பக்கங்கள்

இலவச SMS களை உடனுக்குடன் பெற ON TNPTFSVG அல்லது ON TNPTFMuthupandian என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு அனுப்பி இலவச குறுந்தகவல்களை(SMS) பெறுங்கள். DND (Do NOT Disturb) சர்வீஸ்ல் உள்ள எண்கள் அதனை(DND) நீக்கிய பிறகே இச்சேவையை பெறமுடியும். plz call 1909

Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

8/25/2012

ஆசிரியர் தகுதி தேர்வு ரிசல்ட் வெளியீடு-அக்டோபர் 3-ல் மறுதேர்வு: வாரியம் திடீர் அறிவிப்பு

ஆசிரியர் தகுதி தேர்வுக்கான ரிசல்ட் நள்ளிரவில், இணைய தளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. 6.76 லட்சம் பேர் எழுதிய தேர்வில் வெறும் 2448 பேர் மட்டுமே தேர்ச்சி பெற்றுள்ளனர். இதையடுத்து அக்டோபர் 3-ம் தேதி மறு தேர்வு நடத்தப்படும் என, ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்துள்ளது.     அரசு மற்றும் அரசு நிதியுதவி பெறும் பள்ளிகளில் ஆசிரியர்களாக நியமிக்கப்படுவோர், தகுதி தேர்வு எழுதி தேர்ச்சி பெற வேண்டும் என்று மத்திய அரசு, கடந்த 2009-ம் ஆண்டு சட்டம் இயற்றியது. இதன் அடிப்படையில் தமிழகத்தில் கடந்த ஜூலை 12ம் தேதி ஆசிரியர் தகுதி தேர்வு நடத்தப்பட்டது. மாநிலம் முழுவதும் 1,027 தேர்வு மையங்களில் நடந்த தேர்வை 6 லட்சத்து 76 ஆயிரம் பேர் எழுதினர்.  10 நாட்கள் இடைவெளிக்கு பின் ஆசிரியர் தகுதி தேர்வுக்கான கீ ஆன்சர் வெளியிடப்பட்டது.

     தகுதி தேர்வு கேள்வி தாள் ஏ, பி, சி, டி என்ற 4 பிரிவுகளில் அச்சிடப்பட்டு வழங்கப்பட்டது. ஆனால், கீ ஆன்சர் விடைகளில் குழப்பம் இருந்தது.
இதை எதிர்த்து இடைநிலை மற்றும் பட்டதாரி ஆசிரியர்கள் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். வழக்கை விசாரித்த நீதிமன்றம் ஆகஸ்ட் 10ம் தேதி ஆசிரியர் தேர்வு வாரிய தலைவர் சுர்ஜித் கே.சவுத்ரியை நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்கும்படி உத்தரவிட்டது. விளக்கம் கொடுக்கும் வரை தேர்வு முடிவுகளை வெளியிட கூடாது என்றும் உத்தரவிட்டது. ஆனால், ஆசிரியர் தேர்வு வாரிய தலைவர் கோர்ட்டில் ஆஜராகவில்லை. இதற்கு கோர்ட் கடும் கண்டனம் தெரிவித்தது. இதனால், தேர்வு முடிவு வெளியிடுவதில் தாமதம் ஏற்பட்டது.

   இந்நிலையில், திருவண்ணாமலை மாவட்டம் மேல்மலையூரை சேர்ந்த அருள்ராஜ் என்பவர் உயர்நீதிமன்றத்தில் நேற்று ஒரு வழக்கு தொடர்ந்தார். அந்த வழக்கில் ஆசிரியர் தகுதி தேர்வு முடிவுகளை தற்போது வெளியிட கூடாது என்று தடை கோரியிருந்தார். இந்த வழக்கை நீதிமன்றம் விசாரணைக்கு எடுத்து கொண்டது. இதை அறிந்த ஆசிரியர் தேர்வு வாரியம் நேற்று நள்ளிரவு 2 மணியளவில் தகுதி தேர்வு முடிவுகளை வாரிய இணையதளமான www.trb.tn.nic.in அதிகாரப்பூர்வமாக வெளியிட்டது. இதில், 90 சதவீதம் பேர் 150 மதிப்பெண்களுக்கு 65 மதிப்பெண்கள்தான் பெற்றுள்ளதாக தெரிகிறது. ஆனால், 90 மதிப்பெண் எடுத்தால் மட்டுமே தேர்ச்சி பெற முடியும்.

    நேற்று இரவு வெளியிடப்பட்ட தகுதி தேர்வு முடிவுகளில் சுமார் 2448 பேர் மட்டும்தான் தேர்ச்சி பெற்றுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், தேர்வு எழுதியவர்கள் பெற்ற மதிப்பெண்களும் வெளியிடப்பட்டுள்ளது. தேர்வு எழுதியோர் அவர்களின் தேர்வு எண்ணை அதில் பதிவு செய்து தெரிந்து கொள்ளலாம்.
ஆசிரியர் தகுதி தேர்வில் 2448 பேர் மட்டுமே தேர்ச்சி பெற்றுள்ளது கல்வித்துறை வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதையடுத்து அக்டோபர் 3-ம் தேதி மறுதேர்வு நடத்தப்படும் என்று ஆசிரியர் தேர்வு வாரியம் இன்று காலை அறிவித்தது.

தேர்ச்சிக்கான கட்-ஆப் மதிப்பெண் குறைக்கப்படுமா?

   ஆசிரியர் தகுதி தேர்வுக்கான வினாக்கள் மிகவும் கடினமாக இருந்தது. கணித தேர்வுக்கு விடையளிக்க நேரம் போதவில்லை. அறிவிக்கப்பட்ட பாடத்திட்டத்தில் இருந்து கேள்விகள் கேட்கப்படவில்லை என்று தேர்வு எழுதியோர் பலரும் குற்றம்சாட்டினர். இதனால் தேர்ச்சிக்கான கட்-ஆப் மதிப்பெண்ணை குறைக்க வேண்டும் என்று தேர்வு எழுதியோர் தரப்பில் இருந்து கோரிக்கை விடுக்கப்பட்டது. இதுசம்பந்தமாக பத்திரிகைகளில் செய்திகள் வெளியானது.


   2 ஆயிரம் பேர் மட்டுமே தேர்ச்சி பெற்றுள்ளதாகவும், டிசம்பரில் மறுதேர்வு நடத்தப்படலாம் என்றும் கல்வித் துறை வட்டாரங்களில் சொல்லப்பட்டது. 


   இந்நிலையில், அதிகாரப்பூர்வமாக இணையதளத்தில் வெளியான ஆசிரியர் தகுதி தேர்வுக்கான ரிசல்ட்டில் 2448 பேர் தேர்ச்சி பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், தேர்வு எழுதியோரின் கோரிக்கையை ஏற்று, தேர்ச்சிக்கான கட்-ஆப் மதிப்பெண்ணை குறைப்பது குறித்து பரிசீலனை செய்யப்படும் என்று தேர்வு வாரிய அதிகாரிகள் தெரிவித்தனர். ஆசிரியர் தகுதி தேர்வின் அடிப்படையில் 18,000 பட்டதாரி ஆசிரியர்களும், 5 ஆயிரம் இடைநிலை ஆசிரியர்களும் தேர்ந்தெடுக்கப்பட முடிவு செய்யப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

முதலிடம் பிடித்தவர்கள்


   ஆசிரியர் தகுதித்தேர்வு கேள்விகள் கடினம் என்ற போதிலும் கணிதம் மற்றும் அறிவியல் பாடப்பிரிவில் சித்ரா என்பவர் 150க்கு 142 மதிப்பெண் பெற்று முதலிடத்தையும், 131 மதிப்பெண் பெற்ற ஷர்மிளா 2வது இடத்தையும் பிடித்துள்ளனர். சமூக அறிவியல் பாடப்பிரிவில் அருள்வனி 125, பிருந்தா 124, செந்தில்குமார் 124 மதிப்பெண் பெற்றுள்ளனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக