சென்னை: தமிழகத்தில் ஜூலை 12ம் தேதி, ஆசிரியர் தகுதித் தேர்வு நடக்க
இருக்கிறது. அன்றைய தினம் சி.பி.எஸ்.இ., பள்ளி உட்பட அனைத்து
பள்ளிகளுக்கும், விடுமுறை அளிக்கப்பட்டுள்ளதாக
தெரிவிக்கப்பட்டுள்ளது.கட்டாயக் கல்வி உரிமைச் சட்டத்தின் படி, ஒன்றாம்
வகுப்பு முதல் 8ம் வகுப்பு வரையிலான இடைநிலை மற்றும் பட்டதாரி ஆசிரியர்கள்,
ஆசிரியர் தகுதித் தேர்வை எழுதி, தேர்ச்சி பெற வேண்டும். ஆசிரியர் பணியில்
சேர இருப்பவர்களும், இந்த தேர்வை எழுதி, தேர்ச்சி பெற வேண்டும். இதற்கான
தகுதித் தேர்வு, வரும், ஜூலை 12ம் தேதி, 1,040 மையங்களில் நடக்கிறது. இதில்
ஆசிரியர் பணியில் இருப்பவர்களும், பணிக்காக காத்திருப்பவர்களும் சேர்த்து,
ஏறத்தாழ 6 லட்சத்து 56 ஆயிரம் பேர் எழுத உள்ளனர். சனி, ஞாயிறு போன்ற
விடுமுறை நாட்களில் பொதுவாக போட்டித் தேர்வுகள் நடைபெறும். இந்த நாட்களில்,
மற்ற போட்டித் தேர்வுகள் நடைபெற இருப்பதால், வேறு வழியில்லாமல்
வியாழக்கிழமை நடைபெறுகிறது. பணியில் இருக்கும் ஆசிரியர்கள், இந்தத்
தேர்வில் அதிகளவில் பங்கேற்க இருப்பதால், வசதியாக அன்று ஒருநாள்,
சி.பி.எஸ்.இ., உட்பட அனைத்து பள்ளிகளுக்கும், விடுமுறை அளித்து உத்தரவிட
இருப்பதாக, நேற்று இரவு, டி.ஆர்.பி., வட்டாரங்கள் தெரிவித்தன. இதற்கு
பதிலாக, வேறொரு நாளில் இந்த வேலை நாள் ஈடு செய்யப்படும் என்று
தெரிவிக்கப்பட்டுள்ளது