2008, 2009, 2010-ம் ஆண்டுகளில்
வேலைவாய்ப்பு பதிவை புதுப்பிக்க தவறியவர்களுக்கு தமிழ்நாடு அரசின்
வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை சிறப்பு சலுகைகளை அறிவித்துள்ளது.
இதன்படி மூன்று மாதங்களுக்குள் ஆன்லைன் மூலமாகவோ அல்லது மாவட்ட
வேலைவாய்ப்பு அலுவலகங்கள் மூலமாகவோ தங்கள் பதிவினைப் புதுப்பித்துக்
கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை இயக்குனர் மகேசன் காசிராஜன் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது,
2008, 2009 மற்றும் 2010 ஆகிய ஆண்டுகளில் வேலைவாய்ப்பு அலுவலகப் பதிவினை
புதுப்பிக்கத் தவறியவர்களுக்கு மீண்டும் ஒரு முறை புதுப்பித்து கொள்ள
சிறப்பு புதுப்பித்தல் சலுகையை தமிழக அரசு வழங்கியுள்ளது. இச்சலுகையை பெற
விரும்பும் மனுதாரர்கள் அரசாணை வெளியிடப்படும் நாளிலிருந்து மூன்று
மாதங்களுக்குள் ஆன்லைன் மூலமாகவோ அல்லது மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகங்கள்
மூலமாகவோ தங்கள் பதிவினைப் புதுப்பித்துக் கொள்ளலாம்.
18.10.2012-க்குப்பின் பெறப்படும் கோரிக்கைகள் நிராகரிக்கப்படும்.
1.01.2008-க்கு முன் புதுப்பிக்க தவறியவர்களின் கோரிக்கைகள்
ஏற்றுக்கொள்ளப்பட மாட்டாது. இணையதளம் மூலம் பதிவினை புதுப்பிக்க
இயலாதவர்கள் சம்பந்தப்பட்ட வேலைவாய்ப்பு அலுவலகங்களுக்கு வேலைவாய்ப்பு
அடையாள அட்டையின் நகலுடன் நேரிலோ அல்லது பதிவஞ்சல் மூலமோ மனு செய்து
கொள்ளலாம்.