வாக்களிப்பு உறுதி மொழிப் படிவங்களை பள்ளிகளுக்கு கூடுதலாக வழங்கக் கோரிக்கை
- வாக்களிப்பை உறுதிசெய்யும் வகையிலான உறுதிமொழிப் படிவங்களை மாணவர்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப பள்ளிகளுக்கு தேர்தல் ஆணையம் வழங்கவேண்டும் என்று தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி கோரிக்கை விடுத்துள்ளது.
இதுகுறித்து அதன் மாவட்டச் செயலாளர் ஆ.முத்துப்பாண்டியன் மாவட்ட ஆட்சியருக்கு அனுப்பியுள்ள கோரிக்கை மனுவில் தெரிவித்திருப்பதாவது:
தேர்தலில் வாக்களிக்க மாணவர்களின் பெற்றோர்களிடம் வழங்குவதற்கு உறுதிமொழிப்படிவங்களை பள்ளிகளுக்கு தேர்தல் ஆணையம் வழங்கியுள்ளது. ஜனநாயகத்தின் மீது நம்பிக்கையுடைய இந்தியக் குடிமக்க ளாகிய நாங்கள் எந்த ஒரு ஜாதி, மத, இன, வகுப்பு மற்றும் மொழி பாகுபாடில்லாமல் வாக்களிப்போம் என்கின்ற உறுதிமொழியைப் பெறுவதற்காக இப்படிவங்களை வழங்கியுள்ளனர். ஆனால் மாணவர்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப படிவங்கள் வழங்காமல், பள்ளிக்கு ஒன்று வீதம் வழங்கப்பட்டுள்ளது. சிவகங்கை மாவட்டத்தில் மட்டும் தொடக்கக் கல்வித்துறையின் கீழ் 1,149 தொடக்க நடுநிலைப்பள்ளிகள் உள்ளன. இதில் சுமார் 68 ஆயிரம் மாணவ, மாணவியர்கள் பயின்று வருகின்றனர். இவர்களுக்கு படிவத்தை நகலெடுத்துக்கொடுப்பதில் தலைமை யாசிரியர்கள் சிரமங்களை எதிர்கொள்ள வேண்டியுள்ளது. எனவே மாவட்டத் தேர்தல் பிரிவு, பள்ளியில் உள்ள மாணவர்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப உறுதிமொழி படிவங்களை அச்சடித்து வழங்கவேண்டும் என்று தெரிவித்துள்ளார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக