மதுரை, ஏப்.10-
தகுதித் தேர்வு எழுத வேண்டும் என்ற தமிழக அரசின் நடவடிக்கை தேசிய ஆசிரியர் கல்வி கவுன்சில் விதிக்கு எதிராக இருப்பதாக தொடர்ந்த வழக்கில் காளையார்கோவில் ஆசிரியர் தகுதித் தேர்வு எழுத தேவையில்லை என்று மதுரை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
ஆசிரியர் தகுதி தேர்வு
சிவகங்கை மாவட்டம் கல்லூரணியை சேர்ந்தவர் ஆர்.தங்கம். இவர், மதுரை ஐகோர்ட்டு கிளையில் தாக்கல் செய்துள்ள மனுவில் கூறி இருப்பதாவது:-
கடந்த 2009-ம் ஆண்டு பட்டதாரி ஆசிரியர்கள் தேர்வு செய்யப்பட உள்ளதாக தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவிப்பு வெளியிட்டது. அந்த அறிவிப்பின்படி கடந்த 15.9.2010 அன்று எனக்கு பணி நியமன உத்தரவு வழங்கப்பட்டது. நான், காளையார்கோவில் ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் பட்டதாரி ஆசிரியராக பணியாற்றி வருகிறேன்.
இந்த நிலையில் 23.8.2010 -க்கு பின்பு பணியில் சேர்ந்த பட்டதாரி ஆசிரியர்கள், இடைநிலை ஆசிரியர்கள் ஆசிரியர் தகுதித் தேர்வு எழுதி தேர்ச்சி பெற வேண்டும் என்று தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியத் தலைவர் 7.3.2012 அன்று அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.
எதிரானது
தேசிய ஆசிரியர் கல்வி கவுன்சில் 23.8.2010-க்கு முன்பு ஆசிரியர் பணிக்கான தேர்வு நடைமுறைகள் தொடங்கி, அதன் அடிப்படையில் 23.8.2010-க்கு பின்பு பணியில் சேர்ந்தவர்கள் தகுதித் தேர்வு எழுத தேவையில்லை என்று கூறி உள்ளது.
எனவே, 23.8.2010-க்கு பின்பு பணியில் சேர்ந்த அனைத்து ஆசிரியர்களும் தகுதித் தேர்வை எழுத வேண்டும் என்ற ஆசிரியர் தேர்வு வாரியத்தின் உத்தரவு தேசிய ஆசிரியர் கல்வி கவுன்சிலின் நடவடிக்கைக்கு எதிராக உள்ளது.
என்னைப் பொறுத்தமட்டில் 2009-ம் ஆண்டு வெளியிடப்பட்ட அறிவிப்பின் அடிப்படையில் தான் பணியில் சேர்ந்துள்ளேன். 15.9.2010 அன்று பணி நியமன உத்தரவு வழங்கப்பட்டுள்ளதை சுட்டிக்காட்டி என்னை தேர்வு எழுத வேண்டும் என்று வலியுறுத்துவது சரியல்ல. தேசிய ஆசிரியர் கல்வி கவுன்சில் விதிப்படி நான் தேர்வு எழுத வேண்டிய தேவையில்லை.
தேர்வு எழுத தேவையில்லை
எனவே 23.8.2010-க்கு பின்பு ஆசிரியர் பணியில் சேர்ந்த அனைவரும் தகுதித் தேர்வு எழுத வேண்டும் என்ற உத்தரவை ரத்து செய்ய வேண்டும். 23.8.2010-க்கு முன்பு தொடங்கிய தேர்வு அடிப்படையில் 23.8.2010-க்கு பின்பு பணியில் சேர்ந்த பட்டதாரி, இடைநிலை ஆசிரியர்கள் தகுதித் தேர்வு எழுத தேவையில்லை என்று உத்தரவிட வேண்டும்.
இவ்வாறு மனுவில் கூறப்பட்டு இருந்தது.
இந்த மனு நீதிபதி கே.வெங்கட்ராமன் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. மனுதாரர் சார்பில் வக்கீல்கள் எம்.திருநாவுக்கரசு, பி.ராஜேந்திரபாபு, சுரேஷ் ஆகியோர் ஆஜராகி வாதாடினர். மனுவை விசாரித்த நீதிபதி, மனுதாரர் ஆசிரியர் தகுதித் தேர்வு எழுத தேவையில்லை என்று இடைக்கால உத்தரவு பிறப்பித்தார்.
மேலும் இந்த வழக்கு சம்பந்தமாக தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரிய தலைவர் பதில் அளிக்க நோட்டீசு அனுப்ப உத்தரவிட்டார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக