பக்கங்கள்

இலவச SMS களை உடனுக்குடன் பெற ON TNPTFSVG அல்லது ON TNPTFMuthupandian என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு அனுப்பி இலவச குறுந்தகவல்களை(SMS) பெறுங்கள். DND (Do NOT Disturb) சர்வீஸ்ல் உள்ள எண்கள் அதனை(DND) நீக்கிய பிறகே இச்சேவையை பெறமுடியும். plz call 1909

மின்னஞ்சல் மூலம் பதிவுகளை பெறலாம்

Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

3/06/2015

சாதிக்க துடிக்கும் ஜாக்டோ!!! வேதனை தீர விழித்தெழு தோழா!!!

தோழனே!!
                      மிக்க மகிழ்வுடன் உள்ளேன். கடந்த ஒரு வார காலமாக ஜாக்டோ பேரணி வெற்றியடைய நீ ஆற்றும் களப்பணி கோரிக்கையின் நியாயத்தை இச்சமூகம் உணர ஆரம்பித்து விட்டதை உணர்த்துகிறது.

மாவட்ட முழுமைக்கும், ஏன், மாநில  முழுமைக்கும் கூட ஜாக்டோவிற்கு ஆதராவக எழுந்துள்ள ஆதரவு அலை, உரை வீச்சுகள், எழுச்சிக் கட்டுரைகள், ஆற்றாமை கவிதைகள். அடுக்கடுக்கான ஆதரவு செய்திகள், வட்டார, மாவட்ட ஆயத்த கூட்டங்கள், ஆசிரியர் சந்திப்புகள் என தொடர் நிகழ்வுகள் என்னை மகிழ்ச்சி கடலில் ஆழ்த்தியுள்ளது.

 மார்ச் 8 மாவட்ட தலை நகரையே குலுங்க வைக்கப் போகும் உன் பேரணி என்பது ஆழ்ந்த உறக்கத்தில் உள்ளது போல் பாசாங்கு செய்யும் அரசாங்கத்தை நிச்சயம் நித்திரை கலையச் செய்யும் என்பதில் எனக்கு மாற்று கருத்த இல்லை. இருந்தாலும் நம்மை பிரித்தாள நினைக்கும் தீய சக்திகள், ஒற்றுமையை குலைக்க நினைக்கும் கொடுங்கோலர்கள் நம்மை விட பல மடங்கு செயல்படுவார்கள் என்பதாலே இந்த கட்டுரையை எழுத எனக்கு தூண்டியது.

நாளை ஒரு நாள் இடைவெளி என்பது நமது இலட்சியத்தை உடைக்க முடியாது என்றாலும் வதந்திகள் தமிழ்நாட்டில் காட்டு ”தீ”  போல் பரவும் என்பதால் இயக்க பொறுப்பாளாராகிய நீ கவனமுடன் செயல்பட வேண்டிய தருணம் இது.

பல இயக்கங்கள் கூடுவதால் மற்றவர்கள் வருவார்கள் என எண்ணும் சில இயக்க உணர்வு குன்றியவர்களையும் களத்திற்கு அழைத்து வர வேண்டிய பொறுப்பு உனக்கு அதிகம் உள்ளது.

நமது இலக்கு என்பது 2003க்கு பின்னால் பணியேற்ற ஆசிரியர்கள் என்றாலும் அதிகம் பாதிப்புக்குள்ளாகியுள்ள 2009, 2012 ஆண்டுகளில் புதிதாக பணியேற்ற போராட்ட களம் காணாத இடைநிலை ஆசிரியர்களை முழுமையாக அழைத்து வா. நமது கோரிக்கைக்காக, எதிர்கால ஆசிரிய சமுதாயத்திற்காக பணி மூப்பு ஆசிரியர்கள் தங்களுடைய உடல் உபாதைகளையும் பொருட்படுத்தாமல் உரக்க குரல் கொடுப்பதை இந்த இளைய சமுதாயம் நேரடியாக பார்க்க இது தக்க தருணம். நாம் பெற்றுள்ள உரிமைகள் எல்லாம் எத்தகைய கடுமையான போராட்டங்களால் பெற்றவை என்பதை உணர வை.

மார்ச் 8 மகளிர் தினம். நமக்கு மிகவும் பொருத்தமான தினம். 80 சதவீத பெண் ஆசிரியர்களை கொண்டுள்ள நாம் மகளிர் தினத்தில் நாம் இழந்த  உரிமைக்காக ஒப்பாரி வைக்க இருக்கிறோம்.

ஆசிரியர்கள் ஏங்கினால் நாளை இந்த நாடே ஏங்கும் என்று சொன்ன அண்ணாவை தன்னுடைய தலைவராக ஏற்றுள்ள திராவிட கட்சிகள் ஆட்சி பீடத்தை அலங்கரித்த போதும் நம் அவலம் தீர வில்லை.

இடைநிலை ஆசிரியர்களின் இழப்பு என்பதுதான் இன்றைய போராட்டத்தின் மைய கோரிக்கை என்பதை புதிதாக பணியேற்ற ஆசிரியர்களுக்கு புரிய வைத்திருப்பாய் என்றே உணர்கிறேன்.

மாவட்ட முழுமைக்கும் உள்ள இயக்க தோழர்களிடம் தொடர்ந்து  குறுஞ்செய்தி வழியாகவும், அலைபேசி வழியாகவும், நேரடியாகவும் தொடர்பு கொண்டே வருகிறேன்.

 மாவட்ட முழுமைக்கும் உள்ள எழுச்சியின் வீச்சு என்பது மார்ச்-8ல் மாவட்டத்தையே அதிர வைக்கும். இதில் உன் பங்களிப்பு என்பது மிகவும் பாராடட்டுக்குறியது என்றாலும் நித்திரை கலையாமல் அரை தூக்கத்தில் அல்லாடும் ஒரு சில நண்பர்களையும் எழுப்பி விடு. கோரிக்கையின் வெற்றி வெகு தூரம் இல்லை.

”ஸ்தாபனம் இல்லாத போராட்டம்
ஆயுதம் இல்லாத அசட்டுத் தனம்

போராட்டம் இல்லாத ஸ்தாபனம்
பயன்பாடற்ற போலி தனம்”

உன்னை உரிமையோடு அழைப்பதற்கு எனக்கு முழு உரிமை உள்ளதால் மீண்டும் உன்னை உரிமையேடு அழைக்கிறேன்.

தோழனே புறப்படு உன் போர் படையோடு!!!!
கொட்டட்டும் போர் முரசு!!!

உண்மையை உரக்கச் சொல்லுவோம்!!
உரிமையை போராடி பெறுவோம்!!!

ஆவலுடன் உன் வரவை எதிர்நோக்கி...

தோழமையுடன்...
முத்துப்பாண்டியன்.ஆ
TNPTF மாவட்டச்செயலாளர்
சிவகங்கை மாவட்டம்.