பக்கங்கள்

இலவச SMS களை உடனுக்குடன் பெற ON TNPTFSVG அல்லது ON TNPTFMuthupandian என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு அனுப்பி இலவச குறுந்தகவல்களை(SMS) பெறுங்கள். DND (Do NOT Disturb) சர்வீஸ்ல் உள்ள எண்கள் அதனை(DND) நீக்கிய பிறகே இச்சேவையை பெறமுடியும். plz call 1909

Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

11/26/2013

ரூ.1 கோடி கேட்டு கடத்தப்பட்ட மதுரை பள்ளி மாணவனை மீட்டு பெற்றோரிடம் ஒப்படைத்த போலீசார்

மதுரை தபால்தந்தி நகர் நட்சத்திர நகர் பகுதியை சேர்ந்தவர் ரவிக்குமார். இவர் பரவை காய்கறி மார்க்கெட்டில் உருளைக்கிழங்கு மொத்த வியாபாரம் மற்றும் ஒப்பந்ததாரராகவும் இருந்து வருகிறார். இவரது மகன் கிரண் ரோகித் (வயது 14). மதுரை மாட்டுத்தாவணி பகுதியில் உள்ள ஒரு தனியார் மெட்ரிக் குலேசன் பள்ளியில் 9–ம் வகுப்பு படித்து வருகிறார்.
இந்த நிலையில் நேற்று காலை வழக்கம்போல் பள்ளிக்கு சென்ற கிரண் ரோகித் மாலையில் வீடு திரும்பினார். பள்ளியில் இருந்து பஸ்சில் வந்த அவர் நட்சத்திர நகரில் இறங்கி தனது வீட்டுக்கு நடந்து சென்று கொண்டிருந்தார்.
அப்போது அந்த வழியாக வந்த இன்னோவா கார் திடீரென கிரண்ரோகித்தை வழிமறித்து நின்றது. பின்னர் அதில் இருந்து இறங்கிய ஒரு கும்பல் கண்ணிமைக்கும் நேரத்தில் கிரண்ரோகித்தை குண்டுகட்டாக தூக்கி காரில் ஏற்றியது. பின்னர் அந்த கார் மின்னல் வேத்தில் அங்கிருந்து சென்று மறைந்தது.
இந்த சம்பவத்தை நேரில் பார்த்த அப்பகுதியினர் மதுரை தல்லாகுளம் போலீஸ் உதவி கமிஷனர் அலுவலகத்திற்கு தகவல் அளித்தனர். அதன் பேரில் உதவி கமிஷனர் தனபால் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்தனர். பின்னர் இது பற்றி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பாலகிருஷ்ணனுக்கு தகவல் கொடுத்தனர்.
காரில் கடத்தப்பட்ட மாணவன் யார்? அவரை கடத்தியது யார்? எதற்காக கடத்தினார்கள்? என்று போலீசார் சம்பவ இடத்தில் துரிதமாக விசாரணை நடத்திக் கொண்டிருந்தனர்.
இதற்கிடையே கிரண்ரோகித்தின் தந்தை ரவிக்குமாருக்கு செல்போனில் ஒரு அழைப்பு வந்தது. அதில் பேசிய மர்ம நபர் கிரண்ரோகித்தை தாங்கள் கடத்தி வைத்திருப்பதாகவும், ரூ.1 கோடி கொடுத்தால் உயிருடன் விட்டுவிடுவதாகவும் கூறியுள்ளான். அப்போதுதான் ரவிக்குமாருக்கு தனது மகன் கடத்தப்பட்டுள்ளான் என்ற விபரம் தெரியவந்தது. உடனடியாக அவரும் போலீசில் புகார் அளித்தார்.
மாணவர் காரில் கடத்தப்பட்டதால் அந்த காரை போலீசார் மடக்கி பிடிக்க மதுரை, திருச்சி, புதுக்கோட்டை, கரூர் உள்ளிட்ட அனைத்து மாவட்ட தலைநகரங்களில் உள்ள போலீஸ் அதிகாரிகளுக்கு தகவல் கொடுத்தனர். அதன்படி அனைத்து மாவட்ட எல்லை பகுதிகளிலும் உள்ள சோதனை சாவடிகள் உஷார்படுத்தப்பட்டன.
இதனை தொடர்ந்து சோதனை சாவடிகளை கடந்து செல்லும் வாகனங்களை போலீசார் தீவிரமாக கண்காணித்தனர்.
இந்தநிலையில் இரவு 8.30 மணியளவில் புதுக்கோட்டை மாவட்டம் கீரனூர் அருகே கிள்ளுக்கோட்டை பிரிவு ரோடு பகுதியில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அந்த வழியாக வந்த ஒரு காரை நிறுத்தினர். ஆனால் அந்த கார் நிற்காமல் சென்றது. இதனால் சந்தேகம் அடைந்த போலீசார் மற்றொரு வாகனத்தில் அந்த காரை துரத்தி சென்றனர்.
ஆனால் தொடர்ந்து சென்ற அந்த கார் சிறிது தூரத்தில் ரெயில்வே கேட்டை கடந்து செல்ல முடியாமலும், பாதை தெரியாமலும் நின்றது.
அதற்குள் அந்த இடத்திற்கு வந்த போலீசார் காரில் இருந்தவர்களை பிடிக்க முயன்றனர். ஆனால் காரில் இருந்த 3 பேர் அங்கிருந்து தப்பி ஓடினார்கள். டிரைவரும் இறங்கி ஓட முயன்றபோது இன்ஸ்பெக்டர் வேலுசாமி மற்றும் போலீசார் மடக்கினார்கள். அப்போது அரிவாளால் போலீசாரை அந்த கும்பல் தாக்க முயன்றது.
இதையடுத்து இன்ஸ்பெக்டர் வேலுசாமி தனது கைத்துப்பாக்கியை எடுத்து தப்பி ஓடியவர்கள் மீது சுட்டார். 3 ரவுண்டு சுட்டதில் ஒருவருக்கு மட்டும் காலில் குண்டு பாய்ந்து ரோட்டில் சுருண்டு விழுந்தார். மற்ற 3 பேரும் தப்பி விட்டனர்.
காருக்குள் போலீசார் பார்த்தபோது அதில் பயந்த நிலையில் பள்ளி மாணவன் இருப்பதை கண்டனர். அவரிடம் விசாரித்த போது மதுரையில் இருந்து தான் கடத்தப்பட்டதாக தெரிவித்தான். இதையடுத்து மாணவன் கிரண்ரோகித்தை பத்திரமாக மீட்டு கீரனூர் போலீஸ் நிலையத்திற்கு அழைத்து வந்தனர். இதுபற்றிய தகவல் மதுரை போலீசாருக்கும் தெரிவிக்கப்பட்டது.
போலீசார் துப்பாக்கியால் சுட்டதில் காயம் அடைந்தவரிடம் விசாரித்ததில் அவர் திருச்சி கீழபுலிவார்டு ரோட்டை சேர்ந்த கணேசன் (40) என்று தெரியவந்தது. பின்னர் அவரை திருச்சி அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.
தொடர்ந்து போலீசார் நடத்திய விசாரணையில் தப்பி ஓடியவர்களில் ஒருவன் கடத்தப்பட்ட மாணவரின் தாத்தாவிடம் கார் டிரைவராக வேலை பார்த்தவன் என்று தெரியவந்துள்ளது. பணத்துக்காக திட்டமிட்டு அவர்கள் இந்த கடத்தல் சம்பவத்தை அரங்கேற்றியதும் போலீசாருக்கு தெரியவந்துள்ளது.
தப்பி ஓடியவர்களை பிடிக்க திருச்சி சரக டி.ஐ.ஜி. அமல்ராஜ் உத்தரவின் பேரில் 3 தனிப்படைகள் அமைக்கப்பட்டு தேடும் பணியை தீவிரப்படுத்தினர்.
இந்தநிலையில் இன்று காலை கீரனூர் அருகே உள்ள பள்ளத்துப்பட்டி பகுதியில் கரும்பு தோட்டத்திற்குள் பதுங்கியிருந்த மாணவன் கடத்தலில் தொடர்புடைய பிரபு (30) என்பவரை போலீசார் கைது செய்தனர். அவரிடம் விசாரணை நடத்தியபோது திண்டுக்கல் மாவட்டம் கோனாபட்டியை சேர்ந்தவர் என்றும், அவர் கடந்த ஓராண்டுக்கு முன்பு கடத்தப்பட்ட மாணவன் கிரண் ரோகித்தின் தாத்தாவிடம் டிரைவராக வேலை பார்த்ததும் தெரிய வந்தது.
மேலும் இந்த கடத்தலுக்கு பிரபுதான் மூளையாக செயல்பட்டுள்ளார் என்ற தகவலும் கிடைத்துள்ளது. இவர் தற்போது திருச்சியில் வாடகை கார் ஓட்டி வருகிறார். அப்போதுதான் பிடிபட்ட டிரைவர் கணேசனுடன் பழக்கம் ஏற்பட்டு இந்த கடத்தல் சம்பவத்தை அரங்கேற்றி உள்ளதும் விசாரணையில் தெரியவந்துள்ளது. மேலும் இந்த கடத்தலில் ஈடுபட்டது சந்துரு, குமார் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
இந்த கடத்தல் சம்பவம் மதுரை, திருச்சி மற்றும் புதுக்கோட்டை மாவட்டங்களில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக