பக்கங்கள்

இலவச SMS களை உடனுக்குடன் பெற ON TNPTFSVG அல்லது ON TNPTFMuthupandian என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு அனுப்பி இலவச குறுந்தகவல்களை(SMS) பெறுங்கள். DND (Do NOT Disturb) சர்வீஸ்ல் உள்ள எண்கள் அதனை(DND) நீக்கிய பிறகே இச்சேவையை பெறமுடியும். plz call 1909

Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

8/11/2011

சமச்சீர் கல்வித் திட்டம்-அரசின் குழப்பத்தால் அநியாயமாக வீணாகிப் போன 60 நாட்கள்!

கடந்த 60 நாட்களாக விடை தெரியாமல் நீண்டு வந்த சமச்சீர் கல்வித் திட்டக் குழப்பத்திற்கு உச்சநீதிமன்றம் முற்றுப்புள்ளி வைத்து விட்டது. ஆனால் இனிமேல்தான் மாணவர்களுக்கும், ஆசிரியர்களுக்கும், பெற்றோர்களுக்கும் பிரச்சினையே ஆரம்பமாகப் போகிறது.

அரசு - உனக்கு இலவச லேப்டாப் வேணுமா?
மாணவன் - வேண்டாம்
அரசு - இலவச சைக்கிள் வேண்டுமா?
மாணவன் - வேண்டாம்
அரசு - வேற என்ன வேணும்?
மாணவன் - படிக்க ஏதாவது ஒரு புக் கொடுங்க போதும்

இதுதான் கடந்த 60 நாட்களில் தமிழகத்தை அதிகமாக வலம் வந்த எஸ்.எம்.எஸ்-ஸாக இருக்க முடியும். அந்த அளவுக்கு சமச்சீர் கல்வித் திட்டம் பெரும் பரபரப்பையும், சலசலப்பையும், விரக்தியையும் மக்கள் மத்தியில் ஏற்படுத்தி விட்டது.

மிக மிக எளிதாக அணுகப்பட்டிருக்க வேண்டிய ஒரு விஷயத்தை மிகப் பெரிய சட்டச் சிக்கலாக்கி கடைசியில் தனக்குப் பாதகமாக அதை முடித்துள்ளது தமிழக அரசு. மக்களின் மிகப் பெரிய வரவேற்புடன், அமோக ஆதரவுடன், ஆட்சிக்கு வந்த அதிமுக அரசுக்கு இது நிச்சயம் மிகப் பெரிய பின்னடைவுதான், சறுக்கல்தான் என்பதை யாரும் மறுக்க முடியாது.

மெட்ரிகுலேஷன் பள்ளிகளில் தாறுமாறாக வசூலிக்கப்படும் கட்டணங்கள், மாணவர்களால் தாங்க முடியாத அளவுக்கு திணிக்கப்படும் படிப்புச் சுமை, ஒவ்வொரு பள்ளியிலும் ஒரு பாடம் என்று பல்வேறு குறைபாடுகள் இருந்ததால் அனைத்தையும் களையும் வகையில், அனைத்துத் தரப்பு மாணவர்களும், ஒரே மாதிரியான பாடத்தை, தரமான பாடத்தைப் படிக்க வேண்டும் என்பதற்காக கடந்த திமுக ஆட்சியின்போது சமச்சீர் கல்வித் திட்டம் கொண்டு வரப்படும் என அறிவிக்கப்பட்டது. இதற்காக ஒரு வல்லுனர் குழுவையும் அமைத்து ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டன. அந்தக் கமிட்டி கொடுத்த பரிந்துரைகளின்படி சமச்சீர் கல்வித் திட்ட சட்டம் கொண்டு வரப்பட்டு கடந்த 2010ம் ஆண்டு ஜனவரி மாதம் 11ம் தேதி சட்டசபையில் இயற்றப்பட்டது.

இதைத் தொடர்ந்து 1 மற்றும் 6 ஆகிய இரு வகுப்புகளுக்கு மட்டும் முதல் கட்டமாக 2010ம் ஆண்டு கல்வியாண்டில் சமச்சீர் கல்வித் திட்டம் அமல்படுத்தப்பட்டது. 2011ம் ஆண்டு முதல் மீதமுள்ள அனைத்து வகுப்புகளுக்கும் சமச்சீர் கல்வித் திட்டம் விரிவுபடுத்தப்படும் என்றும் அறிவிக்கப்பட்டது.

இந்த ஆண்டு சமச்சீர் கல்வித் திட்டம் 1 முதல் 10ம் வகுப்பு வரை அமலாகவிருந்த நிலையில் திடீரென ஆட்சி மாற்றம் ஏற்படவே திட்டமும் அனாதையானது. அதிமுக ஆட்சிக்கு வந்ததும், இந்தத் திட்டம் தரமற்றத்தாக உள்ளது, எனவே இதுகுறித்து ஆராய்ந்த பின்னர் அடுத்த ஆண்டு இதை அமல்படுத்துவோம். இந்த ஆண்டு பழைய பாட முறையில்தான் வகுப்புகள் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டது.

திமுகவுக்கு சாதகமான விஷயங்கள் புத்தகங்களில் இருப்பதாகவும், உதயசூரியன் படம் இடம் பெற்றுள்ளது, கருணாநிதியைப் புகழும் வககையில் வரிகள் உள்ளன, கனிமொழியின் கவிதை இடம்பெற்றுள்ளது என்று இதற்குப் பல காரணங்கள் கூறப்பட்டன.

இதை எதிர்த்து 2011, மே 24ம் தேதி சமச்சீர் கல்வித் திட்டத்தை அனைத்து வகுப்புகளுக்கும் இந்த ஆண்டே அமல்படுத்த வேண்டும் என்று கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்குகள் தொடரப்பட்டன. இதை விசாரித்த உயர்நீதிமன்றம் திட்டமிடபடி அனைத்து வகுப்புகளுக்கும் இதை அமல்படுத்த உத்தரவிட்டது. இதை எதிர்த்து அரசு உச்சநீதிமன்றத்தில்அப்பீல் செய்தது. அதை விசாரித்த உச்சநீதிமன்றம், 1, 6 வகுப்புகளில் சமச்சீர் கல்வி தொடர வேண்டும். பிறவகுப்புகள் குறித்து கமிட்டி அமைத்து ஆய்வு செய்ய உத்தரவிட்டது. அதன்படி அமைக்கப்பட்ட கமிட்டி தனது அறிக்கையை உயர்நீதிமன்றத்தில்தாக்கல் செய்தது. அதில் தரமற்ற பாடத் திட்டமாக இருப்பதால் இந்த ஆண்டு நடைமுறைப்படுத்த முடியாது என்று கூறியிருந்தது.

இதை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம், 2011, ஜூலை 18ம் தேதி பிறப்பித்த உத்தரவில், சமச்சீர் கல்வி திட்டத்தை நிறுத்திவைக்க தமிழக அரசு கொண்டு வந்த சட்டம் செல்லாது என்றும், சமச்சீர் கல்வி புத்தகங்களை 22ம் தேதிக்குள் வழங்கவும் உத்தரவிட்டது.

இதை எதிர்த்து மீண்டும் தமிழக அரசு உச்சநீதிமன்றத்தை நாடியது. அந்த வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம், பத்து நாட்களுக்குள் சமச்சீர் கல்வித் திட்டத்தை அமல்படுத்த வேண்டும், பாடப் புத்தகங்களை வழங்க வேண்டும் என்று அதிரடியாக உத்தரவிட்டது.

சமச்சீர் கல்வித் திட்டக் குழப்பம் தொடர்பாக ஜூன் 1ம் தேதி திறந்திருக்கப்படவேண்டிய பள்ளிகள் அனைத்தும் அரசின் உத்தரவை ஏற்று ஜூன் 15ம் தேதிதான் திறக்கப்பட்டன. சமச்சீர் கல்வி தொடர்பான குழப்பம் அப்போதைக்கு முடிவுக்கு வராத நிலையில், புத்தகம் இல்லாமல் பிள்ளைகள் பள்ளிக்கூடத்திற்குள் கால் எடுத்து வைத்தனர். நேற்று வரை கிட்டத்தட்ட 60 நாட்களாக முறையான புத்தகங்கள் இல்லாமல் பொதுவாக படிக்கும் நிலைக்குத் தள்ளப்பட்டனர்.

சமச்சீர் கல்வித் திட்டம் தொடர்பான தமிழக அரசின் நிலையால் ஏகப்பட்ட குழப்பங்கள் இப்போது அணிவகுத்து நிற்கின்றன.

1. இதுவரை படித்தெல்லாம் இனி கணக்கில் வரப் போவதில்லை. இனிமேல் அரசு தரப்போகும் சமச்சீர் கல்விப் புத்தகத்தைத்தான் படிக்க வேண்டும். அதாவது இனிமேல்தான் முதலிலிருந்து படிக்கப் போகிறார்கள் பிள்ளைகள். இதனால் கடந்த 60 நாள் படிப்பும் அவர்களுக்கு கிட்டத்தட்ட வீண்தான்.

2. 60 நாள் இழப்பால் பள்ளிகளில் காலாண்டு, அரையாண்டு ஆகிய தேர்வுகளை உரிய காலத்தில் நடத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. அடுத்த மாதம் காலாண்டுத் தேர்வு நடத்தப்பட வேண்டும். ஆனால் எதுவுமே படிக்காத நிலையில் எதை வைத்து காலாண்டுத் தேர்வை நடத்துவது என்ற பெரும் குழப்பத்தில் உள்ளன பள்ளிகள்.

3. கடந்த 60 நாட்களாக கடுமையாக பாதிக்கப்பட்டவர்கள் பத்தாம் வகுப்பு மாணவர்கள்தான். இப்போதெல்லாம் பத்தாம் வகுப்பு மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு 9 மற்றும் 11ம் வகுப்பு பொதுத் தேர்வு முடிந்தவுடனேயே, ஸ்பெஷல் கிளாஸ் என்ற பெயரில் 10, 12 வகுப்புகளுக்குரிய பாடங்களை நடத்த ஆரம்பித்து விடுகிறார்கள். அந்த அடிப்படையில் இந்த முறையும் அதுபோலவே சமச்சீர் கல்வி பாடத் திட்டத்தின் கீழ் பல பள்ளிகளில் பாடங்களை நடத்தி வந்தனர். ஆனால் பழைய பாடத் திட்டமே தொடரும் என்று அரசு திடீரென அறிவித்ததால், அவர்கள் பழைய பாடங்களை நடத்த ஆரம்பித்தார்கள். இப்போது மீண்டும் சமச்சீர் கல்விக்கு மாற வேண்டிய நிலைக்கு அவர்கள் தள்ளப்பட்டுள்ளனர். இதனால் மாறி மாறிப் பாடங்களைப் படித்து தேவையில்லாத டென்ஷனையும், குழப்பத்தையும் சந்தித்ததே மிச்சமாகியுள்ளது.

4. புதிய பாடத் திட்டம் அறிவிக்கப்பட்டிருப்பதால், போர்ஷன்களை விரைவாக எப்படி முடிப்பது என்ற குழப்பத்தில் ஆசிரியர்களும், பள்ளிகளும் உள்ளன. மேலும், 2, 3, 4, 5 ஆகிய வகுப்புக் குழந்தைகளுக்கு அவசரம் அவசரமாக பாடத்தை நடத்த முடியாத நிலையும் இருப்பதால் இவர்களுக்கு பாடத்தை நடத்தும் முறை குறித்தும் ஆசிரியர்கள் பெரும் குழப்பத்தில் உள்ளனர்.

இபப்படிப் பல குழப்பங்கள். மொத்தத்தில் தமிழக அரசு தெளிவான நடவடிக்கையை மேற்கொள்ளாத காரணத்தால், தேவையில்லாத சட்டப் போராட்டத்தில் ஈடுபட்டு நாட்களை கடத்தியதால் மாணவ மாணவியர்களுக்கு மனக் குழப்பம், பதட்டம், மன அழுத்தம், விரக்தி ஆகியவை ஏற்பட்டதே மிச்சமாகியுள்ளது.

இனி பாடத்தை வேகம் வேகமாக நடத்த வேண்டிய நிலைக்கு ஆசிரியர்களும், அதை அவசரம் அவசரமாக படிக்க வேண்டிய கட்டாயத்திற்கு மாணாக்கர்களும் தள்ளப்படுவர். சனிக்கிழமைகளில் இனி முழு நேரம் வகுப்புகள் நடத்தப்படும். பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கு ஸ்பெஷல் கிளாஸ்களின் எண்ணிக்கை மேலும் அதிகரித்து அவர்களது மனச்சுமை மேலும் கூடுதலாகும். பள்ளிகளின் விடுமுறை நாட்கள் குறையும், படி படி என்று படித்துத்தள்ள வேண்டிய நிலைக்கு அனைவரும் தள்ளப்படுவர். இதனால் ஆசிரியர்கள், மாணவர்கள், பெற்றோர்கள் என அனைவருமே பாதிக்கப்படப் போகிறார்கள்.

வேஸ்ட் ஆகிப் போனது 60 நாள்தானே என்று சாதாரணமாக நினைக்க முடியாது. காரணம், 2, 3, 4, 5 ஆகிய வகுப்பு மாணவர்களுக்கு அதி வேகமாக பாடத்தை நடத்தினால் நிச்சயம் அவர்களால் கிரகிக்க முடியாது. மேலும் சமச்சீர் கல்வித் திட்டம் புதிய பாடத் திட்டம் என்பதால் ஆசிரியர்களும் முதலில் தங்களைத் தெளிவபுடுத்திக் கொள்ள வேண்டிய நிலை உள்ளது. எனவே இதில் நடைமுறைச் சிக்கல்கள் அதிகம் என்பதில் சந்தேகமில்லை.

காலாண்டுத்தேர்வை முடிக்க வேண்டிய நேரத்தில் முதலிலிருந்து படிக்கப் போகும் தமிழக மாணவ, மாணவியர்கள் நிம்மதியாகப் படிக்கும் மன நிலையில் இல்லாத நிலையை அரசு ஏற்படுத்தி விட்டது. சர்ச்சைக்குரிய பகுதிகளை புத்தகத்திலிருந்து கிழித்தோ அல்லது அவற்றை பாடத் திட்டத்திலிருந்து நீக்கியோ அல்லது இதுபோல ஏதாவது ஒரு வழியைக் கண்டுபிடித்து அதை சரி செய்தோ புத்தகங்களைக் கொடுத்து பிள்ளைகளை படிக்க வைத்திருக்கலாம். அடுத்த ஆண்டு கூட திட்டத்தில் மாற்றங்களைக் கொண்டு வந்திருக்கலாம். ஆனால் உடும்புப் பிடிவாதமாக அரசு நடந்து கொண்டதால் பாதிக்கப்பட்டிருப்பது அப்பாவி மாணவ மாணவிகளும் அவர்களைப் பெற்ற பெற்றோர்களும், பள்ளிக்கூடங்களும், ஆசிரியர்களும்தான்.

எந்த மக்கள் அதிமுகவை மலை போல நம்பி வாக்களித்து ஆட்சிப் பொறுப்புக்குக் கொண்டு வந்தார்களோ, அந்த மக்களை அதிமுக அரசு எடுத்த எடுப்பிலேயே புலம்ப வைத்து விட்டது நிச்சயம் வேதனையான விஷயம்தான்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக