பக்கங்கள்

இலவச SMS களை உடனுக்குடன் பெற ON TNPTFSVG அல்லது ON TNPTFMuthupandian என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு அனுப்பி இலவச குறுந்தகவல்களை(SMS) பெறுங்கள். DND (Do NOT Disturb) சர்வீஸ்ல் உள்ள எண்கள் அதனை(DND) நீக்கிய பிறகே இச்சேவையை பெறமுடியும். plz call 1909

Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks
அறைகூவல் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
அறைகூவல் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

4/29/2018

ஆட்சியாளர்களின் மனதை மாற்றுமா? மே-8 ஜாக்டோ ஜியோ சென்னை முற்றுகை


இனிய தோழமையே
பல்வேறு போராட்டங்களில் பல வடிவங்களில் பங்குபெற்று பழக்கப்பட்ட உனக்கு மே 8 சென்னை முற்றுகைக்கு வா என அழைப்பு விடுப்பது என்பது தேவயைற்றது என்றே கருதுகிறேன். கிட்டதட்ட 16க்கும் மேற்பட்ட அகில இந்திய பொது வேலை நிறுதத்தில் கலந்துகொண்டு இந்த தேச முன்னேற்றத்திற்காக உன் ஊதியத்தை இழந்தவன் நீ. பொது கோரிக்கைக்கே போர் முரசு கொட்டும் நீ, உன் வாழ்வாதாரத்தை நிர்ணயிக்க போகும் 4 அம்ச கோரிக்கைகாக ஆரம்பப்பள்ளி முதல் கல்லூரி வரையுள்ள  ஆசிரியர் இயக்கங்கள் மற்றும் அரசு ஊழியர்கள் ஜேக்டோ ஜியோ என்ற பதாகைக்கு கீழ் ஒருமித்த குரலாய் ஓங்கி ஒழிக்கின்ற மகா சமுதரத்தில் நீயும் சங்கமிப்பாய் என்று எனக்கு நன்கு தெரியும்.
அதோடு மட்டும் உன் கடமை முடிந்துவிடவில்லை என்பதை நீ அறிவாய். உன் சக ஆசிரியர் தோழனையும் மே 8 என்ற வரலாற்று சிறப்புமிக்க முற்றுகை போரில் பங்கெடுக்க வைக்க வேண்டிய தலையாய கடமை உனக்குண்டு. போராட்டத்தை நசுக்க நம்மிடமே உள்ள சில நச்சு பாம்புகள் பல்வேறு விஷம கருத்துக்களை உமிழ முயற்சிக்கும் என்பதை கடந்தகால போராட்டங்களில் நீ நன்கு உணர்ந்திருப்பாய். இங்கு போராடாமல் யாராட்டமும் செல்லாது என்ற பால பாடத்தை நீ படித்து வளர்ந்தவன் என்பதால் உனக்கு விரிவாக சொல்ல தேவையில்லை. ஆனால் களப் போராட்டம் என்பது பல்வேறு சிந்தைனயுள்ள இயக்கங்கள் ஒருங்கிணைந்து செயலாற்ற வேண்டிய சூழல் இன்று ஜாக்டோ ஜியோவினால் ஏற்பட்டுள்ளது. எனவே களத்தை சூடு படுத்த வேண்டும். அனைவரையும் களப்போராளியாக மாற்ற வேண்டும். நம் உரிமையை மீட்டெடுக்க கடைசி வாய்ப்பு என்பதை உணரச் செய்யவேண்டும். மத்திய அரசு ஊழியர்கள் அடுத்தடுத்த ஊதியக்குழுவின் பரிந்துரையை எதிர்நோக்கியுள்ளபொழுது நாம் கடந்த ஊதியக்குழுவின் துரோகத்திற்கு கூக்குரலிட்டுக் கொண்டிருக்கிறோம். நாம் பெற முடியாமல் போனதற்கு கடந்தகாலத்தில் நம்மிடம் ஒற்றுமையின்மைதான் என்பதை உணர்த்துங்கள். அதிகார வர்க்கங்கள் ஆண்டு வாரியாக திட்டமிட்டு நம்மை பிரிக்க செய்தி சூழ்ச்சியில் சில சக ஆசிரியர் சகோதரர்கள் பலிகடாக்கப்பட்டுள்ளார்கள். அவர்களிடம் உண்மையை கூறி உணர்வுடன் களத்திற்கு அழைத்து வரவேண்டிய பொறுப்பு உனக்கு இருக்கிறது.  வட்டார அளவில், மாவட்ட அளவில், மாநில அளவில் நம்முடைய பலத்தை இந்த அரசுக்கு உணர்த்தியாச்சு.
அப்படியிருந்தும் மௌனம் காக்கும் அரசின் மௌனம் கலைக்க கடைசி வாய்ப்பு மே-8 அனைத்து அரசு அலுவலகங்களும் இயங்கவில்லை என்ற அதிரடிச் செய்தியகத்தான் இருக்கும். கோட்டையின் இரும்பு கதவுகள் உடைக்கப்பட்டு ஆசிரியர்களின் நியாயமான கோரிக்கைகள் ஏற்கப்பட்டன எனவும், தமிழக அரசு அனைத்து கோரிக்கைகளையும் ஏற்றது என்ற செய்தியும் ஊடகங்டகள் வழியாக உனக்கு வந்தடையும் என்பதை பலமாக நம்பு. ஜாக்டோ ஜியோவில் இல்லாத ஆசிரியர் நண்பர்களையும் சென்னைக்கு  அழைக்க தவறாதே. ஜக்டோ ஜியோவின் மண்டல  ஆயத்த கூட்டங்கள் நிறைவடைந்த நிலையில் வட்டார கூட்டங்களை நடத்திக்கொண்டிருக்கிறாய் என்ற செய்தி மகிழ்வுதான். நடத்தாத வட்டாரங்களில் பொறுப்பாக்கப்பட்ட இயக்க பொறுப்பாளர்களை தொடர்பு கொண்டு நடத்த திட்டமிடு. கோடை விடுமுறையை நமக்கு சாதகமாக பயன்படுத்து. வேன் மூலம் பிரச்சாரம் நளை நம் மாவட்டத்தில் தொடங்க இருக்கு. வாய்ப்புள்ள இடங்களில் நீயும் பங்கெடு. விடைத்தாள் திருத்தும் மையங்களில் நாளை மேற்கொள்ளவிருக்கும் பிரச்சாரம் மேல்நிலைப்பள்ளி ஆசிரியர்களையும் சென்னைக்கு நிச்சயம் இழுக்கும். இது உனக்கு கடுமையான காலம் என்பதை நான் அறிவேன். பேருந்து முன் பதிவுகளை உறுதியாக்கு. தோழனே உறக்கமின்றி செயலாற்று.
இடை நிலை ஆசிரியர்களுக்கு இழைக்கப்பட்டுள்ள அநீதி எவ்வாறு அரங்கேறியுள்ளது? இதோ கவிஞர் சிற்பியின்  கவிதை:

சர்ப்பயாகம்
பரம பதத்துச்சோபான படம் எங்கள் தேசம் அதில்
கட்டங்கள்தோறும் நச்சுப்பாம்புகள் காத்துக்கிடக்கின்றன.

ஆதிசேஷன் கார்க்கோடகன் கண்ணாடிவிரியன்
கொம்பேறிமூர்க்கன் படங்கள் விரித்து
உடல்கள் நெளித்து காத்துக்கிடக்கின்றன.

தாயங்கள் போட்டு நாங்கள் தொடங்கும்
ஒவ்வொருபயணத்தையும்
தடுத்துக் கடிக்க அடுத்துக் கெடுக்க
இத்தனை நாகங்களா?

புறப்பட்ட திசைக்கேவிரட்டியடிக்கும்
இருட்டுத் தாரைகளே!பரமபதத்தின்
தடத்தை மறைக்கும் திருட்டுச் சாரைகளே!

வழிவிடச் சொல்லிவிரல்கள் நடுங்கத் தாயம் உருட்டுகிறோம்..
உங்கள் வாயில்விழுந்து வாலில்வழிந்து 'நேற்றை'ப் புரட்டுகிறோம்!

எங்கோ சிலசில ஏணிகள்-அவற்றில்ஏறி நிமிர்ந்தவுடன்
சீறிய உங்கள் விஷ நாக்குகளின் ஈரத்தில் வழுக்குகிறோம்.!

அனைத்தையும் முறியடிப்போம்
வெற்றி நமதே...
தொடர்ந்து உன்னோடு வருவேன்...
தோழமையுடன்...
முத்துப்பாண்டியன்.ஆ
மாவட்டச்செயலாளர்
சிவகங்கை மாவட்டம்

10/06/2015

முகவரி இல்லாமல் முணுமுணுப்பவரின் முகத்திரையை கிழித்தெறிந்து உண்மையை உணர்த்திடு தோழா...


இனிய தோழமையே...
ஜேக்டோ வேலை நிறுத்த களப்பணியில் நீ களைத்திருக்கும் வேலையில் முகவரியில்லா சங்கங்களை வைத்து வேலை நிறுத்தம் வாபஸ் என்று ஊடகங்களில் அளிக்கும் பேட்டிதான் இந்த ஆண்டின் தலை சிறந்த நகைச்சுவையாக இருக்கும் என்பதை நீ அறிவாய். கடந்த இரண்டு நாட்களாக நாம் இதுவரை அறிந்திராத பெயர்களில் சங்கம் என்ற பெயரில் நாங்கள் ஜேக்டோ வேலை நிறுத்தத்தில் பங்கேற்க போவதில்லை என்ற அறிவிப்புகள் நம் வீட்டு மழலைகளின் ஏளனத்திற்கு சிரிப்புக்கும் ஆளான செய்தி நீ அறிவாய்.
ஜேக்டோவின் உறுதியை அறிந்த அரசு ஆளே இல்லாத இயக்கங்களின் தலைவர்களை வைத்து வாபஸ் நாடகத்தை அரங்கேற்ற துவங்கியுள்ளது. ஒரு பக்கம் பேச்சு வார்த்தை மறுபக்கம் குழப்பம் விளைவிக்கும் போக்கு. தனிச்சங்க நடவடிக்கையிலேயே இந்த சூட்சமத்தையெல்லாம் உடைந்தெறிந்த உனக்கு இன்று அசுர பலத்தோடு களம் காணும்பொழுது இதெல்லாம் ஒரு பொருட்டேயில்லை என்பதை நானறிவேன். இருந்தாலும் வதந்திகளுக்கு வரப்பில்லை. வாய்ப்பு கிடைக்குமிடமெல்லாம் அது வழிந்தோடும் என்பதால் நீ கொஞ்சம் கவனத்தோடு களப்பணியாற்று. இரண்டு நாட்களாக உனது ஆசிரியர் சந்திப்பில் 100 சதவீத ஆசிரியர்கள் வேலை நிறுத்தத்தில் பங்கேற்கிறார்கள் என்ற மகிழ்வான செய்தி அறிந்து நானும் பெருமையடைந்தேன். உளவு துறை மூலம் அரசின் செவிகளுக்கும் இது எட்டியுள்ளது என்பதுதான் உண்மை.
  இடைநிலை ஆசிரியர்களின் துயர் துடைக்க பிறந்த அவதாரம் என்று தன்னை பிரகடனம் செய்துள்ளவர்களின் இன்றைய டி.வி. பேட்டி அவர்களின் முகத்திரையை கிழத்தெறிந்து உண்மை முகத்தை இந்த உலகிற்கு காட்டியுள்ளது. பழமைவாத சங்கங்கள் என்று நம்மைப்பற்றி குறை கூறி நம்மை போன்ற இடைநிலை ஆசிரியரியர்களை ஏமாளியாக்க ஆடிய கபட நாடகம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. 15 அம்ச கோரிக்கையில் நமது பிரதான கோரிக்கையான இடைநிலை ஆசிரியரின் தர ஊதிய மாற்றம், எதிர் கால வாழ்க்;கையை கேள்வி குறியாக்கும் தன்பங்கேற்பு ஓய்வூதிய திட்டம ஒழிப்பு இருந்தபொழுதும் ஏன் இந்த எதிர் சவுடால்.
ஒன்றை மட்டும் சக ஆசிரியர்களுக்கு தெளிவு படுத்த மறந்து விடாதே. ஊடகங்கள் வாயிலாக வேலை நிறுத்தம் வாபஸ் மற்றும் பங்கேற்க போவதில்லை என்று வெற்று அறிவிப்புகள் வெளியிடும் சங்கங்கள் எதுவும் ஜேக்டோவில் இல்லையென்ற உண்மையையும், இவைகள் ஆளும் கட்சிகளாக வரும் அரசியல் தலைவர்களின் அடிவருடிகளாக மாறி ஆசிரியர்களின் நலன்களுக்கு எதிராக நடக்கும் பகல் வேடதாரிகள் என்பதை மட்டும் தெளிவு படுத்து தோழா. அக்டோபர் 8 பதில் சொல்லட்டும்.
உண்மையை உரக்கச் சொல்லுவோம்!!!  உரிமையைப் போராடி பெறுவோம்!!!
தொடர்ந்து உன்னோடு பயணிப்பேன்....
தோழனாக...
ஆ.முத்துப்பாண்டியன்
TNPTF மாவட்டச் செயலாளர் 
சிவகங்கை மாவட்

10/05/2015

ஜேக்டோவின் கோரிக்கையை நெருங்கும் அரசாங்கம்.... அவசர தகவல் கேட்கும் கல்வித்துறை

இனிய தோழமையே...
அக்டோபர் 8 அடையாள வேலை நிறுத்தத்தை நோக்கி உன் பயணத்தை நகர்த்திக்கொண்டிருக்கும் வேலையில் நம்; கோரிக்கைகள் குறித்து சற்று மௌனம் கலைக்க துவங்கியிருக்கிறது அரசாங்கம். இன்று (5.10.15) மதியம் கல்வித்துறையின் மாவட்ட உயர் அலுவலர்களுக்கு அவசர அவசரமாக மின்னஞ்சல் செய்தியால் மாவட்ட கல்வித்துறை பரபரத்துள்ளது. 1.6.2006ல் பணி வரன்முறைப்படுத்தப்பட்டு கால முறை ஊதியம் பெற்ற இடைநிலை மற்றும் பட்டதாரி ஆசிரியர்களுக்கு பணி நியமன நாள் முதல் கால முறை ஊதியம் வழங்கினால் அரசுக்கு எவ்வளவு செலவித் தொகை ஏற்படும் என உத்தேச மதிப்பினை உடனடியாக அளிக்கும்படி உத்தரவிடப்பட்டுள்ளது.
இச்செய்தி மகிழ்ச்சி என்றாலும், இது மட்டுமல்ல நமது கோரிக்கை என்பதை அரசாங்கம் புரிந்துகொள்ள வேண்டும். அதற்கு பதிலாக இடைநிலை ஆசிரியர்களின் தர ஊதியத்தை மத்தியப்பள்ளி ஆசிரியர்களுக்கு இணையாக உயர்த்துவதில் என்ன தயக்கம் என்று நமக்கு புரியவில்லை. சுமார் 40,000 ஆசிரியர்கள் மட்டுமே கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள நிலையில் கோமா நிலையிலிருக்கும் நோயாளிக்கு சிகிச்சையளிப்பதுதான முக்கியம் என்பதை அரசாங்கம் புரிந்துகொள்ள வேண்டும். அல்லது அக்டோபர் 8 புரியவைக்கும் என்பதை நீ நிருபித்து காட்ட வேண்டும்.
ஜேக்டோ தலைவர்கள் உனக்கு இட்ட கட்டளைப்படி உன்னோடு பணியாற்றும் சக ஆசிரியத் தோழனையும் வேலை நிறுத்தத்தில் ஈடுபடுத்து. அக்டோபர் 8 என்பது தமிழக வரலாற்றில் இடம்பெறும் நமக்கான நாள். வீட்டில் உள்ளவர்கள் சம்மதம் இல்லை அதனால் வேலைக்கு செல்ல வேண்டும் என கோரிக்கை விடும் உன் சக ஆசிரியரின் குடும்பத்திற்கும் புரிய வை நமது இழப்பை. இன்று தவற விட்டோமானால் என்றும் பெற முடியாது என்பதை உணர்த்து.
கடந்த கால போராட்டத்தில் கிட்டதட்ட 10,000க்கும் மேற்பட்ட பெண் ஆசிரியர்கள் ஒரு மாத சிறையில் வாடி பெற்று தந்த உரிமையை இழந்து நிற்கிறோம் என்பதை எடுத்துக்காட்டு. சிறை வளாகத்தில் உயிர் நீத்த தியாகி கருப்பணன் போன்றோர்களின் தியாகத்தால் பெற்ற உரிமை எங்கே? என சிந்திக்க தூண்டு. இங்கு போராடாமல் எதுவும் கிடைத்ததில்லை என்பதை விளக்கு.
15 அம்ச கோரிக்கைகளில் எதாவது இரண்டு கோரிக்கைகள் நிறைவேற்றினால் வேலை நிறுத்தம் பிசுபிசுக்கும் என தப்பு கணக்கு போடுபவர்களுக்கு நமது ஒற்றுமையை உணர்த்தும் தினமாக அமையட்டும் அக்டோபர் 8. உரிமை மீட்பு போரில் பின்னடைவு என்பது இல்லை என்பதை மீண்டும் நிருபிப்போம். கோரிக்கை வெல்லும் வரை கோடி கைகள் ஒன்றிணையும் என்பதை உணர்த்துவோம்.
 இயக்கம் மறந்து சங்கமிப்போம்...
இறுதி வெற்றி நமதென்போம்....

தொடர்ந்து உன்னோடு பயணிப்பேன்...

தோழமையோடு...
ஆ.முத்துப்பாண்டியன்
TNPTF மாவட்டச்செயலாளர்
ஜேக்டோ மாவட்ட உயர்மட்டக்குழு உறுப்பினர்

9/26/2015

ஆட்சியாளர்களின் மனதை மாற்றுமா? அக்டோபர்-8

இனிய தோழமையே!!!

பல்வேறு போராட்டங்களில் பல வடிவங்களில் பங்குபெற்று பழக்கப்பட்ட உனக்கு அக்டோபர் 8 வேலை நிறுத்தத்திற்கு வா என அழைப்பு விடுப்பது என்பது தேவயைற்றது என்றே கருதுகிறேன். கிட்டதட்ட 15க்கும் மேற்பட்ட அகில இந்திய பொது வேலை நிறுதத்தில் கலந்துகொண்டு இந்த தேச முன்னேற்றத்திற்காக உன் ஊதியத்தை இழந்தவன் நீ. பொது கோரிக்கைக்கே போர் முரசு கொட்டும் நீ... உன் வாழ்வாதாரத்தை நிர்ணயிக்க போகும் 15 அம்ச கோரிக்கைகாக ஆரம்பப்பள்ளி முதல் மேல்நிலைப்பள்ளி வரையுள்ள 28 ஆசிரியர் இயக்கங்கள் ஜேக்டோ என்ற பதாகைக்கு கீழ் ஒருமித்த குரலாய் ஓங்கி ஒழிக்கின்ற மகா சமுதரத்தில் நீயும் சங்கமிப்பாய் என்று எனக்கு நன்கு தெரியும்.
அதோடு மட்டும் உன் கடமை முடிந்துவிடவில்லை என்பதை நீ அறிவாய். உன் சக ஆசிரியர் தோழனையும் அக்டோபர் 8 என்ற வரலாற்று சிறப்புமிக்க வேலை நிறுத்தத்தில் பங்கெடுக்க வைக்க வேண்டிய தலையாய கடமை உனக்குண்டு. போராட்டத்தை நசுக்க நம்மிடமே உள்ள சில நச்சு பாம்புகள் பல்வேறு விஷம கருத்துக்களை உமிழ முயற்சிக்கும் என்பதை கடந்தகால போராட்டங்களில் நீ நன்கு உணர்ந்திருப்பாய். இங்கு போராடாமல் யாராட்டமும் செல்லாது என்ற பால பாடத்தை நீ படித்து வளர்ந்தவன் என்பதால் உனக்கு விரிவாக சொல்ல தேவையில்லை. ஆனால் களப் போராட்டம் என்பது பல்வேறு சிந்தைனயுள்ள இயக்கங்கள் ஒருங்கிணைந்து செயலாற்ற வேண்டிய சூழல் இன்று ஜேக்டோவினால் ஏற்பட்டுள்ளது. எனவே களத்தை சூடு படுத்த வேண்டும். அனைவரையும் களப்போராளியாக மாற்ற வேண்டும். நம் உரிமையை மீட்டெடுக்க கடைசி வாய்ப்பு என்பதை உணரச் செய்யவேண்டும். மத்திய அரசு ஊழியர்கள் அடுத்த ஊதியக்குழுவின் பரிந்துரை நாளை எதிர்நோக்கியுள்ளபொழுது நாம் கடந்த ஊதியக்குழுவின் துரோகத்திற்கு கூக்குரலிட்டுக் கொண்டிருக்கிறோம். நாம் பெற முடியாமல் போனதற்கு கடந்தகாலத்தில் நம்மிடம் ஒற்றுமையின்மைதான் என்பதை உணர்த்துங்கள். ஒன்று கூடியவர்களும் ஓடிய வரலாற்றை மறந்து ஒன்றாக்கப்பட்டுள்ளார்கள். வட்டார அளவில், மாவட்ட அளவில், மாநில அளவில் நம்முடைய பலத்தை இந்த அரசுக்கு உணர்த்தியாச்சு.
அப்படியிருந்தும் மௌனம் காக்கும் அரசின் மௌனம் கலைக்க கடைசி வாய்ப்பு அக்டோபர்-8 அனைத்து பள்ளிகளும் இயங்கவில்லை என்ற அதிரடிச் செய்தியகத்தான் இருக்கும். கல்வித்துறையின் இரும்பு கதவுகள் உடைக்கப்பட்டு ஆசிரியர்களின் நியாயமான கோரிக்கைகள் ஏற்கப்பட்டன எனவும், தமிழக அரசு அனைத்து கோரிக்கைகளையும் ஏற்றது என்ற செய்தியும் ஊடகங்டகள் வழியாக உனக்கு வந்தடையும் என்பதை பலமாக நம்பு. ஜேக்டோவில் இல்லாத ஆசிரியர் நண்பர்களையும் வேலை நிறுத்தத்திற்கு அழைக்க தவறாதே. ஜேக்டோவின் மாவட்ட வேலை நிறுத்த ஆயத்த கூட்டங்கள் நிறைவடைந்த நிலையில் வட்டார கூட்டங்களை நடத்திக்கொண்டிருக்கிறாய் என்ற செய்தி மகிழ்வுதான். நடத்தாத வட்டாரங்களில் பொறுப்பாக்கப்பட்ட இயக்க பொறுப்பாளர்களை தொடர்பு கொண்டு நடத்த திட்டமிடு. முதல் பருவதத்திற்கான விடுமுறையை வேலை நிறுத்த ஆயத்தத்திற்காக பயன்படுத்து.
நாளை மதுரையில் நடைபெற இருக்கும் நமது இயக்கத்தின் மாநிலச் செயற்குழுவில் அக்டோபர் - 8 வேலை நிறுத்தத்தை எப்படி வெற்றியாக்குவது என இறுதிக்கட்ட திட்டமிடல் நடைபெற இருக்கிறது. தோழனே உறக்கமின்றி செயலாற்று.
வெற்றி நமதே...

தொடர்ந்து உன்னோடு வருவேன்...

தோழமையுடன்...
முத்துப்பாண்டியன்.ஆ
TNPTF மாவட்டச்செயலாளர்
சிவகங்கை மாவட்டம்

3/06/2015

சாதிக்க துடிக்கும் ஜாக்டோ!!! வேதனை தீர விழித்தெழு தோழா!!!

தோழனே!!
                      மிக்க மகிழ்வுடன் உள்ளேன். கடந்த ஒரு வார காலமாக ஜாக்டோ பேரணி வெற்றியடைய நீ ஆற்றும் களப்பணி கோரிக்கையின் நியாயத்தை இச்சமூகம் உணர ஆரம்பித்து விட்டதை உணர்த்துகிறது.

மாவட்ட முழுமைக்கும், ஏன், மாநில  முழுமைக்கும் கூட ஜாக்டோவிற்கு ஆதராவக எழுந்துள்ள ஆதரவு அலை, உரை வீச்சுகள், எழுச்சிக் கட்டுரைகள், ஆற்றாமை கவிதைகள். அடுக்கடுக்கான ஆதரவு செய்திகள், வட்டார, மாவட்ட ஆயத்த கூட்டங்கள், ஆசிரியர் சந்திப்புகள் என தொடர் நிகழ்வுகள் என்னை மகிழ்ச்சி கடலில் ஆழ்த்தியுள்ளது.

 மார்ச் 8 மாவட்ட தலை நகரையே குலுங்க வைக்கப் போகும் உன் பேரணி என்பது ஆழ்ந்த உறக்கத்தில் உள்ளது போல் பாசாங்கு செய்யும் அரசாங்கத்தை நிச்சயம் நித்திரை கலையச் செய்யும் என்பதில் எனக்கு மாற்று கருத்த இல்லை. இருந்தாலும் நம்மை பிரித்தாள நினைக்கும் தீய சக்திகள், ஒற்றுமையை குலைக்க நினைக்கும் கொடுங்கோலர்கள் நம்மை விட பல மடங்கு செயல்படுவார்கள் என்பதாலே இந்த கட்டுரையை எழுத எனக்கு தூண்டியது.

நாளை ஒரு நாள் இடைவெளி என்பது நமது இலட்சியத்தை உடைக்க முடியாது என்றாலும் வதந்திகள் தமிழ்நாட்டில் காட்டு ”தீ”  போல் பரவும் என்பதால் இயக்க பொறுப்பாளாராகிய நீ கவனமுடன் செயல்பட வேண்டிய தருணம் இது.

பல இயக்கங்கள் கூடுவதால் மற்றவர்கள் வருவார்கள் என எண்ணும் சில இயக்க உணர்வு குன்றியவர்களையும் களத்திற்கு அழைத்து வர வேண்டிய பொறுப்பு உனக்கு அதிகம் உள்ளது.

நமது இலக்கு என்பது 2003க்கு பின்னால் பணியேற்ற ஆசிரியர்கள் என்றாலும் அதிகம் பாதிப்புக்குள்ளாகியுள்ள 2009, 2012 ஆண்டுகளில் புதிதாக பணியேற்ற போராட்ட களம் காணாத இடைநிலை ஆசிரியர்களை முழுமையாக அழைத்து வா. நமது கோரிக்கைக்காக, எதிர்கால ஆசிரிய சமுதாயத்திற்காக பணி மூப்பு ஆசிரியர்கள் தங்களுடைய உடல் உபாதைகளையும் பொருட்படுத்தாமல் உரக்க குரல் கொடுப்பதை இந்த இளைய சமுதாயம் நேரடியாக பார்க்க இது தக்க தருணம். நாம் பெற்றுள்ள உரிமைகள் எல்லாம் எத்தகைய கடுமையான போராட்டங்களால் பெற்றவை என்பதை உணர வை.

மார்ச் 8 மகளிர் தினம். நமக்கு மிகவும் பொருத்தமான தினம். 80 சதவீத பெண் ஆசிரியர்களை கொண்டுள்ள நாம் மகளிர் தினத்தில் நாம் இழந்த  உரிமைக்காக ஒப்பாரி வைக்க இருக்கிறோம்.

ஆசிரியர்கள் ஏங்கினால் நாளை இந்த நாடே ஏங்கும் என்று சொன்ன அண்ணாவை தன்னுடைய தலைவராக ஏற்றுள்ள திராவிட கட்சிகள் ஆட்சி பீடத்தை அலங்கரித்த போதும் நம் அவலம் தீர வில்லை.

இடைநிலை ஆசிரியர்களின் இழப்பு என்பதுதான் இன்றைய போராட்டத்தின் மைய கோரிக்கை என்பதை புதிதாக பணியேற்ற ஆசிரியர்களுக்கு புரிய வைத்திருப்பாய் என்றே உணர்கிறேன்.

மாவட்ட முழுமைக்கும் உள்ள இயக்க தோழர்களிடம் தொடர்ந்து  குறுஞ்செய்தி வழியாகவும், அலைபேசி வழியாகவும், நேரடியாகவும் தொடர்பு கொண்டே வருகிறேன்.

 மாவட்ட முழுமைக்கும் உள்ள எழுச்சியின் வீச்சு என்பது மார்ச்-8ல் மாவட்டத்தையே அதிர வைக்கும். இதில் உன் பங்களிப்பு என்பது மிகவும் பாராடட்டுக்குறியது என்றாலும் நித்திரை கலையாமல் அரை தூக்கத்தில் அல்லாடும் ஒரு சில நண்பர்களையும் எழுப்பி விடு. கோரிக்கையின் வெற்றி வெகு தூரம் இல்லை.

”ஸ்தாபனம் இல்லாத போராட்டம்
ஆயுதம் இல்லாத அசட்டுத் தனம்

போராட்டம் இல்லாத ஸ்தாபனம்
பயன்பாடற்ற போலி தனம்”

உன்னை உரிமையோடு அழைப்பதற்கு எனக்கு முழு உரிமை உள்ளதால் மீண்டும் உன்னை உரிமையேடு அழைக்கிறேன்.

தோழனே புறப்படு உன் போர் படையோடு!!!!
கொட்டட்டும் போர் முரசு!!!

உண்மையை உரக்கச் சொல்லுவோம்!!
உரிமையை போராடி பெறுவோம்!!!

ஆவலுடன் உன் வரவை எதிர்நோக்கி...

தோழமையுடன்...
முத்துப்பாண்டியன்.ஆ
TNPTF மாவட்டச்செயலாளர்
சிவகங்கை மாவட்டம்.

3/02/2015

மாற்றம் காணும் மார்ச் -8

இனிய தோழனே!
 ஒவ்வொரு  போராட்ட காலத்திலும் உன்னை  உரிமையோடு போராட்ட களத்திற்கு அழைப்பதை வாடிக்கையாக கொண்டள்ளேன். நீயும் உணர்வோட அதில் கலந்துள்ளாய். தனிச்சங்க நடவடிக்கையில் கூட உன் வரவு வட்டார, மாவட்ட, மாநிலத்தையே திரும்பி பார்க்க வைத்தது. ஆனால் ஒரு கை ஓசை என்பது ஆட்சியாளர்களின் உள்ளத்தை உருத்த வில்லை என்பதை உணர்ந்ததான் ஒரு கூட்டுப் போராட்டத்திற்கு நாம் கூப்பாடு போட்டோம். நமது ஓலம் சகோதர சங்கங்களின் நித்திரையை கலைத்து இன்று ஜாக்டோ என்ற பதாகையின் கீழ் சங்கமித்துள்ளோம். டிட்டோஜாக்கி்ல் எந்த நம்பிக்கையின் அடிப்படையில் இறுதி கட்ட போர் வரை போராடினாயோ!!! அதை விட அசுர பலத்துடன் போராட தயாராகி விடு. நீ மட்டுமல்ல உன்னோடு பணியாற்றும் சக ஆசரியர்களையும் அழைத்து வா. கடந்த ஆண்டு ஆகஸ்ட் -30  எப்படி மாவட்ட நிர்வாகத்தை ஸ்தம்பிக்க வைத்தாயோ அதை போல அனைத்து இயக்க தோழர்களுடன் வருகிற 8ந் தேதி மாவட்ட பேரணியால் கதி கலங்க வைக்க வேண்டும். இடைநிலை ஆசிரியரின் ஊதிய மாற்றம் என்ற வாழ்வாதர கோரிக்கையே நம் மைய புள்ளி. இந்த இறுதி போரில் எந்த விலை கொடுத்தாவது இழந்த உரிமையை மீட்டெடுக்க வேண்டும். மார்ச-8 என்பது உன் வாழ்வில் மாற்றம் காணப்போகும் மகத்தான நாள். நீ அழைக்கும் ஆசிரிய சகோதரிகளுக்கு அன்றுதான் நீ கேள்வி படாத காரணங்கள் வந்து போகும். இதில் வர இயலாமைக்கு அவர்கள் கூறும் காரணங்களை ஒவ்வொரு போராட்ட காலத்திலும் கேட்டு பழகிவிட்டதால் உனக்கு அதை எப்படி சமாளித்து  அவர்களை போராட்ட களத்திற்கு அழைக்கும் சூட்சமம் அறிந்திருப்பாய். அளவு மாற்றம்தான் ஆட்சியாளர்களின் மனமாற்றத்திற்கு  அடி கோலும் என்பதால் பங்கேற்பாளர்களின் எண்ணிக்கையை உயர்த்த கடுமையாக களப்பணியாற்று.  போராட்ட குணம் நமது பிறப்பிலேயே இருப்பதால் உனக்கு  அதைப்பற்றி அதிகம் விளக்க வேண்டிய அவசியமல்லை. போராட்ட காலத்தில் அடிக்கடி உன்னோடு முக நூலில் உரையாட இயலவில்லையென்றாலும் நேரம் கிடைக்கும் பொழுதெல்லாம் உரையாடவே விரும்புகிறேன். தோழனே இந்த போராட்டத்தில் புதிதாக பணியேற்ற ஆசிரியர்களை அதிகம் பங்கெடுக்க முயற்சி செய். ஆசிரியர் சந்திப்பு அடிக்கடி நிகழட்டும். தோழமைகளோடு திட்டங்கள் தீட்டுங்கள். எப்படி, எந்த வாகனங்களில் ஆசிரியர்களை அழைத்துச் செல்வது என்பது இறுதி முடிவாக்குங்கள்.  உறக்கம் வேண்டாம். வருங்கால சந்ததிக்கு நாம் தரப்போகும் வெற்றி பரிசை பெறுவதற்கு வா இணைந்து களம் காண்போம்.
ஜிந்தாபாத்!  ஜாக்டோ ஜிந்தாபாத்!!!!
உன் வரவை ஆவலுடன் எதிர் நோக்கி....
தேழமையுடன்....
முத்துப்பாண்டியன்.ஆ
மாவட்டச்செயலாளர்
TNPTF@sivaganga

2/20/2015

தோழனே ஆர்ப்பரித்து வா!!! ஆயத்த கூட்டம் அரங்கு நோக்கி!!!!

எந்த கோரிக்கை வென்றெடுக்க எல்லாரும் ஒன்று கூட வேண்டும் என நீ விரும்பினாயோ... அந்த கோரிக்கை வென்றெடுக்க தமிழகத்தில் உள்ள அனைத்து ஆசிரியர் இயக்கங்கள் எல்லாம் ஒன்று கூடி விட்டன. ஜாக்டோ இயக்கத்தின் போராட்ட ஆயத்த கூட்டம் வருகிற 22.2.2015 அன்று காலை 10.00மணிக்கு சிவகங்கை மன்னர் மேல்நிலைப்பள்ளியில் நடைபெற உள்ளது. இடைநிலை ஆசிரியர்களின் கனவு நினைவாக திட்டம் தீட்டும் இடம். உன் ஆலோசனைகளும் கவனத்தில் கொள்ளப்படும். இயக்கங்கள் தங்களுக்குள் உள்ள வேற்றுமைகளை மறந்து கோரிக்கை வெல்வதே ஒரே நோக்கம் என ஒன்று கூடி உரத்த குரலில் கூவத் தொடங்கி விட்டன. மௌனம் காத்த தமிழக அரசு கூட 25.2.2015 அன்று இயக்க தலைமைகளை சந்திக்க நேரம் கொடுத்து விட்டது. கலைந்த மௌனம் உத்தரவாக மாற நமது கூட்டத்தின் வலிமையை அரசுக்கு உணர்த்த வேண்டிய கட்டாயத்தில் உள்ளோம். அளவு மாற்றம்தான் குணமாற்றத்ததை உண்டு பண்ணும். இந்த போராட்டத்திலும் பங்கேற்க முடியாமைக்கு காரணங்களை தேடி அலையாதே! காரணங்கள் கேட்டு கேட்டு இயக்க பொறுப்பாளரகள் அலுத்து விட்டார்கள். இது நல்ல தருணம். இதை தவற விட்டால் மீண்டும் வென்றெடுக்க இயலாமல் போய்விடும். எனவே தோழமைகளே போராட்ட ஆயத்த கூட்டத்தில் தவறாது கலந்த கொண்டு உன் பின்னால் உள்ள படையை திரட்ட தயாராகு. இந்த கூட்டத்தில் மாவட்ட, வட்டார, நகர, பொறுப்பாளரக்ள கலந்த கொள்ள மாநிலத் தலைமை கேட்டுக்கொண்டுள்ளது. எனவே உன் வரவை ஆவலுடன் எதிர்நோக்கியுள்ளேன்....
தோழமையுடன்....
முத்துப்பாண்டியன்.ஆ
மாவட்டச்செயலாளர்
TNPTF
சிவகங்கை மாவட்டம்

1/14/2015

தோழமைகளே ஆவலுடன் எதிர் நோக்கி

 வருகிற 18.1.2015 திருப்பூர் நகரில் தெற்கு ரோட்டரி திருமணமண்டபத்தில் நடைபெற  இருக்கும் ஒரு ஜனநாயகமிக்க இயக்கத்தின்(TNPTF) மாநிலத் தேர்தல். எதிர்கால சவால்களை தங்களுடைய கூரிய சிந்தனையால் எதிர் நோக்க இருக்கும் ஒரு சமரசமற்ற தலைமைகளை தேர்ந்தெடுக்க இருக்கிறோம். முகம் பாராமல் முக நூல் வழியே கருத்துக்களை பரிமாறிய நட்புகளை முகம் பார்த்து உரையாட இருக்கிறோம். ஒரு சமூக சிந்தனையுள்ள இயக்கத்தில் உறுப்பினர் என்ற தகுதியுடன் கல்வி நலன் மட்டுமல்லாது சமூகம் சார்ந்து சிந்திக்கின்ற ஒரு சமரசமற்ற போராளிகளே ! ஜனநாயகத்தை தாங்கி பிடிக்கும் தேர்தல் நாள் நெருங்க நெருங்க ஒரு இனம் புரியாத சந்தோசம் மேலோங்குவதை தடுக்க இயலவில்லை. இடைநிலை ஆசிரியர்களின் ஊதிய மாற்றம் மற்றும் தன் பங்கேற்பு ஓய்வுதியத்தை இந்த நாட்டை விட்டே துரத்த வேண்டிய மிகப்பெரிய சவாலும், அரசு பள்ளிகளை பாதுகாக்க எடுக்க வேண்டிய நடவடிக்கைகளும் என சவால்கள் எதிரே அணி வகுத்து நிற்கின்றன. இந்த இயக்கத்தை கட்டமைத்த தலைவர்கள் நமக்கு காட்டிய வழியை தடம் மாறாமல் பின்பற்றி இந்த சமுதாயத்தை முன்னேற்றுகின்ற வழிகளை ஆராய வேண்டிய தருணம் இது. எனவே தோழர்களே உங்களைப் போலவே நானும் ஆவலுடன் எதிர் நோக்கியுள்ளேன். நான் மிகவும் மகிழ்வுடன் பங்கேற்கும் பொங்கல் விழா ஒரு புறம், என் வாழ்க்கையில் சமூக - முற்போக்கு சிந்தனைகளை வித்திட்ட இயக்கத்தின் ஜனநாயக திருவிழா மறுபுறம் என இரட்டிப்பு மகிழ்வில் தித்திக்கின்றேன். ஒரு விழாவில் என்னோட இரண்டற கலந்த பழைய நட்புகளை, இனிய உறவுகளை கிராமத்தில் சந்திக்க இருக்கின்றோம் என்ற அவா, மறுபுறம்   முற்போக்கு சிந்தனையாளர்கள் அனைவரும் ஒருங்கே சங்கமிக்கும் ஒரு விசித்திரமான வேகத்தில் இயங்கி கொண்டிருக்கும் நகரில் தன்னலமற்ற தோழர்களை சந்தித்து சிந்திக்க இருக்கிறோம் என்ற ஆசை என இந்த தமிழர் திருநாள் வாழ்க்கையில் மறக்க இயலாத திருநாள்.
மீண்டும் ஆவலுடன் உங்களை எதிர் நோக்கி தோழமைகளே...
தோழமையுடன்...
முத்துப்பாண்டியன்.ஆ
மாவட்டச்செயலாளர்
TNPTF
சிவகங்கை மாவட்டம்

1/31/2014

பிப்ரவரி2 பேரணி - உரிமை மீட்டெடுப்பு பேரணி.

யார் போராடி கோரிக்கைகள் வென்றாலும் அனைத்து ஆசிரியர்களுக்கும் அதனால் பலன் கிடைக்கும். அதே போல் யாராவது போராடுவார்கள் நமக்கென்ன என யாராவது ஒதுங்கி நிற்பதால் போராட்டம் வலுவிழந்து கோரிக்கை நிறைவேறத் தாமதமானால் அது அனைத்து ஆசிரியர்களுக்கும் இழப்பே!
ஆகவே இது நமக்கான போராட்டம் ஆசிரியர் சமுதாயத்தின் நலன் காப்பதற்கான போராட்டம் என்பதை உணர்ந்து ஆசிரியர் சமுதாய ஒற்றுமையையும் பலத்தையும் அரசுக்கு காட்டிட பேரணியில் அணி வகுக்க வேண்டும். மத்திய அரசுப்பள்ளி ஆசிரியர்களுக்கு இணையான ஊதியம் என்பது அரசு தாமே மனமுவந்து அளித்ததல்ல. ஆசிரியர்களின் கூட்டுப் போராட்டத்தால் விளைந்த வெற்றி. ஆசிரியர்களின் போராட்டத்தின் வலிமையை உணர்ந்து அரசு வழங்கிய ஊதியம். பல கட்ட போராட்டக் களம் கண்டதன் விளைவாய் ஆசிரியர் சமுதாயம் பெற்று வந்த மத்திய அரசுப்பள்ளி ஆசிரியர்களுக்கு இணையான ஊதியத்தை ஆறாவது ஊதியக் குழுவை நடைமுறைப்படுத்தியதன் மூலம் அரசு நம்மிடமிருந்து அதனைப் பறித்துள்ளது. நம்முடைய தாத்தா,அப்பா பாடுபட்டுச் சேர்த்த சொத்தை யாராவது அபகரித்தால் நாம் நமக்கென்ன என்று சும்மா இருப்போமா? அது போலத்தான் மத்திய அரசுப்பள்ளி ஆசிரியர்களுக்கு இணையான ஊதியம் என்பது நம்முடைய ஆசிரியர் சமுதாயத்தின் குடும்பச் சொத்து. அன்று நம் முன்னோர்கள் போராடிப் பெற்றுக் கொடுத்த உரிமையை இன்று நாம் இழந்து விட்டு நிற்கிறோம். இழந்த நம் குடும்பச் சொத்தை போராடி மீட்க வேண்டாமா? நம் முன்னோர் நமக்காகப் போராடிப் பெற்றுக் கொடுத்த உரிமையை நாம் நமக்குப் பின்னால் வரும் ஆசிரியச் சந்ததிகளுக்கு விட்டுச் செல்ல வேண்டாமா? அந்தக் கடமையும் பொறுப்பும் தமிழ்நாட்டு ஆசிரியர்களாகிய நம் அனைவருக்கும் உள்ளது. ஆகவே இழந்த உரிமையை மீட்டெடுக்க ஆசிரியர் சமுதாயத்தின் ஒற்றுமையையும் வலிமையையும் அரசுக்கு உணர்த்திட அணி திரண்டு பிப்ரவரி-2 பேரணிக்கு வாரீர் தோழர்களே!
By Jagadeesh Varan

1/24/2014

அடலேறு வேங்கையே! தயாராகிவிட்டாயா?

அடலேறு வேங்கையே!
தயாராகிவிட்டாயா? உன் அடுத்த கட்ட சுதந்திர போருக்கு. 02.02.2014  உன் மாவட்ட தலைநகரத்தை உன் சகோதர ஆசிரியர்களால் நிலைகுலைய வைக்க உன் முயற்சிகள் முடுக்கப்பட்டுள்ளதா?. வெற்று வார்த்தைகளால் வீண் கதைகள் பேசி மீண்டும் உன் தரநிலையை தரம் தாழத்த போகிறாயா? உன் தர ஊதியம் உயராமல் சமுதாயத்தில் உன் தரம் உயரப்பேவதில்லை எனபது புரியுமா?. இல்லை எப்பொழுதும்போல் எதுவும் புரியாதது போல் என இருந்துவிட்டு இயக்க உணர்வாளர்கள் தன் சுக-துக்கங்களை மறந்து போராடி பெற்றத் தர இருக்கும் பலன்களை எவ்வித குற்ற உணர்வு இல்லாமல் பெறுவதற்கு ஏ.டி.எம். இயந்திரங்களின் குளிர் அறைகளில் குதூகலத்துடன் காத்திருக்கும் சாதாரண ஆசிரியர் போல் இருந்து விடப்போகிறாயா?. நாம் பெற்ற அனைத்து உரிமைகளும் நமது இயக்க முன்னோடிகளின் சமரசமற்ற போராட்டத்தினால் மட்டுமே கிடைத்தது என்பது நீ அறிவாயா?. கற்று கொடுப்பவன் நீ. உனக்கு கற்று கொடுக்க தேவையில்லை.  உரிமையை இழந்தால் உணரவற்று போவாய். பல்வேறு ஊதிய குழுவில் நம்மை குறி வைத்து இந்த ஊதிய குழுவில் பகை தீர்த்து கொண்டது சில பகல் வேஷம் போடும் அதிகார வரக்கம். அவர்களின் முகமூடிகளை உனது போராட்ட வீச்சு பிய்தெறியட்டும். இப்பொழுதே உனது வெற்றி முரசு கொட்டட்டும். சென்ற போராட்ட களத்தில் இளைக்கப்பட்ட துரோகங்களை மறந்து அனைத்து சகோதர சங்கங்களையும் உடன் அழைத்து வா. போர் களத்தில் ஆக்ரோஷம் நிறைந்த உன் கோஷத்தை கேட்க உன்னோடு சேர்ந்து விண்ணை முட்டும் கோஷம் எழுப்ப ஆவலுடன் கார்த்திருக்கிறேன். போராட்டங்கள் விளையாட்டல்ல! கோரிக்கைகள் கேளிக்கையல்ல!! என்பதை ஆட்சியாளர்களை உணர வைப்போம். கொட்டட்டும் போர் முரசு. தோழா  உனக்காக போர்களத்தில் கோரிக்கைகள் வெல்லும் வரை போராட மூத்த தலைமுறைகளையும் உடன் அழைத்து வா. ஆசிரியப்பேரினமே அணி திரள்வோம!! சிறை நிரப்புவோம்!!!
தோழமையுடன்.........
ஆ.முத்துப்பாண்டியன்
TNPTF  மாவட்டத்தலைவர், சிவகங்கை மாவட்டம்

1/20/2014

காலம் கடத்துவதால் யாருக்கு பயன்? (TETOJAC)

இடைநிலை ஆசிரியர் ஊதியமாற்றம் என்பது இன்று அனைத்து சங்க ஆசிரியர்களாலும் எதிர்பார்க்கப்படும் ஒன்று. தனிச்சங்க நடவடிக்கை ஒருபுறம் இருந்தாலும் கூட்டு நடவடிக்கை என்பதே சிறந்த தீர்வாக இருக்க முடியும்.
இதில் மெத்தனம் காட்டுவதின் மர்மம் என்ன? என்பதுதான் இன்று அனைவரும் மனதிலும் எழுக்கூடிய கேள்வி. ஏன் வரத்தயங்குகிறீர்கள் என்று கேட்டால் 40 ஆண்டுக்கு முந்தைய வரலாறு சொல்வதும் அதற்கு மற்றவர்கள் பதில் சொல்வதும் நான் பெரியவன், நீ துரோகி என்ற கருத்து மோதல்கள் நடைபெறுவதும் என்பது அரசியல் களம் போல் ஆகி விட்டது. களம் அமைத்து போராடுவது பெரிய விசயமல்ல. கடைசி வரை களமாடுபவர்கள் யார் என்பதுதான் கேள்வி. கடந்த காலங்களில் நடந்த விசயங்களை மறந்து இயக்கத் தலைவர்கள் கோரிக்கை வென்றெடுக்க என்ன முயற்சிகள் எடுக்க வேண்டும் என்பதை பற்றி சிந்திக்க வேண்டும். இயக்கத்தில் பொறுப்பாளர்கள் யார் கட்டுப்பாடு இல்லாமல் சுததந்திரமாக முடிவெடுக்க முயல வேண்டும். இல்லையேல் வருங்கால சமுதாயம் நம்மை கடைநிலை ஊழியர்கள் நிலையில் கொண்டுபோய் வைத்துவிடும். கோரிக்கைகளை செவிமடுக்கும் இயக்குநராக தொடக்கக்கல்வி இயக்குநர் உள்ளார். எனவே நம் கோரிக்கைகளை அரசிடம் கொண்டு சேர்க்கும் பாலமாக அவரை பயன்படுத்திக்கொள்ளலாம். அதே நேரத்தில் நம் உரிமைகளை பெறுவதில் சிறிதும் தயங்காமல் ஒரு பெரிய போராட்ட நடவடிக்கையை கூட்டு நடவடிக்கைக்குழு அறிவிக்க வேண்டும். அறிவூட்டும் துறை தன்னுடைய உரிமையை பெற யாருக்கு அறிவூட்டுவது என தெரியாமல் திண்டாடுவது நகைப்புக்குறியதாகும். ஒற்றுமையே பலம் எனவும், கூடி வாழ்நதால் கோடி நன்மை என பாடம் நடத்தும் நமக்க யார் பாடம் நடத்துவது என்று தெரியவில்லை. இந்த கோரிக்கையை மையமாக வைத்து தெருவுக்கு ஒரு சங்ஙகம் தினமும் முளைத்துக்கொண்டிருக்கின்றன. இது நமது ஒற்றுமையின்மையை ஆட்சியாளர்களுக்கு படம் பிடித்து காட்டிவிடுகிறது. பரிதாப்ப்ட்ட இனமாய் இன்று இடைநிலை ஆசிரயர் சமுதாயம் உள்ளது. பத்திரிக்கைச் செய்திகள் யார் தலைமையேற்பது என்ற போட்டி சங்கங்களுக்கிடையில் நடக்கிறது என்று பத்தி வைக்கின்றன. இயக்கங்களை கட்டுப்படுத்தும் சக்திகள் துர விலகி நின்றாலே நமக்கான போராட்டத்தை நாம் வகுத்துக்கொள்ளலாம். ஒன்று சேர விடாமல் தடுக்கும் தீய சக்திகளை இயக்க நடவடிக்கைகளிலிருந்து துரத்தியடியுங்கள். நமக்கான உரிமையை நாம்தான் போரடி பெற வேண்டும். இங்கு யாருடைய தயவும் தேவையில்லை. எத்தனை காலம்தான் வாய் மூடி மௌனமாக காலம் கடத்த போகிறோம். முதலில் நாம் சார்ந்துள்ள இயக்கத்தில் நமக்கான உரிமையை கேட்டுப் பெறுங்கள். அதன்பின் அரசிடம் உள்ள உரிமைகளை கேட்பதற்கு துணிந்து விடுவீர்கள். பலங்கதைகள் பேசி நம்மை மழுங்கடிக்கும் நாசகார கும்பல்களிடம் இருந்து விடுதலை கோருங்கள். நமக்கான விடியல் வெகு தொலைவில் இல்லை. மீண்டும் எச்சரிக்கை செய்கின்றேன். உரிமை மீடக ஒன்று கூடுவோம். வென்றெடுப்போம்.

உண்மையை உரக்கச் சொல்லுவோம்!!!

உரிமையை போராடிப் பெறுவோம்!!!

தியாக வேங்கையே! திரட்டு உன் வரிப்புலி கூட்டத்தை!! (TETOJAC)

TETOJAC உன் உரிமை மீட்பிற்காக வருகிற 02.02.2014 அன்று நடத்தவிருக்கும் மாபெரும் மாவட்ட பேரணிக்கு உன் வரிப்புலி கூட்டத்தை திரட்டி விட்டாயா?. திட்டமிட்ட செயல் கெட்டுப்போனதாக வரலாறு இல்லை. தமது திட்டம் நாளைய வெற்றியின் படிக்கல். மறந்த போன நினைவுகளை! மழுங்கி போன உணர்வுகளை!! தட்டி எழுப்பி தன்மானமுள்ள தியாக வேங்கையாக போருக்கு புறப்பட தயாராகயிரு. உனது வெற்றி முரசு சத்தம் சக ஆசிரிய சகோதரனை தட்டி எழுப்பும் சங்கொலியாக அமையட்டும். உனக்கு இந்த ஒரு மாத காலத்தில் 10க்கும் மேற்பட்ட கட்டுரைகள் எழுதியுள்ளேன். அனைத்தையும் உன் சக ஆசிரியனிடம் பகிர்ந்தாயா?. அடடா! எத்தனை விமர்சனங்கள். அந்த விமர்சனங்கள்தான் என்னை கூர் தீட்டின. இன்று பெறவில்லையென்றால் என்று பெறப்போகிறோம்? நீண்ட இரயில் பயணத்தில் பயணிகளை பத்திரமாக சேருமிடம் சேர்க்கும் தொடர் வண்டி போல் தமிழக ஆசிரியர்களை பாதிப்புக்களின்றி பயணிக்க செய்கின்ற தொடர் வண்டிதான்TETOJAC. ஆகஸ்டு புரட்சி இந்திய வரலாற்றில் இன்றளவும் பேசப்படுகிறது. அதை போலத்தான் நமது மாவட்ட பேரணியும் இயக்க வரலற்றில் பேசப்படும். ஆள்பவர்களுக்கும், ஆண்டு முடித்தவர்களுக்கும் சேதாரம் இல்லாமல் போரடுவது போல் பாசாங்கு செய்ய தெரியாது நமக்கு. நெஞ்சில் மூண்ட நெருப்புக்கு சமரசம் ஏதுமில்லை என்ற இலட்சிய வேட்கையை நெஞ்சில் ஏந்தி வெற்றி கிட்டும் வரை போராட மட்டுமே நமக்கு தெரியும். தங்கம் செய்யாததை தங்கம் செய்யும் என்பதில் உறுதியுள்ளவன் நான். FEb-2nd இலட்சியவாதிகள் சங்கமிக்கும் நாள். ஆளும் அரசின் மனதை மாற்றப்போகும் நாள். மற்றவர்கள் துணிந்து செய்யாததை துணிச்சலுடன் எதிர்கொள்வதே எமது இயக்கத்தின் வழக்கம். இது நமக்கான பாதிப்பு. நாம் திரட்டவில்லையென்றால் யாரால் இயலும்? நாம் திரட்டுகின்ற கூட்டம் எதிர் கால ஆசிரிய சமுதாயத்தின் இயல்பு வாழ்க்கைக்கு இடக்கூடிய அடி உரம். எனவே இயக்கம் இட்ட கட்டளையை நிறைவேற்ற பல போராட்ட களம் கண்ட தியாக வேங்கைகளே திரட்டு உன் படைகளை. நம் பலம் என்ன என்பதை மற்றவர்களுக்கு புரியவைப்போம். போராட்ட களம் ஒன்றும் நமக்கு புதிதல்ல. புரட்சிகரமான கோஷங்களால் புது வரலாறு படைப்போம். குள்ள நரி கூட்டங்களை நம் கூட்டம் கூண்டோடு விரட்டட்டும். நம்மை எள்ளி நகையாடுபவர்கள் நடுங்கி ஓடட்டும். நல்லவர்கள் கூட்டம் நம்மோடு இணையட்டும். களத்தை சூடுபடுத்தி இலட்சிய வேட்கையுடன் மாவட்ட பேரணிக்கு அழைத்து வா! உன் வரவை ஆவலுட்ன எதிர்பார்க்கிறேன். வட்டார நிர்வாகிகளை சந்தித்து உற்சாகப்படுத்த இன்று நேரில் உன்னை நோக்கி எமது பயணம். தோழனே வாழ்வாதாரத்ததை மீட்டெடுக்க உன் வரி-புலி கூட்டத்தை திரட்டிடுக. வெற்றி நமதே!

தோழமையுடன்.........
ஆ.முத்துப்பாண்டியன்
TNPTF மாவட்டத்தலைவர்,
சிவகங்கை மாவட்டம்.
www.mptnptf.blogspot.com
TNPTF

1/13/2014

உணர்ந்திடு தோழா!! உரைத்திடு தோழா!!! - TETOJAC

என் இனிய அப்பாவி இடைநிலை ஆசிரிய தோழனே!

உன் உரிமைகள் கொஞ்சம் கொஞ்சமாக உன்னிடமிருந்து பறிக்கப்படுவதை உணர்ந்தாயா? உன் தரநிலை தர ஊதியத்தால் தரம் கெட்டு போனதை அறிந்தாயா? அறிந்தும் உன்னிடம் எவ்வித சலனமோ,  சஞ்சலமோ இருப்பதாக தெரியவில்லை. உன்னால் உனக்கான சரியான இயக்கத்தைக்கூட தெரிவு செய்ய இயலாமல் சிதறிக் கிடக்கிறாய். போராட்ட களத்தில் உன் பங்களிப்பு என்பது சொல்லும் அளவிற்கில்லை என்பது மறுக்க முடியாத உண்மை. ஏன் இந்த தயக்கம். நாம் ஏன் செல்ல வேண்டும்? நமக்காக யாராவது போராடுவார்கள் என்ற அசட்டையா? இல்லை அச்சமா? புரியவில்லை. இந்த நாட்டின் தலைவிதியை நிரணயிக்கப்போகும் மாணவர் சமுதாயம் உன் கையில். உன்னுடைய பிரதிபலிப்பு உன் மாணவர் சமுதாயத்திற்கும் தொடரும் என்பது உனக்கு பரியாததா?. உன் உரிமைகளைக் கூட கேட்க திராணியற்று ஊமையாய் உருக்குலைந்து இருக்கும் உன்னால் எப்படி உன் மாணவர் சமுதாயத்திற்கு உரிமையை பெற கற்றுக்கொடுக்க போகிறாய்?. போராட்டக் களத்தில் மற்றவர்கள் போராடிப் பெறும் உரிமைகளை எவ்வித கூச்சமும் இன்றி எப்படி உன்னால் அனுபவிக்க இயலுகிறது. மீண்டும் பகத்சிங் பிறந்தா உன்னை காப்பற்ற முடியும்?. இல்லை சேகுவரா தோன்ற வேண்டுமா?. உனக்கான பகத்சிங், சே யார் என்று அடையாளம் கண்டுக்கொள். இன்று தவறவிட்டால் இழந்த உரிமைகளை உன்னால் இனிமேல் பெற இயலாது. பல கட்ட போராட்டங்கள் தனித்தும், இணைந்தும் அரங்கேற்றியாகிவிட்டது. அரசோ, அதிகாரிகளோ அசையவில்லை. 30000க்கும் குறைவாக உள்ள பாதிக்கப்பட்ட இடைநிலை ஆசிரியர்களுக்கு பாதிப்பு நீக்க முன்வர அரசு தயங்க காரணம் யோசித்தாயா? தொடக்கக்கல்வித் துறையில் உள்ள சங்கங்களின் போராட்டங்களை பார்த்தாலே பயம் கொள்ளும் அரசாங்கம் அமைதி காப்பதன் அர்த்தம் புரிந்தாயா? போராட்ட களத்தில் உன் பங்களிப்பு குறைந்ததன் விளைவே என்பதை நீ அறிவாயா?. அளவு மாற்றம் குணம் மாற்றத்தை ஏற்படுத்தும் என்பதை என்றாவது நினைத்ததுண்டா?. போராட்டம் யாருக்கோ என்று வெளியில் நின்று வேடிக்கை பாரப்பது எவ்வளவு கேவலம் என்பது இனிமேலாவது உணர்ந்து கொள். இயக்கங்கள் அறிவிக்கும் போராட்டத்தில் எழுச்சியுடன் கலந்து கொள்ள தயாராகு. மற்றவர்களையும் தயார் படுத்து. இடைநிலை ஆசிரியர்களில் இளைஞர்கள் பலம் அதிகமாகிவிட்டது. உன் பலத்தை பலவீனமாக்க சில சுயநலமிக்க தலைவர்கள் திட்டமிட்டு காய் நகர்த்துகிறார்கள். அதில் சிக்கி சின்னாபின்னமாகி விடாதே. சிந்தித்து செயல்படு. சிந்தணை செய்யாதவன் ஜெயித்ததாக வரலாறு இல்லை. உனக்காக போராட கூட்டு நடவடிக்கைக்குழு தயாராகிவிட்டது. கோரிக்கை வென்றெடுப்பதே இலட்சியம். வருகிற போராட்டங்களில் உன் வரவை தோழமையுடன் எதிர்பார்க்கிறேன்.

உணர்வாயா? மற்றவர்க்கும் உணர்த்துவாயா?

உண்மையை உரக்கச் சொல்லுவோம்!!!

உரிமையைப் போராடிப் பெறுவோம்!!!

என்றும் இயக்க பணியில...

முத்துப்பாண்டியன்.ஆ
TNPTF மாவட்டத்தலைவர்

Sivagangai

1/09/2014

ஆசிரியர் கூட்டணி வரலாற்றில் எனது நினைவலைகள் - மா.ச.முனுசாமி

நூல் ஆசிரியர்: மா.ச.முனுசாமி
முன்னாள் மாநிலத்தலைவர்
தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி

                     அணிந்துரை  - செ.நடேசன்

 இன்றுள்ள ஆசிரியர் இயக்கத்தலைவர்களில் ‘இயக்கம் கண்ட நாயகன் மாஸ்டர். வா.இராமுண்ணி’ அவர்களோடு மிகநெருக்கமாக இருந்தவர் தோழர் மா.ச.முனுசாமி என்றால் மிகையாகாது. அவரோடு நெருங்கிப் பழகி அவரது எண்ணங்களை உள்வாங்கிக்கொண்டு,முற்போக்குச் சிந்தனையாளராக இயக்கப்பணிகளில் தீவிரமாகத் தன்னை ஈடுபடுத்திக் கொண்டவர் தோழர் மா.ச.முனுசாமி.
தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் பொறுப்பாளர்களின் செயல்பாடு களில் மாஸ்டர் கவலையுற்று உணர்ச்சிவசப்பட்டபோது அவரை அறிவுபூர்வமான அணுகுமுறையை மேற்கொள்ளத் தொழிற்சங்கத் தலைவர்களோடு கலந்துபேச வைத்தவர் தோழர் மா.ச.முனுசாமி. தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் பொதுச் செயலாளர் பொறுப்பிலிருந்து செ.முத்துசாமி நீக்கப்பட்டபோது மாநிலத்துணைச் செயலாளராக இருந்து பொதுச்செயலாளர் பொறுப்பை ஏற்றுச் செயல்பட்டவர் இவர்.
‘நெஞ்சில் மூண்ட நெருப்புக்குச் சமரசம் ஏதும் கிடையாது’என மாஸ்டர் இராமுண்ணியின் இலட்சியத்தை உயர்த்திப்பிடித்து 2.8.1984ல் ‘தமிழ்நாடு ஆரம்பப் பள்ளி ஆசிரியர் கூட்டணி’ மீண்டும் பயணம் துவங்கியபோது முன்னணித் தளபதியாக் விளங்கியவர் தோழர் மா.ச.முனுசாமி. 1984 முதல் 1990 வரை மாநிலத்துணைச் செயலாளராகவும்,1990 முதல் 1996 வரை மாநிலப்பொருளாள ராகவும், 1996முதல் 2002வரை மாநிலத்தலைவராகவும் இயக்கத்தின் பொறுப்புக் களில் தன்னை ஈடுபடுத்திக்கொண்டு வளமான அனுபவம் செறிந்த தலைவராக மிளிர்ந்தார்.
தோழர் மா.ச.முனுசாமி பற்றி 1977லிலேயே அறிந்திருந்தாலும்.1984 முதல் 2002 வரையான 18 ஆண்டுகள் மாநிலப்பொறுப்புக்களில் நான் அவரோடு இணைந்து இயக்கப்பணிகளை ஆற்றிய நினைவுகளை என்றும் மறக்கமுடியாது.
அவருடனான எனது முதல்அனுபவமே மெய்சிலிர்க்கக் கூடியதாக அமைந்திருந்தது. ‘தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி’யின் மதுராந்தகம் வட்டாரக் கிளையின் செயலாளராக இருந்த தோழர் மா.ச.2.8.1984ல் ‘தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி’யாக ஏன் பயணம் துவங்குகிறோம்?’ என்பதை விளக்கிடவும், தீர்மானமிடவும் தனது வட்டாரப்பொதுக்குழுவைக் கூட்டினார். விளக்கமளிக்க என்னை அழைத்தார். அப்போது தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் செங்கல்பட்டு மாவட்டச்செயலாளரும், மாநிலப்பொருளாளருமான திரு.து.இளங்கோ ‘இது எனது கிளை. இதில் அப்படி ஒரு தீர்மானமிட நான் அனுமதிக்க முடியாது’என்றார். அப்போது தோழர் மா.ச.விடுத்த உணர்வுபூர்வமான அறைகூவலை ஏற்று 300க்கும் மேற்பட்ட ஒட்டுமொத்த ஆசிர்யச் சகோதரர்களும், சகோதரிகளும் அவர்பின் அணிவகுத்து எதிரே இருந்த கட்டடத்தில் கூடித் தங்களைத் ‘தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் மதுராந்தகம் வட்டாரக்கிளையாக அறிவித் தனர். மாநிலஅமைப்பின் சார்பில் இக்கூட்டத்தில் பங்கேற்று அவர்களை வரவேற்றுப் பாராட்டினேன்.
பின்னர் மதுராந்தகம் வட்டாரக்கிளையின் அலுவலகம் திறப்புவிழாவிலும், மாவட்டக்கிளையின் சொந்த அலுவலகக் கட்டடத்திறப்பு விழாவிலும், இயக்கப் பயிற்சி முகாம்களிலும் பங்கேற்றேன். செங்கை மாவட்டச்செயலாளராக மாநிலஇணைச்செயலாளராக ,மாநிலப்பொருளாளராக, மாநில்த்தலைவராக அவருடன் மாநிலம் முழுவதும், அகில இந்திய அளவிலும் இணைந்து பணியாற்றிய அனுபவம் சுகமானது,2001ல் அவர் ஓய்வுபெற்றபின்னரும் கடந்த 12 ஆண்டுகளாக இயக்கச் செயல்பாடுகளில் அனுபவச் செறிவோடு வழிகாட்டி வருகிறார்.
தமிழ்நாட்டின் மூத்தஅரசியல் மற்றும் தொழிற்சங்கத் தலைவர்களோடு நெருக்கமான தொடர்பும்,அனைத்து ஆசிரியர் இயக்கத்தலைவர்களோடு நட்பும் கொண்டு தனது பார்வையை விசால்மாக்கிக் கொண்டவர் இவர். இவரோடு பழகும் அனைவரும் இவரது அன்பால், குழந்தை உள்ளம் கொண்ட கள்ளமில்லாப் பேச்சால், கண்டிப்பால் கவரப்பட்டே தீர்வார்கள். இவ்வளவு ஆழமான தனது அனுபவங்களில் சிலவற்றை ‘ஆசிரியர் கூட்டணியின் வரலாற்றில் எனது நினைவலைகள்’ என 22 தலைப்புக்களில் இந்த நூலில் நம்மோடு பகிர்ந்து கொண்டுள்ளார்.
தனிமனித பராக்கிரமங்கள்,படையெடுப்புக்கள், பட்டாபிஷேகங்களே தேசத்தின் வரலாறு எனத் தவறாகக் கற்பிக்கப்பட்டவர்கள் நாம். இன்றும்கூட அவ்வாறே கற்றுக் கொடுக்க நிர்ப்பந்திக்கப் பட்டிருப்பவர்களும் நாம். அதனால்தானோ என்னவோ இயக்க வரலாறு என்னும்போதுகூடத் தனிமனிதர்களின் செயல்பாடுகளாகவே பார்க்கின்ற பார்வை தமிழ்நாட்டில்!
இதில் ஒருதிருப்பத்தை ஏற்படுத்தி ‘வர்க்கப் போராட்டங்களின் வரலாறுதான் சமுதாய வளர்ச்சியின் வரலாறு’ என்று புரிந்துகொண்டவர்கள் நாம்.’ஆசிரியர் இயக்க வரலாறும் வர்க்கப் போராட்டங்களின் வரலாறே’ என்று புரியவைத்துக் கொண்டிருப் பவர்களும் நாம்தான். அப்படியானால், வரலாற்றில் தனிநபர் வகிக்கும் பாத்திரத்தை நாம் நிராகரிக்கிறோமா? இல்லை.சமுதாயத்தை விஞ்ஞானக் கண்ணோட்டத்தோடு அணுகி, அதை முன்னெடுத்துச் செல்வதில் – அல்லது, பழமைவாதத்தில் தோய்ந்து சற்றுத் தேங்கவைப்பதில் தனி நபர்களுக்குக் குறிப்பிடத்தக்க ஒருபங்கு உண்டு.
இந்தப்பங்கை அல்லது இவர்களின் பாத்திரத்தை ஆக்கபூர்வமான விமர்சனக் கண்ணோட்டத்தில் பரிசீலித்து, சமுதாயத்தை முன்னெடுத்துச் செல்ல உதவும் அனுபவங்களை நாம் வரித்துக்கொள்கிறோம். தேக்கமடையச் செய்யும் அல்லது பின்னோக்கி நகர்த்த முயற்சிக்கும் பழமைவாதங்களில் நாம் எச்சரிக்கை கொள்கிறோம். இந்த ஞானத்தின் அடிப்படையில் ஆசிரியர் சமுதாயம் முன்னேறிச் செல்வதற்குத் தடையாக உள்ள அம்சங்களைக் கண்டறிகிறோம்: அம்பலப் படுத்துகிறோம்: நிராகரிக்கிறோம்.
கல்விநலனும், ஆசிரியர்நலனும் இந்தச் சமுதாயத்தின் ஒட்டுமொத்த நலன்களோடு பின்னிப் பிணைந்தவை என்பதை நன்கு உணர்ந்தவர்கள் நாம். அதனால்தான் நமது நலன்களை மட்டும் தனிமைப்படுத்திப் பாதுகாத்துக்கொள்ள முடியும் என்ற தவறான நம்பிக்கை நம்மிடம் இல்லை. மத்திய, மாநில அரசுகளின் சமூக,அரசியல், பொருளா தார,கல்விக்கொள்கைகள் நாட்டின் சுதந்திரத்திற்கும், இறையாண்மைக்கும், மக்கள் நலன்களுக்கும் பேராபத்துக்களாக மாறும்போது அதைமுறியடிக்கும் போராட்டத்தில் மதசார்பற்ற, ஜனநாயக சக்திகளோடு கரம் உயர்த்தி நிற்கிறோம்.
இந்த அடிச்சுவடுகளில் இயக்கம் மேற்கொண்ட பயண அனுபவங்கள் சிலவற்றை யும், அவை நமக்குக் கற்றுத்தந்த படிப்பினைகளையும் தோழர்.மா.ச.முனுசாமி தனது ‘ஆசிரியர் கூட்டணி வரலாற்றில் எனதுநினைவலைகள்’ எனத்தொகுத்து நம்முன்னே படைத்துள்ளார்.
‘எல்லாருக்கும் கல்வி; எல்லாருக்கும் வேலை: எல்லாருக்கும் எல்லாமும்’ என்ற இலட்சிய முழக்கங்களோடு இதோ தோழர் மா.ச.முனுசாமியின் நூல் மட்டுமல்ல; இந்த உயரிய நோக்கங்கள் நிறைவேறுவதும் இனி உங்கள் கரங்களில்
.
ஊத்துக்குளி.ஆர்.எஸ். தோழமையுடன்,
9.1.2014
செ.நடேசன்
முன்னாள் பொதுச்செயலாளர்
தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி

1/02/2014

அறைகூவல்

தமிழ்நாட்டில் வேறு எந்தமாநிலத்திலும் இல்லாத எண்ணிக்கையில் ஆசிரியர் சங்கங்கள் உள்ளன. கல்லூரியில் படித்த பட்டதாரி, அஞ்சல்வழியில் படித்த பட்டதாரி, பதவிஉயர்வுபெற்ற பட்டதாரி, தொகுப்பு ஊதியத்தில் பணிபுரிந்த பட்டதாரி, அரசு ஆணை தேதியிட்ட ஆசிரியர் சங்கம், ஒரே நிலை, தகுதியில் பல ஆசிரியர் சங்கங்கள் என எண்ணிக்கை விரிகிறது. ஜேக்டீ போராட்டம் நடைபெற்றபோது இத்தனை சங்கங்களா? என அறிய முடிந்தது. ‘சங்கம் வளர்த்த தமிழ்நாடு’ என்பதை இப்படியும் பொருள்கொள்ள முடியும் என்றபோது வியப்பு ஏற்பட்டது!

கேரள வழிகாட்டுதல்

தென்னிந்தியாவில் ஆசிரியர் சங்கங்களுக்கான தோற்றுவாய் கேரளமாநிலம் என்பது வரலாறு. 1952க்கு முன்வரை மத்திய அரசில் மட்டுமல்ல: அனைத்து மாநிலங்களிலும் காங்கிரஸ் கட்சியே ஆட்சிபுரிந்து வந்தது. 1952 தேர்தலில் காங்கிரஸ் அல்லாத கம்யூனிஸ்ட் கட்சி ஆட்சி கேரளாவில் அமைந்தது. இவ்வாறு தேசத்திற்குப் பலவகையில் எடுத்துக்காட்டாக விளங்கியது கேரள மாநிலம்.

கேரள மாநிலத்தில் ஒரு இலட்சத்திற்கும் அதிகமான ஆசிரியர்களை உறுப்பினர்களாகக்கொண்டு ‘கேரள அரசு ஆசிரியர் சங்கம்’ (KERALA GOVERNMENT SCHOOL TEACHERS’ ASSOCIATION.KGTA) செயல்பட்டுவந்தது. இதே வலுவுடன் ‘கேரளா தனியார்பள்ளி ஆசிரியர் சங்கம்’ (KERALA PPRIVATE SCHOOL TEACHERS’ ASSOCIATION- KPTA ) செயல்பட்டுவந்தது. இந்த இரண்டு பெரிய ஆசிரியர் சங்கங்களும் ‘கல்வி நலன், சமுதாய நலன்’ காத்திட ஒரேசங்கமாக இணைந்து ‘கேரளா பள்ளி ஆசிரியர் சங்கம்’(KERALA SCHOOL TEACHERS’ ASSOCIATION – KSTA ) என ஒன்றுபட்டன. ஒற்றுமையும், எண்ணிக்கையும் இவர்களுக்கு மகத்தான சக்தியை அளித்தன. போராட்டங்களின்போது ஆசிரியர்களைப் பிரித்தாளும் அரசு மற்றும் தனியார் சூழ்ச்சிகளுக்கு இரையாகாமல் மாபெரும் வெற்றிகளைக் குவித்து வருகிறார்கள். இதனை ஒரு வழிகாட்டுதலாக ஏற்றுக்கொள்ளும் சிந்தனை நமக்கு வரவேண்டும்.

2.8.84க்கு முன்னும், பின்னும்

கி.மு.-கி.பி. என வரலாறுகளில் பேசப்படுவதுபோல், ஆசிரியர் சங்க வரலாறும் 2.8.84க்கு முன்- பின் எனப்பேசப்படுகிறது. 1984க்குப்பிறகே ஆசிரியர்களிடையே போராட்ட எழுச்சி மேம்பட்டது. கல்விநலன் சார்ந்த கோரிக்கைகள். ஆசிரியர்நலன் சார்ந்த கோரிக்கைகள், சமுதாயநலன் சார்ந்த கோரிக்கைகள் முன்வைக்கப்படுவதிலும், அவற்றை வென்றெடுக்க வியூகங்கள் வகுப்பதிலும் புதிய பாதை அமைக்கப்பட்டது. பள்ளியின் வருகைப்பதிவேட்டில் பெயர் வரிசைக்கே தங்களின் சிந்தனை களைச் செலவிட்ட ஆசிரியர்களை ஒற்றுமைப்பதாகையின்கீழ், ஜேக்டீ, ஜேக்டீ -பேரமைப்பு என்ற ஒரேகுடையின்கீழ் அணிதிரட்டியபோது அதுவரை நினைத்தும்பார்த்திராத சாதனைகள் நிகழ்ந்தன.

84 ஆசிரியர் கூட்டணி வரலாற்றில்

‘இதுவரை நாம்பெற்ற வெற்றிகள் எல்லாம் யாருடைய கருணையினாலும், தயவினாலும் அல்ல: நம்முடைய ஒற்றுமையால்: போராட்டங்களால்: தியாகங்களால் தான்.’ இவற்றோடு நாம் திருப்தி அடைந்துவிடப்போகிறோமா? இல்லை. ‘மரம் சும்மா இருந்தாலும் காற்று அதைச் சும்மா இருக்க விடப்போவதில்லை!’

ஆம். இதோ மத்திய மாநில அரசுகளின் கல்விநலன், மாணவர்நலன், ஆசிரியர்நலன், மக்கள் நலன்களுக்கு எதிரான தனியார்மயம், தாராளமயம், உலக்மயம் என்ற நாசகரக்கொள்கைகள் நாம் போராடிப்பெற்ற வெற்றிகளைப் பறித்துக்கொள்ளத் துடிக்கின்றன. அதுமட்டுமா? புதிய அச்சுறுத்தல் களும் நம்மை நோக்கி ஏவிவிடப்படுகின்றன.
@. மத்திய அரசு பழைய ஓய்வூதித்திட்டத்திற்கு மாறாக தன்பங்கேற்பு ஓய்வூதியத்தை நடைமுறைப்படுத்தும் சட்டத்தை பி.ஜே.பி. ஆதரவுடன் பாராளுமன்றத்தில் நிறைவேற்றிவிட்டது.
@. PUBLIC PRIVATE PARTNERSHIP என்று மத்தியஅரசு ராஷ்ட்ரிய வித்யாலயா மாதிரிப்பள்ளிகளை மாவட்டங்கள்தோறும் தனியார் துவங்கிக் கொள்ளைஅடிக்க வழிவகுத்துக் கல்வியை வணிகமய மாக்கி வருகிறது.
@. தாராளமயம், தனியார்மயம், உலகமயக் கொள்கைகளால் கொள்ளை இலாபங்களைத் தனியார் ஈட்டவும், உழைக்கும் மக்கள் விலைவாசி உயர்வால் தவிக்கவும் வழியமைத்துள்ளது.
@. ஊதியக்குழுக்களின் பரிந்துரைப்படி அகவிலைப்படியில் 50%ஐ அகவிலை ஊதியமாக அறிவிக்க மறுத்துவருகிறது.
@. பெட்ரோல், டீசல் விலை னிர்ணயத்தை அரசின் கட்டுப்பாட்டில் கொண்டுவர மறுக்கிறது. இதனால், வரலாறு காணாத விலைஉயர்வால் மக்களைத் தவிக்கவிடுகிறது.
@. இலஞ்சம், ஊழல் நடவடிக்கைகளைத் தயக்கமின்றி அனுமதித்து வருகிறது.

#. தமிழக அரசோ இடைநிலை ஆசிரியர் சாதாரணநிலைக்கு மத்திய அரசில் அளிக்கப்படும் ஊதியத்தை அளிக்காமல், மத்திய அரசுக்கு இணையான ஊதியம் என்பதைக் கேலிக்குறி ஆக்குகிறது.
#. தேர்தலின்போதும், வெற்றிபெற்று ஆட்சியமைத்தபோதும் 2004க்குப்பின் நியமனம்பெற்றோர் அனைவருக்கும் பழைய ஓய்வூதியத் திட்டமே தொடரும் என அளித்த உறுதிமொழியை அரசு ஆணை பிறப்பித்து நடைமுறைப்படுத்தாமல் காலம்கடத்திவருகிறது.
#. அரசுப்பள்ளிகளில் ஆங்கிலவழிக்கல்வியை நடைமுறைப்படுத்தித் தமிழ்மொழியையும், தமிழ்ப் பண்பாட்டையும் அழித்தொழிக்கும் சீரழிவுவேலைகளைச் செய்துவருகிறது.

- இவ்வாறு பட்டியல் தொடர்கதையாக நீண்டுகொண்டே இருக்கிறது.

‘ஒற்றுமை நீங்கிடில் அனைவர்க்கும் தாழ்வு’ என்பதை 1970 முதல் 1984 வரை அனுபவூர்வமாக உணர்ந்து இந்தியாவிலேயே மிகக்குறைந்த ஊதியம் பெற்றவர்கள் நாம்.
‘ஒன்றுபட்டால் உண்டுவாழ்வு’ என்பதை 1985 முதல் ஜேக்டீ, ஜேக்டீ-பேரமைப்பு, டிட்டோஜேக் போராட்டங்கள் மூலம் இந்திய நாடே வியக்கும்வண்ணம் சாதித்துக்காட்டியவர்களும் நாம்தான்.

மா.ச.முனுசாமி 85

1985 முதல் பொங்கிப்பிரவாகம் கொண்ட அந்த மாபெரும் எழுச்சியும், ஒற்றுமையும் துறைவாரி- பிரிவுவாரி – சங்கவாரி உணர்வுகளால் நீறுபூத்த நெருப்பாகிவிடுவது ஒட்டுமொத்த ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள் நலன்களுக்கு ஏற்றதல்ல. தாழ்வுற்று வறுமைமிஞ்சி, விடுதலை தவறிக்கெட்ட அந்த நாட்கள் மீண்டும் தமிழ்நாட்டில் நம்வாழ்வில் அனுமதிக்கப்பட முடியாதவை. சின்னச் சின்ன நூல்கண்டுகளில் நாம் சிறைப்பட்டிருப்பது நமக்குப் பெருமை சேர்க்காது.

கேரளம் காட்டிய பாதையில் நாம் அனைவரும் ஒரே சங்கமாகச் சங்கமிப்பது இன்று இங்கே சாத்தியமில்லாமல் போகலாம். அது ஒரு நீண்டகால இலட்சியம். அதற்கான தருணம் வரும்போது அதைப்பற்றிச் சிந்திப்போம்.

அதுவரை?

ஆரம்பக்கல்வியின், அதில் பணியாற்றும் ஆசிரியர்களின் நலன்கள் பாதுகாக்கப்பட ‘டிட்டோஜேக்’ ஆகவும், ஆரம்பக்கல்வி முதல் கல்லூரி-பல்கலைக் கல்விவரை அனைவரின் நலன்களும் பாதுகாக்கப்பட ‘ஜேக்டீ’ ஆகவும், அனைத்து ஆசிரியர்கள், அரசு ஊழியர்களின் நலன்களுக்காக ‘ஜேக்டீ-பேரமைப்பாகவும் சிலிர்த்தெழுவோம். மீண்டும் அந்த மகத்தான ஒற்றுமையைப் பேணிக் காக்கச் சபதமேற்போம்.

சாம்பலிலிருந்தும் உயிர்த்தெழுகின்ற
ஃபீனிக்ஸ்’ பறவைபோல்
மீண்டும் உயிர்த்தெழுவோம்!

நமது இலட்சியம் உயர்வானது.- அதை அடைந்தே தீருவோம்.
நமது பாதை நீளமானது - அதைக் கடந்தே தீருவோம்.
நமது பயணம் உறுதியானது!
அதுபோல்வே
நமது வெற்றியும் நிச்சயமானது!!

தோழமையுடன்,
மா.ச.முனுசாமி

12/23/2013

அரசுப்பள்ளிகளில் அரைகுறையாய் அறிமுகப்படுத்தப்படும் ஆங்கிலவழி, ஏழைத் தமிழ் மாணவர்களின் பரிதாபநிலை

நடப்புக் கல்வியாண்டு முதல் அரசுப் பள்ளிகளில் முதல்வகுப்பில் ஆங்கிலவழி தொடங்கப்பட்டுள்ளது. அரசுப் பள்ளிகளில் தமிழ்வழி வகுப்புகளில் மாணவர் சேர்க்கை குறைந்து விட்டதால் பல இடங்களில் பள்ளிகளை மூட வேண்டிய நிலை ஏற்பட்டிருப்பதால் தனியார் ஆங்கிலப் பள்ளிகளில் சேர்க்கும் பெற்றோரை ஈர்க்கும் வகையில் அரசுப் பள்ளிகளில் ஆங்கிலவழி துவக்கப்பட்டுள்ளதாக தமிழக அரசு கூறுகிறது. ஆனால் அதன் தரம் குறித்து யாரும் அக்கறை கொண்டதாக தெரியவில்லை. 


தமிழ்நாட்டின் கல்வியாளர்கள், அறிவுஜீவிகள், படைப்பாளிகள், எழுத்தாளர்களும்கூட அதுபற்றிக் கவலைப்படவில்லை என்பதுதான் தமிழ்நாட்டின் துரதிர்ஷ்டம். அவர்கள் கவலைப்படாதது மட்டுமல்ல, ஏழைத் தமிழ் மாணவர்களுக்கு எதிராகவும் பேச ஆரம்பித்து விட்டார்கள் என்பதுதான் மிகவும் வேதனை தரக்கூடியது. கடலூர் மாவட்டத்தில், அனைத்துப் பள்ளிகளிலும் பெற்றோர்கள் அனைத்து மாணவர்களையும் ஆங்கிலவழி வகுப்பில் சேர்த்துவிட்டனர்; தமிழ்வழி வகுப்புகளில் ஒருவர்கூடச் சேரவில்லை என்ற செய்திக்கு இயக்குனர் தங்கர்பச்சான் தொடங்கி மார்க்சிஸ்ட் எம்.எல்.ஏ பாலகிருஷ்ணன் வரை காட்டிய எதிர்வினையே இதற்குச் சான்று. இதனால் தமிழே அழிந்துவிடும் என்றும் ஆங்கிலத்தை தமிழ் மக்கள்மீது திணிக்கக் கூடாது என்றும் தமிழைக் காப்பாற்ற அனைத்துப் பள்ளிகளிலும் ஆரம்பக்கல்வி தமிழ்வழியில் மட்டுமே கற்றுத்தர வேண்டுமென்று கட்டாயமாக்க வேண்டும் என்றும் அவர்கள் கூறினர்.

உண்மையில் இது தமிழ்மொழியின் பிரச்னையல்ல, தமிழ் மக்களின் வாழ்க்கைப் பிரச்னை. ஏழைத் தமிழ் மாணவர்களின் கல்விப் பிரச்னையை ஒரு மொழிப்பிரச்னை போல் ஆக்கி, அவரவர் உணர்ச்சிப் பிழம்பாய்க் கொந்தளிக்கிறார்களேயொழிய, அந்த மாணவர்களின் எதிர்காலம் பற்றிய அக்கறை எவருக்குமே இல்லை என்றுதான் சொல்லவேண்டும்.

நாம் விரும்பினாலும் விரும்பாவிட்டாலும் இங்கே இரண்டுவகையான கல்விமுறை நிலைபெற்றுவிட்டது. ஒன்று உலகளாவிய வேலைவாய்ப்பை வழங்கக்கூடிய ஆங்கிலவழிக் கல்வி. மற்றொன்று உள்ளுரில்கூட வேலைவாய்ப்புக்கு உத்தரவாதமற்ற தமிழ்வழிக் கல்வி. இவற்றில் முன்னது தனியார் கையில் வியாபாரச் சரக்காக அதிக விலைக்கு விற்கப்படுகிறது. அதை அத்தனை விலைகொடுத்து வாங்கமுடிந்த வசதிபடைத்த பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளை தனியார் ஆங்கிலவழிப் பள்ளிகளில் சேர்க்கின்றனர். அத்தனை பணவசதி இல்லாவிட்டாலும்கூட பெரும்பாலான நடுத்தர வர்க்கப் பெற்றோர்கள் தங்கள் வாயையும் வயிற்றையும் சுருக்கிக் கொண்டாவது, தங்களால் திரட்ட முடிந்த பணத்திற்கேற்ற குறைந்த விலை (குறைந்த கட்டண) ஆங்கிலவழிப் பள்ளிகளில் சேர்க்கின்றனர்.

அதற்கும் வழியில்லாத ஏழைப் பெற்றோர்களே தங்களது இயலாமையை நொந்து கொண்டு அரசுப் பள்ளிகளில் தமிழ்வழியில் படிக்க வைத்து வருகின்றனர். விலையில்லா அரிசி, விலையில்லா மடிக்கணிணி, விலையில்லா டி.வி, மிக்ஸி, கிரைண்டர் கொடுத்த அரசாங்கம் அந்த வரிசையில் விலையில்லா ஆங்கிலவழிக் கல்வி கொடுத்தவுடன், உடனடியாக அவர்கள் தங்கள் பிள்ளைகளை அதில் சேர்த்துவிட்டனர். இதில் தமிழ்மொழி அவர்களிடமிருந்து பிடுங்கப்படவும் இல்லை, ஆங்கிலமொழி திணிக்கப்படவும் இல்லை. தம்பிள்ளைகளும் நாலு பேரைப்போல படித்து நல்ல வேலைக்குப் போகவேண்டும் என்ற ஏழைப் பெற்றோர்களின் நியாயமான ஆசையும் சுயவிருப்பமுமே இதில் அடங்கியிருக்கின்றன.

பெற்றோர்கள், எப்பாடுபட்டாவது தங்கள் பிள்ளைகளுக்கு ஆங்கிலவழிக் கல்வி தரவேண்டும் என்று பாடாய்ப்படுவது ஆங்கில மோகத்தினாலோ தமிழ்மீதுள்ள வெறுப்பினாலோ அல்ல. போட்டிகள் நிறைந்த இச்சமூகத்தில் தங்கள் பிள்ளைகளுக்கு வேலைவாய்ப்பைப் பெற்றுத்தரக்கூடிய கல்வியை வழங்க வேண்டும் என்ற பொறுப்புணர்வினால்தான். பெற்றோரின் இந்தப் பொறுப்புணர்வை ஆங்கில மோகம் என்று கொச்சைப்படுத்தி அவர்களைக் குற்றவுணர்வுக்கு ஆளாக்குவது சமூகப் பொறுப்புள்ளவர்கள் செய்யக்கூடிய செயல் அல்ல.

இன்றைய உலகமயச்சூழலில் உள்ளுர்த் தொழில்களும்கூட உலகத் தொழில்களுடன் இணைக்கப்பட்டுள்ளன. எனவே உலக இணைப்பு மொழியான ஆங்கிலத்தின்வழி கற்ற மாணவர்களுக்கே நல்ல வேலைவாய்ப்புகள் கிடைக்கின்றன. அத்தகைய வாய்ப்புகள், ஏழையாகப் பிறந்த ஒரே குற்றத்திற்காக ஏழைத் தமிழ் மாணவர்களுக்கு மறுக்கப்படக்கூடாது என்பதுதான் உண்மையான சமூகநீதியாகும்.

அரசுப் பள்ளிகளில் ஆங்கிலவழி தொடங்கப்பட்டுள்ளதால் தமிழ் ஒருபோதும் அழியப் போவதில்லை. தமிழின் ஆயுள் அத்தனை அற்ப சொற்பமானது அல்ல. மத்திய அரசு தமிழ்நாட்டில் ஆங்கிலத்திற்குப் பதிலாக ஹிந்தியை திணிக்க முயன்ற போது ஆங்கிலம் வேண்டும் என்று ஒரு மாபெரும் மொழிப்போர் நடத்தி ஆங்கிலத்தை நாம் இங்கே தக்க வைத்துக் கொண்டதால் தமிழ் ஒன்றும் அழிந்துவிடவில்லையே. இந்த அரை நூற்றாண்டில் தமிழின் சீரிளமை கூடித்தானே இருக்கிறது.

எனவே, தமிழ்மொழி அழிந்துவிடுமே என்பதைவிட, அரசுப்பள்ளிகளின் இன்றைய நிலையிலேயே அங்கு ஆங்கிலவழி துவங்கப்பட்டுள்ளதால் அதில் பயிலும் ஏழை மாணவர்கள், தனியார் ஆங்கிலப் பள்ளியில் பயிலும் மாணவர்களுடன் சரிசமமாக போட்டியிட்டு வேலைவாய்ப்புகளை வென்றுவிட முடியுமா என்பதே நமது கவலையாக இருக்க முடியும். ஏனெனில் அரசுப் பள்ளிகளில் ஆங்கிலவழிப் பிரிவுக்கென தகுதிவாய்ந்த ஆசிரியர்கள் தனியே நியமிக்கப்படவில்லை. ஏற்கனவே இருந்த பழைய ஆசிரியர்களைக் கொண்டுதான் ஆங்கிலவழிப் பாடங்களும் நடத்தப்படப் போகின்றன. இதனால் ஒருமொழி என்ற அடிப்படையில், ஆங்கிலத்தையும் முறையாகக் கற்காமல் தமிழையும் முறையாகக் கற்காமல் மாணவர்கள் வெளியேவர வாய்ப்புகள் அதிகம் உள்ளன. அரசுப் பள்ளிகளில் அடிப்பிசகாமல் கடைபிடிக்கப்பட்டு வரும் ஒரே அரசாணையாகிய “எட்டாம் வகுப்புவரை அனைவரும் தேர்ச்சி” என்ற விதி இந்த அவலநிலைக்கான வாய்ப்பை நிச்சயம் உறுதி செய்யும்.

ஏற்கனவே ஏபிஎல் முறை என்றும் எஸ்பிஎல் முறை என்றும் பல்வேறு குழப்பங்களுக்கு இடையில் நடந்து கொண்டிருக்கும் அரசுப் பள்ளிகளில் இந்த அரைகுறை ஆங்கிலவழிக் கல்வியும் சேர்ந்தால் அந்த ஏழை மாணவர்களின் எதிர்காலம் என்னவாகும் என்ற கேள்வியே நம்மை நிலைகுலையச் செய்கிறது.

எனவே, நமது தமிழ்ச் சமூகத்தின் பெரும்பான்மையினராகிய ஏழைத் தமிழ் மாணவர்களின் எதிர்காலம் குறித்து உண்மையில் அக்கறை கொண்டுள்ள கல்வியாளர்கள், அறிவுஜீவிகள், படைப்பாளிகள், எழுத்தாளர்களின் இன்றைய உடனடிக் கடமை, அரசுப் பள்ளிகளில் தொடங்கப்பட்டுள்ள ஆங்கிலவழிப் பள்ளியின் அனைத்துப்பாட ஆசிரியர்களுக்கும் தனியே தகுதிகள் வரையறுக்கப்பட்டு, அத்தகுதிகளின்படி இப்பணியிடங்களுக்கென்று தனியாக ஆசிரியர் தேர்வு நடத்தப்பட்டு பணியமர்த்தப்பட வேண்டும் என்று தமிழக அரசை வலியுறுத்துவதே ஆகும்.

- த.சிவக்குமார் ( thasivakumar@gmail.com)

11/23/2013

ஏமாற்றம் தரும் டிட்டோ ஜாக் தீர்மானங்கள்


ஆசிரியர் இயக்கங்கள் ஒன்றாக இணைந்து போராட வேண்டும் என விரும்பிய ஆயிரக்கணக்கான ஆசிரியர்களுள் நானும் ஒருவன். இந்த விருப்பம் நிறைவேறியதில் அளவில்லா மகிழ்ச்சி அடைந்தேன். இரண்டு அம்ச கோரிக்கையை மையப்படுத்தி ஒரு மிகப்பெரிய போராட்டம் நிகழப்போகிறது என்ற அளவில்லா சந்தோசத்துடன் டிட்டோ ஜாக் கூட்டம் 9ந் தேதி நிறைவடைந்தது. 20.11.2013 ஆவலுடன் காத்திருக்கிறேன்..... முதல் அமர்வில் மாவட்ட அளவிலான அமைப்பை ஏற்படுத்துவது என முடிவாற்றப்பட்ட என்ற செய்தி சரியான திசையை நோக்கி டிட்டோ ஜாக் நகர்கிறது என்பது புரிந்தது. ஆனால் மாலையில் நடந்த இரண்டாம் அமர்வில் இரண்டு அம்ச கோரிக்கைகளுக்கு பதிலாக 7 அம்ச கோரிக்கை என்பது என்னை மிகவும் மன உளைச்சலுக்கு ஆளாக்கி விட்டது. இதற்கு ஆயிரம் காரணங்கள் சொன்னாலும் அதை ஏற்க மனது வரவில்லை. அனைவருக்கும் ஏற்ற கோரிக்கை இருந்தால்தான் எல்லாரையும் ஈர்க்க முடியும் என்பது ஏற்றுக்கொள்ள இயலவில்லை. சங்கவாதி என்பவன் யாருக்கு பாதிப்போ அவனுக்காக களத்தில் இறங்க வேண்டும் என்பதை இலட்சியமாக கொள்ள வேண்டும். அதற்காக அனைவரையும் தயார்படுத்த வேண்டும். இந்த 7அம்ச கோரிக்கைகளில் மிகப்பெரிய ஆபத்து நிறைந்துள்ளது. அரசாங்கம் இந்த கோரிக்கைகளில் எளிதான இரண்டு கோரிக்கைகளை நிறைவேற்றி தன்னுடைய ஜனநாயக கடமையை முடித்துக்கொண்டால் இந்த 7 இயக்கங்களில் பாதி போராட்டக்களத்தில் கடைசி வரை நிக்குமா?. நான் இந்த வினாவை ஒரு  ஆசிரியராக இருந்து கேட்கின்றேன். இடைநிலை ஆசிரியர்களின் வாழ்வாதர கோரிக்கை கிடப்பில் போடப்பட்டால் என்ன செய்வது? ஏன் இந்த நிலை மாற்றம்.  இயக்க தலைவர்கள் சற்று சிந்திக்க பணிந்து வேண்டுகிறேன். இது இயக்க தலைமைகளை விமர்சதிப்பதாக எடுத்துக்கொள்ளக்கூடாது. எண்ணற்ற இடைநிலை ஆசிரியர்களின் மனதில் தோன்றுகின்ற வினாவாகத்தான் நான் இதை பார்க்கின்றேன். இன்றை நிலையில் களத்தில் சூடாக இருக்கின்ற இடைநிலை ஆசிரியர்களின் ஊதியமாற்ற பிரச்சனைளை கையிலெடுத்து போரட்டக்களத்தில் வீராவேசத்துடன் போராடினால் நிச்சயம் நாம் வென்றெடுக்கலாம். அதை விடுத்து மற்ற கோரிக்கைகளை இத்துடன் இனைத்து போராடுவது என்பது முதன்மை கோரிக்கையின் வலிமை ஆளும் அரசுக்கு புரியாமல் போய்விடும். 7 அம்ச கோரிக்கை என்பது இடைநிலை ஆசிரயர்களை மீண்டும் ஏமாற்ற களத்திற்கு இட்டுச்செல்லும் அபாயம் உள்ளது.  என்னுடைய கருத்தை சொல்வதற்று எனக்கு உரிமை உண்டு என்பதால் இதை பதிவிடுகிறேன். எங்கள் இயக்க பொதுச்செயலாளருக்கும் என்னுடைய அதிருப்தியை அலைபேசி வாயிலாக பதிவு செய்துள்ளேன். இது என்னுடைய தனிப்பட்ட பதிவு மட்டுமே. இது எந்த விதத்திலும் என்னுடைய மாவட்டக்கிளையை கட்டுப்படுத்தாது. எது எப்படி இருந்தாலும் என் இயக்க தலைமை எனக்கு இடும் கட்டளையை என் சிரமேற்கொண்டு நிறைவேற்ற தயாராகவே உள்ளேன். வருகிற திசம்பர் 4ந் தேதி மாவட்ட அமைப்பு கூட்டத்தை எதிர்நோக்கி என் கவனத்தை திசை திருப்பியுள்ளேன். எங்கள் மாவட்டத்திற்கு மாவட்ட தொடர்பாளாராக நியமிக்கப்பட்டுள்ள தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் மாவட்ட செயலாளர் அவர்களோடு இணைந்து களப்பணியாற்றும் நாளை ஆவலுடன் எதிர் நோக்கி உள்ளேன். கோரிக்கைகள் வென்றெடுக்கு கோடிக்கைகள் இணையட்டும். இறுதி வெற்றி நமதே!
என்றும் இயக்கப்பணியில்........
முத்துப்பாண்டியன்.ஆ
மாவட்டத்தலைவர்@TNPTF

11/08/2013

தடம் மாறும் மாணவர் சமுதாயம். தட்டிக்கொடுக்கும் ஊடகங்கள்.

இன்றைய சூழலில் மாணவர் சமுதாயம் தன்னுடைய நிலையில் இருந்து தடம் மாறும் போக்கு அதிகரித்து வருகிறது. மாணவர்களுக்கு வழங்கப்பட்டுள்ள சட்ட பாதுகாப்பு அவர்களை  தவறான விசயங்களுக்கு பயன்படுத்த  ஊக்குவிக்கிறது. இதனால் ஆசிரியர்களின் பணிப்பாதுகாப்பு என்பது கேள்வி குறியாகியுள்ளது. நேற்று மதுரை மாவட்டம் பொய்கைகாரன்பட்டி நடுநிலைப்பள்ளியில் 7 மாணவிகள் வாழைப்பழத்தில் பூச்சி மருந்து சாப்பிட்டு தற்கொலைக்கு முயன்றது என்பது அவற்களின் சகிப்பு தன்மையற்ற போக்கையே காட்டுகிறது. ஏன் படிக்கவில்லை? என்ற வினாவைக்கூட ஒரு ஆசிரியரால் எழுப்ப இயலவில்லையென்றால் அந்த மாணவர்களை எப்படி முன்னேற்றுவது. இங்கே யார் தப்பு செய்கிறார்கள் என்பதை ஆராய வேண்டும். ஆசிரியர்க்கு எந்த சுததந்திரத்தையும் கொடுக்காமல் தேர்வு முடிவு மட்டும் உயர்ந்த நிலையில் வேண்டும் என்பது எவ்விதத்தில் நியாயம். மாணவர்களின் நலனில் நாட்ட்ம் கொண்டு ஆசிரியர்கள் கண்டித்தால் அவர்களை பழி வாங்கும் நோக்கோடு மாணவர் சமுதாயம் களம் இறங்கி இருப்பதற்கு ஊடகங்கள் ஒரு பெரிய காரணமாகி விடுகின்றன. ஆசிரியர்களை பழி வாங்கும் நோக்கோடு சில நாளிதழ்கள் சிறிய செய்திகளை பூதாகரமாக வெளியிடுவதால் அதை படிக்கும் மாணவர் சமுதாயம் நாமும் ஆசிரியர்களை மிரட்டலாம் என்ற நினைப்பே மேலோங்கி வருகிறது. சிவகங்கை மாவட்டத்தில் ஒரு  ஒன்றியத்தில் உள்ள  நடுநிலைப்பள்ளியில் மாணவர் ஒருவர் என்னை கண்டித்தால் என் பிணம்  இந்த மரத்தில் நாளை தொங்கும் என எச்சரித்ததாகவும் பின் பள்ளியில் உள்ள ஆசிரியர்கள் அனைவரும் அந்த மாணவனை சமாதனம் செய்ய கெஞ்சியதாகவும் நண்பர்கள் தெரிவித்தனர். மேற்கண்ட நிகழ்வுகளால் ஆசிரியர் சமுதாயம் மாணவர்களுக்கு அஞ்சியே வாழ வேண்டியுள்ளது. இது எதிர்காலத்தில் ஒரு கரடுமுரடான சமுதயாத்தை உருவாக்கி விடுமோ என்ற அச்சம் எமக்கு மேலோங்கி வருகிறது. தற்பொழுது தமிழக அரசு மாணவர்களுக்கு உளவியல் ஆலோசணை மையத்ததை நிறுவ உள்ளது. இது ஒரளவு பயன் கொடுக்கும் என்றாலும் ஊடகங்கள் மாணவர் சமுதாயத்ததை சீரழித்து வருவதை தடுக்க அரசு முயற்சி மேற்கொள்ள வேண்டும். ஊடகங்களும்  மாணவர் சமுதாயத்தை நல்வழி படுத்த உறுதுணை செய்ய வேண்டும். எதிர்கால இந்தியவை உருவாக்கும் சிற்பிகள் சின்ன விசயங்களுக்கு உணர்ச்சிவயப்படாமல் பிரச்சனைகளை கையாள வேண்டும். வகுப்பறைகளில் நீதி போதனா கதைகளை அதிகம் எடுத்துரைக்க வேண்டும். மாணவர்களை மடைமாற்றம் செய்து வலிமையான இந்தியவை உருவாக்க அனைவரும் முயல வேண்டும்.
தோழமையுடன்.......
முத்துப்பாண்டியன்.ஆ
மாவட்டத்தலைவர் TNPTF

11/06/2013

9ந் தேதியையே நோக்கி ஏங்கும் மனம்

வருகிற 9.11.2013 அன்று தொடக்கக்கல்வித்துறையின் கூட்டு நடவடிக்கை குழு தன்னடைய போராட்ட வியூகத்தை வகுக்க நாள் குறிக்கும் நாள். திருமண நாள் குறித்து ஒருவன் அந்த நாளையே நோக்கி ஏங்குவதைப்போல் ஏங்குகிறேன். இடைநிலை ஆசிரியர்களின் ஏங்கம் நீங்க இயக்கம் எடுக்கும் முயற்சிகளுக்கு அனைவரும் துணை நிற்போம். களம் காண தயாராவோம்! தயார் படுத்துவோம். 2800 தர ஊதியத்தில் உள்ள அனைவரையும் பங்கேற்க செய்வோம். தமிழக அரசுக்கு நமது நியாயங்களை புரிய வைப்போம். தரமில்லாமல் போகும் நமது இனத்தை தரமுடன், தன்மானத்துடன் இருக்கச் செய்வோம். அனைத்து இயக்கங்களோடும் இணைந்து களப்பணியாற்றும் நாளை எதிர் நோக்கி
என்றும் இயக்கப்பணியில் .........முத்துப்பாண்டியன்@TNPTF