பிளஸ் 2, 10ம் வகுப்பு தேர்வுக்கான, பொறுப்பு அதிகாரிகள் நியமிக்கப்பட்டு உள்ளனர்.
சர்ச்சைக்குரிய ஈரோடு, கிருஷ்ணகிரி, கடலுார் மாவட்டங்களுக்கு, மிகவும் கண்டிப்பான, கெடுபிடி காட்டக்கூடிய அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
பிளஸ் 2 மற்றும், 10ம் வகுப்பு பொது தேர்வுகள், மார்ச் 2, மற்றும், 8ல், துவங்குகின்றன. வினாத்தாள், ’அவுட்’ ஆகாமல் இருக்கவும், முறைகேடின்றி தேர்வுகளை நடத்தவும், தேர்வுத் துறை இயக்குனர், வசுந்தரா தேவி சில பரிந்துரைகள் அளித்தார்.
அதன்படி, பொறுப்பு அதிகாரிகளை நியமித்து, பள்ளிக்கல்வி செயலர், சபிதா நேற்று உத்தரவிட்டுள்ளார். கடந்த ஆண்டு, ஈரோடு மாவட்டத்தில், ஒரு தனியார் பள்ளியில், ஆள் மாறாட்டம் நடந்து, ஐந்து மாணவர்களின், ’ரிசல்ட்’ நிறுத்தப்பட்டது. பள்ளிக்கான, தேர்வு மைய அங்கீகாரமும் ரத்து செய்யப்பட்டது.
அப்போது, பொறுப்பு அதிகாரியாக செயல்பட்டு, முறைகேடுகளை கண்டுபிடித்த, மெட்ரிக் இயக்குனர் கருப்பசாமி, மீண்டும் ஈரோடுக்கு நியமிக்கப்பட்டு உள்ளார். கடந்த, 2014 - 15ல், பிளஸ் 2 தேர்வின் போது, ’வாட்ஸ் - ஆப்’பில் வினாத்தாள் வெளியான, கிருஷ்ணகிரி மாவட்டத்துக்கு, தேர்வுத் துறை இணை இயக்குனர், உமா நியமிக்கப்பட்டுள்ளார்.
அதேநேரத்தில், கிருஷ்ணகிரி மாவட்ட, ’வாட்ஸ் - ஆப்’ விவகாரத்தை கண்டுபிடித்த, எஸ்.எஸ்.ஏ., இணை இயக்குனர் நாகராஜ முருகன், ராமநாதபுரம் மற்றும் சிவகங்கைக்கு பொறுப்பு அதிகாரியாகிறார். வெறும் மதிப்பெண்ணுக்காகவே இயங்கும் பள்ளிகள் நிறைந்த, நாமக்கல்லுக்கு பள்ளிக்கல்வி இணை இயக்குனர் லதா; தேர்வில் காப்பியடிப்போர் அதிகமாக பிடிபடும், கடலுார் மாவட்டத்திற்கு பாடநுால் கழக செயலர், கார்மேகம்; திருச்சிக்கு, தேர்வுத் துறை இணை இயக்குனர் அமுதவல்லியும் நியமிக்கப்பட்டுள்ளார்.
பள்ளிக்கல்வி இயக்குனர் கண்ணப்பன், சென்னைக்கும்; அனைவருக்கும் இடைநிலை கல்வி இயக்குனர் அறிவொளி, தொடக்க கல்வி இயக்குனர் இளங்கோவன் ஆகியோர், திருவள்ளூர், காஞ்சிபுரம் மாவட்டங்களுக்கு பொறுப்பு அதிகாரியாக செயல்படுவர்.
மதுரைக்கு இணை இயக்குனர் நரேஷும், ஆசிரியர் தேர்வு வாரிய உறுப்பினர் செயலர் உமா, வேலுாருக்கும் நியமிக்கப்பட்டுள்ளனர். இதேபோன்று, அனைத்து மாவட்டங்களுக்கும், தேர்வுக்கான பொறுப்பு அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக