பக்கங்கள்

இலவச SMS களை உடனுக்குடன் பெற ON TNPTFSVG அல்லது ON TNPTFMuthupandian என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு அனுப்பி இலவச குறுந்தகவல்களை(SMS) பெறுங்கள். DND (Do NOT Disturb) சர்வீஸ்ல் உள்ள எண்கள் அதனை(DND) நீக்கிய பிறகே இச்சேவையை பெறமுடியும். plz call 1909

Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

10/24/2016

15 அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி மாநிலந்தழுவிய மாபெரும் ஆர்ப்பாட்டம்

அன்பார்ந்த ஆசிரியப் பேரினமே,
கல்வி நலன், மாணவர் நலன், ஆசிரியர் நலன் ஆகிய உன்னதக் குறிக்கோள்களோடு தொய்வின்றி தொடர்ந்து களப்பணியாற்றிக் கொண்டிருக்கும் நமது பேரியக்கம் நியாயமான கோரிக்கைகளுக்காக சமரசமற்ற போராட்டங்களை தொடர்ந்து நடத்தி வருகிறது.
கோரிக்கைகள் தொடர்பாக பல்வேறு வழிகளில் முறையீடுகள் செய்தும் தீர்வு கிடைக்காத நிலையில்தான் போர்க்குணமிக்க நமது பேரியக்கம் போராட்டக்களம் காணுகிறது. அந்த அடிப்படையில் தமிழக அரசு மற்றும் தொடக்கக்கல்வி இயக்குனர் வரை பலமுறை முறையீடுகள் செய்தும் இன்றுவரை தீர்க்கப்படாத கீழ்க்கண்ட 15 கோரிக்கைகளுக்கும் உடனடித் தீர்வுகோரி முதல்கட்ட நடவடிக்கையாக தமிழகம் முழுவதும் அனைத்து வட்டாரத் தலைநகரங்களிலும் 04.11.2016 வெள்ளி மாலை 5 மணிக்கு கோரிக்கை முழக்க ஆர்ப்பாட்டங்கள் நடத்திடவும், இரண்டாம் கட்டமாக 20.11.2016 அன்று மாவட்டத்தலைநகரங்களில் உண்ணாவிரதப்போராட்டமும், மூன்றாம் கட்டமாக 28.12.2016 அன்று சென்னையில் தொடர் முழக்கப் போராட்டம் நடத்துவது எனவும் நமது மாநிலச் செயற்குழு முடிவு செய்துள்ளது. கூட்டுப்பேர உரிமைக்கு வலிமைச்சேர்த்து நமது உரிமைக்குரலை ஓங்கி ஒலிப்போம். அலைகடலென அணிதிரள்வோம். தமிழக அரசிற்கும், தொடக்கக்கல்வித்துறைக்கும் நமது கோரிக்கைளின் நியாயத்தை உணர்த்துவோம். போராடுவோம் ! வெற்றி பெறுவோம் !
கோரிக்கைகள்:
1) புதிய தன் பங்கேற்பு ஓய்வூதியத் திட்டத்தைக் கைவிட்டு பழைய பயனளிப்பு ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்துக.
இக்கோரிக்கைக்காக இதுவரை 16 அகில இந்திய வேலைநிறுத்தப் போராட்டங்களில் பங்கேற்ற தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்துடன் இணைந்து நடத்திய வீரஞ்செறிந்த வேலை நிறுத்தப் போராட்டத்தின் பயனாக 19.02.2016 அன்று தமிழக சட்டமன்றத்தில் மாண்புமிகு தமிழக முதலமைச்சர் அவர்கள் பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்துவது தொடர்பாக ஆய்வு செய்ய வல்லுநர்குழு அமைக்கப்படும் என்று அறிவித்தார்கள். அதன்படி அமைக்கப்பட்ட திருமதி.சாந்தா ஷீலா நாயர், IAS அவர்கள் தலைமையிலான வல்லுநர் குழுவின் கருத்துக் கேட்பின்போது அனைத்து அரசு ஊழியர் மற்றும் ஆசிரியர் சங்கங்களும் பழைய ஓய்வூதியத் திட்டத்தையே தொடர்ந்து செயல்படுத்த வேண்டும் என்ற கோரிக்கையை வலுவாக முன்வைத்துள்ளன. எனவே, மக்கல்நலப் பணியாற்றும் ஆசிரியர்கள் மற்றும் அரசு ஊழியர்களின் எதிர்கால வாழ்க்கையை பங்குச்சந்தை சூதாட்டத்தில் தள்ளாமல் அவர்களது வாழ்வாதாரத்தைப் பாதுகாத்திட பழைய ஓய்வூதியத் திட்டத்தை தொடர மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்கள் ஆவண செய்திட வேண்டும்.
2) தமிழக இடைநிலை ஆசிரியர்களுக்கு ஆறாவது ஊதியக் குழுவில் ஏற்பட்ட மிகப்பெரிய ஊதிய இழப்பைச் சரிசெய்து ஏழாவது ஊதியக்குழுவை உடனடியாக அமைத்து மத்திய அரசிற்கு இணையான ஊதியம் மற்றும் படிகள் வழங்கிடுக.
ஆறாவது ஊதியக்குழு தமிழ்நாட்டு இடைநிலை ஆசிரியர்களுக்கு அடிப்படை ஊதியத்தில் ரூ5500ஃ- குறைவாக வழங்கி மத்திய அரசிற்கு இணையாகப் பெற்றுவந்த ஊதியத்தை பறித்துவிட்ட நிலையில், அப்பாதிப்பைச் சரிசெய்து ஏழாவது ஊதியக்குழுவை அமைத்து தொடர்ந்து மத்திய அரசிற்கு இணையான ஊதியம் மற்றும் படிகளை தமிழ்நாட்டு இடைநிலை ஆசிரியர்களுக்கும் வழங்கிட நடவடிக்கை மேற்கொள்ளப்பட வேண்டும்.
3) மத்திய அரசின் புதிய கல்விக்கொள்கை தொடர்பாக தமிழக அரசு தனது தெளிவான கருத்தை மத்திய அரசிற்கு பதிவு செய்ய வேண்டும்.
நாட்டின் மிக முக்கியத்துவம் வாய்ந்த கல்விக்கொள்கையானது கல்வியாளர்கள், ஆசிரியர்கள், மாணவர் அமைப்புகள், பொதுமக்கள் ஆகியோரின் கருத்துக்களை உள்வாங்கி உருவாக்கப்பட வேண்டும். அதிகார வர்க்கம் தன்னிச்சையாக உருவாக்கும் கல்வியானது அடிமைக் கல்வியாகவே அமையும். எனவே, தமிழக அரசு கல்விசார் அமைப்புக்களை கலந்தாலோசித்து தெளிவான கருத்துக்களை மத்திய அரசுக்குத் தெரிவித்திட வேண்டும்.
4) பி.லிட் கல்வித்தகுதியுடன் நடுநிலைப்பள்ளித் தலைமை ஆசிரியராகப் பதவி உயர்வு பெற்றபின் தனது கல்வித் தகுதியை உயர்த்தி பி.எட் பட்டம் பெற்றவர்களுக்கு அதற்காக ஊக்க ஊதிய உயர்வு பல ஆண்டுகளாக வழங்கப்பட்டு வந்த நிலையில், தற்போது தொடக்கக்கல்வி இயக்குனர் அவர்கள் தனது செயல்முறை ஆணை மூலம் அதை நிறுத்தி வைத்துள்ளதை திரும்பப்பெற வேண்டும்.
தமிழ்நாட்டில் தாய்மொழியாம் தமிழ்மொழிக்கு முக்கியத்துவமும் முன்னுரிமையும் கொடுக்கும் வகையில் பி.லிட்(தமிழ்) பட்டம் பெற்றவர்களுக்கு பி.எட் பணியிடமான தமிழாசிரியர் மற்றும் நடுநிலைப் பள்ளித் தலைமை ஆசிரியர் பணியிடங்கள் வழங்கும் அரசாணை பல ஆண்டுகளாக நடைமுறையில் உள்ளது. அவ்வாறு பதவி உயர்வு பெற்றவர்கள் தங்கள் கல்வித் தகுதியை உயர்த்திக்கொண்டு பி.எட் பட்டம் பெற்றால் அதற்கான ஊக்க ஊதிய உயர்வை பல ஆண்டுகளாகப் பெற்று வ்நதனர். பி.லிட் முடித்து தமிழாசிரியராக பி.எட் பணியிடத்தில் பணியாற்றுபவர்களுக்கு பி.எட் உயர்கல்வித் தகுதிக்கு ஊக்க ஊதிய உயர்வு வழங்கலாமா என்ற சந்தேகம் எழுந்த போது அரசு அதற்கு தெளிவான ஆணை பிறப்பித்தது. அவ்வாணையில் ஒரு பணியிடத்தில் பணியாற்றுபவர்கள் தங்களது கல்வித் தரத்தை உயர்த்திக்கொள்ள பெறும் பட்டங்களுக்கு ஊக்க ஊதிய உயர்வு வழங்க வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது. அதேபோன்று பி.லிட் தகுதி கொண்ட நடுநிலைப்பள்ளித் தலைமை ஆசிரியர்களுக்கு பி.எட் உயர்கல்வித்தகுதிக்கு ஊக்க ஊதிய உயர்வு உண்டு என்று தகவல் அறியும் உரிமைச்சட்டத்தின் மூலம் பெறப்பட்ட பல்வேறு தகவல்கள் தெரிவிக்கின்றன. எனவே அரசாணைக்கு முரணாக பி.லிட் தகுதிகொண்ட நடுநிலைப்பள்ளித் தலைமை ஆசிரியர்களுக்கு பி.எட் உயர்கல்வித்தகுதிக்கு ஊக்க ஊதிய உயர்வு கிடையாது என்று தொடக்கக்கல்வி இயக்குநர் தற்போது வெளியட்டுள்ள செயல்முறை ஆணை உடனடியாகத் திரும்பப் பெறப்பட வேண்டும்.
5) B.com., மற்றும் B.A.(பொருளாதாரம்) ஆகிய பட்டப்படிப்புகளுக்கு ஊக்க ஊதிய உயர்வு வழங்கி வந்ததை நிறுத்தி வைத்து தொடக்கக்கல்வி இயக்குனர் வெளியிட்டுள்ள செயல்முறை ஆணையை உடனடியாகத் திரும்பப் பெற வேண்டும்.
தமிழகத்தில் ஆசிரியர்கள் ஊக்க ஊதிய உயர்வு பெற உயர்கல்வியில் தகுதியான பாடங்கள் எவையெவை என தெளிவான அரசாணைகள் இருந்தும் அரசாணைகளுக்கு முரணாக B.com.,.B.A.,(பொருளாதாரம்) ஆகிய பாடப்பிரிவுகளில் உயர்கல்வித்தகுதி பெற்றவர்களுக்கு ஊக்க ஊதியத்தை மறுக்கும் தொடக்கக்கல்வி இயக்குனரின் செயல்முறை ஆணை உடனடியாகத் திரும்பப் பெறப்பட வேண்டும்.
6) ஆசிரியர்கள் தாங்கள் பணியாற்றும் நடுநிலைப்பள்ளிகளில் பி.எட் கற்பித்தல் பயிற்சிக்குச் சென்றாலும் விடுப்பு எடுக்க வேண்டும் என்ற தொடக்கக்கல்வி இயக்குனரின் செயல்முறை ஆணை திரும்பப்பெறப்பட வேண்டும்.
ஆசிரியர்கள் தாங்கள் பணியாற்றும் பள்ளிகளில் பி.எட் பயிற்சி மேற்கொண்டால் விடுப்பு எடுக்கவேண்டியதில்லை எனவும், மாணவர்கள் கல்விப்பணி பாதிக்காத வகையில் பயிற்சி மேற்கொள்ள வேண்டும் எனவும் பள்ளிக்கல்வித்துறையில் அரசாணை உள்ளது. அதே போன்று தொடக்கக்கல்வித் துறைக்கும் அரசாணை பெற்று வழங்க தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி தொடர்ந்து தொடக்கக்கல்வி இயக்குனரிடம் விண்ணப்பித்ததின் பயனாக தொடக்கக்கல்வித் துறையில் பணியாற்றும் ஆசிரியர்கள் தாங்கள் பணியாற்றும் நடுநிலைப் பள்ளிகளிலேயே பி.எட் கற்பித்தல் பயிற்சி மேற்கொள்ளலாம் என அரசாணை வெளியிடப்பட்டது. அவ்வாணையில் விடுப்புப் பற்றி குறிப்பிடப்படாததால் பல்வேறு சந்தேகங்கள் எழுந்தபோதும் அரசாணையின் நோக்கமே விடுப்பு எடுக்காமல் பயிற்சி மேற்கொள்வதாகும். அந்த அரசாணையின் பயன் ஆசிரியர்களுக்கு கிடைக்கக்கூடாத வகையில் விடுப்பு எடுக்க வேண்டுமென தொடக்கக் கல்வி இயக்குனர் அவர்கள் வெளியிட்டுள்ள செயல்முறை ஆணை உடனடியாகத் திரும்பப் பெறப்பட வேண்டும்.
7) இளையோர் - மூத்தோர் முரண்பாடு - அரசாணைகளுக்கு முரணாக இயக்குனர் பிறப்பித்த உத்தரவை திரும்பப் பெற வேண்டும்.
ஒரே நியமன அலுவலரின் கீழ் பணியாற்றும் ஆசிரியர்களுக்கு இளையோர் - மூத்தோர் ஊதிய முரண்பாடு சரிசெய்ய தெளிவான அரசாணை உள்ளது. மேலும் மூத்தோரை விட குறைவான ஊதியத்தில், இளையவராக ஒன்றியத்தில் பணியேற்ற நிலையில் ஊதிய நிர்ணயத்தில் அதிக ஊதியம் பெறும் நிகழ்வு ஏற்படுகிறது. இந்நிலையில் இளையோர் - மூத்தோர் ஊதிய முரண்பாடு சரி செய்ய தேவையான தெளிவுரைகள் வழங்காமல் முற்றிலும் மறுத்து இயக்குனர் அவர்கள் பிறப்பித்த செயல்முறைகளை திரும்பப் பெற வேண்டும்.
8) தேனி மாவட்டத் தொடக்கக்கல்வி அலுவலர் அவர்கள் மீது நடவடிக்கை மேற்கொண்டு துறைரீதியான விசாரணைக்கு உட்படுத்த வேண்டும்.
தேனி மாவட்டத் தொடக்ககக்கல்வி அலுவலர் அவர்கள் தொடக்கக் கல்வித்துறைக்கே ஒரு களங்கமாகச் செய்பட்டு வருகிறார். பெண்ணாசிரியர்களை மிரட்டி அவர்களிடமிருந்து பொய்யான பாலியல் புகார்களைப் பெற்று தனக்குப் பிடிக்காத ஆசிரியர்கள் மீது நடவடிக்கை மேற்கொள்வதும், அதன் பேரில் கையூட்டுப் பெறுவதுமாக உள்ளார். தமிழக அரசு அவர்மீது உடனடி நடவடிக்கை மேற்கொண்டு துறைரீதியான விசாரணைக்கு உட்படுத்திட வேண்டும்.
9) திருநெல்வேலி மாவட்டத்தில் தொடக்கக்கல்வித் துறையில் தலைவிரித்தாடும் லஞ்ச, ஊழல் நடவடிக்கைகளைத் தடுத்திடவும், பதவி உயர்வு மற்றும் மாற்றுப்பணி வழங்குதல் ஆகியவற்றில் விதிமுறைகளைக் கடைப்பிடிக்கவும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட வேண்டும்.
திருநெல்வேலி மாவட்டத்தில் தொடக்கக்கல்வித்துறையில் லஞ்சம் பெற்றுக்கொண்டு விதிமுறைகளுக்கு புறம்பான செயல்களைச் செய்வதால் விதிமுறைகளின்படி தகுதியுள்ள ஆசிரியர்களுக்கு கிடைக்க வேண்டிய பதவி உயர்வுகள் மறுக்கப்பட்டுள்ளன. இதனால் ஆசிரியர்களிடையே சாதிய ரீதியான மோதல்கள் உருவாவதற்கு மாவட்டத் தொடக்க கல்வித்துறையே வழிவகுத்துள்ளது. எனவே, இதில் தமிழக அரசு உடனடியாகத் தலையிட்டு தவறு செய்தவர்கள் மீது உரிய விசாரணை மேற்கொண்டு நடவடிக்கை எடுப்பதோடு தகுதியுள்ள ஆசிரியர்களுக்கு பதவி உயர்வு ஆணை உடன் வழங்கப்பட நடவடிக்கை மேற்கொள்ளப்பட வேண்டும்.
10) வேலூர் மாவட்டத் தொடக்கக்கல்வித்துறையின் கீழ் பணியாற்றும் சில உதவித் தொடக்கக்கல்வி அலுவலர்கள் மீது தொடக்கக்கல்வி இயக்குனரிடம் அளிக்கப்பட்டுள்ள புகார் மனுவை விசாரணைக்கு உட்படுத்தி நடவடிக்கை மேற்கொள்ளப்பட வேண்டும்.
வேலூர் மாவட்டத் தொடக்கக்கல்வித்துறையின் கீழ் செயல்படும் சில உதவித் தொடக்கக்கல்வி அலுவலர்கள் விதிகளுக்குப் புறம்பாக தொடர்ந்து ஆசிரியர் விரோத நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகிறார்கள். தனியார் பள்ளி நிர்வாகிகளைக் கைக்குள் வைத்துக்கொண்டு ஆசிரியர்களை மிரட்டிப் பணம் பறித்து வருகிறார்கள். இது தொடர்பாக தொடக்கக்கல்வி இயக்குநர் அவர்களுக்கு விரிவான புகார் மனு அளிக்கப்பட்டுள்ளது. அதன்மீது உரிய விசாரணை நடத்தி நடவடிக்கை மேற்கொள்ளப்படவேண்டும்.
11) தனியார் பள்ளி ஆசிரியர்களின் உபரிப் பணியிட நிரவல் ஆசிரியர்களின் குடும்ப நலன், சொந்த நலனைப் பாதிக்காத வகையில் செயல்படுத்தப்பட வேண்டும்.
தனியார் பள்ளி ஆசிரியர்களின் உபரிப் பணியிட நிரவல் ஆசிரியர்கள் மத்தியில் மிகப்பெரிய அச்ச உணர்வை ஏற்படுத்தியுள்ளது. அவ்வாறான சூழல் ஏற்படும் நிலையில் அரசுப் பள்ளிகளில் நடைமுறைப் படுத்தியதுபோல் பணியாற்றும் ஒன்றியத்திற்குள் தேவைப்பணியிடத்தில் பணிநிரவல் செய்திடவும், மீதமுள்ள உபரிப் பணியிடங்களை பணியாற்றும் பள்ளிகளிலேயே தக்கவைத்திடவும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட வேண்டும்.
12) அ) பொதுமாறுதல் கலந்தாய்வுக்குப்பின் ஏற்பட்டுள்ள பட்டதாரி ஆசிரியர் காலிப்பணியிடங்களில் கடந்த காலங்களைப்போல் இரண்டாம்கட்ட கலந்தாய்வு நடத்தி தகுதியுள்ள ஆசிரியர்களுக்கு பதவி உயர்வு வழங்கதோடு நீதிமன்ற உத்தரவு பெற்றுள்ள ஆசிரியர்களுக்கும் உடனடியாக பதவி உயர்வு வழங்க வேண்டும்.
ஆ) 1997ம் ஆண்டு பின்னடைவு காலிப்பணியிடத்தில் இடைநிலை ஆசிரியர்களாக பணியமர்த்தப்பட்ட ஆதிதிராவிட பட்டதாரி ஆசிரியர்களுக்கு உயர்கல்விக்கான ஊக்க ஊதியம் வழங்க வேண்டும்.
13) ஆசிரியர்கள் உயர்கல்வி பயின்றதற்கு பின்னேற்பு ஆணை உடனடியாக வழங்கிட வேண்டும்.
ஒரு சில உதவித் தொடக்கக்கல்வி அலுவலர்களின் நிர்வாகச் சீர்கேடுகளுக்கு எடுத்துக்காட்டுத்தான் உயர்கல்விக்கான அனுமதி தொடர்பான பிரச்சனை. உரிய முறையில் விண்ணப்பித்தபின் கல்விபயின்ற நிலையில் அனுமதி ஆணை கிடைக்காததால் இன்று ஆசிரியர்கள் தங்களது உரிமையை இழந்து நிற்கின்றனர். தவறிழைத்த அலுவலர்களுக்குத் தண்டனை வழங்காமல் ஆசிரியர்களைத் தண்டிக்கும் நிலையை மாற்றி உயர்கல்வி பயின்றதற்கான பின்னேற்பு ஆணை வழங்கிட உடனடி நடவடிக்கை மேற்கொள்ளப்பட வேண்டும்.
14) உதவித் தொடக்கக் கல்வி அலுவலகங்களில் காலிப்பணியிடங்களை உடன் நிரப்பிட வேண்டும்.
தமிழகம் முழுவதும் உதவித் தொடக்கக்கல்வி அலுவலகங்களில் ஏற்பட்டுள்ள நிர்வாகச் சீர்கேடுகள் மற்றும் அனைத்துப் பிரச்சனைகளுக்கும் அடிப்படைக் காரணமாக விளங்குவது அங்கு ஏற்பட்டுள்ள காலிப்பணியிடங்கள் ஆகும். எனவே, அனைத்து உதவித் தொடக்ககல்வி அலுவலகங்களிலும் காலியாக உள்ள அனைத்துப் பணியிடங்களையும் நிரப்பிட தமிழக அரசு தக்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.
15) ஆசிரியர் தகுதித்தேர்வு தொடர்பான வழக்கை விரைந்து முடித்து புதிய ஆசிரியர் நியமனங்கள் மேற்கொள்ளப்பட வேண்டும்.
தமிழகத்தில் ஆசிரியர் தகுதித்தேர்வு தொடர்பான வழக்கு உச்சநீதிமன்றத்தில் நீண்ட காலமாக நிலுவையில் உள்ளதால் பள்ளிகளில் காலியாக உள்ள ஆசிரியர் பணியிடங்கள் நிரப்புவதில் மிகுந்த காலதாமதம் ஏற்பட்டுள்ளது. எனவே, தமிழக மாணவர்களின் கல்விநலன் கருதியும், தமிழகத்தில் வேலைக்காகக் காத்திருக்கும் ஆசிரியர்களின் நிலை கருதியும் தமிழக அரசு தகுதித்தேர்வு தொடர்பான வழக்கை விரைந்து முடித்து புதிய ஆசிரியர் நியமனங்கள் செய்திட உரிய நடவடிக்கை மேற்கொள்ள இம்மாநிலச்செயற்குழு ஏகமனதாகக் கேட்டுக்கொள்கிறது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக