பக்கங்கள்

இலவச SMS களை உடனுக்குடன் பெற ON TNPTFSVG அல்லது ON TNPTFMuthupandian என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு அனுப்பி இலவச குறுந்தகவல்களை(SMS) பெறுங்கள். DND (Do NOT Disturb) சர்வீஸ்ல் உள்ள எண்கள் அதனை(DND) நீக்கிய பிறகே இச்சேவையை பெறமுடியும். plz call 1909

Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

1/09/2014

ஆசிரியர் கூட்டணி வரலாற்றில் எனது நினைவலைகள் - மா.ச.முனுசாமி

நூல் ஆசிரியர்: மா.ச.முனுசாமி
முன்னாள் மாநிலத்தலைவர்
தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி

                     அணிந்துரை  - செ.நடேசன்

 இன்றுள்ள ஆசிரியர் இயக்கத்தலைவர்களில் ‘இயக்கம் கண்ட நாயகன் மாஸ்டர். வா.இராமுண்ணி’ அவர்களோடு மிகநெருக்கமாக இருந்தவர் தோழர் மா.ச.முனுசாமி என்றால் மிகையாகாது. அவரோடு நெருங்கிப் பழகி அவரது எண்ணங்களை உள்வாங்கிக்கொண்டு,முற்போக்குச் சிந்தனையாளராக இயக்கப்பணிகளில் தீவிரமாகத் தன்னை ஈடுபடுத்திக் கொண்டவர் தோழர் மா.ச.முனுசாமி.
தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் பொறுப்பாளர்களின் செயல்பாடு களில் மாஸ்டர் கவலையுற்று உணர்ச்சிவசப்பட்டபோது அவரை அறிவுபூர்வமான அணுகுமுறையை மேற்கொள்ளத் தொழிற்சங்கத் தலைவர்களோடு கலந்துபேச வைத்தவர் தோழர் மா.ச.முனுசாமி. தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் பொதுச் செயலாளர் பொறுப்பிலிருந்து செ.முத்துசாமி நீக்கப்பட்டபோது மாநிலத்துணைச் செயலாளராக இருந்து பொதுச்செயலாளர் பொறுப்பை ஏற்றுச் செயல்பட்டவர் இவர்.
‘நெஞ்சில் மூண்ட நெருப்புக்குச் சமரசம் ஏதும் கிடையாது’என மாஸ்டர் இராமுண்ணியின் இலட்சியத்தை உயர்த்திப்பிடித்து 2.8.1984ல் ‘தமிழ்நாடு ஆரம்பப் பள்ளி ஆசிரியர் கூட்டணி’ மீண்டும் பயணம் துவங்கியபோது முன்னணித் தளபதியாக் விளங்கியவர் தோழர் மா.ச.முனுசாமி. 1984 முதல் 1990 வரை மாநிலத்துணைச் செயலாளராகவும்,1990 முதல் 1996 வரை மாநிலப்பொருளாள ராகவும், 1996முதல் 2002வரை மாநிலத்தலைவராகவும் இயக்கத்தின் பொறுப்புக் களில் தன்னை ஈடுபடுத்திக்கொண்டு வளமான அனுபவம் செறிந்த தலைவராக மிளிர்ந்தார்.
தோழர் மா.ச.முனுசாமி பற்றி 1977லிலேயே அறிந்திருந்தாலும்.1984 முதல் 2002 வரையான 18 ஆண்டுகள் மாநிலப்பொறுப்புக்களில் நான் அவரோடு இணைந்து இயக்கப்பணிகளை ஆற்றிய நினைவுகளை என்றும் மறக்கமுடியாது.
அவருடனான எனது முதல்அனுபவமே மெய்சிலிர்க்கக் கூடியதாக அமைந்திருந்தது. ‘தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி’யின் மதுராந்தகம் வட்டாரக் கிளையின் செயலாளராக இருந்த தோழர் மா.ச.2.8.1984ல் ‘தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி’யாக ஏன் பயணம் துவங்குகிறோம்?’ என்பதை விளக்கிடவும், தீர்மானமிடவும் தனது வட்டாரப்பொதுக்குழுவைக் கூட்டினார். விளக்கமளிக்க என்னை அழைத்தார். அப்போது தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் செங்கல்பட்டு மாவட்டச்செயலாளரும், மாநிலப்பொருளாளருமான திரு.து.இளங்கோ ‘இது எனது கிளை. இதில் அப்படி ஒரு தீர்மானமிட நான் அனுமதிக்க முடியாது’என்றார். அப்போது தோழர் மா.ச.விடுத்த உணர்வுபூர்வமான அறைகூவலை ஏற்று 300க்கும் மேற்பட்ட ஒட்டுமொத்த ஆசிர்யச் சகோதரர்களும், சகோதரிகளும் அவர்பின் அணிவகுத்து எதிரே இருந்த கட்டடத்தில் கூடித் தங்களைத் ‘தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் மதுராந்தகம் வட்டாரக்கிளையாக அறிவித் தனர். மாநிலஅமைப்பின் சார்பில் இக்கூட்டத்தில் பங்கேற்று அவர்களை வரவேற்றுப் பாராட்டினேன்.
பின்னர் மதுராந்தகம் வட்டாரக்கிளையின் அலுவலகம் திறப்புவிழாவிலும், மாவட்டக்கிளையின் சொந்த அலுவலகக் கட்டடத்திறப்பு விழாவிலும், இயக்கப் பயிற்சி முகாம்களிலும் பங்கேற்றேன். செங்கை மாவட்டச்செயலாளராக மாநிலஇணைச்செயலாளராக ,மாநிலப்பொருளாளராக, மாநில்த்தலைவராக அவருடன் மாநிலம் முழுவதும், அகில இந்திய அளவிலும் இணைந்து பணியாற்றிய அனுபவம் சுகமானது,2001ல் அவர் ஓய்வுபெற்றபின்னரும் கடந்த 12 ஆண்டுகளாக இயக்கச் செயல்பாடுகளில் அனுபவச் செறிவோடு வழிகாட்டி வருகிறார்.
தமிழ்நாட்டின் மூத்தஅரசியல் மற்றும் தொழிற்சங்கத் தலைவர்களோடு நெருக்கமான தொடர்பும்,அனைத்து ஆசிரியர் இயக்கத்தலைவர்களோடு நட்பும் கொண்டு தனது பார்வையை விசால்மாக்கிக் கொண்டவர் இவர். இவரோடு பழகும் அனைவரும் இவரது அன்பால், குழந்தை உள்ளம் கொண்ட கள்ளமில்லாப் பேச்சால், கண்டிப்பால் கவரப்பட்டே தீர்வார்கள். இவ்வளவு ஆழமான தனது அனுபவங்களில் சிலவற்றை ‘ஆசிரியர் கூட்டணியின் வரலாற்றில் எனது நினைவலைகள்’ என 22 தலைப்புக்களில் இந்த நூலில் நம்மோடு பகிர்ந்து கொண்டுள்ளார்.
தனிமனித பராக்கிரமங்கள்,படையெடுப்புக்கள், பட்டாபிஷேகங்களே தேசத்தின் வரலாறு எனத் தவறாகக் கற்பிக்கப்பட்டவர்கள் நாம். இன்றும்கூட அவ்வாறே கற்றுக் கொடுக்க நிர்ப்பந்திக்கப் பட்டிருப்பவர்களும் நாம். அதனால்தானோ என்னவோ இயக்க வரலாறு என்னும்போதுகூடத் தனிமனிதர்களின் செயல்பாடுகளாகவே பார்க்கின்ற பார்வை தமிழ்நாட்டில்!
இதில் ஒருதிருப்பத்தை ஏற்படுத்தி ‘வர்க்கப் போராட்டங்களின் வரலாறுதான் சமுதாய வளர்ச்சியின் வரலாறு’ என்று புரிந்துகொண்டவர்கள் நாம்.’ஆசிரியர் இயக்க வரலாறும் வர்க்கப் போராட்டங்களின் வரலாறே’ என்று புரியவைத்துக் கொண்டிருப் பவர்களும் நாம்தான். அப்படியானால், வரலாற்றில் தனிநபர் வகிக்கும் பாத்திரத்தை நாம் நிராகரிக்கிறோமா? இல்லை.சமுதாயத்தை விஞ்ஞானக் கண்ணோட்டத்தோடு அணுகி, அதை முன்னெடுத்துச் செல்வதில் – அல்லது, பழமைவாதத்தில் தோய்ந்து சற்றுத் தேங்கவைப்பதில் தனி நபர்களுக்குக் குறிப்பிடத்தக்க ஒருபங்கு உண்டு.
இந்தப்பங்கை அல்லது இவர்களின் பாத்திரத்தை ஆக்கபூர்வமான விமர்சனக் கண்ணோட்டத்தில் பரிசீலித்து, சமுதாயத்தை முன்னெடுத்துச் செல்ல உதவும் அனுபவங்களை நாம் வரித்துக்கொள்கிறோம். தேக்கமடையச் செய்யும் அல்லது பின்னோக்கி நகர்த்த முயற்சிக்கும் பழமைவாதங்களில் நாம் எச்சரிக்கை கொள்கிறோம். இந்த ஞானத்தின் அடிப்படையில் ஆசிரியர் சமுதாயம் முன்னேறிச் செல்வதற்குத் தடையாக உள்ள அம்சங்களைக் கண்டறிகிறோம்: அம்பலப் படுத்துகிறோம்: நிராகரிக்கிறோம்.
கல்விநலனும், ஆசிரியர்நலனும் இந்தச் சமுதாயத்தின் ஒட்டுமொத்த நலன்களோடு பின்னிப் பிணைந்தவை என்பதை நன்கு உணர்ந்தவர்கள் நாம். அதனால்தான் நமது நலன்களை மட்டும் தனிமைப்படுத்திப் பாதுகாத்துக்கொள்ள முடியும் என்ற தவறான நம்பிக்கை நம்மிடம் இல்லை. மத்திய, மாநில அரசுகளின் சமூக,அரசியல், பொருளா தார,கல்விக்கொள்கைகள் நாட்டின் சுதந்திரத்திற்கும், இறையாண்மைக்கும், மக்கள் நலன்களுக்கும் பேராபத்துக்களாக மாறும்போது அதைமுறியடிக்கும் போராட்டத்தில் மதசார்பற்ற, ஜனநாயக சக்திகளோடு கரம் உயர்த்தி நிற்கிறோம்.
இந்த அடிச்சுவடுகளில் இயக்கம் மேற்கொண்ட பயண அனுபவங்கள் சிலவற்றை யும், அவை நமக்குக் கற்றுத்தந்த படிப்பினைகளையும் தோழர்.மா.ச.முனுசாமி தனது ‘ஆசிரியர் கூட்டணி வரலாற்றில் எனதுநினைவலைகள்’ எனத்தொகுத்து நம்முன்னே படைத்துள்ளார்.
‘எல்லாருக்கும் கல்வி; எல்லாருக்கும் வேலை: எல்லாருக்கும் எல்லாமும்’ என்ற இலட்சிய முழக்கங்களோடு இதோ தோழர் மா.ச.முனுசாமியின் நூல் மட்டுமல்ல; இந்த உயரிய நோக்கங்கள் நிறைவேறுவதும் இனி உங்கள் கரங்களில்
.
ஊத்துக்குளி.ஆர்.எஸ். தோழமையுடன்,
9.1.2014
செ.நடேசன்
முன்னாள் பொதுச்செயலாளர்
தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக