர்கள். அது நிச்சயமாக வருங்காலத்தில் நல்ல கனியையோ, நிழலையோ தரப்போவதில்லை.
ரா.தாமோதரன் - தொடர்புக்கு raa.damodaran@gmail.com

3/04/2014

தண்டித்தால் தவறில்லை

பள்ளிகளில் படிக்கும் மாணவர்களை கண்டிக்கும் ஆசிரியர்களை மிரட்டும் பெற்றோர்களால் மாணவர்கள் தவறான பாதைக்கு செல்லும் நிலை தற்போது ஏற்பட்டுள்ளது.
புராணங்களில் கல்வி பயில குருகுல முறையைப் பின்பற்றி வந்ததாகக் கூறப்படுகிறது. இதன்படி, ராஜா மகன் முதல் சாதாரண பாமரன் வரை அனைவரும் சரிசமமாக குருவால் பராமரிக்கப்பட்டு, அவர்களுக்கு அனைத்து வேலைகளும் சரிவிகிதமாக பங்கிட்டு செய்ய கட்டளையிடப்பட்டு வந்தது. தொடர்ந்து வந்த காலங்களில் கல்விமுறை பல்வேறு கட்டங்களில் திசை மாறியுள்ளது.
கடந்த காலங்களில் பள்ளியில் சேர்க்கப்படும் தங்கள் குழந்தைகள் கல்வி பயிலும்போது தவறு செய்தால் கண்டிக்குமாறும், அடித்துத் திருத்துமாறும் பெற்றோர்களே ஆசிரியர்களிடம் தெரிவித்து வந்தனர். இதனால் ஆசிரியர்களைக் கண்டால் மாணவர்களுக்கு பயமும், படிக்க வேண்டும் என்ற அக்கறையும் இருந்து. அதே நேரம் ஆசிரியர்களிடும் பக்தியும், அன்பும் இருந்துவந்தது.

தற்போதைய கால கட்டத்தில் மாணவர்களை திட்டுவதற்கே நூறுமுறை யோசிக்க வேண்டியுள்ளது. கல்வித் துறையே ஆசிரியர்களிடம் மாணவர்களைத் திட்டக் கூடாது, எக்காரணம் கொண்டும் அடிக்கக் கூடாது என்று வாய்மொழி உத்தரவு பிறப்பித்துள்ளது.
இதனால் மாணவர்களை மிரட்டக்கூட ஆசிரியர்கள் யோசிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. தவிர, எட்டாம் வகுப்பு வரை மாணவர்களை தேர்ச்சி இழக்க வைக்கக்கூடாது என்ற உத்தரவாலும், மாணவர்கள் கல்வித் தரம் தாழ்ந்து வருகிறது.
பல இடங்களில் பெற்றோர்களே தங்கள் குழந்தையை யாரும் அடிக்கக் கூடாது என்ற கட்டளையுடன் பள்ளியில் சேர்த்து வருகின்றனர். மாணவர்களும் இதுபோன்ற நிலையை தங்களுக்கு சாதகமாக பயன்படுத்திக் கொண்டு சிலநேரம் ஆசிரியர் மிரட்டினாலும்கூட, தன்னை அடித்ததாகக் கூறி ஆசிரியர்களை மிகவும் இக்கட்டான நிலைக்கு கொண்டு வருகின்றனர். இதை இன்றைய பல ஆசிரியர்கள் அனுபவித்தே வருகின்றனர்.
இதனால் மாணவர்கள் எப்படி போனாலும் பரவாயில்லை நமக்கு என்ன என்ற எண்ணத்துக்கு அரசுப் பள்ளி ஆசிரியர்கள் வரும் நிலை ஏற்பட்டுள்ளது. எட்டாம் வகுப்புக்கு மேல் பயிலும் மாணவ - மாணவிகள் உலகத்தை அறியும் நிலையில் அவர்களிடம் ஆசிரியர்கள் படும்பாடு அதிகமாகும்.
ஒருபக்கம் மாணவர்களை ஆர்வமுடன் படிக்க வைக்க ஆசிரியர்களை வறுத்தெடுக்கும் கல்வித்துறை, மறுபக்கம் அவர்களை திட்டக்கூடாது, அவர்கள் மீது விரல்கூட படக்கூடாது என்று உத்தரவிட்டு ஆசிரியர்களை இருதலைக்கொள்ளி எறும்பாக மாற்றி வருகிறது.
இன்றைய காலகட்டத்தில் பல்வேறு விளையாட்டுகளில் தங்களை ஈடுபடுத்தி விளையாட்டுத் திறனை வெளிக்காட்டுவதில் மாணவர்கள் ஆர்வம் காட்டுவது இல்லை.
பள்ளிப் பருவத்திலேயே மாணவர்களுக்கு மொபைல்போன், இன்டர்நெட், பேஸ்புக் போன்றவை பழகி விடுவதால் அவர்களின் கல்விச் சிந்தனை மிகவும் குறைந்து வருகிறது.
பல பள்ளிகளில் மாணவர்கள் ஆசிரியர்களை கிண்டல் செய்வதையும், சில இடங்களில் ஆசிரியர்களை கொலை செய்யும் அளவுக்கும் மாணவர்கள் மனநிலை பாதிக்கப்படுவதையும் பார்க்கிறோம். பெரும்பாலும் இதுபோன்ற சம்பவங்களுக்கு பெற்றோரே காரணமாகி விடுகின்றனர்.
இந்த நிலையில், அரசு உதவி பெறும் பள்ளிகளின் ஆசிரியர்கள், பள்ளிக்கு நற் பெயரை ஈட்டி, தேர்ச்சி விகிதத்தை அதிகரிக்க வேண்டிய கட்டாயத்தில் மாணவர்களை படிக்க வைக்க திண்டாடி வருகின்றனர்.
சில வருடங்களுக்கு முன் மாணவர்களை சேர்க்கவே பெற்றோர்கள் திக்குமுக்காடிய காலம் மாறி இப்பள்ளிகளை குறிவைத்து மிரட்டும் பெற்றோர்களும், பல்வேறு அமைப்புகளும் பள்ளி நிர்வாகத்தையே திக்குமுக்காட வைக்கின்றனர்.
பெற்றோர் தங்கள் குழந்தைகள் கல்வியில் மேம்படவும், விளையாட்டுத் துறையில் பிரகாசிக்கவும் விரும்பினால், அவர்களை ஆசிரியர் வசம் ஒப்படைத்துவிட வேண்டும். தங்கள் பிள்ளைகள் செய்யும் தவறுகளை ஆசிரியர் கண்டிப்பதை பெரிதாக எடுத்துக் கொள்ளாமல் இருப்பது அவசியமாகும்.
மாணவர்களும் ஆசிரியரின் பெருமையை உணர்ந்து நடந்து கொள்ள வேண்டும்.

9/16/2013

மாணவன் எனும் மூலதனம்

பள்ளியில் மாணவர்கள் ஒருவருடன் ஒருவர் கலந்துரையாடவும், உணவைப் பகிர்ந்துண்ணவும், மனதையும் உடலையும் ரிலாக்ஸ் செய்யவும், அடுத்த செஷனுக்கு மனதை தயார் செய்வதற்கேற்ற வகையிலும்தான் கால அட்டவணையில் உணவு இடைவேளைகள் வைக்கப்பட்டிருக்கின்றன. ஆனால், பெரும்பான்மையான பள்ளிகளில் அது ஆசிரியர்களின் பிடியில் சிக்கிக்கொண்டுள்ளது.
60 நிமிட இடைவெளியை வெறும் 10 அல்லது 20 நிமிட இடைவேளையாக அவரவர் விருப்பத்துக்கு குறைக்கப்பட்டு, களவாடியபொழுதுகளில் திறமையான (மற்ற ஆசிரியருடன் போராடி வெற்றிபெறும் வல்லமை பொருந்தியவர் அல்லது தானே சிறந்த ஆசிரியர் என்று உணருபவர்) ஆசிரியர்கள் சிறு தேர்வுகள் வைத்து மாணவர்களை மிகச்சிறந்த மதிப்பெண் உற்பத்தி எந்திரங்களாக உருவாக்குவதில் முனைப்புடன் ஈடுபடுவர்.
பிள்ளைகள் உணவை அவசர அவசரமாக உண்டுவிட்டு ஓடுவர். மற்றவருடன் பேசவும் நேரம் இருப்பதில்லை; நன்கு படிக்கும் மாணவர்களிடம் இடைவேளையின்போது சந்தேகங்களைக் கேட்டுத் தெளியவும் நேரமிருப்பதில்லை. மகிழ்ச்சியாக விளையாடி மகிழவும் நேரமிருப்பதில்லை என்று மாணவர்கள் சில ஆசிரியர்களிடம் புலம்புவர். வீட்டுக்கு சென்று மதிய உணவு உண்ணும் மாணவர்களின் நிலைமை இன்னும் பரிதாபத்துக்கு உரியது. சாப்பிட்டால் நேரமாகிவிடுகிறது என்று சிலர் சாப்பிடாமல் பாக்ஸில் போட்டு எடுத்து வந்து இரண்டாம் பாடவேலையின்போது சாப்பிடுவர். வேறு சில மாணவர்கள் அவசர அவசரமாக அள்ளிபோட்டுக்கொண்டு ஓடிவருவர்.
மதிய நேர தேர்வுகளை அட்டெண்ட் பண்ணவில்லை என்றால் கடும் தண்டனை விதிக்கப்படும் என்பதால், சில மாணவர்கள் வீட்டுக்கு போகவும் பயந்து சாப்பிடாமலேயே இருந்து விடுகின்றனர். அதுமட்டுமல்லாமல் நீதி நெறி கல்விக்கு என ஒதுக்கபட்டிருக்கும் பாடவேளைகளையும்கூட இவர்கள் பிடுங்கிக்கொள்வது கொடுமை எனில், மாணவர்கள் பயமின்றி தங்கள் உடலும் உள்ளமும் ஒன்றிணைந்து செயல்படும் ஓவியம், உடற்கல்வி ஆகிய பாடவேளைகளையும்கூட '10 ஆம் வகுப்புக்கு என்ன இதெல்லாம் வேண்டியிருக்கு' என்று பாட ஆசிரியர்கள் அதையும் பிடுங்கிக்கொள்வது கொடுமையிலும் கொடுமை!
அனைத்து ஆசிரியர்களும் மனித உளவியல், குழந்தைகள் உளவியல் என பலவிதமாகப் படித்துவிட்டுதான் வருகின்றனர். பிறகு ஏன் அவர்கள் மாணவர்களின் நிலையிலிருந்து பார்க்க தவறிவிடுகின்றனர்?
கல்வியாளர்கள் பல காலமாய் போராடி குழந்தை மையக்கல்வியை வகுப்பறைகளுக்கு அறிமுகப்படுத்தியுள்ளனர். அரசின் பல்வேறு கல்விக்கொள்கைகளும் காலத்துக்கேற்ப மாறுதல்களை உள்வாங்கி குழந்தைகள் மகிழ்வுடன் பள்ளிக்கு வர வழி செய்துள்ளன. அரசு பல நூறு கோடிகளை கல்விக்கென்று ஆண்டுதோறும் செலவழிக்கிறது. அது ஒரு தனி மனிதன் மீது அரசு செய்யும் மூலதனம். அவன் மீண்டும் அதை நாட்டுக்கு எந்த வகையிலாவது திரும்ப செலுத்தும்போது மட்டுமே அவன் நாட்டின் வளமாக கருதப்படுகிறான். இல்லையெனில், அவன் மீது செய்யப்பட்ட செலவு வீணாகிறது. அதனால்தான் புகழ்பெற்ற பொருளாதார வல்லுநர் ஆடம் ஸ்மித் (1776)கல்வியறிவு பெற்ற மனிதனை விலையுயர்ந்த எந்திரத்துக்கு ஒப்பிடுகிறார்.
கல்விக்காக நம் நாட்டில் எத்தனையோ திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. கல்வியின் மூலமே நல்ல குடிமக்களை உருவாக்க இயலும் என்பது அனைவரும் அறிந்த உண்மை. ஆனால், கல்வி என்பது என்ன என்பதைப் பற்றிய தெளிவு பெரும்பாலானவர்களிடம் இல்லாமல் போனதுவே சோகம்.
கல்வியறிவு பெற்ற மனிதன நாட்டுக்கு தக்க விதத்தில் தன்னை தகவமைத்துக்கொள்ள எதிர்பார்க்கப்படுகிறான். நாட்டு வளர்ச்சியில் அக்கறை காட்டுபவனாகவும், சக உயிரினங்களை மதித்துத் தனக்கு சமமாய் நடத்துபவனாகவும், எளிய உயிரினங்களை அரவணைப்பவனாகவும், நல்ல நீதிநெறிகளை பின்பற்றுபவனாகவும் பிரச்சினைகளை எதிர்க்கொள்ளும் திறன் மிக்கவனாகவும், கல்வியை சுய முன்னேற்றத்துக்கும் நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு பயன்படுத்துபவனாகவும் இன்னும் பல குணநலன்களைக் கொண்டவனாகவும் எதிர்ப்பர்க்கப்படுகிறான்.
இப்படிப்பட்ட மனிதனைதான் பொருளாதார வல்லுனர்கள் Human Capital என்று வர்ணிக்கின்றனர். இப்படிப்பட்ட முழு ஆளுமைத்திறன் கொண்ட குடிமக்களை உருவாக்க ஆசிரியர்கள் முனைப்புடன் செயல்படுதல் அவசியம். வெறும் மதிப்பெண் உற்பத்தியை மட்டுமே நோக்கமாய் கொண்ட ஆசிரியர்களிடம் நிச்சயம் சுயநலவாதிகளை மட்டுமே உருவாக்க முடியும். ஆசிரியர்கள் தன்னிடம் பயிலும் மாணவர் ஒவ்வொருவரையும் ஒரு விலைமதிக்க முடியாத வளமாக கருதி, அவர்களை நாட்டுக்கு உகந்த வகையில் வளர்த்தெடுக்க வேண்டும். அப்போதுதான் இந்தியாவின் வல்லரசு கனவு நிறைவேறும். இல்லையேல் எந்த நிஞ்சா டெக்னிக்கை பயன்படுத்தியும் எதையும் சாதிக்க முடியாது.
_________________ டி. விஜயலட்சுமி___________________
 Return to frontpage

8/02/2012

சமனில்லாத சமன்!

கடந்த ஆண்டு இதே காலத்தில் சமச்சீர் கல்வி பற்றி மிகப்பெரிய குழப்பம் ஆசிரியர்களிடையேயும் மாணவர்களிடையேயும் இருந்தது. இது தொடர்பாக போராட்டங்களும் ஆங்காங்கே நடந்தன. தில்லி உச்ச நீதிமன்றம்வரை சென்ற அந்தப் பிரச்னை ஒரு வழியாக சுமுகமாக்கப்பட்டது. கல்வி அனைவருக்கும் சமமாக்கப்பட வேண்டும் என்ற பெயரில் சமச்சீர் உருவாக்கப்பட்டது பாராட்டுக்குரியதுதான்.  ""ஒரு கட்டடத்தை இரு தூண்கள் தாங்கிக் கொண்டுள்ளன. அதில் ஒரு தூணின் மேற்பகுதி சிறிது உடைந்துவிட்டது. இப்போது மேல்தளம் சமனில்லாமல் ஒரு புறம் சரிந்துள்ளது. இதனை சமன்செய்வதற்கான பல வழிகள் தொடர்பாகக் கூறப்பட்ட ஒரு யோசனை செயல்படுத்தப்பட்டது. அது என்னவென்றால், நன்றாக உள்ள மற்றொரு தூணையும் உடைந்த தூணின் அளவுக்கு உடைப்பதென்பது. அது அவ்வாறே மேற்கொள்ளப்பட்டு மேல் தளத்தைச் சமன்படுத்தியாயிற்று''.  இதுபோன்று எளிதில் புரியக்கூடிய, அழகான எடுத்துக்காட்டுகளைக் கொண்டிருக்கும் சமச்சீர் புத்தகம் அனைவரிடத்திலும் பெரும் வரவேற்பைப் பெற்றது. இப்போதைக்குப் பிரச்னை அதுவல்ல.  8-ஆம் வகுப்பு வரை அமல்படுத்தப்பட்டுள்ள, மாணவர்களும் ஆசிரியர்களும் செயல்படுத்த வேண்டிய பல்வேறு செயல்பாடுகளைப் பற்றித்தான். செயல்வழிக்கற்றல், படைப்பாற்றல் கல்வி முறை மூலம் மாணவர்கள் பாடங்களைக் கற்கும் முறை இந்த ஆண்டு அமல்படுத்தப்பட்டிருக்கிறது. இதனால் தினமும் அதிகநேரம் படிப்பது என்பது மாறி அதிகநேரம் செயல்வழிக் கற்றல் என்றாகிறது. இது பாடங்களை எளிதில் புரிந்து கொள்வதற்குச் சிறந்த வாய்ப்பாக அமைந்திருக்கிறது.  இந்த செயல் வழிக்கற்றலுக்காக மாணவர்களுக்கு சில மூலப்பொருள்கள் (சார்ட், அதில் ஒட்டுவதற்குப் படங்கள்..,) தேவைப்படுகின்றன. இதற்காக ஒவ்வொரு மாணவனுக்கும் தினமும் குறைந்தது 20 ரூபாய் தேவைப்படுகிறது. 20 ரூபாய் என்பது உயர் வருவாய் பிரிவினருக்கு பெரும் தொகையல்ல. அரசுப் பள்ளியில் குழந்தைகளை விட்டுவிட்டு டாஸ்மாக்கில் நாள்தோறும் வருகையைப் பதிவு செய்யும் தந்தைக்கும், இலவசமாக அளிக்கக்கூடிய அரிசியைக்கூட கிலோ ரூ.3-க்கு வாங்கும் தாய்க்கும் இது பெருந்தொகையே! இது மாணவர்களுடைய பிரச்னை.  இந்தமுறையில் ஆசிரியர்களுக்கு என்ன பிரச்னை? இங்குதான் ஆசிரியர்கள் ஆசிரியர்களாக அல்லாமல் மாணவர்களின் செயல்பாடுகளை ஆவணப்படுத்தும் அலுவலர்களாக மாறியிருக்கின்றனர்.  ஒவ்வொரு மாணவனுக்கும் 5 அல்லது 6 பக்கம் ஒதுக்கப்பட்டு, மாணவர்களைத் தனித்தனியே கவனித்து அவர்களைப் பற்றி வளர் மதிப்பீடு, தொகுப்பு மதிப்பீடு என்று ஆவணப்படுத்தும் வேலை ஆசிரியர்களுக்கு. இதனால் கற்றுத்தரும் நேரம் குறைவாகவும் ஆவணப்படுத்தும் நேரம் அதிகமாகவும் செலவிட வேண்டிய சூழ்நிலை உருவாகியுள்ளது. உதாரணத்துக்கு மாணவனிடம் ஆசிரியர் ஒரு கேள்வி கேட்டால், மாணவனிடம் என்ன கேள்வியைக் கேட்டோம் என்று ஆவணப்படுத்த வேண்டும். மாணவன் புத்தகத்தை கையில் தொட்டால், அதற்கு தனி மதிப்பெண் என்று அதனையும் பதிவு செய்ய வேண்டும்.  இந்த வேலைகளையெல்லாம் செய்துதான் மாணவன் எந்த இடத்தில் தேங்குகிறான், தொய்வடைகிறான் என்று ஆசிரியர் அறிய வேண்டியதில்லை. மாணவர்களின் சில செயல்பாடுகளை வைத்தே அவனைப் பற்றி கணிக்கக் கூடிய திறமை ஆசிரியர்களிடத்தில் உண்டு. மாணவர்களின் எண்ணிக்கை அதிகமாகவும் ஆசிரியர்கள் எண்ணிக்கை குறைவாகவும் உள்ள பள்ளிகளில் மாணவர்களின் தகவல்களை ஆவணப்படுத்தும் முறை எப்படி சாத்தியமாகும்?  இந்நிலையில் இத்தனை வழிமுறைகளை அமல்படுத்தினால் மாணவர்களுக்குக் கல்வி சுமையாகின்றதோ இல்லையோ ஆசிரியர்களுக்கு சுமையாகிவிடாதா?  ஆசிரியர்களைப் பொருத்தவரையில் மேல்நிலைப் பள்ளி ஆசிரியர்களைக் காட்டிலும், தொடக்கக் கல்வி ஆசிரியர்கள் மேலானவர்கள். புதிதாகக் கொண்டு வந்துள்ள முறை தொடக்கக்கல்வி ஆசிரியர்களுக்கு உகந்த சூழலை ஏற்படுத்தியுள்ளதா?  வண்டியில் சாட்டையைக் கையில் வைத்துக்கொண்டு உட்கார்ந்திருப்பவர் பாரத்தை இழுக்கும் எருதின் கஷ்டத்தை அறிந்திருக்க வாய்ப்பில்லை.  கல்வி முறைகளில் உள்ள குறைகளைக் கூறினால், ""சம்பளம் அதிகம்; அதனால் வேலை அதிகம்; இதைக் கூட அவர்கள் செய்ய முடியாதா?'' என்று கேள்விக்கணைகள். வேலை செய்ய ஆசிரியர்கள் தயார். ஆனால், ஓட்டைப் பானையை வைத்து செடிகளுக்கு எப்படி நீர் ஊற்றுவது? இங்கு மாற்ற வேண்டியது பானையையா, நீர் ஊற்றுபவர்களையா?  கால்குலேட்டர் வந்தவுடன் கூட்டல், கழித்தல், பெருக்கல், வகுத்தல் திறன் குறைந்தது; செல்போன் வந்தவுடன் நினைவுத்திறன் குறைந்தது; இவைகளை இழந்து நாம் எதைப்பெற்றோம் என்று தெரியவில்லை.  அதேபோல் தொழில்நுட்பம் வந்தபின் எழுதுவது குறைந்தது. அட்டை வழி, செயல்வழி கற்றல்கள் மூலம் மாணவனின் வாசிப்புத் திறன் மறைந்து கொண்டிருக்கிறது. எழுத்து, வாசிப்பு இவையிரண்டும் இல்லாமல் எப்படி ஒரு மொழியைக் காப்பாற்றுவது?  மாற்றங்கள் வரும்போது ஒன்றை நாம் இழக்கத்தான் வேண்டும். மாற்றத்தை மறுப்பவர்கள் பிற்போக்காளர்கள், இந்த காலத்துக்கு உதவ மாட்டார்கள் என்று மாற்றத்தை ஏற்பவர்கள் ஏளனம் செய்கிறார்கள்.  அசோகர் மரம் நட்ட வரலாற்றுக் கல்வியைத் தூக்கிப்போடுங்கள். இந்த காலத்துக்கு ஏற்ற கல்வியை உருவாக்குங்கள் என்று முற்போக்கு சிந்தனைவாதிகளின் (?) குரல்கள் முன்பு கேட்டன.  ஆனால் இன்றோ, உலக வெப்பமயமாதலைத் தடுக்க ஜி-20 மாநாட்டில் ஆலோசிக்கப்படுகிறது. மரத்தின் அருமை குறித்து அரசு பல விளம்பரங்களைச் செய்து வருகிறது. மரங்களை வளர்க்க பல இயக்கங்கள் தோன்றிவிட்டன.  இப்போதாவது புரிகிறதா, பழைய கல்வி முறை எவ்வளவு உகந்ததென்று? எந்தக் கல்வி முறையை மாற்ற வேண்டுமென்று யார் கூறுவது? மாற்றங்களை நாம் ஒத்துக் கொண்டுதான் ஆகவேண்டுமா? அவ்வாறாயின், உருவில் சிறியதாக இருந்து அறை முழுவதும் மணத்தை பரப்பக்கூடிய மல்லிகை போல்தானே அது இருக்க வேண்டும். அதைவிடுத்து காற்றிலே பட்டவுடன் சுருங்கி விடும் பஞ்சு மிட்டாய் போன்று இருந்து என்ன பயன்?  இந்த வகையான கற்றல் முறைகள் எல்லாம் சிபிஎஸ்இ-க்கு ஈடாக உருவாக்கப்பட்டிருக்கிறது என்பது அதிகாரிகளின் கருத்து. ஒருவேளை இந்த முறையும் அதற்கு ஈடாகவில்லையென்றால் என்ன செய்வது என்று ஆசிரியர்களிடம் கேள்வியெழுப்பினால், "நாம் என்ன செய்ய, அரசன் எவ்வழியோ நாம் அவ்வழி' என்ற பழமொழியை நினைவூட்டுகிறார்கள்.  நீரில் நனைந்த காகிதமோ, அட்டையோ ஈரம் காய்ந்தபின் முன்பைவிட விறைப்பாகத்தான் இருக்கும். அதற்காக அது உறுதியாகத்தான் உள்ளது என்று கூறிவிட முடியுமா?  முன்னர் பார்த்த கட்டட உதாரணத்தில், எதிர்கால சிந்தனையின்றி மேல்தளம் சமன்செய்யப்பட்டது. பாருங்கள், நாளைக்கு ஏற்கெனவே பாதிப்படைந்த தூண் பளு தாங்காமல் மேலும் பாதிப்படைந்தால் மேல்தளத்தை எப்படி சமன் செய்வது? மீண்டும் நன்றாக உள்ள தூணை வெட்டி சமன் செய்வதா? இதைத் தவிர்க்க முன்னரே என்ன செய்திருக்க வேண்டும்?
 

9/12/2011

காப்போம் அரசுப் பள்ளிகளை!

அரசுப் பள்ளிகளில் பயிலும் ஒன்றாம் வகுப்பு முதல் பத்தாம் வகுப்பு வரையிலான மாணவ, மாணவியருக்கு முட்டையுடன் சத்துணவு, தாழ்த்தப்பட்ட மற்றும் பிற்படுத்தப்பட்ட மாணவ, மாணவியருக்கு இலவசச் சீருடைகள், இலவச நோட்டுப் புத்தகங்கள், இலவசப் பாட நூல்கள், தேர்வுக் கட்டணம் செலுத்துவதிலிருந்து விதிவிலக்கு.  மேலும், பதினோராம் வகுப்புப் பயிலும் மாணவ, மாணவியருக்கு இலவச மிதிவண்டி, ஆறாம் வகுப்பு முதல் பன்னிரண்டாம் வகுப்பு வரையிலான மாணவ, மாணவியருக்கு இலவசப் பேருந்து வசதி, கல்வி உதவித்தொகை என எவ்வளவோ சலுகைகளை வழங்கியபோதிலும், பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளை அரசுப் பள்ளிகளில் சேர்ப்பதில் தயக்கம் காட்டி வருகின்றனர்.  அரசுப் பள்ளிகளில் என்னதான் கற்பித்தலில் புதிய அணுகுமுறைகளைக் கொண்டு வந்தபோதிலும், ஆசிரியர்களுக்கு எவ்வளவுதான் பயிற்சிகள் வழங்கிக் கற்பித்தபோதிலும் பெற்றோர்கள் எதையும் ஏற்கத் தயாராக இல்லை. அண்மைக்காலமாக, அரசுப்பள்ளிகளில் மாணவர்கள் சேர்க்கை வெகுவாகக் குறைந்து வருவதே இதற்குச் சான்றாகும்.  பணம் கட்டிப் படித்தாலும் ஆங்கிலக் கல்வியே தேவை என்ற மாயை உருவாகிவிட்டதால், நகரங்களில் மட்டுமல்லாது கிராமங்களில்கூட மெட்ரிக் பள்ளிகளிலேயே தங்கள் குழந்தைகளைச் சேர்ப்பதில் ஆர்வம் காட்டுகின்றனர். பெற்றோர்களின் ஆங்கில மோகத்தைப் பயன்படுத்திக்கொண்டு தனியார் பள்ளிகள் கல்வியை வியாபாரமாக்கி மக்களைச் சுரண்டிக் கொண்டிருக்கின்றன.  தமிழக மாணவர்களுக்கு இந்தி கற்பிக்கப்படுவதைக் கடுமையாக எதிர்த்துப் பல போராட்டங்களை நடத்தி வந்த திராவிடக் கட்சிகள், ஆட்சியைப் பிடித்ததும் அரசுப் பள்ளிகளில் இந்தி கற்பிக்கப்படுவதை நிறுத்தினார்களேயொழிய, தனியார் பள்ளிகளில் இந்தி கற்பிக்கப்படுவதைத் தடுக்கவில்லை.  இன்றைக்கு எல்லா தனியார் மெட்ரிகுலேஷன் பள்ளிகளிலும் இந்தி ஐந்தாம் வகுப்பு வரை கட்டாயப் பாடமாகக் கற்பிக்கப்படுகிறது. எந்த ஒரு பெற்றோரும் இதற்கு எதிர்ப்புத் தெரிவிப்பதில்லை. மாறாக, இந்தி கற்பிக்காத தனியார் பள்ளிகளைப் பெற்றோர் ஏற்றுக்கொள்வதில்லை.  தாய்மொழிக் கல்வி - தமிழ் வழிக்கல்வி என்று குரல் கொடுக்கும் திராவிடக் கட்சியினர் தங்கள் பிள்ளைகளையும், பேரப்பிள்ளைகளையும் ஆங்கில வழிக்கல்வி வழங்கும் மெட்ரிகுலேஷன் பள்ளிகளிலேயே படிக்க வைக்கின்றனர்.  மத்திய அரசு எல்லா மாநிலங்களிலும் நவோதயா வித்யாலயா என்னும் சி.பி.எஸ்.இ. பள்ளிகளை ஆரம்பித்தது. ஆனால், தமிழகத்தில் மாறிமாறி ஆட்சி செய்யும் திராவிடக் கட்சி அரசுகள் நவோதயா வித்யாலயா பள்ளிகள் தொடங்க அனுமதி அளிக்க மறுத்து வருகின்றன. அப்பள்ளிகளில் இந்தி ஒரு பாடமாகக் கற்பிக்கப்படுவதுதான் அப்பள்ளிகளைத் தொடங்க அனுமதி மறுப்பதற்குக் காரணம்.  எந்தப் பள்ளியில் படித்தாலும் ஒரே பாடத்திட்டம்தான், ஒரே பாடம்தான் என்ற உண்மை தெரியாத பெற்றோர்கள் தனியார் பள்ளிகள் கேட்கும் தொகையைக் கடன்பட்டாவது செலுத்துகின்றனர். இதன் விளைவாக, 200 மாணவர்கள் படித்த அரசுத் தொடக்கப்பள்ளிகளில் 20 மாணவர்கள்கூட இல்லை.  முன்பெல்லாம் அரசுப் பள்ளி ஆசிரியர்களுக்குக் கற்பிப்பதற்குப் போதுமான நேரம் இருந்தது. ஆனால், இப்பொழுது அப்படி இல்லை. ஆசிரியர்களுக்கு ஆண்டுக்கு 20 நாள்கள் கட்டாயப் பயிற்சி அளிக்கப்படுகிறது.  மத்திய அரசு வழங்கும் நிதியை எப்படியாவது செலவு செய்தாக வேண்டும். இல்லையென்றால், மத்திய அரசுக்கும், எதிர்க்கட்சியினருக்கும் பதில் சொல்லியாக வேண்டும் என்று இப்படித் தேவையில்லாத பயிற்சிகள் நடத்தப்படுகின்றன. இதனால் மாணவர்களுக்கு ஆசிரியர்கள் கற்பிக்கும் நேரம் குறைந்துவிட்டது.  இன்றைக்குப் பெரும்பாலான தொடக்கப் பள்ளிகள் ஈராசிரியர் பள்ளிகளாகத்தான் உள்ளன. இந்நிலையில் மாதத்துக்கு 2, 3 முறை தலைமை ஆசிரியர்களுக்குக் கூட்டம் நடத்தப்படுகிறது. இது இல்லாமல் மாதத்துக்கு இரண்டு முறையாவது ஏதாவது விவரம் கேட்டுத் தலைமை ஆசிரியர்கள் உதவித் தொடக்கக் கல்வி அலுவலகத்துக்கு வரவழைக்கப்படுகின்றனர்.  இதனால் இரண்டு ஆசிரியர்கள் வேலைசெய்யும் பள்ளிகளில் ஓர் ஆசிரியர்தான் 5 வகுப்புகளையும் கவனிக்க வேண்டியுள்ளது. அவரால் அத்தனை வகுப்புகளையும் பார்க்கத்தான் முடிகிறதே தவிர, எந்த வகுப்புக்கும் பாடம் நடத்த முடிவதில்லை.  தமிழகத்தைப் பொறுத்தவரையில் கல்வியில் அரசியல் புகுந்துவிட்டது. ஒரு கட்சி கொண்டுவரும் பாடத்திட்டத்தை மற்றொரு கட்சி ஆட்சிக்கு வந்தால் மாற்றி அமைக்கிறது.  இனிவரும் காலங்களிலும் இதுபோன்ற சூழ்நிலைதான் நிலவும். இந்நிலை தொடர்ந்தால் லட்சக்கணக்கான மாணவர்களின் எதிர்காலம் பாதிப்புக்குள்ளாகும்.  இந்நிலையைப் போக்க தமிழ் மொழிப்பாடத்தைத் தவிர்த்து, மற்ற ஏனைய பாடங்களை மத்திய அரசின் சி.பி.எஸ்.இ. பாடத்திட்டத்தையே தமிழக அரசும் ஏற்று நடத்தலாம்.  ஆங்கில வழியில் படிக்க விரும்பும் மாணவர்களுக்கு அந்தப் பாடப் புத்தகங்களையே வழங்கிவிடலாம். தமிழ் வழியில் படிக்கும் மாணவர்களுக்கு அந்த பாடப் புத்தகங்களைத் தமிழில் மொழிபெயர்த்துக் கொடுக்கலாம். இதன் மூலம் கல்வியில் அரசியல் புகுவதைத் தவிர்க்க முடியும். அத்துடன் கல்வியும் தரமானதாக இருக்கும்.  எல்லா அரசுப் பள்ளிகளிலும் தமிழ்வழி வகுப்புகளுடன் ஆங்கிலவழி வகுப்புகளும் நடத்தப்பட வேண்டும். ஆங்கிலவழியில் படிக்க விரும்பும் மாணவர்களுக்கு அதற்கான வாய்ப்பை ஏற்படுத்தித் தர வேண்டும்.  இப்பொழுது அரசுப் பள்ளிகளில் உள்ள ஆங்கிலவழி வகுப்புகளில் படிக்கும் மாணவர்களிடம் கட்டணம் வசூலிக்கப்படுகிறது. அவர்களுக்கும் இலவசக் கல்வி வழங்க வேண்டும்.  எந்தப் பள்ளியில் படித்தாலும் ஒரே பாடத்திட்டம், ஒரே பாடநூல் என்பதைப் பெற்றோர்கள் உணரும்படியான விழிப்புணர்வை மக்களிடையே ஏற்படுத்த வேண்டும். அப்பொழுதுதான் அதிகக் கட்டணம் செலுத்திப் படிக்கவைக்கும் பெற்றோர்கள் அரசுப் பள்ளிகளிலேயே தங்கள் குழந்தைகளைப் படிக்கவைப்பார்கள்.  எல்லா தொடக்கப் பள்ளிகளிலும் 5-ம் வகுப்பு வரை இந்தியைக் கட்டாயமில்லாத ஒரு விருப்பப் பாடமாகக் கற்பிக்கலாம். இந்தி விரும்பாத பெற்றோர்களின் குழந்தைகளுக்கு இந்தி கற்பிக்கப்படுவதைத் தவிர்க்கவும் செய்யலாம்.  இதனால் இந்தி கற்க வேண்டும் என்பதற்காகவே தனியார் பள்ளிகளுக்குத் தங்கள் குழந்தைகளை அனுப்பும் பெற்றோர்கள் அரசுப் பள்ளியிலேயே தங்கள் குழந்தைகளைப் படிக்கவைக்க வாய்ப்பாக அமையும்.  அரசுப் பள்ளிகளில் 5 வயது பூர்த்தியான குழந்தைகள்தான் முதல் வகுப்பில் சேர்க்கப்படுகின்றனர். ஆனால், எந்த ஒரு குழந்தையின் பெற்றோரும் தங்கள் குழந்தையை 5 வயது பூர்த்தியாகும் வரை வீட்டில் வைத்திருக்க விரும்புவதில்லை. அதனால்தான் 3 வயதிலேயே தனியார் பள்ளிகளில் எல்.கே.ஜி. வகுப்பில் சேர்த்து விடுகின்றனர்.  தனியார் பள்ளிகளில் எல்.கே.ஜி., யு.கே.ஜி. படிக்கும் குழந்தைகளை அரசுப் பள்ளிகளுக்கு மாற்றுவதில்லை. தொடர்ந்து அந்தப் பள்ளியிலேயே முதல் வகுப்பில் சேர்த்துவிடுகின்றனர்.  தொடக்கப் பள்ளிகளில் முதல் வகுப்பில் சேரும் குழந்தைகளின் எண்ணிக்கையை உயர்த்த எல்லா தொடக்கப் பள்ளிகளிலும் 3 வயது முதல் 5 வயது வரையிலான குழந்தைகளுக்கு நர்சரி வகுப்புகளைத் தொடங்க வேண்டும். இவ்வகுப்புகளில் தனியார் பள்ளிகளில் எல்.கே.ஜி., யு.கே.ஜி. வகுப்புகளுக்குக் கற்பிக்கப்படுவதுபோல அடிப்படைக் கல்வியை வழங்க வேண்டும் அல்லது ஏற்கெனவே நடைபெற்றுவரும் அங்கன்வாடி மையங்களைத் தொடக்கப் பள்ளிகளுடன் இணைத்து நர்சரி வகுப்புகளை நடத்தலாம்.  இதன்மூலம் நர்சரி வகுப்புகளில் உள்ள குழந்தைகள் அப்படியே தொடக்கப்பள்ளிகளில் முதல் வகுப்பில் சேர வாய்ப்பாக அமையும். முதல் வகுப்பில் சேர்ந்துவிட்ட குழந்தை வேறு எந்தத் தனியார் பள்ளிக்கும் செல்லாது. இதன்மூலம் அரசுப் பள்ளிகளில் பயிலும் மாணவர்களின் எண்ணிக்கை உயரும்.  கற்பித்தல் பணி அல்லாத மருத்துவ முகாம்கள், விழிப்புணர்வுக் கூட்டங்கள், மக்கள்தொகைக் கணக்கெடுப்பு, வாக்காளர் சேர்ப்பு, குடும்ப அட்டை சரிபார்ப்பு போன்ற பல வேலைகளுக்கு ஆசிரியர்கள் ஈடுபடுத்தப்படுவதைத் தவிர்க்க வேண்டும்.  அதேபோல, பள்ளிக் குழந்தைகளைக் கொண்டு அவர்கள் வயதுக்குப் புரியாத விழிப்புணர்வுப் பேரணிகள் நடத்தப்படுகின்றன. போதைப் பொருள் ஒழிப்புப் பேரணி, எய்ட்ஸ் விழிப்புணர்வுப் பேரணி, ரத்ததான விழிப்புணர்வுப் பேரணி போன்ற பேரணிகள் நடத்தக் குழந்தைகளை ஈடுபடுத்தி அவர்கள் கல்வி பயிலும் நேரத்தைக் குறைக்கக்கூடாது.  வகுப்பறைக்குள் மாணவர்கள் பாடப்புத்தகம் எடுத்து வரக்கூடாது என்றும், பல வகுப்பு மாணவர்களை ஒன்றாக உட்கார வைத்துக் கற்பிக்க வேண்டும் என்றும், அச்சிடப்பட்ட அட்டைகளைக் கொண்டுதான் ஆசிரியர்கள் பாடம் கற்பிக்க வேண்டும் என்றும் வற்புறுத்தப்படுகிறது.  இதுபோன்ற தேவையற்ற கெடுபிடிகளாலும், கற்பிப்பதில் ஆசிரியர்கள் ஆர்வம் இழக்கின்றனர். மாணவர்களுக்கு மன உளைச்சல் ஏற்படாத வகையிலும், மாணவர்கள் ஆர்வமாகக் கற்கும் வகையிலும் ஆசிரியர்கள் கற்பிக்குமாறு அறிவுறுத்தினால் மட்டும் போதுமானது. அரசுப் பள்ளி ஆசிரியர்களால் தரமான மாணவர்களை உருவாக்க முடியும்.  இனியும் காலம் தாழ்த்தாமல் அரசுப் பள்ளிகளைக் காப்பாற்ற உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். இல்லையேல், இன்னும் ஐந்து ஆண்டுகளில் ஐம்பது சதவிகித அரசுத் தொடக்கப் பள்ளிகள் மூடப்படும் நிலை உருவாகிவிடும்.  கட்டுரையாளர்: பொது நூலகத்துறை அலுவலர் சங்க மாநிலப் பொதுச் செயலர்.