பக்கங்கள்

இலவச SMS களை உடனுக்குடன் பெற ON TNPTFSVG அல்லது ON TNPTFMuthupandian என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு அனுப்பி இலவச குறுந்தகவல்களை(SMS) பெறுங்கள். DND (Do NOT Disturb) சர்வீஸ்ல் உள்ள எண்கள் அதனை(DND) நீக்கிய பிறகே இச்சேவையை பெறமுடியும். plz call 1909

Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

1/02/2014

அறைகூவல்

தமிழ்நாட்டில் வேறு எந்தமாநிலத்திலும் இல்லாத எண்ணிக்கையில் ஆசிரியர் சங்கங்கள் உள்ளன. கல்லூரியில் படித்த பட்டதாரி, அஞ்சல்வழியில் படித்த பட்டதாரி, பதவிஉயர்வுபெற்ற பட்டதாரி, தொகுப்பு ஊதியத்தில் பணிபுரிந்த பட்டதாரி, அரசு ஆணை தேதியிட்ட ஆசிரியர் சங்கம், ஒரே நிலை, தகுதியில் பல ஆசிரியர் சங்கங்கள் என எண்ணிக்கை விரிகிறது. ஜேக்டீ போராட்டம் நடைபெற்றபோது இத்தனை சங்கங்களா? என அறிய முடிந்தது. ‘சங்கம் வளர்த்த தமிழ்நாடு’ என்பதை இப்படியும் பொருள்கொள்ள முடியும் என்றபோது வியப்பு ஏற்பட்டது!

கேரள வழிகாட்டுதல்

தென்னிந்தியாவில் ஆசிரியர் சங்கங்களுக்கான தோற்றுவாய் கேரளமாநிலம் என்பது வரலாறு. 1952க்கு முன்வரை மத்திய அரசில் மட்டுமல்ல: அனைத்து மாநிலங்களிலும் காங்கிரஸ் கட்சியே ஆட்சிபுரிந்து வந்தது. 1952 தேர்தலில் காங்கிரஸ் அல்லாத கம்யூனிஸ்ட் கட்சி ஆட்சி கேரளாவில் அமைந்தது. இவ்வாறு தேசத்திற்குப் பலவகையில் எடுத்துக்காட்டாக விளங்கியது கேரள மாநிலம்.

கேரள மாநிலத்தில் ஒரு இலட்சத்திற்கும் அதிகமான ஆசிரியர்களை உறுப்பினர்களாகக்கொண்டு ‘கேரள அரசு ஆசிரியர் சங்கம்’ (KERALA GOVERNMENT SCHOOL TEACHERS’ ASSOCIATION.KGTA) செயல்பட்டுவந்தது. இதே வலுவுடன் ‘கேரளா தனியார்பள்ளி ஆசிரியர் சங்கம்’ (KERALA PPRIVATE SCHOOL TEACHERS’ ASSOCIATION- KPTA ) செயல்பட்டுவந்தது. இந்த இரண்டு பெரிய ஆசிரியர் சங்கங்களும் ‘கல்வி நலன், சமுதாய நலன்’ காத்திட ஒரேசங்கமாக இணைந்து ‘கேரளா பள்ளி ஆசிரியர் சங்கம்’(KERALA SCHOOL TEACHERS’ ASSOCIATION – KSTA ) என ஒன்றுபட்டன. ஒற்றுமையும், எண்ணிக்கையும் இவர்களுக்கு மகத்தான சக்தியை அளித்தன. போராட்டங்களின்போது ஆசிரியர்களைப் பிரித்தாளும் அரசு மற்றும் தனியார் சூழ்ச்சிகளுக்கு இரையாகாமல் மாபெரும் வெற்றிகளைக் குவித்து வருகிறார்கள். இதனை ஒரு வழிகாட்டுதலாக ஏற்றுக்கொள்ளும் சிந்தனை நமக்கு வரவேண்டும்.

2.8.84க்கு முன்னும், பின்னும்

கி.மு.-கி.பி. என வரலாறுகளில் பேசப்படுவதுபோல், ஆசிரியர் சங்க வரலாறும் 2.8.84க்கு முன்- பின் எனப்பேசப்படுகிறது. 1984க்குப்பிறகே ஆசிரியர்களிடையே போராட்ட எழுச்சி மேம்பட்டது. கல்விநலன் சார்ந்த கோரிக்கைகள். ஆசிரியர்நலன் சார்ந்த கோரிக்கைகள், சமுதாயநலன் சார்ந்த கோரிக்கைகள் முன்வைக்கப்படுவதிலும், அவற்றை வென்றெடுக்க வியூகங்கள் வகுப்பதிலும் புதிய பாதை அமைக்கப்பட்டது. பள்ளியின் வருகைப்பதிவேட்டில் பெயர் வரிசைக்கே தங்களின் சிந்தனை களைச் செலவிட்ட ஆசிரியர்களை ஒற்றுமைப்பதாகையின்கீழ், ஜேக்டீ, ஜேக்டீ -பேரமைப்பு என்ற ஒரேகுடையின்கீழ் அணிதிரட்டியபோது அதுவரை நினைத்தும்பார்த்திராத சாதனைகள் நிகழ்ந்தன.

84 ஆசிரியர் கூட்டணி வரலாற்றில்

‘இதுவரை நாம்பெற்ற வெற்றிகள் எல்லாம் யாருடைய கருணையினாலும், தயவினாலும் அல்ல: நம்முடைய ஒற்றுமையால்: போராட்டங்களால்: தியாகங்களால் தான்.’ இவற்றோடு நாம் திருப்தி அடைந்துவிடப்போகிறோமா? இல்லை. ‘மரம் சும்மா இருந்தாலும் காற்று அதைச் சும்மா இருக்க விடப்போவதில்லை!’

ஆம். இதோ மத்திய மாநில அரசுகளின் கல்விநலன், மாணவர்நலன், ஆசிரியர்நலன், மக்கள் நலன்களுக்கு எதிரான தனியார்மயம், தாராளமயம், உலக்மயம் என்ற நாசகரக்கொள்கைகள் நாம் போராடிப்பெற்ற வெற்றிகளைப் பறித்துக்கொள்ளத் துடிக்கின்றன. அதுமட்டுமா? புதிய அச்சுறுத்தல் களும் நம்மை நோக்கி ஏவிவிடப்படுகின்றன.
@. மத்திய அரசு பழைய ஓய்வூதித்திட்டத்திற்கு மாறாக தன்பங்கேற்பு ஓய்வூதியத்தை நடைமுறைப்படுத்தும் சட்டத்தை பி.ஜே.பி. ஆதரவுடன் பாராளுமன்றத்தில் நிறைவேற்றிவிட்டது.
@. PUBLIC PRIVATE PARTNERSHIP என்று மத்தியஅரசு ராஷ்ட்ரிய வித்யாலயா மாதிரிப்பள்ளிகளை மாவட்டங்கள்தோறும் தனியார் துவங்கிக் கொள்ளைஅடிக்க வழிவகுத்துக் கல்வியை வணிகமய மாக்கி வருகிறது.
@. தாராளமயம், தனியார்மயம், உலகமயக் கொள்கைகளால் கொள்ளை இலாபங்களைத் தனியார் ஈட்டவும், உழைக்கும் மக்கள் விலைவாசி உயர்வால் தவிக்கவும் வழியமைத்துள்ளது.
@. ஊதியக்குழுக்களின் பரிந்துரைப்படி அகவிலைப்படியில் 50%ஐ அகவிலை ஊதியமாக அறிவிக்க மறுத்துவருகிறது.
@. பெட்ரோல், டீசல் விலை னிர்ணயத்தை அரசின் கட்டுப்பாட்டில் கொண்டுவர மறுக்கிறது. இதனால், வரலாறு காணாத விலைஉயர்வால் மக்களைத் தவிக்கவிடுகிறது.
@. இலஞ்சம், ஊழல் நடவடிக்கைகளைத் தயக்கமின்றி அனுமதித்து வருகிறது.

#. தமிழக அரசோ இடைநிலை ஆசிரியர் சாதாரணநிலைக்கு மத்திய அரசில் அளிக்கப்படும் ஊதியத்தை அளிக்காமல், மத்திய அரசுக்கு இணையான ஊதியம் என்பதைக் கேலிக்குறி ஆக்குகிறது.
#. தேர்தலின்போதும், வெற்றிபெற்று ஆட்சியமைத்தபோதும் 2004க்குப்பின் நியமனம்பெற்றோர் அனைவருக்கும் பழைய ஓய்வூதியத் திட்டமே தொடரும் என அளித்த உறுதிமொழியை அரசு ஆணை பிறப்பித்து நடைமுறைப்படுத்தாமல் காலம்கடத்திவருகிறது.
#. அரசுப்பள்ளிகளில் ஆங்கிலவழிக்கல்வியை நடைமுறைப்படுத்தித் தமிழ்மொழியையும், தமிழ்ப் பண்பாட்டையும் அழித்தொழிக்கும் சீரழிவுவேலைகளைச் செய்துவருகிறது.

- இவ்வாறு பட்டியல் தொடர்கதையாக நீண்டுகொண்டே இருக்கிறது.

‘ஒற்றுமை நீங்கிடில் அனைவர்க்கும் தாழ்வு’ என்பதை 1970 முதல் 1984 வரை அனுபவூர்வமாக உணர்ந்து இந்தியாவிலேயே மிகக்குறைந்த ஊதியம் பெற்றவர்கள் நாம்.
‘ஒன்றுபட்டால் உண்டுவாழ்வு’ என்பதை 1985 முதல் ஜேக்டீ, ஜேக்டீ-பேரமைப்பு, டிட்டோஜேக் போராட்டங்கள் மூலம் இந்திய நாடே வியக்கும்வண்ணம் சாதித்துக்காட்டியவர்களும் நாம்தான்.

மா.ச.முனுசாமி 85

1985 முதல் பொங்கிப்பிரவாகம் கொண்ட அந்த மாபெரும் எழுச்சியும், ஒற்றுமையும் துறைவாரி- பிரிவுவாரி – சங்கவாரி உணர்வுகளால் நீறுபூத்த நெருப்பாகிவிடுவது ஒட்டுமொத்த ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள் நலன்களுக்கு ஏற்றதல்ல. தாழ்வுற்று வறுமைமிஞ்சி, விடுதலை தவறிக்கெட்ட அந்த நாட்கள் மீண்டும் தமிழ்நாட்டில் நம்வாழ்வில் அனுமதிக்கப்பட முடியாதவை. சின்னச் சின்ன நூல்கண்டுகளில் நாம் சிறைப்பட்டிருப்பது நமக்குப் பெருமை சேர்க்காது.

கேரளம் காட்டிய பாதையில் நாம் அனைவரும் ஒரே சங்கமாகச் சங்கமிப்பது இன்று இங்கே சாத்தியமில்லாமல் போகலாம். அது ஒரு நீண்டகால இலட்சியம். அதற்கான தருணம் வரும்போது அதைப்பற்றிச் சிந்திப்போம்.

அதுவரை?

ஆரம்பக்கல்வியின், அதில் பணியாற்றும் ஆசிரியர்களின் நலன்கள் பாதுகாக்கப்பட ‘டிட்டோஜேக்’ ஆகவும், ஆரம்பக்கல்வி முதல் கல்லூரி-பல்கலைக் கல்விவரை அனைவரின் நலன்களும் பாதுகாக்கப்பட ‘ஜேக்டீ’ ஆகவும், அனைத்து ஆசிரியர்கள், அரசு ஊழியர்களின் நலன்களுக்காக ‘ஜேக்டீ-பேரமைப்பாகவும் சிலிர்த்தெழுவோம். மீண்டும் அந்த மகத்தான ஒற்றுமையைப் பேணிக் காக்கச் சபதமேற்போம்.

சாம்பலிலிருந்தும் உயிர்த்தெழுகின்ற
ஃபீனிக்ஸ்’ பறவைபோல்
மீண்டும் உயிர்த்தெழுவோம்!

நமது இலட்சியம் உயர்வானது.- அதை அடைந்தே தீருவோம்.
நமது பாதை நீளமானது - அதைக் கடந்தே தீருவோம்.
நமது பயணம் உறுதியானது!
அதுபோல்வே
நமது வெற்றியும் நிச்சயமானது!!

தோழமையுடன்,
மா.ச.முனுசாமி

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக