சிவகங்கை: தமிழகத்தில் வருகிற மே 16ம் தேதி சட்டமன்றத் தேர்தல் நடைபெற உள்ளது. இப்பணியில் 1.97 லட்சம் பெண்கள் உட்பட 3.29 லட்சம் ஆசிரியர்கள் மற்றும் அரசு ஊழியர்கள் ஈடுபட உள்ளனர். இதில் வாக்குபதிவு நடைபெறும் வாக்குச்சாவடியில் தலைமை வாக்குப்பதிவு அலுவலர் முதல் அனைத்து நிலை வாக்குப்பதிவு அலுவலர்களாக பெரும்பாலும் ஆசிரியர்களே பணியாற்ற உள்ளனர். இவர்களில் 80 விழுக்காடுக்கு மேல் பெண் ஆசிரியர்கள் என்பதால் அவரவர் பணியாற்றும் தொகுதிகளிலேயே பணியமர்த்தப்படுவார்கள் என தேர்தல் ஆணையம் அளித்த உறுதி மொழிக்கு எதிராக 70 கி.மீட்டருக்கு அப்பால் தேர்தல் பணி வழங்கியுள்ளதால் ஆசிரியர்கள் அதிர்ச்சிக்குள்ளாகியுள்ளனர்.
இது குறித்து தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி மாநிலத்துணைத் தலைவர் ஜோசப்ரோஸ், மாவட்டத் தலைவர் தாமஸ் அமலநாதன், மாவட்டச் செயலாளர் முத்துப்பாண்டியன், மாவட்டப் பொருளாளர் குமரேசன், மாநிலச் செயற்குழு உறுப்பினர் புரட்சித்தம்பி ஆகியோர் கூட்டாக மாநிலத் தலைமைத் தேர்தல் அலுவலர் திரு.ராஜேஸ் லக்கானி மற்றும் சிவகங்கை மாவட்டத் தேர்தல் நடத்தும் அலுவலர் அவர்களுக்கு அனுப்பியுள்ள கோரிக்கை மனுவில் கூறியுள்ளதாவது:
தமிழ்நாட்டில் வருகிற மே 16ம் தேதி நடைபெற உள்ள சட்டமன்றத் தேர்தலில் வாக்குப்பதிவு மையங்களில் பணியாற்ற வாக்குச்சவாடி தலைமை அலுவலர் மற்றும் வாக்குப்பதிவு அலுவலர்களாக ஆசிரியர்கள் நியமனம் செய்யப்பட்டு முதல்கட்ட பயிற்சி கடந்த 24ம் தேதி முடிந்துள்ள நிலையில் இன்று (7.5.16) நடந்த இரண்டாம் கட்ட பயிற்சி அவரவர் பணியாற்றும் சட்டமன்றத் தொகுதிகளில் நடத்தப்பட்டது. இப்பயிற்சியில் ஏற்கனவே தேர்தல் ஆணையம் வழங்கிய உறுதிமொழிக்கு முற்றிலும் எதிராக தொலை தூரங்களில் பணியமர்த்தப்பட்டுள்ளார்கள்.
அதாவது தேவகோட்டை மற்றும் சாக்கோட்டை வட்டாரங்களில் பணியாற்றும் ஆசிரியர்கள் திருப்புவனத்திற்கும், எஸ்.புதூர் மற்றும் காளையார்கோயில் ஒன்றிய ஆசிரியர்கள் காரைக்குடி தொகுதிக்கும், மானாமதுரை, சிவகங்கை ஆசிரியர்கள் திருப்பத்தூர் தொகுதிக்கும், எஞ்சிய ஆசிரியர்கள் பல்வேறு பகுதிகளுக்கும் பரவலாக பணியமர்த்தப்பட்டுள்ளார்கள். இது ஆசிரியர்கள் பணியாற்றும் தொகுதியிலேயே பணியமர்த்தப்படுவார்கள் என தேர்தல் ஆணையம் அளித்த உறுதிமொழிக்கு முற்றிலும் எதிரானது ஆகும். இதனால் பயிற்சி மற்றும் தேர்தல் பணிக்கு செல்லும் ஆசிரியர்கள் மிகவும் சிரமங்களை எதிர்நோக்க வேண்டியுள்ளது.
மற்ற மாவட்டங்களிலிருந்து இங்கு பணியாற்றும் ஆசிரியர்களுக்கு இதுவரை தபால் வாக்கு வழங்கப்படவில்லை. இது குறித்து தெளிவான விளக்கத்தினை உதவித் தேர்தல் நடத்தும் அலுவலர்கள் கூறவில்லை. 100 சதவீத வாக்களிப்பை நிறைவு செய்ய தபால் வாக்கினை முறையாக குறிப்பிட்ட கால கெடுவுக்குள் வழங்க வேண்டும்.
மேலும் தேர்தல் பணியிலிருந்து விலக்களிக்க உறுதியளிக்கப்பட்ட கர்ப்பிணி மற்றும் பாலூட்டும் தாயார், கடுமையான அறுவைச்சிக்pச்சை செய்துகொண்டோர் என ஒருசில ஆசிரியர்களுக்கு மருத்துவச் சான்றிதழ் சமர்ப்பிக்கப்பட்ட நிலையிலும் மீண்டும் அவர்களுக்கு பணி உத்தரவு வழங்கப்பட்டள்ளது. இதை இரத்து செய்ய அவர்கள் மாவட்ட மற்றும் தாலுகா அலுவலகங்களுக்கு அலைய வேண்டிய நிலையுள்ளது. எனவே பாதிப்புக்குள்ளாகியுள்ள ஆசிரிர்களுக்கு தேர்தல் பணியிலிருந்து விலக்களிக்க வேண்டும்.
ஆசிரியர்களின் நலன் கருதி அவரவர் பணியாற்றும் தொகுதிக்குள்ளேயே தேர்தல் பணி வழங்கவும், ஒருசில இடங்களில் ஏற்பட்டுள்ள குறைகளை களைய நடவடிக்கை எடுக்க வேண்டுமாறு தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி சார்பில் கேட்டுக்கொள்வதாக தெரிவித்துள்ளனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக