சென்னை, ஆக.10: ஆசிரியர் தகுதித் தேர்வு எழுதிய 6 லட்சம் பேரில் சுமார் 2 ஆயிரம் பேர் மட்டுமே தேர்ச்சி பெற்றுள்ளனர். இது ஆசிரியர் தேர்வு வாரிய வட்டாரங்களை அதிர்ச்சியடைய வைத்துள்ளது. ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற ஒவ்வொரு தாளிலும் 150-க்கு குறைந்தபட்சம் 90 மதிப்பெண் பெற வேண்டும். மொத்தமாக 2 ஆயிரம் பேர் மட்டுமே தேர்ச்சி பெற்றுள்ளதால், ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி மதிப்பெண்ணை குறைப்பது தொடர்பாக தமிழக அரசிடம் ஆசிரியர் தேர்வு வாரியம் ஆலோசனை நடத்தும் எனத் தெரிகிறது. இந்தத் தேர்வின் அடிப்படையில் 18 ஆயிரம் பட்டதாரி ஆசிரியர்களும், 5 ஆயிரம் இடைநிலை ஆசிரியர்களும் தேர்ந்தெடுக்கப்பட உள்ளது குறிப்பிடத்தக்கது. இலவச கட்டாயக் கல்வி உரிமைச் சட்டத்தின்படி, ஒன்று முதல் எட்டாம் வகுப்பு வரை பணியில் சேரும் இடைநிலை, பட்டதாரி ஆசிரியர்கள் அனைவரும் இந்தத் தேர்வில் தேர்ச்சி பெறுவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இந்தத் தேர்வில் பெறும் மதிப்பெண் அடிப்படையில் பட்டதாரி ஆசிரியர் நியமனமும், இந்தத் தேர்வில் வெற்றி பெறுபவர்களில் மாநில பதிவு மூப்பின் அடிப்படையில் இடைநிலை ஆசிரியர் நியமனமும் நடைபெறும் என்று தமிழக அரசு பேரவையில் அறிவித்துள்ளது. ஆசிரியர் தகுதித் தேர்வு எழுத 6.56 லட்சம் பேர் விண்ணப்பித்தனர். தமிழகம் முழுவதும் 1,072 மையங்களில் இந்தத் தேர்வு ஜூலை 12-ம் தேதி நடைபெற்றது. 6 லட்சத்துக்கும் அதிகமானோர் தேர்வில் பங்கேற்றனர். இடைநிலை ஆசிரியர்களுக்கான முதல் தாளை 2.5 லட்சம் பேரும், இரண்டாம் தாளை சுமார் 4 லட்சம் பேரும் எழுதினர். இதில் 55 ஆயிரம் பேர் இரண்டு தாள்களையும் எழுதினர். ஒவ்வொரு தாளிலும் அப்ஜெக்டிவ் வடிவில் 150 மதிப்பெண்ணுக்கு கேள்விகள் இடம்பெற்றிருந்தன. கேள்விகளுக்கு விடையளிக்க ஒன்றரை மணி நேரம் வழங்கப்பட்டது. தேர்வில் தேர்ச்சி பெற குறைந்தபட்சம் 90 மதிப்பெண் பெற வேண்டும். இந்த இரண்டு விடைத்தாள்களும் மிகவும் கடினமாக இருந்ததாகத் தேர்வர்கள் புகார் தெரிவித்தனர். கணிதப் பாட வினாக்களுக்கு விடையளிக்க நேரம் போதவில்லை என்றும் பரவலாகப் புகார் தெரிவித்தனர். இந்த விடைத்தாள்கள் அனைத்தும் சென்னைக்குக் கொண்டுவரப்பட்டு ஸ்கேன் செய்யப்பட்டன. முக்கிய விடைகள் இணையதளத்தில் வெளியிடப்பட்டு, தேர்வர்களிடம் இருந்த பெறப்பட்ட ஆட்சேபங்கள் இறுதிசெய்யப்பட்டு விடைத்தாள்கள் மதிப்பீடு செய்யப்பட்டன. 5 சதவீதம் கூட தேர்ச்சியில்லை: விடைத்தாள் மதிப்பீட்டுக்குப் பிறகு, இரண்டு தாள்களையும் சேர்த்து சுமார் 2,000 பேர் மட்டுமே தேர்ச்சி பெற்றுள்ளனர். தேசிய சராசரியான 5 சதவீத அளவுக்குக் கூட தேர்வர்கள் தேர்ச்சி பெறவில்லை. இதையடுத்து, தேர்ச்சி மதிப்பெண்ணை குறைப்பது தொடர்பாக ஆசிரியர் தேர்வு வாரியம் தமிழக அரசுடன் ஆலோசனை நடத்தி வருகிறது. தள்ளிப்போகும்?: இடைநிலை ஆசிரியர் நியமனம் தொடர்பான வழக்கு உச்ச நீதிமன்றத்தில் வரும் வாரம் விசாரணைக்கு வருகிறது. அந்த வழக்கு விசாரணை, தேர்வு மதிப்பெண்ணை குறைப்பது தொடர்பான ஆலோசனை போன்ற காரணங்களாலும், தேர்வர்களின் தவறுகளை சரிசெய்ய அவகாசம் தேவைப்படுவதாலும் தேர்வு முடிவுகளை வெளியிடுவது சில வாரங்கள் தள்ளிப்போகும் எனத் தெரிகிறது. இந்தத் தேர்வில் தேர்ச்சியடையாதவர்களுக்கு வாய்ப்பு வழங்க டிசம்பர் மாதம் மீண்டும் ஒரு தேர்வு நடத்தும் யோசனையும் பரிசீலனையில் உள்ளதாக நம்பத்தகுந்த வட்டாரங்கள் தெரிவித்தன.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக