பக்கங்கள்

இலவச SMS களை உடனுக்குடன் பெற ON TNPTFSVG அல்லது ON TNPTFMuthupandian என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு அனுப்பி இலவச குறுந்தகவல்களை(SMS) பெறுங்கள். DND (Do NOT Disturb) சர்வீஸ்ல் உள்ள எண்கள் அதனை(DND) நீக்கிய பிறகே இச்சேவையை பெறமுடியும். plz call 1909

மின்னஞ்சல் மூலம் பதிவுகளை பெறலாம்

Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

5/02/2017

அங்கீகாரம் இல்லாத பள்ளிகளில் மாணவர் சேர்க்கைக்கு தடை விதிப்பதுடன் உடனடியாக மூட உத்தரவிட வேண்டும். தமிழ்நாடு அரசுக்கு தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி வேண்டுகோள்.

சிவகங்கை: தமிழகத்தில்  வருகிற ஜூன் 1ந் தேதி பள்ளிகள் திறக்க உள்ள நிலையில் மாணவர்கள் நலன் கருதி அங்கீகாரம் இல்லாத பள்ளிகளில் மாணவர் சேர்க்கைக்கு தடை விதிக்க வேண்டும் என ஆசிரியர் அமைப்புகள் கோரிக்கை விடுத்துள்ளன.
        இது குறித்து தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி மாநிலத்துணைத்தலைவர் ஜோசப்ரோஸ், சிவகங்கை மாவட்டச் செயலாளர் முத்துப்பாண்டியன், மாவட்டத்தலைவர் தாமஸ் அமலநாதன், மாவட்டப் பொருளாளர் குமரேசன், மாநிலச் செயற்குழு உறுப்பினர் புரட்சித்தம்பி ஆகியோர் கூட்டாக தமிழக அரசுக்கு அனுப்பியுள்ள மனுவில் கூறியுள்ளதாவது
        கும்பகோணம் பள்ளி, தீவிபத்தில் 90க்கும் மேற்பட்ட குழந்தைகள் கருகி உயிரிழந்த சம்பவம் 2004ல் நிகழ்ந்தது. அது குறித்து விசாரித்த நீதிபதி சம்பத் கமிஷன் அளித்த பரிந்துரைகளின் அடிப்படையில், தனியார் பள்ளிகளுக்கான பல விதிமுறைகளை தமிழக அரசு உருவாக்கியது. பள்ளிகளில் தீயணைப்பு சாதனங்கள் பொருத்தப்பட வேண்டும், கான்கீரிட் கட்டிடங்களில் மட்டுமே பள்ளிகள் இயங்க வேண்டும் என்பதுடன், பள்ளிகளுக்கு எவ்வளவு நிலம் இருக்க வேண்டும் என்பதையும் அரசு வரைமுறைப்படுத்தியது.
         2005ம் ஆண்டு மெட்ரிகுலேஷன், நர்சரி மற்றும் பிரைமரி பள்ளிகளில் கல்வித்துறை அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர். அப்போது, விதிமுறைகளுக்கு உட்படாத 1,500 பள்ளிகளைக் கண்டறிந்து, அவற்றுக்கான அங்கீகாரத்தை ரத்து செய்தனர். நிர்ணயிக்கப்பட்ட நிலப்பரப்பு இல்லாத பள்ளிகளுக்கு கால அவகாசம் அளிக்கப்பட்டது.
         இதற்கிடையில், 2009ம் ஆண்டு கல்வி உரிமைச்சட்டம் வந்தது. அச்சட்டத்தின்படி, ஏற்கெனவே அரசு உருவாக்கிய விதிமுறைகளை பள்ளிகள் கட்டாயம் பின்பற்றியாக வேண்டும். எனவே, அடிப்படை வசதிகள் இல்லாத 2,500 பள்ளிகளுக்கு 2011ல் நோட்டீஸ் அனுப்பியது தமிழக அரசு. போதுமான நிலப்பரப்பு அல்லாத பள்ளிகள் எக்காரணம் கொண்டும் மாணவர் சேர்க்கையை நடத்தக்கூடாது, பள்ளிகளை தொடர்ந்து நடத்தக்கூடாது, அப்பள்ளிகளில் படிக்கும் மாணவர்களை அருகில் உள்ள அங்கீகாரம் பெற்ற விதிமுறைக்கு உட்பட்ட பள்ளிகளில் சேர்க்க வேண்டும், முறையாக அரசு அனுமதி பெற்ற பிறகே பள்ளிகளை நடத்த வேண்டும் என்று அந்த நோட்டீஸில் கூறப்பட்டது. தங்களுக்கு கால அவகாசம் வேண்டும் என்று தனியார் பள்ளி நிர்வாகங்கள் கோரின. எனவே, போதிய இடவசதி இல்லாத பள்ளிகளுக்கான காலக்கெடு நீட்டிக்கப்பட்டது.
        அரசு விதிப்படி குறைந்தபட்ச நிலப்பரப்பை உறுதி செய்ய, தனியார் பள்ளி நிர்வாகங்களுக்கு அளிக்கப்பட்ட காலக்கெடுவை தமிழக அரசு பல முறை நீடித்துவிட்டது. 2015-16ம் கல்வி ஆண்டுடன் அப்பள்ளிகளுக்கான அங்கீகாரம் முடிவடைந்தது.
        அதன் பின் தமிழகத்தில் 746 மெட்ரிக் பள்ளிகளுக்கு அங்கீகாரம் கிடையாது என அரசு செய்தி வெளியிட்டது. இந்தப் பள்ளிகளில் பயிலும் மாணவர்களின் நலன் கருதி, மே 31 வரை மட்டும் தாற்காலிக அடிப்படையில் ஒரே ஒரு முறை என்ற ரீதியில் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது என கடந்த ஆண்டு கல்வித்துறை தெரிவித்தது.
       இந்த பள்ளிகள் அரசு நிர்ணயித்துள்ள குறைந்தபட்ச விதிமுறைகளைக்கூட கடைப்பிடிக்கவில்லை. எனவே, இந்த 746 பள்ளிகளையும் வரும் கல்வி ஆண்டுக்குள் மூட வேண்டும் என பல்வேறு அமைப்புகள் கோரிக்கை விடுத்தன. இது குறித்து சென்னை உயர்நீதி மன்றத்திலும் வழக்கு தொடுக்கப்பட்டது. வழக்கு விசாரணை நடந்து வருகிறது.
        இந்நிலையில் ஜூன் முதல் தேதி பள்ளிகள் திறக்கப்பட்டு மாணவர் சேர்க்கை நடைபெற உள்ளது. பொது மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் இந்த அங்கீகாரமற்ற 746 பள்ளிகளின் பெயர், முகவரியை வெளிப்படையாக இணையதளத்தில் வெளியிட வேண்டும். இந்தப் பள்ளிகளில் புதிதாக மாணவர்களை சேர்க்க அனுமதிக்கக்கூடாது என கல்வித்துறைக்கும், தமிழக அரசுக்கும் எங்கள் அமைப்பின் மூலம் அரசுக்கு பல முறை கோரிக்கை விடுத்துள்ளோம். இதன் மூலம் அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கையை அதிகரிக்க முடியும்.
        மேலும் மே மாதத்துக்குப் பிறகு, இவற்றை இயங்குவதற்கு அனுமதி வழங்கக் கூடாது. மேலும் இந்தப் பள்ளிகளில் பயிலும் மாணவர்களை அருகிலுள்ள அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகளில் சேர்க்க வேண்டும். இந்த அங்கீகாரமற்ற 746 பள்ளிகளின் பெயர், முகவரியை வெளிப்படையாக இணையதளத்தில் வெளியிட வேண்டும். மாவட்ட கல்வி அலுவலகங்கள் முன்பு அங்கீகராமில்லாத பள்ளிகளின் பெயர் பட்டியலை தகவல் பலகையில் வெளியட வேண்டும். இந்தப் பள்ளிகளில் புதிதாக மாணவர்களை சேர்க்க அனுமதிக்கக்கூடாது என அந்த மனுவில் தெரிவித்துள்ளனர். புதிதாக பொறுப்பேற்றுள்ள அரசு இதை கவனத்தில் கொண்டு நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்களும் எதிர்பார்க்கின்றனர்.
குறிப்பு: சிவகங்கை மாவட்டத்தில் மட்டும் 15க்கும் மேற்பட்ட பள்ளிகள் அங்கீகாரமில்லாமல் செயல்படுகின்றன. மாவட்ட கல்வி நிர்வாகமோ எச்சரிக்கை நோட்டீஸ் அனுப்பியுள்ளோம் என்ற ஒற்றை பதிலையே ஆண்டு கணக்கில் சொல்லி வருகிறது. மாவட்ட ஆட்சித்தலைவர் உறுதியான நடவடிக்கையை இந்த விசயத்தில் எடுக்க வேண்டும்

4/02/2017

Dinamani


பள்ளிகளில் துப்புரவு பணியாளர்களுக்கு ஊதியம் வழங்குவதில் தாமதம். ஊதியமில்லாததால் பணியாளர்கள் அதிர்ச்சி. உடனடியாக வழங்க ஆசிரியர்கள் கோரிக்கை.


        சிவகங்கை: தமிழகத்தில் உள்ள அரசு பள்ளிகளில் துப்புரவு பணிக்கு ஆட்கள் நியமிக்க வேண்டும் என்று ஆசிரியர்கள் உட்பட சமூக ஆர்வலர்கள் பலர் அரசிடம் கோரிக்கை வைத்தனர். அதன் அடிப்படையில் துப்புரவு பணிக்கு அரசு நிதி ஒதுக்கி கடந்த ஜனவரி 2016 முதல் செயல்படுத்தி வருகிறது. இத்திட்டத்தில் பணியாற்றும் ஊழியர்களுக்கான ஊதியம் ஊரக வளர்ச்சி துறையின் மூலம், பள்ளி மேலண்மை குழுவின் (School Management Committee) வங்கி கணக்கில் வரவு வைக்கப்படுகிறது. அதன் பின் தலைமையாசிரியர்கள் அந்த ஊதியத்தை வங்கியிலிருந்து எடுத்து ஊராட்சி அளவிலான கூட்டமைப்பு (Panchayat level Federation)  மூலம் சம்பந்;தப்பட்ட ஊழியர்களின் வங்கி கணக்கின் மூலம் ஊதியம் வழங்கப்படும். இந்நிலையில் ஒரு சில ஒன்றியங்களில் மூன்று மாதங்களுக்கு மேலாக ஊதியம் வழங்கப்படவில்லை என ஆசிரியர்கள் மாவட்ட ஆட்சித்தலைவரிடம் புகார் தெரிவித்துள்ளனர்.

இது குறித்து தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி மாநிலத்துணைத்தலைவர் ஜோசப் ரோஸ், மாவட்டச் செயலாளர் முத்துப்பாண்டியன், மாவட்டப் பொருளாளர் குமரேசன், மாநிலச் செயற்குழு உறுப்பினர் புரட்சிதம்பி, மாநிலப்பொதுக்குழு உறுப்பினர் ஞான அற்புதராஜ் ஆகியோர் கூட்டாக மாவட்ட ஆட்சித்தலைவரிடம் கொடுத்துள்ள மனுவில் கூறியுள்ளதாவது:
.
அரசு பள்ளிகளில் துப்புரவு பணியாளர்கள் நியமிக்க வேண்டும் என்ற எங்களது நீண்ட நாள் கோரிக்கையின் பயனாக தமிழக அரசு கடந்த ஜனவரி-2016 முதல் நிதி ஒதுக்கி செயல்படுத்தி வருகிறது. இதில் தொடக்கப்பள்ளிகளுக்கு ஒரு மாதத்திற்கு துப்புரவு பணியாளர்களுக்கு ஊதியமாக ரூ750ம், தூய்மை செய்யும் பொருட்கள் வாங்க ரூ300ம் என மொத்தம் ரூ1050 ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. அதைப்போல நடுநிலைப்பள்ளிகளுக்கு துப்புரவு பணியாளர்களுக்கு ஊதியமாக ரூ1000ம், தூய்மை செய்யும் பொருட்கள் வாங்க ரூ500ம் என மொத்தம் ரூ1500ம், உயர்நிலைப்பள்ளிகளுக்கு ரூ1500 உடன் ரூ750 சேர்த்து மொத்தம் ரூ2250 எனவும், மேல்நிலைப்பள்ளிகளுக்கு ரூ2000த்துடன் ரூ1000 சேர்த்து மொத்தம் ரூ3000 என ஒதுக்கீடு செய்து அரசு செயல்படுத்தி வருகிறது. 
  ஒவ்வொரு பள்ளியிலும் பள்ளி மேலாண்மைக்குழு செயல்பட்டு வருகிறது. இதில் தலைவர் மற்றும் பள்ளி தலைமையாசிரியர் இணைந்து கூட்டாக வங்கியில் கணக்கு பராமரிக்கப்பட்டு வருகிறது.  துப்புரவு நிதியானது ஊராட்சி ஒன்றிய அலுவலகம் மூலம் சம்பந்தப்பட்ட பள்ளிகளின் பள்ளி மேலாண்மைக்குழு கணக்கிற்கு ஒவ்வொரு மாதமும் நேரடியாக வரவு வைக்கப்படுகிறது. அதன்பின் தலைமையாசிரியர்கள் பள்ளி மேலாண்மைக்குழுவை கூட்டி உரிய தீர்மானம் நிறைவேற்றி அதனடிப்படையில் வங்கிக்கு சென்று கூட்டாக பணம் எடுக்க வேண்டும். எடுத்த பணத்தில் துப்புரவு பொருட்களுக்கு உரிய தொகையை மட்டும் தலைமையாசிரியர்கள் எடுத்துக்கொண்டு துப்புரவு ஊழியரின் ஊதியத்தை ஊராட்சி அளவிலான கூட்டமைப்பின் (PLF) வங்கி கணக்கில் நேரடியாக சென்று செலுத்த வேண்டும். அதன் பின் ஊராட்சி அளவிலான கூட்டமைப்பின் மூலம் சம்பந்தப்பட்ட துப்புரவு பணியாளரின் வங்கி கணக்கில் ஊதியம் வரவு வைக்கப்படும். 
ஆனால் மாவட்டத்தில் உள்ள ஒரு சில ஒன்றியங்களில் மூன்று மாதங்களுக்கு மேலாக ஊதியம் வழங்கப்படவில்லை. இதனால் தலைமையாசிரியர்கள் தங்களது சொந்த நிதியிலிருந்து துப்புரவு பணியாளர்களுக்கு ஊதியம் வழங்க வேண்டியுள்ளது. ஊரக வளர்ச்சி துறை அதிகாரிகள் நிதியில்லை என கை விரிக்கின்றனர். எனவே தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி சார்பாக மாவட்ட ஆட்சித்தலைவரை சந்திந்து மாவட்ட நிர்வாகம் உடனடியாக நிதி ஒதுக்கி ஊதியம் வழங்க வேண்டுமென அந்த மனுவில் தெரிவித்துள்ளனர். 

3/25/2017

தோழமைகளே!!!

தோழமைகளே!!!
நாளை(26.3.2017) தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி , சிவகங்கை மாவட்டக்கிளையின் சார்பாக சிவகங்கை மாவட்ட அலுவலகத்தில் நடைபெறும் முப்பெரும் விழாவில் மாவட்டம் முழுமைக்கும் ஆசிரியர்கள் திரளாக பங்கேற்க வேண்டும் என தோழமையுடன் கேட்டுக்கொள்கிறேன். வட்டாரச் செயலாளர்கள் தங்கள் வட்டார ஆசிரியர்களை குறித்த நேரத்தில் பங்கெடுக்க உரிய முயற்சியை மேற்கொள்ள வேண்டும். இயங்குவதும், இயக்குவதும் நாம் என்பதில் பெருமை கொள்வோம். பெண் ஆசிரியர் கருத்தரங்கில் பெண் ஆசிரியர்கள் தங்களது ஆக்க பூர்வமான கருத்துக்களை முன் வைக்க கேட்டுக்கொள்ப்படுகிறார்கள். ஆசிரியர் நலன், மாணவர் நலன், சமூக நலன் என்ற இயக்கத்தின் தாரக மந்திரத்தை முன்னெடுத்த செல்ல, வருங்காலத்தில் பெண் ஆசிரியர்கள் தலைமையேற்று இயக்கத்தை வழி நடத்திச்செல்ல, போராட்ட உணர்வு குறையாமல் உரிமைகளை பெற்றிட, எதிர்கால இந்த்யாவின் நம்பிக்கை நட்சத்திரங்களை உருவாக்கும் புனிதமான பணியினை மேற்கொள்ளும் நாம் ஒரு சுய ஆய்வு மேற்கொண்டு பணிக்கலாச்சாரத்தை உயர்த்தி பிடிக்க ஒன்று கூடுவோம் தோழமைகளே...
தொடர்ந்து கடுமையான பணிச்சூழலிலும் இயக்கத்திற்கு நேரம் ஒதுக்கி சமூக நலன் சார்ந்து சிந்திக்க நாளை சங்கமிப்போம்...
தொடர்ந்து இயக்க பணியில்
MP@TNPTF
சிவகங்கை மாவட்டம்


3/21/2017

சத்தணவு ஊழியர்கள் தொடர் மாவட்ட மறியல். மாணவர்களுக்கு சத்துணவு வழங்குவதில் சிக்கல்.

சத்தணவு ஊழியர்கள் தொடர் மாவட்ட மறியல்.
மாணவர்களுக்கு சத்துணவு வழங்குவதில் சிக்கல்.
சத்துணவு பணிகளை ஏற்க மாட்டோம் என தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி திட்டவட்டம்.
சிவகங்கை: தமிழகம் முழுவதும் தமிழ்நாடு சத்துணவு ஊழியர் சங்கம் 20 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி 3 நாள் மாவட்ட மறியல் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதனால் மாணவர்களுக்கு மதிய உணவு வழங்குவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இதை சமாளிக்க தலைமையாசிரியர்கள் சத்தணவு வழங்கும் பொறுப்பை ஏற்று மாணவர்களுக்கு தரமான சத்துணவை தங்கு தடையின்றி வழங்க வேண்டும் என அதிகாரிகளுக்கு தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இந்த முடிவிற்கு ஆசிரியர்கள் கடும் எதிர்ப்பை தெரிவித்துள்ளனர்.
இது குறித்த தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி, மாநிலத்துணைத் தலைவர் ஜோசப்ரோஸ், மாவட்டச் செயலாளர் ஆ.முத்துப்பாண்டியன், மாவட்டத் தலைவர் ஆ.தாமஸ் அமலநாதன், மாவட்டப் பொருளாளர் மு.குமரேசன், மாநிலச் செயற்குழு உறுப்பினர் புரட்சித்தம்பி ஆகியோர் செய்தியாளர்களிடம் கூறியதாவது
தமிழ்நாடு அரசு ஊழியர்கள் மற்றும் சத்துணவு பணியாளர்கள் தங்களது நியாயமான கோரிக்கைகள் குறித்து பல்வேறு கட்டங்களாக கடந்த ஐந்து ஆண்டுகளுக்கு மேலாக போராடி வருகின்றனர். பல்வேறு சத்துணவு மையங்கள் ஊழியர் பற்றாக்குறையால் மிகவும் சிரமத்திற்கு ஆட்பட்டு வருகிறது. அவர்களது நியாயத்தை உணர்ந்து சங்க பொறுப்பாளர்களை பேச்சு வார்த்தைக்கு அழைத்து தீர்வு காண அரசு முயற்சிக்க வேண்டும். அதை விடுத்து அவர்களது போராட்டத்தை நசுக்கும் விதமாக சத்துணவு பணிகளில் ஆசிரியர்களை ஈடுபடு வைக்க முயற்சிப்பதை நாங்கள் வன்மையாக கண்டிக்கிறோம். எங்கள் ஆசிரியர்கள் சத்துணவு பணிகளை ஏற்க மாட்டார்கள் என மாவட்ட நிர்வாகத்திற்கு  திட்டவட்டமாக தெரிவித்துவிட்டோம். எனவே உடனடியாக  சத்துணவு ஊழியர்களின் கோரிக்கைகளுக்கு அரசு தீர்வு கான வேண்டும் என தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி சார்பில் கேட்டுக்கொள்கிறோம்.

3/19/2017

Dinakaran


Malaimurasu


நிதிநிலை அறிக்கை ஏமாற்றமளிக்கிறது: ஆரம்பப் பள்ளி ஆசிரியர் கூட்டணி

தமிழக அரசின் நிதிநிலை அறிக்கையில் ஊதியக்குழு பரிந்துரையை அமல்படுத்த நிதி ஒதுக்கீடு செய்யாதது ஏமாற்றமளிக்கிறது என தமிழ்நாடு ஆரம்பப் பள்ளி ஆசிரியர் கூட்டணி தெரிவித்துள்ளது.
இதுகுறித்து கூட்டணியின் மாநிலத் துணைத் தலைவர் ஜோசப்ரோஸ், சிவகங்கை மாவட்டச் செயலர் முத்துப்பாண்டியன் உள்ளிட்ட நிர்வாகிகள் சனிக்கிழமை வெளியிட்டுள்ள அறிக்கை விவரம்: கடந்த 2016 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம், அப்போதைய தமிழக முதல்வர் ஜெ.ஜெயலலிதா, தமிழகத்தில் அரசு ஊழியர்களுக்கும், ஆசிரியர்களுக்கும் தன் பங்கேற்பு ஓய்வூதியத் திட்டத்தை ரத்து செய்துவிட்டு பழைய ஓய்வூதிய திட்டத்தை நடைமுறை படுத்துவதற்காக வல்லுநர் குழு ஒன்றை அமைத்தார். இதுவரை அந்த குழு எந்த ஒரு அறிக்கையையும் தாக்கல் செய்யவில்லை.
தமிழக முதல்வராக எடப்பாடி பழனிசாமி பதவியேற்றுக்கொண்ட பின், ஏழாவது ஊதியக்குழுவின் பரிந்துரைகளை தமிழக அரசு ஊழியர்களுக்கும், ஆசிரியர்களுக்கும் நடைமுறைப்படுத்த, மாநில அரசின் எட்டாவது ஊதிய மாற்றக் குழுவை அமைத்து, அதன் அறிக்கையை 2017 ஜூன் 30-க்குள் அளிக்க உத்தரவிட்டார். ஆனால், 2017-2018 ஆம் ஆண்டிற்கான தமிழக அரசின் நிதிநிலை அறிக்கையில் ஊதியக்குழுவின் பரிந்துரைகளை அமல்படுத்துவதற்குரிய நிதி ஒதுக்கீடு செய்யவில்லை. இது தமிழகத்தில் பணியாற்றும் அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு பெரும் ஏமாற்றத்தை அளித்துள்ளது.
எனவே அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கு பழைய ஓய்வூதியத் திட்டத்தை வழங்கிடவும், நிதிநிலை அறிக்கையில் ஊதியக்குழுவின் பரிந்துரைகளை அமல்படுத்த உரிய நிதி ஒதுக்கீடு செய்யவும் தமிழக முதல்வர் பழனிசாமி முன் வர வேண்டும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

2/12/2017

பிளஸ் 2 தேர்வுக்கு பொறுப்பாளர்கள் நியமனம்!

பிளஸ் 2, 10ம் வகுப்பு தேர்வுக்கான, பொறுப்பு அதிகாரிகள் நியமிக்கப்பட்டு உள்ளனர்.
சர்ச்சைக்குரிய ஈரோடு, கிருஷ்ணகிரி, கடலுார் மாவட்டங்களுக்கு, மிகவும் கண்டிப்பான, கெடுபிடி காட்டக்கூடிய அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

பிளஸ் 2 மற்றும், 10ம் வகுப்பு பொது தேர்வுகள், மார்ச் 2, மற்றும், 8ல், துவங்குகின்றன. வினாத்தாள், ’அவுட்’ ஆகாமல் இருக்கவும், முறைகேடின்றி தேர்வுகளை நடத்தவும், தேர்வுத் துறை இயக்குனர், வசுந்தரா தேவி சில பரிந்துரைகள் அளித்தார்.

அதன்படி, பொறுப்பு அதிகாரிகளை நியமித்து, பள்ளிக்கல்வி செயலர், சபிதா நேற்று உத்தரவிட்டுள்ளார். கடந்த ஆண்டு, ஈரோடு மாவட்டத்தில், ஒரு தனியார் பள்ளியில், ஆள் மாறாட்டம் நடந்து, ஐந்து மாணவர்களின், ’ரிசல்ட்’ நிறுத்தப்பட்டது. பள்ளிக்கான, தேர்வு மைய அங்கீகாரமும் ரத்து செய்யப்பட்டது. 

அப்போது, பொறுப்பு அதிகாரியாக செயல்பட்டு, முறைகேடுகளை கண்டுபிடித்த, மெட்ரிக் இயக்குனர் கருப்பசாமி, மீண்டும் ஈரோடுக்கு நியமிக்கப்பட்டு உள்ளார். கடந்த, 2014 - 15ல், பிளஸ் 2 தேர்வின் போது, ’வாட்ஸ் - ஆப்’பில் வினாத்தாள் வெளியான, கிருஷ்ணகிரி மாவட்டத்துக்கு, தேர்வுத் துறை இணை இயக்குனர், உமா நியமிக்கப்பட்டுள்ளார். 

அதேநேரத்தில், கிருஷ்ணகிரி மாவட்ட, ’வாட்ஸ் - ஆப்’ விவகாரத்தை கண்டுபிடித்த, எஸ்.எஸ்.ஏ., இணை இயக்குனர் நாகராஜ முருகன், ராமநாதபுரம் மற்றும் சிவகங்கைக்கு பொறுப்பு அதிகாரியாகிறார். வெறும் மதிப்பெண்ணுக்காகவே இயங்கும் பள்ளிகள் நிறைந்த, நாமக்கல்லுக்கு பள்ளிக்கல்வி இணை இயக்குனர் லதா; தேர்வில் காப்பியடிப்போர் அதிகமாக பிடிபடும், கடலுார் மாவட்டத்திற்கு பாடநுால் கழக செயலர், கார்மேகம்; திருச்சிக்கு, தேர்வுத் துறை இணை இயக்குனர் அமுதவல்லியும் நியமிக்கப்பட்டுள்ளார். 

பள்ளிக்கல்வி இயக்குனர் கண்ணப்பன், சென்னைக்கும்; அனைவருக்கும் இடைநிலை கல்வி இயக்குனர் அறிவொளி, தொடக்க கல்வி இயக்குனர் இளங்கோவன் ஆகியோர், திருவள்ளூர், காஞ்சிபுரம் மாவட்டங்களுக்கு பொறுப்பு அதிகாரியாக செயல்படுவர்.

மதுரைக்கு இணை இயக்குனர் நரேஷும், ஆசிரியர் தேர்வு வாரிய உறுப்பினர் செயலர் உமா, வேலுாருக்கும் நியமிக்கப்பட்டுள்ளனர். இதேபோன்று, அனைத்து மாவட்டங்களுக்கும், தேர்வுக்கான பொறுப்பு அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். 

10/24/2016

Press NewsTNPTF EC resulation
15 அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி மாநிலந்தழுவிய மாபெரும் ஆர்ப்பாட்டம்

அன்பார்ந்த ஆசிரியப் பேரினமே,
கல்வி நலன், மாணவர் நலன், ஆசிரியர் நலன் ஆகிய உன்னதக் குறிக்கோள்களோடு தொய்வின்றி தொடர்ந்து களப்பணியாற்றிக் கொண்டிருக்கும் நமது பேரியக்கம் நியாயமான கோரிக்கைகளுக்காக சமரசமற்ற போராட்டங்களை தொடர்ந்து நடத்தி வருகிறது.
கோரிக்கைகள் தொடர்பாக பல்வேறு வழிகளில் முறையீடுகள் செய்தும் தீர்வு கிடைக்காத நிலையில்தான் போர்க்குணமிக்க நமது பேரியக்கம் போராட்டக்களம் காணுகிறது. அந்த அடிப்படையில் தமிழக அரசு மற்றும் தொடக்கக்கல்வி இயக்குனர் வரை பலமுறை முறையீடுகள் செய்தும் இன்றுவரை தீர்க்கப்படாத கீழ்க்கண்ட 15 கோரிக்கைகளுக்கும் உடனடித் தீர்வுகோரி முதல்கட்ட நடவடிக்கையாக தமிழகம் முழுவதும் அனைத்து வட்டாரத் தலைநகரங்களிலும் 04.11.2016 வெள்ளி மாலை 5 மணிக்கு கோரிக்கை முழக்க ஆர்ப்பாட்டங்கள் நடத்திடவும், இரண்டாம் கட்டமாக 20.11.2016 அன்று மாவட்டத்தலைநகரங்களில் உண்ணாவிரதப்போராட்டமும், மூன்றாம் கட்டமாக 28.12.2016 அன்று சென்னையில் தொடர் முழக்கப் போராட்டம் நடத்துவது எனவும் நமது மாநிலச் செயற்குழு முடிவு செய்துள்ளது. கூட்டுப்பேர உரிமைக்கு வலிமைச்சேர்த்து நமது உரிமைக்குரலை ஓங்கி ஒலிப்போம். அலைகடலென அணிதிரள்வோம். தமிழக அரசிற்கும், தொடக்கக்கல்வித்துறைக்கும் நமது கோரிக்கைளின் நியாயத்தை உணர்த்துவோம். போராடுவோம் ! வெற்றி பெறுவோம் !
கோரிக்கைகள்:
1) புதிய தன் பங்கேற்பு ஓய்வூதியத் திட்டத்தைக் கைவிட்டு பழைய பயனளிப்பு ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்துக.
இக்கோரிக்கைக்காக இதுவரை 16 அகில இந்திய வேலைநிறுத்தப் போராட்டங்களில் பங்கேற்ற தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்துடன் இணைந்து நடத்திய வீரஞ்செறிந்த வேலை நிறுத்தப் போராட்டத்தின் பயனாக 19.02.2016 அன்று தமிழக சட்டமன்றத்தில் மாண்புமிகு தமிழக முதலமைச்சர் அவர்கள் பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்துவது தொடர்பாக ஆய்வு செய்ய வல்லுநர்குழு அமைக்கப்படும் என்று அறிவித்தார்கள். அதன்படி அமைக்கப்பட்ட திருமதி.சாந்தா ஷீலா நாயர், IAS அவர்கள் தலைமையிலான வல்லுநர் குழுவின் கருத்துக் கேட்பின்போது அனைத்து அரசு ஊழியர் மற்றும் ஆசிரியர் சங்கங்களும் பழைய ஓய்வூதியத் திட்டத்தையே தொடர்ந்து செயல்படுத்த வேண்டும் என்ற கோரிக்கையை வலுவாக முன்வைத்துள்ளன. எனவே, மக்கல்நலப் பணியாற்றும் ஆசிரியர்கள் மற்றும் அரசு ஊழியர்களின் எதிர்கால வாழ்க்கையை பங்குச்சந்தை சூதாட்டத்தில் தள்ளாமல் அவர்களது வாழ்வாதாரத்தைப் பாதுகாத்திட பழைய ஓய்வூதியத் திட்டத்தை தொடர மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்கள் ஆவண செய்திட வேண்டும்.
2) தமிழக இடைநிலை ஆசிரியர்களுக்கு ஆறாவது ஊதியக் குழுவில் ஏற்பட்ட மிகப்பெரிய ஊதிய இழப்பைச் சரிசெய்து ஏழாவது ஊதியக்குழுவை உடனடியாக அமைத்து மத்திய அரசிற்கு இணையான ஊதியம் மற்றும் படிகள் வழங்கிடுக.
ஆறாவது ஊதியக்குழு தமிழ்நாட்டு இடைநிலை ஆசிரியர்களுக்கு அடிப்படை ஊதியத்தில் ரூ5500ஃ- குறைவாக வழங்கி மத்திய அரசிற்கு இணையாகப் பெற்றுவந்த ஊதியத்தை பறித்துவிட்ட நிலையில், அப்பாதிப்பைச் சரிசெய்து ஏழாவது ஊதியக்குழுவை அமைத்து தொடர்ந்து மத்திய அரசிற்கு இணையான ஊதியம் மற்றும் படிகளை தமிழ்நாட்டு இடைநிலை ஆசிரியர்களுக்கும் வழங்கிட நடவடிக்கை மேற்கொள்ளப்பட வேண்டும்.
3) மத்திய அரசின் புதிய கல்விக்கொள்கை தொடர்பாக தமிழக அரசு தனது தெளிவான கருத்தை மத்திய அரசிற்கு பதிவு செய்ய வேண்டும்.
நாட்டின் மிக முக்கியத்துவம் வாய்ந்த கல்விக்கொள்கையானது கல்வியாளர்கள், ஆசிரியர்கள், மாணவர் அமைப்புகள், பொதுமக்கள் ஆகியோரின் கருத்துக்களை உள்வாங்கி உருவாக்கப்பட வேண்டும். அதிகார வர்க்கம் தன்னிச்சையாக உருவாக்கும் கல்வியானது அடிமைக் கல்வியாகவே அமையும். எனவே, தமிழக அரசு கல்விசார் அமைப்புக்களை கலந்தாலோசித்து தெளிவான கருத்துக்களை மத்திய அரசுக்குத் தெரிவித்திட வேண்டும்.
4) பி.லிட் கல்வித்தகுதியுடன் நடுநிலைப்பள்ளித் தலைமை ஆசிரியராகப் பதவி உயர்வு பெற்றபின் தனது கல்வித் தகுதியை உயர்த்தி பி.எட் பட்டம் பெற்றவர்களுக்கு அதற்காக ஊக்க ஊதிய உயர்வு பல ஆண்டுகளாக வழங்கப்பட்டு வந்த நிலையில், தற்போது தொடக்கக்கல்வி இயக்குனர் அவர்கள் தனது செயல்முறை ஆணை மூலம் அதை நிறுத்தி வைத்துள்ளதை திரும்பப்பெற வேண்டும்.
தமிழ்நாட்டில் தாய்மொழியாம் தமிழ்மொழிக்கு முக்கியத்துவமும் முன்னுரிமையும் கொடுக்கும் வகையில் பி.லிட்(தமிழ்) பட்டம் பெற்றவர்களுக்கு பி.எட் பணியிடமான தமிழாசிரியர் மற்றும் நடுநிலைப் பள்ளித் தலைமை ஆசிரியர் பணியிடங்கள் வழங்கும் அரசாணை பல ஆண்டுகளாக நடைமுறையில் உள்ளது. அவ்வாறு பதவி உயர்வு பெற்றவர்கள் தங்கள் கல்வித் தகுதியை உயர்த்திக்கொண்டு பி.எட் பட்டம் பெற்றால் அதற்கான ஊக்க ஊதிய உயர்வை பல ஆண்டுகளாகப் பெற்று வ்நதனர். பி.லிட் முடித்து தமிழாசிரியராக பி.எட் பணியிடத்தில் பணியாற்றுபவர்களுக்கு பி.எட் உயர்கல்வித் தகுதிக்கு ஊக்க ஊதிய உயர்வு வழங்கலாமா என்ற சந்தேகம் எழுந்த போது அரசு அதற்கு தெளிவான ஆணை பிறப்பித்தது. அவ்வாணையில் ஒரு பணியிடத்தில் பணியாற்றுபவர்கள் தங்களது கல்வித் தரத்தை உயர்த்திக்கொள்ள பெறும் பட்டங்களுக்கு ஊக்க ஊதிய உயர்வு வழங்க வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது. அதேபோன்று பி.லிட் தகுதி கொண்ட நடுநிலைப்பள்ளித் தலைமை ஆசிரியர்களுக்கு பி.எட் உயர்கல்வித்தகுதிக்கு ஊக்க ஊதிய உயர்வு உண்டு என்று தகவல் அறியும் உரிமைச்சட்டத்தின் மூலம் பெறப்பட்ட பல்வேறு தகவல்கள் தெரிவிக்கின்றன. எனவே அரசாணைக்கு முரணாக பி.லிட் தகுதிகொண்ட நடுநிலைப்பள்ளித் தலைமை ஆசிரியர்களுக்கு பி.எட் உயர்கல்வித்தகுதிக்கு ஊக்க ஊதிய உயர்வு கிடையாது என்று தொடக்கக்கல்வி இயக்குநர் தற்போது வெளியட்டுள்ள செயல்முறை ஆணை உடனடியாகத் திரும்பப் பெறப்பட வேண்டும்.
5) B.com., மற்றும் B.A.(பொருளாதாரம்) ஆகிய பட்டப்படிப்புகளுக்கு ஊக்க ஊதிய உயர்வு வழங்கி வந்ததை நிறுத்தி வைத்து தொடக்கக்கல்வி இயக்குனர் வெளியிட்டுள்ள செயல்முறை ஆணையை உடனடியாகத் திரும்பப் பெற வேண்டும்.
தமிழகத்தில் ஆசிரியர்கள் ஊக்க ஊதிய உயர்வு பெற உயர்கல்வியில் தகுதியான பாடங்கள் எவையெவை என தெளிவான அரசாணைகள் இருந்தும் அரசாணைகளுக்கு முரணாக B.com.,.B.A.,(பொருளாதாரம்) ஆகிய பாடப்பிரிவுகளில் உயர்கல்வித்தகுதி பெற்றவர்களுக்கு ஊக்க ஊதியத்தை மறுக்கும் தொடக்கக்கல்வி இயக்குனரின் செயல்முறை ஆணை உடனடியாகத் திரும்பப் பெறப்பட வேண்டும்.
6) ஆசிரியர்கள் தாங்கள் பணியாற்றும் நடுநிலைப்பள்ளிகளில் பி.எட் கற்பித்தல் பயிற்சிக்குச் சென்றாலும் விடுப்பு எடுக்க வேண்டும் என்ற தொடக்கக்கல்வி இயக்குனரின் செயல்முறை ஆணை திரும்பப்பெறப்பட வேண்டும்.
ஆசிரியர்கள் தாங்கள் பணியாற்றும் பள்ளிகளில் பி.எட் பயிற்சி மேற்கொண்டால் விடுப்பு எடுக்கவேண்டியதில்லை எனவும், மாணவர்கள் கல்விப்பணி பாதிக்காத வகையில் பயிற்சி மேற்கொள்ள வேண்டும் எனவும் பள்ளிக்கல்வித்துறையில் அரசாணை உள்ளது. அதே போன்று தொடக்கக்கல்வித் துறைக்கும் அரசாணை பெற்று வழங்க தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி தொடர்ந்து தொடக்கக்கல்வி இயக்குனரிடம் விண்ணப்பித்ததின் பயனாக தொடக்கக்கல்வித் துறையில் பணியாற்றும் ஆசிரியர்கள் தாங்கள் பணியாற்றும் நடுநிலைப் பள்ளிகளிலேயே பி.எட் கற்பித்தல் பயிற்சி மேற்கொள்ளலாம் என அரசாணை வெளியிடப்பட்டது. அவ்வாணையில் விடுப்புப் பற்றி குறிப்பிடப்படாததால் பல்வேறு சந்தேகங்கள் எழுந்தபோதும் அரசாணையின் நோக்கமே விடுப்பு எடுக்காமல் பயிற்சி மேற்கொள்வதாகும். அந்த அரசாணையின் பயன் ஆசிரியர்களுக்கு கிடைக்கக்கூடாத வகையில் விடுப்பு எடுக்க வேண்டுமென தொடக்கக் கல்வி இயக்குனர் அவர்கள் வெளியிட்டுள்ள செயல்முறை ஆணை உடனடியாகத் திரும்பப் பெறப்பட வேண்டும்.
7) இளையோர் - மூத்தோர் முரண்பாடு - அரசாணைகளுக்கு முரணாக இயக்குனர் பிறப்பித்த உத்தரவை திரும்பப் பெற வேண்டும்.
ஒரே நியமன அலுவலரின் கீழ் பணியாற்றும் ஆசிரியர்களுக்கு இளையோர் - மூத்தோர் ஊதிய முரண்பாடு சரிசெய்ய தெளிவான அரசாணை உள்ளது. மேலும் மூத்தோரை விட குறைவான ஊதியத்தில், இளையவராக ஒன்றியத்தில் பணியேற்ற நிலையில் ஊதிய நிர்ணயத்தில் அதிக ஊதியம் பெறும் நிகழ்வு ஏற்படுகிறது. இந்நிலையில் இளையோர் - மூத்தோர் ஊதிய முரண்பாடு சரி செய்ய தேவையான தெளிவுரைகள் வழங்காமல் முற்றிலும் மறுத்து இயக்குனர் அவர்கள் பிறப்பித்த செயல்முறைகளை திரும்பப் பெற வேண்டும்.
8) தேனி மாவட்டத் தொடக்கக்கல்வி அலுவலர் அவர்கள் மீது நடவடிக்கை மேற்கொண்டு துறைரீதியான விசாரணைக்கு உட்படுத்த வேண்டும்.
தேனி மாவட்டத் தொடக்ககக்கல்வி அலுவலர் அவர்கள் தொடக்கக் கல்வித்துறைக்கே ஒரு களங்கமாகச் செய்பட்டு வருகிறார். பெண்ணாசிரியர்களை மிரட்டி அவர்களிடமிருந்து பொய்யான பாலியல் புகார்களைப் பெற்று தனக்குப் பிடிக்காத ஆசிரியர்கள் மீது நடவடிக்கை மேற்கொள்வதும், அதன் பேரில் கையூட்டுப் பெறுவதுமாக உள்ளார். தமிழக அரசு அவர்மீது உடனடி நடவடிக்கை மேற்கொண்டு துறைரீதியான விசாரணைக்கு உட்படுத்திட வேண்டும்.
9) திருநெல்வேலி மாவட்டத்தில் தொடக்கக்கல்வித் துறையில் தலைவிரித்தாடும் லஞ்ச, ஊழல் நடவடிக்கைகளைத் தடுத்திடவும், பதவி உயர்வு மற்றும் மாற்றுப்பணி வழங்குதல் ஆகியவற்றில் விதிமுறைகளைக் கடைப்பிடிக்கவும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட வேண்டும்.
திருநெல்வேலி மாவட்டத்தில் தொடக்கக்கல்வித்துறையில் லஞ்சம் பெற்றுக்கொண்டு விதிமுறைகளுக்கு புறம்பான செயல்களைச் செய்வதால் விதிமுறைகளின்படி தகுதியுள்ள ஆசிரியர்களுக்கு கிடைக்க வேண்டிய பதவி உயர்வுகள் மறுக்கப்பட்டுள்ளன. இதனால் ஆசிரியர்களிடையே சாதிய ரீதியான மோதல்கள் உருவாவதற்கு மாவட்டத் தொடக்க கல்வித்துறையே வழிவகுத்துள்ளது. எனவே, இதில் தமிழக அரசு உடனடியாகத் தலையிட்டு தவறு செய்தவர்கள் மீது உரிய விசாரணை மேற்கொண்டு நடவடிக்கை எடுப்பதோடு தகுதியுள்ள ஆசிரியர்களுக்கு பதவி உயர்வு ஆணை உடன் வழங்கப்பட நடவடிக்கை மேற்கொள்ளப்பட வேண்டும்.
10) வேலூர் மாவட்டத் தொடக்கக்கல்வித்துறையின் கீழ் பணியாற்றும் சில உதவித் தொடக்கக்கல்வி அலுவலர்கள் மீது தொடக்கக்கல்வி இயக்குனரிடம் அளிக்கப்பட்டுள்ள புகார் மனுவை விசாரணைக்கு உட்படுத்தி நடவடிக்கை மேற்கொள்ளப்பட வேண்டும்.
வேலூர் மாவட்டத் தொடக்கக்கல்வித்துறையின் கீழ் செயல்படும் சில உதவித் தொடக்கக்கல்வி அலுவலர்கள் விதிகளுக்குப் புறம்பாக தொடர்ந்து ஆசிரியர் விரோத நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகிறார்கள். தனியார் பள்ளி நிர்வாகிகளைக் கைக்குள் வைத்துக்கொண்டு ஆசிரியர்களை மிரட்டிப் பணம் பறித்து வருகிறார்கள். இது தொடர்பாக தொடக்கக்கல்வி இயக்குநர் அவர்களுக்கு விரிவான புகார் மனு அளிக்கப்பட்டுள்ளது. அதன்மீது உரிய விசாரணை நடத்தி நடவடிக்கை மேற்கொள்ளப்படவேண்டும்.
11) தனியார் பள்ளி ஆசிரியர்களின் உபரிப் பணியிட நிரவல் ஆசிரியர்களின் குடும்ப நலன், சொந்த நலனைப் பாதிக்காத வகையில் செயல்படுத்தப்பட வேண்டும்.
தனியார் பள்ளி ஆசிரியர்களின் உபரிப் பணியிட நிரவல் ஆசிரியர்கள் மத்தியில் மிகப்பெரிய அச்ச உணர்வை ஏற்படுத்தியுள்ளது. அவ்வாறான சூழல் ஏற்படும் நிலையில் அரசுப் பள்ளிகளில் நடைமுறைப் படுத்தியதுபோல் பணியாற்றும் ஒன்றியத்திற்குள் தேவைப்பணியிடத்தில் பணிநிரவல் செய்திடவும், மீதமுள்ள உபரிப் பணியிடங்களை பணியாற்றும் பள்ளிகளிலேயே தக்கவைத்திடவும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட வேண்டும்.
12) அ) பொதுமாறுதல் கலந்தாய்வுக்குப்பின் ஏற்பட்டுள்ள பட்டதாரி ஆசிரியர் காலிப்பணியிடங்களில் கடந்த காலங்களைப்போல் இரண்டாம்கட்ட கலந்தாய்வு நடத்தி தகுதியுள்ள ஆசிரியர்களுக்கு பதவி உயர்வு வழங்கதோடு நீதிமன்ற உத்தரவு பெற்றுள்ள ஆசிரியர்களுக்கும் உடனடியாக பதவி உயர்வு வழங்க வேண்டும்.
ஆ) 1997ம் ஆண்டு பின்னடைவு காலிப்பணியிடத்தில் இடைநிலை ஆசிரியர்களாக பணியமர்த்தப்பட்ட ஆதிதிராவிட பட்டதாரி ஆசிரியர்களுக்கு உயர்கல்விக்கான ஊக்க ஊதியம் வழங்க வேண்டும்.
13) ஆசிரியர்கள் உயர்கல்வி பயின்றதற்கு பின்னேற்பு ஆணை உடனடியாக வழங்கிட வேண்டும்.
ஒரு சில உதவித் தொடக்கக்கல்வி அலுவலர்களின் நிர்வாகச் சீர்கேடுகளுக்கு எடுத்துக்காட்டுத்தான் உயர்கல்விக்கான அனுமதி தொடர்பான பிரச்சனை. உரிய முறையில் விண்ணப்பித்தபின் கல்விபயின்ற நிலையில் அனுமதி ஆணை கிடைக்காததால் இன்று ஆசிரியர்கள் தங்களது உரிமையை இழந்து நிற்கின்றனர். தவறிழைத்த அலுவலர்களுக்குத் தண்டனை வழங்காமல் ஆசிரியர்களைத் தண்டிக்கும் நிலையை மாற்றி உயர்கல்வி பயின்றதற்கான பின்னேற்பு ஆணை வழங்கிட உடனடி நடவடிக்கை மேற்கொள்ளப்பட வேண்டும்.
14) உதவித் தொடக்கக் கல்வி அலுவலகங்களில் காலிப்பணியிடங்களை உடன் நிரப்பிட வேண்டும்.
தமிழகம் முழுவதும் உதவித் தொடக்கக்கல்வி அலுவலகங்களில் ஏற்பட்டுள்ள நிர்வாகச் சீர்கேடுகள் மற்றும் அனைத்துப் பிரச்சனைகளுக்கும் அடிப்படைக் காரணமாக விளங்குவது அங்கு ஏற்பட்டுள்ள காலிப்பணியிடங்கள் ஆகும். எனவே, அனைத்து உதவித் தொடக்ககல்வி அலுவலகங்களிலும் காலியாக உள்ள அனைத்துப் பணியிடங்களையும் நிரப்பிட தமிழக அரசு தக்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.
15) ஆசிரியர் தகுதித்தேர்வு தொடர்பான வழக்கை விரைந்து முடித்து புதிய ஆசிரியர் நியமனங்கள் மேற்கொள்ளப்பட வேண்டும்.
தமிழகத்தில் ஆசிரியர் தகுதித்தேர்வு தொடர்பான வழக்கு உச்சநீதிமன்றத்தில் நீண்ட காலமாக நிலுவையில் உள்ளதால் பள்ளிகளில் காலியாக உள்ள ஆசிரியர் பணியிடங்கள் நிரப்புவதில் மிகுந்த காலதாமதம் ஏற்பட்டுள்ளது. எனவே, தமிழக மாணவர்களின் கல்விநலன் கருதியும், தமிழகத்தில் வேலைக்காகக் காத்திருக்கும் ஆசிரியர்களின் நிலை கருதியும் தமிழக அரசு தகுதித்தேர்வு தொடர்பான வழக்கை விரைந்து முடித்து புதிய ஆசிரியர் நியமனங்கள் செய்திட உரிய நடவடிக்கை மேற்கொள்ள இம்மாநிலச்செயற்குழு ஏகமனதாகக் கேட்டுக்கொள்கிறது.

5/07/2016

தொலை தூரத்தில் தேர்தல் பணி. ஆசிரியர்கள் அதிர்ச்சி. தேர்தல் ஆணையம் அளித்த உறுதிமொழியை அமுல்படுத்திட தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி வேண்டுகோள்      சிவகங்கை: தமிழகத்தில் வருகிற மே 16ம் தேதி சட்டமன்றத் தேர்தல் நடைபெற உள்ளது. இப்பணியில் 1.97 லட்சம் பெண்கள் உட்பட 3.29 லட்சம் ஆசிரியர்கள் மற்றும் அரசு ஊழியர்கள் ஈடுபட உள்ளனர். இதில் வாக்குபதிவு நடைபெறும் வாக்குச்சாவடியில் தலைமை வாக்குப்பதிவு அலுவலர் முதல் அனைத்து நிலை வாக்குப்பதிவு அலுவலர்களாக பெரும்பாலும் ஆசிரியர்களே பணியாற்ற உள்ளனர். இவர்களில் 80 விழுக்காடுக்கு மேல் பெண் ஆசிரியர்கள் என்பதால் அவரவர் பணியாற்றும் தொகுதிகளிலேயே பணியமர்த்தப்படுவார்கள் என தேர்தல் ஆணையம் அளித்த உறுதி மொழிக்கு எதிராக 70 கி.மீட்டருக்கு அப்பால் தேர்தல் பணி வழங்கியுள்ளதால் ஆசிரியர்கள் அதிர்ச்சிக்குள்ளாகியுள்ளனர்.
இது குறித்து தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி மாநிலத்துணைத் தலைவர் ஜோசப்ரோஸ், மாவட்டத் தலைவர் தாமஸ் அமலநாதன், மாவட்டச் செயலாளர் முத்துப்பாண்டியன், மாவட்டப் பொருளாளர் குமரேசன், மாநிலச் செயற்குழு உறுப்பினர் புரட்சித்தம்பி ஆகியோர் கூட்டாக மாநிலத் தலைமைத் தேர்தல் அலுவலர் திரு.ராஜேஸ் லக்கானி மற்றும் சிவகங்கை மாவட்டத் தேர்தல் நடத்தும் அலுவலர் அவர்களுக்கு  அனுப்பியுள்ள கோரிக்கை மனுவில் கூறியுள்ளதாவது:

தமிழ்நாட்டில் வருகிற மே 16ம் தேதி நடைபெற உள்ள சட்டமன்றத் தேர்தலில் வாக்குப்பதிவு மையங்களில் பணியாற்ற வாக்குச்சவாடி தலைமை அலுவலர் மற்றும் வாக்குப்பதிவு அலுவலர்களாக ஆசிரியர்கள் நியமனம் செய்யப்பட்டு முதல்கட்ட பயிற்சி கடந்த 24ம் தேதி முடிந்துள்ள நிலையில் இன்று (7.5.16) நடந்த இரண்டாம் கட்ட பயிற்சி அவரவர் பணியாற்றும் சட்டமன்றத் தொகுதிகளில் நடத்தப்பட்டது. இப்பயிற்சியில் ஏற்கனவே தேர்தல் ஆணையம் வழங்கிய உறுதிமொழிக்கு முற்றிலும் எதிராக தொலை தூரங்களில் பணியமர்த்தப்பட்டுள்ளார்கள்.
அதாவது தேவகோட்டை மற்றும் சாக்கோட்டை வட்டாரங்களில் பணியாற்றும் ஆசிரியர்கள் திருப்புவனத்திற்கும், எஸ்.புதூர் மற்றும் காளையார்கோயில்  ஒன்றிய ஆசிரியர்கள் காரைக்குடி தொகுதிக்கும், மானாமதுரை, சிவகங்கை ஆசிரியர்கள் திருப்பத்தூர் தொகுதிக்கும், எஞ்சிய ஆசிரியர்கள் பல்வேறு பகுதிகளுக்கும் பரவலாக பணியமர்த்தப்பட்டுள்ளார்கள். இது ஆசிரியர்கள் பணியாற்றும் தொகுதியிலேயே பணியமர்த்தப்படுவார்கள் என தேர்தல் ஆணையம் அளித்த உறுதிமொழிக்கு முற்றிலும் எதிரானது ஆகும். இதனால் பயிற்சி மற்றும் தேர்தல் பணிக்கு செல்லும் ஆசிரியர்கள் மிகவும் சிரமங்களை எதிர்நோக்க வேண்டியுள்ளது.

மற்ற மாவட்டங்களிலிருந்து இங்கு பணியாற்றும் ஆசிரியர்களுக்கு இதுவரை தபால் வாக்கு வழங்கப்படவில்லை. இது குறித்து தெளிவான விளக்கத்தினை உதவித் தேர்தல் நடத்தும் அலுவலர்கள் கூறவில்லை. 100 சதவீத வாக்களிப்பை நிறைவு செய்ய தபால் வாக்கினை முறையாக குறிப்பிட்ட கால கெடுவுக்குள் வழங்க வேண்டும்.
மேலும் தேர்தல் பணியிலிருந்து விலக்களிக்க உறுதியளிக்கப்பட்ட கர்ப்பிணி மற்றும் பாலூட்டும் தாயார், கடுமையான அறுவைச்சிக்pச்சை செய்துகொண்டோர் என ஒருசில ஆசிரியர்களுக்கு மருத்துவச் சான்றிதழ் சமர்ப்பிக்கப்பட்ட நிலையிலும் மீண்டும் அவர்களுக்கு பணி உத்தரவு வழங்கப்பட்டள்ளது. இதை இரத்து செய்ய அவர்கள் மாவட்ட மற்றும் தாலுகா அலுவலகங்களுக்கு அலைய வேண்டிய நிலையுள்ளது. எனவே பாதிப்புக்குள்ளாகியுள்ள ஆசிரிர்களுக்கு தேர்தல் பணியிலிருந்து விலக்களிக்க வேண்டும்.

ஆசிரியர்களின் நலன் கருதி அவரவர் பணியாற்றும் தொகுதிக்குள்ளேயே தேர்தல் பணி வழங்கவும், ஒருசில இடங்களில் ஏற்பட்டுள்ள குறைகளை களைய நடவடிக்கை எடுக்க வேண்டுமாறு தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி சார்பில் கேட்டுக்கொள்வதாக தெரிவித்துள்ளனர்.
       

4/15/2016

ஆசிரியர் பொது மாறுதல் கலந்தாய்வை கோடை விடுமுறையில் நடத்திட வேண்டும். தொடக்கக்கல்வித் துறைக்கு தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி வேண்டுகோள்.


                         சிவகங்கை: தமிழகத்தில் தொடக்கக்கல்வித்துறையில் பணிபுரியும் ஆசிரியர்களுக்கான பொது மாறுதல் கலந்தாய்வு அந்தந்த மாவட்டத் தலைநகரில் மே மாதம் கோடை விடுமுறையில் நடத்துவது வழக்கம். ஆனால் இந்தாண்டு; பொது மாறுதல் கலந்தாய்விற்கான விண்ணப்பத்தை கூட சம்பந்தப்பட்ட ஆசிரியர்களிடம் இருந்து பெறாமல் கல்வித்துறை காலம் தாழ்த்தி வருகிறது. இது ஆசிரியர்களை அச்சமடைய செய்துள்ளது. இது குறித்து தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி மாநிலத் துணைத்தலைவர் ஜோசப்ரோஸ், மாவட்டத் தலைவர் தாமஸ் அமலநாதன், மாவட்டச் செயலாளர் முத்துப்பாண்டியன், மாவட்டப் பொருளாளர் குமரேசன், மாநிலச் செயற்குழு உறுப்பினர் புரட்சித்தம்பி ஆகியோர் கூட்டாக வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
        தமிழ்நாட்டில் தொடக்கக்கல்வித்துறையில் பணிபுரியும் ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் நலன் கருதி தமிழக அரசு வெளிப்படையான பொது மாறுதல் கலந்தாய்வை ஒவ்வொரு மே மாத விடுமுறையிலும் நடத்துவது வழக்கம். கலந்தாய்வில் பங்கு பெற விரும்பும் ஆசிரியர்களிடம் ஏப்ரல் மாத இறுதிக்குள் மாறுதல் விண்ணப்பம் உதவித் தொடக்கக்கல்வி அலுவலகத்தால் பெறப்பட்டு மாவட்டத் தொடக்கக்கல்வி அலுவலகத்திற்கு அனுப்பப்படும். மாவட்டத் தொடக்கக்கல்வி அலுவலரால் பணியிட மூப்பின் அடிப்படையில் ஒன்றியம் வாரியாக ஆசிரியர் பட்டியலும் காலிப் பணியிட விபரமும் வெளியிடப்படும். இதில் ஆசிரியர்கள் தங்களுக்கு விருப்பப்பட்ட காலி பணியிடங்களை பணியிட மூப்பின் அடிப்படையில் வெளிப்படையான கலந்தாய்வின் மூலம் பெற்றுக்கொள்வர். மாறுதல் பெற்ற ஆசிரியர்கள் வருகிற கல்வி ஆண்டின் முதல் நாளில் அதாவது ஜூன் முதல் நாளில் தாங்கள் மாறுதல் பெற்ற பள்ளியில் புதிதாக பணியேற்றுக் கொள்வார்கள். இதனால் மாணவர்கள் நலன் பாதிக்கப்படாமல் காக்கப்பட்டது. ஆசிரியர்களும் தங்கள் குடும்பங்களை எளிதாக புதிய இடத்திற்கு இடம்பெயர்வு செய்வதற்கு வசதியாகவும் இருந்தது.
        கடந்தாண்டு சரியான திட்டமிடல் இல்லாததால் பள்ளி திறந்த பின்பு மாறுதல் கலந்தாய்வு நடைபெற்றது. இதனால் ஆசிரியர்கள் புதிய இடங்களில் பணியேற்பதில் மிகுந்த சிரமத்திற்கு உள்ளானார்கள். அக்கலந்தாய்விலும் அரசாணைகளையும், செயல் முறைகளையும் புறந்தள்ளிவிட்டு  அரசியல்வாதிகள் மற்றும் அதிகாரிகளின் தலையீட்டால் பல்வேறு காலிப் பணியிடங்கள் மறைக்கப்பட்டதால் நியாயமாக கலந்தாய்வில் பங்கேற்ற மூத்த ஆசிரியர்கள் உரிய பணியிடங்கள் கிடைக்காமல் பாதிக்கப்பட்டனர். இதனால்  ஆசிரியர் இயக்ககங்களில் கடுமையான எதிர்ப்பை கல்வித்துறை எதிர் நோக்க வேண்டியிருந்தது. 
        ஆனால் இந்தாண்டு இதுவரை மாறுதல் விண்ணப்பம் அளிப்பதற்கு எவ்வித அறிவிப்பும் கல்வி துறையால் வெளியிடப்படவில்லை. பள்ளி நிறைவடைவதற்கு இன்னும் ஓரு சில நாட்களே உள்ள நிலையில் கல்வி துறை மௌனம் சாதிப்பது என்பது வெளி மாவட்டம் மற்றும் மற்ற ஒன்றியங்களுக்கு மாறுதல் கோரி பல ஆண்டுகளாக காத்திருக்கும் ஆசிரியர்களுக்கு அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. கல்வி அதிகாரிகளும் மேலிட தகவல்கள் இல்லாமல் இது குறித்து கருத்து கூற மறுக்கின்றனர். எனவே கல்வித்துறை வருகிற சட்டமன்றத் தேர்தலை காரணம் காட்டாமல் உடனடியாக தேர்தல் ஆணையத்தின் உரிய அனுமதியுடன் ஆசிரியர்களிடம் விருப்ப மனுவை பெற்று காலிப்பணியிடங்களை வெளிப்படையாக அறிவிக்க வேண்டும். மே மாத விடுமுறையிலேயே பொது மாறுதல் கலந்தாய்வை நடத்துவதுடன் தகுதியானவர்களுக்கு பதவி உயர்வையும் அளித்திட வேண்டும் என எங்கள் அமைப்பின் சார்பாக கேட்டுக்கொள்கிறோம்.

4/06/2016

நமது கோரிக்கை இன்றைய தினமணியில் - 6.4.2016

வாக்களிப்பு உறுதி மொழிப் படிவங்களை பள்ளிகளுக்கு கூடுதலாக வழங்கக் கோரிக்கை

  • வாக்களிப்பை உறுதிசெய்யும் வகையிலான உறுதிமொழிப் படிவங்களை மாணவர்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப பள்ளிகளுக்கு தேர்தல் ஆணையம் வழங்கவேண்டும் என்று தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி கோரிக்கை விடுத்துள்ளது.

இதுகுறித்து அதன் மாவட்டச் செயலாளர் ஆ.முத்துப்பாண்டியன் மாவட்ட ஆட்சியருக்கு அனுப்பியுள்ள கோரிக்கை மனுவில் தெரிவித்திருப்பதாவது:
தேர்தலில் வாக்களிக்க மாணவர்களின் பெற்றோர்களிடம் வழங்குவதற்கு உறுதிமொழிப்படிவங்களை பள்ளிகளுக்கு தேர்தல் ஆணையம் வழங்கியுள்ளது. ஜனநாயகத்தின் மீது நம்பிக்கையுடைய இந்தியக் குடிமக்க ளாகிய நாங்கள் எந்த ஒரு ஜாதி, மத, இன, வகுப்பு மற்றும் மொழி பாகுபாடில்லாமல் வாக்களிப்போம் என்கின்ற உறுதிமொழியைப் பெறுவதற்காக இப்படிவங்களை வழங்கியுள்ளனர். ஆனால் மாணவர்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப படிவங்கள் வழங்காமல், பள்ளிக்கு ஒன்று வீதம் வழங்கப்பட்டுள்ளது. சிவகங்கை மாவட்டத்தில் மட்டும் தொடக்கக் கல்வித்துறையின் கீழ் 1,149 தொடக்க நடுநிலைப்பள்ளிகள் உள்ளன. இதில் சுமார் 68 ஆயிரம் மாணவ, மாணவியர்கள் பயின்று வருகின்றனர். இவர்களுக்கு படிவத்தை நகலெடுத்துக்கொடுப்பதில் தலைமை யாசிரியர்கள் சிரமங்களை எதிர்கொள்ள வேண்டியுள்ளது. எனவே மாவட்டத் தேர்தல் பிரிவு, பள்ளியில் உள்ள மாணவர்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப உறுதிமொழி படிவங்களை அச்சடித்து வழங்கவேண்டும் என்று தெரிவித்துள்ளார்.

நமது கோரிக்கை இன்றைய தினமலரில் - 6.4.2016


3/29/2016

நமது கோரிக்கை தினமணியில் 26.3.2016


நமது கோரிக்கை இன்றைய தினகரனில் - 29.3.2016


நமது கோரிக்கை மாலைமலரில் 28.3.2016


3/25/2016

வருந்துகிறோம்

வருந்துகிறோம்...
தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி, சிவகங்கை மாவட்டத் தலைவர் திரு.தாமஸ் அமலநாதன் அவர்களின் தாயார் திருமதி.அருளாயி அவர்கள் சற்று நேரத்திற்கு முன்பு காலமானார். அம்மையாரது இறுதிச்சடங்கு நாளை(26.3.2016) காலை 10.00 மணிக்கு காளையார்கோவில் அருகில் உள்ள சீகூரணியில் நடைபெறும். இயக்கம் தன் ஆழ்ந்த வருத்தத்தை தெரிவித்துக்கொள்கிறது.
வருத்தத்தை பகிர்ந்துகொள்ள திரு.தாமஸ் அவர்களின் அலைபேசி எண்:9942035710, 9443883580

3/24/2016

20.3.2016 - மாநிலச் செயற்குழு முடிவுகள்ஆசிரியர்களிடம் பிடித்தம் செய்த வரித் தொகையினை செய்ய E-TDS வேண்டி மாவட்டத் தொடக்கக்கல்வி அலுவலர் மற்றும் உதவித் தொடக்கக்கல்வி அலுவலர்களுக்கு சிவகங்கை மாவட்டச் செயலாளரின் கடிதம்.

 ஆசிரியர்களிடம் பிடித்தம் செய்த வரித் தொகையினை செய்ய E-TDS வேண்டி மாவட்டத் தொடக்கக்கல்வி அலுவலர் மற்றும் உதவித் தொடக்கக்கல்வி அலுவலர்களுக்கு சிவகங்கை மாவட்டச் செயலாளரின் கடிதம்.3/20/2016

20.3.2016 மாநிலச் செயற்குழு துளிகள்


1. 6வது மாநில மாநாடு குறித்து விரிவான ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. நிறை, குறைகள், சுய விமர்சனம் ஆகியவை ஜனநாயக முறையில் கருத்துகள் பதியப்பட்டன.
2. மாநில மாநாட்டிற்கு உழைத்த அனைவருக்கும் வாழ்துகள் தெரிவிக்கப்பட்டது. குறிப்பாக தூத்துக்குடி மாவட்டக்கிளைக்கு சிறப்பான பாராட்டுகள் தெரிவிக்கப்பட்டது.
3. நிதி நிலுவைகள் வருகிற ஏப்ரல் மாதத்திற்குள் நிறைவு செய்ய முடிவாற்றப்பட்டது.
4. மாநில மாநாடு வரவு-செலவு அறிக்கை மாநிலப் பொருளாளரால் படைக்கப்பட்டது. மாநிலச் செயற்குழு ஏற்பு செய்துள்ளது.
5. தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணியும், தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கமும் இணைந்த போராட்டம் குறித்து விரிவாக அலசப்பட்டது. தமிழக வரலாற்றில் இப்போராட்டம் ஒரு மைல்கல் என மாநிலச் செயற்குழு பாராட்டியது.
6. வருகிற ஜூன் 4,5 தேதிகளில் மாநிலச் செயற்குழு மற்றும் மாநிலப் பொதுக்குழு கூட்டம் நடத்துவது என முடிவாற்றப்பட்டது. இக்கூட்டத்தை நாமக்கல் மாவட்டம் கொல்லிமலையிலோ, ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலத்திலோ நடத்தப்படலாம் என்ற முன்மொழிவை மாநில மையம் வைத்துள்ளது. 
7. STFI சர்பாக வருகிற மே மாதம் 27, 28 தேதிகளில் திருவனந்தபுரத்தில் நடைபெறும் பெண் ஆசிரியர் பயிற்சி வகுப்பில் நமது அமைப்பின் சார்பாக 20 பெண் ஆசிரியர்கள் கலந்துகொள்வது என முடிவாற்றப்பட்டது.
8. வருகிற காலங்களில் அரசு ஊழியர் சங்கத்துடன் இணைந்து ஒரு விரிவான போராட்டத்தை முன்னெடுக்க வேண்டும் என மாநிலச் செயற்குழு கேட்டுக்கொண்டுள்ளது.
7. 7வது மாநில மாநாடு நடத்துவதற்கு சிவகங்கை மாவட்டத்திற்கு வாய்ப்பு வழங்க வேண்டும் என சிவகங்கை மாவட்டச் செயலாளரால் கோரிக்கை வைக்கப்பட்டது.
8. 6வது மாநில மாநாடு வரவேற்பு குழு முறையாக கலைக்கப்பட்டது.
9. 6வது மாநில மாநாட்டில் சிறப்பாக பணியாற்றிய தன்னார்வலர்களுக்கு மாநில மையம் நினைவு பரிசு வழங்கி கௌரவித்தது.
10. பல்வேறு இயக்கங்களில் இருந்து நமது அமைப்பில் இணைய விருப்பம் தெரிவித்துள்ள மாவட்டங்களில் இணைப்பு விழா நடத்துவதற்கும், அதில் மாநிலப் நிர்வாகிகள் கலந்துகொள்வதற்கும் இசைவு தெரிவித்துள்ளனர்.
தகவல் பகிர்வு:
ஆ.முத்துப்பாண்டியன்
மாவட்டச் செயலாளர்
சிவகங்கை மாவட்டம்


3/10/2016

ஆசிரியர்களுக்கு ஊதியம் வழங்காததால் கல்லல் உதவித் தொடக்கக்கல்வி அலுவலகம் முற்றுகை. 100க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் நள்ளிரவு வரை போராட்டம்.

சிவகங்கை: சிவகங்கை மாவட்டம் கல்லல் ஒன்றியத்தில் பணியாற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகள் தனியாக வரி விலக்கு கணக்கு எண்(TAN) பெறவில்லை என 30க்கும் மேற்பட்ட ஆசிரியர்களுக்கு பிப்ரவரி மாதம் சம்பளம் நிறுத்தி வைக்கப்பட்டது. மாவட்டத்தில் மற்ற ஒன்றியங்களிலில் உதவித் தொடக்கக்கல்வி அலுவலரின் வரிவிலக்கு கணக்கு எண் மூலம் ஊதியம் வழங்கப்பட்ட நிலையில் கல்லல் உதவித் தொடக்கக்கல்வி அலுவலர்கள் மட்டும் மாறுபட்டு செயல்படுவதாக ஆசிரியர்கள் குற்றம் சாட்டினார்கள். இது குறித்து தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி மாவட்ட நிர்வாகிகள் மாவட்டத் தொடக்கக்கல்வி அலுவலருடன் கடந்த 2ந் தேதி நடத்திய பேச்சு வார்த்தையில் மார்ச் 4ந் தேதிக்குள் சம்பளம் வழங்கப்படும் என உறுதியளிக்கப்பட்டது. ஆனால் இது வரை ஊதியம் வழங்கப்படாததால் 20க்கும் மேற்பட்ட பெண் ஆசிரியர்கள் உள்ளிட்ட 100க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் கல்லல் உதவித் தொடக்கக்கல்வி அலுவலகத்தை முற்றுகையிட்டு நள்ளிரவு வரை போராட்டம் நடத்தினார்கள்.
நேற்று (9.3.16) மாலை தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி கல்லல் வட்டாரத் தலைவர் ஜான் இக்னேஷியஸ் தலைமையில் 100க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் கல்லல் உதவித் தொடக்கக்கல்வி அலுவலகத்தில் ஒன்று கூடினர். அதன்பின் மாநிலத் துணைத்தலைவர் ஜோசப்ரோஸ், மாவட்டத் தலைவர் தாமஸ் அமலநாதன், மாவட்டச் செயலாளர் முத்துப்பாண்டியன், மாவட்டப் பொருளார் குமரேசன், மாநிலச் செயற்குழு உறுப்பினர் புரட்சித்தம்பி, மாநிலப்பொதுக்குழு உறுப்பினர் சிங்கராயர், கல்லல் வட்டாரச் செயலாளர் சேவியர் சத்தியநாதன், மாவட்டத் துணைத் தலைவர் சூசைராஜ், பொருளாளர் ஜஸ்டின் திரவியம் உள்ளிட்ட நிர்வாகிகள் கூடுதல் உதவித் தொடக்கக்கல்வி அலுவலர் இராமர் அவர்களிடம் 30க்கும் மேற்பட்ட ஆசிரியர்களுக்கு ஊதியம் வழங்காதது குறித்து விளக்கம் கேட்டனர். மேலும் உதவித் தொடக்கக்கல்வி அலுவலர் மூர்த்தி உடனடியாக அலுவலகத்திற்கு வரவேண்டும் எனவும் கோரிக்கை விடுத்தனர். ஒரு கட்டத்தில் வாக்குவாதம் முற்றி முற்றுகை போராட்டமாக மாறியது. ஆசிரியர்களுக்கு ஊதியம் பெற்று தராமல் அலுவலகத்தை விட்டு நகர மாட்டோம் என ஆசிரியர்கள் அனைவரும் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் மாவட்டத்தில் மற்ற ஒன்றியங்களில் உள்ள நடைமுறைப்படி கல்லல் ஒன்றியத்தில் பணியாற்றும் ஆசிரியர்களுக்கு ஊதியம் வழங்க வேண்டும் என்று கோஷங்கள் எழுப்பினர். இதனால் அங்கு பதட்டம் நிலவியது. 
தகவல் அறிந்து அங்கு விரைந்து வந்த  காரைக்குடி வட்டாட்சியர் கண்ணன், கல்லல் காவல் ஆய்வாளர் கணபதி ஆகியோர் சங்க நிர்வாகிகளுடன் பேச்சு வார்த்தை நடத்தினர். மாவட்டத் தொடக்கக்கல்வி அலுவலருடனும் அலைபேசியில் பேச்சு வார்ததை நடத்தப்பட்டது. பேச்சு வார்த்தை முடிவில் கூடுதல் உதவித் தொடக்கக்கல்வி அலுவலர் இராமர் ஆசிரியர்களின் ஊதிய பட்டியலில் உடனடியாக கையெழுத்திட்டார். மேலும் உதவித் தொடக்கக்கல்வி அலுவலர் மூர்த்தி அவர்களின் கட்டுபாட்டில் உள்ள மற்ற 6 பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியர்களுக்கு 10ந் தேதி காலை சம்பள பட்டியல் கையெழுத்திட்டு கருவூலத்தில் ஒப்படைக்கப்படும் எனவும் ஓரிரு நாட்களில் ஊதியம் அவரவர் வங்கி கணக்கில் வரவு வைக்கப்படும் என வட்டாட்சியர் உறுதியளித்ததின் பேரில் ஆசிரியர்கள் கலைந்து சென்றனர்.