சிங்கம்புணரி, ஜூலை 19: சிவகங்கை மாவட்டத்தில் 52 பள்ளியின் கட்டடங்கள் இடிந்து விழும் அபாய நிலையில் உள்ளதாக, தேசிய குழந்தைகள் உரிமைகள் ஆணையத்தின் கல்வி உரிமைச் சட்ட சிறப்புப் பிரதிநிதி ஹென்றி திபேன் தெரிவித்துள்ளார்.தேசிய குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு ஆணையத்தின் சார்பாக, குழந்தைகள் இலவச கட்டாயக் கல்வி உரிமைச் சட்டம் 2009-ன் சமூக தணிக்கைக் கூட்டம், எஸ்.புதூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு ஹென்றி திபேன் பேசியது:மாவட்டத்தில் 52 பள்ளிக் கட்டடங்கள் இடியும் நிலையில் உள்ளன. ஏதாவது பாதிப்பு ஏற்படுமானால், அரசுதான் பொறுப்பேற்க வேண்டும். கல்வி உரிமைச் சட்டம் வழிகாட்டும் நெறிமுறை அல்ல. அடிப்படை உரிமையாகச் சட்டம் இயற்றப்பட்டுள்ளது. குழந்தைக் கல்வி உரிமைச் சட்டம் 2009-ல் நிறைவேற்றி, காலதாமதமாக அமல்படுத்திக் கொண்டிருக்கிறோம். இச்சட்டப்படி, பள்ளிகளில் பணம் வசூல் செய்யக்கூடாது. பெற்றோர்-ஆசிரியர் சங்கத்துக்கு பணம் வசூல் செய்யக்கூடாது. பள்ளிச் சேர்க்கைக்கு பிறப்புச் சான்றிதழ் கட்டாயப்படுத்தக் கூடாது. அருகாமையில் வசிப்போருக்கு முன்னுரிமை வழங்கப்பட வேண்டும். இப்பகுதி பின்தங்கிய பகுதியாக இருந்தாலும், கல்விக் கூடங்கள் சிறப்பாக இருக்க வேண்டும் என்றார் அவர். கூட்டத்தில், எஸ்.புதூர் ஒன்றியத்தில் உள்ள தருமபட்டி, கரிசல்பட்டி, புழுதிபட்டி, எஸ்.புதூர், குன்னத்தூர், கிழவயல் ஆகிய ஊராட்சிகளில் உள்ள 18 பள்ளிகள் ஆய்வுக்கு எடுத்துக்கொள்ளப்பட்டன.முன்னதாக, எஸ்.புதூர் ஒருங்கிணைப்பாளர் நவநீத கிருஷ்ணன் வரவேற்றுப் பேசினார். இதில், மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் செல்லம், மாவட்டக் கல்வி அலுவலர் சண்முகவேல், ஒன்றியக் குழுத் தலைவர் வி.பி. ஜெகந்நாதன், ஒன்றிய ஆணையர் ரவீந்திரன், வட்டார வளர்ச்சி அலுவலர் சையது முகமது, கிழவயல் ஊராட்சித் தலைவர் வள்ளியப்பன், தருமபட்டி ஊராட்சித் தலைவர் காந்திமதி, மாவட்ட ஒருங்கிணைப்பாளர் சொக்கு, மனித உரிமை மீறல் மாவட்ட ஒருங்கிணைப்பாளர்கள் ரசீந்திர குமார், பிரமன் ஆகியோர் கலந்துகொண்டனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக