ஒரு மனிதனுக்கு என்னதான் செல்வம் இருந்தாலும், கல்விச்செல்வம் இல்லையெனில், மற்ற செல்வங்கள் இருந்தும், பயனில்லை. இதைத்தான் அய்யன் வள்ளுவன் ஈராயிரம் ஆண்டுகளுக்கு முன்பே திருமறையாம் திருக்குறளில், ‘கேடில் விழுச்செல்வம் கல்வி ஒருவற்கு மாடல்ல மற்றை யவை’ என்று எழுதியிருக்கிறார். அதாவது, ஒருவனுக்கு அழிவு இல்லாத சிறந்த செல்வம் கல்வியே ஆகும். மற்ற செல்வங்கள் சிறப்புடைய செல்வம் அல்ல என்பதுதான் அதன் பொருள். அந்த அறிவு செல்வத்தை வழங்குவதற்குத்தான் மத்திய–மாநில அரசுகள் ஆண்டுதோறும் பட்ஜெட்டுகளில் முன்னுரிமை கொடுத்து தாராளமாக நிதி ஒதுக்கி வருகிறது. சமுதாயத்திலும் படிக்காத மக்கள் என்றாலும் சரி, தங்கள் குடும்பத்தில் கல்லாமை என்பது தங்கள் தலைமுறையோடு போகட்டும், அடுத்த தலைமுறை கல்வி அறிவில் சிறந்து விளங்கவேண்டும் என்பதில் அதிக அக்கறை காட்டி வருகிறார்கள்.
இந்த நிலையில், வசதி படைத்தவர்களெல்லாம் தங்கள் குழந்தைகளை கான்வென்ட் பள்ளிக்கூடங்களில் நிறைய பணம் கொடுத்து படிக்க வைக்கிறார்கள். பள்ளிக்கூடங்களெல்லாம் அடுத்த கல்வி ஆண்டுக்காக ஜூன் மாதம்தான் தொடங்குகிறது. ஆனால், அரசு உதவி பெறாத தனியார் பள்ளிக்கூடங்களில் இப்போதே மாணவர் சேர்க்கை பெரும்பாலும் முடிந்துவிட்டது. இந்திய மனிதவள மேம்பாட்டு ஆய்வு அகில இந்திய அளவில் நடத்தப்பட்டது. அதில், ஒரு அதிர்ச்சிகரமான தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தியா முழுவதும் தனியார் பள்ளிக்கூடங்களில் மாணவர் சேர்க்கை மிக அதிகமாக உயர்ந்துகொண்டே போகிறது என்று தெரிவித்து இருக்கிறார்கள். தனியார் பள்ளிக்கூடங்களுக்கும், அரசாங்க பள்ளிக்கூடங்களுக்கும் இப்படி ஒரு வித்தியாசம் உருவாகிக்கொண்டு இருப்பது நல்லதல்ல.
தமிழ்நாட்டைப் பொறுத்த அளவில், கல்விக்காக ஆண்டுதோறும் அரசு கணிசமாக நிதி ஒதுக்கி வருகிறது. கடந்த நிதி ஆண்டில் 16 ஆயிரத்து 963 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டது. ஆனால், இந்த ஆண்டு 17 ஆயிரத்து 737 கோடியே 71 லட்ச ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது. நமது மாநிலத்தில் மொத்தம் 56 ஆயிரத்து 557 பள்ளிக்கூடங்கள் இருக்கின்றன. இதில், 36 ஆயிரத்து 813 பள்ளிக்கூடங்கள் அரசு பள்ளிக்கூடங்கள், 8,395 பள்ளிக்கூடங்கள் அரசு உதவிபெறும் தனியார் பள்ளிக்கூடங்கள். இது மட்டுமல்லாமல், மத்திய கல்வி திட்டம் அதாவது சி.பி.எஸ்.இ. பள்ளிக்கூடங்கள் ஏறத்தாழ 500 பள்ளிக்கூடங்கள் இருக்கின்றன. மழலை பள்ளிக்கூடங்கள் தொடங்கிய ஏழை மக்கள்கூட தங்கள் சக்திக்கு மீறி, தனியார் பள்ளிக்கூடங்களையே நாடுகிறார்கள். அரசு இவ்வளவு பணம் செலவழிக்கிற நேரத்தில், எதற்காக அரசு பள்ளிக்கூடங்களை விட்டுவிட்டு, தனியார் பள்ளிக்கூடங்களுக்கு செல்ல இவ்வளவு மோகம் இருக்கிறது என்பதை ஆராய்ந்து, நடவடிக்கை எடுக்கவேண்டிய நேரம் வந்து விட்டது. இரு பள்ளிக்கூடங்களிலும் பாடத்திட்டம் ஒன்றுதான். ஆனால், கற்பிக்கும் முறை வேறு வேறாக இருக்கிறது.
தனியார் பள்ளிக்கூடங்களில் பிள்ளைகள் ஆங்கிலத்தில் நன்றாக பேசுகிறார்கள், கூடுதலாக இந்தி போன்ற ஒரு மொழியை படிக்க வாய்ப்பு இருக்கிறது, நூலகங்களை, விளையாட்டு மைதானத்தை பயன்படுத்த கற்றுக்கொடுக்கிறார்கள், கல்வித்தரம் நன்றாக இருக்கிறது, எல்லாவற்றுக்கும் மேலாக அங்கு படிக்கும் மாணவர்கள்தானே அதிக மார்க் எடுக்கிறார்கள், உயர் படிப்புகளில் எளிதாக இடம் வாங்கிவிடுகிறார்கள், ஒளிமயமான எதிர்காலம் அவர்களுக்குத்தானே காத்து இருக்கிறது என்று உறுதியாக மக்கள் நம்புகிறார்கள்.
இந்த நிலையைப் போக்கவேண்டுமென்றால், ஆசிரியர்களும், கல்வித்துறையும் தனியார் பள்ளிக்கூடங்களுக்கு இணையாக அரசாங்க பள்ளிக்கூடங்களிலும் உயர்வான கல்வித்தரம் இருப்பதை உறுதி செய்யவேண்டும். தனியார் பள்ளிக்கூடங்களில் படித்து வெளியே வரும் மாணவர்களுக்கு சரிசமமாக, அரசாங்க பள்ளிக்கூட மாணவர்களும் அதிக மதிப்பெண் பெறவேண்டும், அப்படி நடக்காத பட்சத்தில், ஆசிரியர்களும், கல்வித்துறையும் பதில் சொல்லியாக வேண்டும் என்ற கட்டாயத்தை ஏற்படுத்தவேண்டும். அடுத்து வரும் பொதுத்தேர்வுகளில் அரசாங்க பள்ளிக்கூட மாணவர்கள் ரேங்க் பட்டியலில் இடம் பெறவேண்டும் என்பதையே புது லட்சியமாகக்கொண்டு செயல்பட வேண்டும். எப்படி காவல்துறையில் முக்கிய வழக்குகளில் சிறப்பாக செயல்படுபவர்களுக்கு பதவி உயர்வு அளிக்கப்படுகிறதோ, அப்படி மாநிலத்தில் முதல் இடங்களைப்பெறும் வகையில், மாணவர்களைத்தயார் செய்யும் அரசாங்க பள்ளிக்கூட ஆசிரியர்களுக்கு பதவி உயர்வும், பரிசுத்தொகையும் அளிக்க வேண்டும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக