பக்கங்கள்

இலவச SMS களை உடனுக்குடன் பெற ON TNPTFSVG அல்லது ON TNPTFMuthupandian என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு அனுப்பி இலவச குறுந்தகவல்களை(SMS) பெறுங்கள். DND (Do NOT Disturb) சர்வீஸ்ல் உள்ள எண்கள் அதனை(DND) நீக்கிய பிறகே இச்சேவையை பெறமுடியும். plz call 1909

Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

10/25/2012

இது காலத்தின் கட்டாயம்!

இந்தியாவில் பின்தங்கியுள்ள 3,200 மாவட்டங்களைத் தேர்ந்தெடுத்து 2,500 ராஷ்ட்ரீய ஆதர்ஷ் வித்யாலயா பள்ளிகளை "அரசு-தனியார் பங்கேற்பு (பிபிபி)' திட்டத்தில் அமைப்பது என்ற அரசின் முயற்சிக்கு அதிக வரவேற்பு கிடைத்துள்ளது. டாடா, ரிலையன்ஸ், வேதாந்தா, ஐடிசி, ஜிண்டால், ஏர்டெல் என பல நிறுவனங்கள் நாங்கள் ஆதர்ஷ் வித்யாலயா பள்ளிகளை அமைப்பதில் அரசுடன் கைகோக்கத் தயார் என்று மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறைக்கு விண்ணப்பம் அளித்துள்ளன.
அனைவருக்கும் கல்விச் சட்டம் அமலுக்கு வந்த பிறகு, குழந்தைகள் அனைவருக்கும் கல்வி அளிக்கும் வாய்ப்புகளையும் உருவாக்க வேண்டிய தேவை அரசுக்கு உள்ளது. இதற்கான உள்கட்டமைப்பு வசதிகளை உருவாக்க அதிக நிதி தேவை என்பதால் இதனை "அரசு-தனியார்-பங்கேற்பு' திட்டத்தில் தொடங்க மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகம் இந்த முடிவை மேற்கொண்டுள்ளது.
இந்தத் திட்டத்தின்படி 1,000 மாணவர்களுக்கான கல்விக் கட்டணத்தை மத்தியஅரசு இப்பள்ளிகளுக்குச் செலுத்திவிடும். நிர்வாக ஒதுக்கீடாக 1,500 மாணவர்களை, அரசு நிர்ணயிக்கும் கட்டணத்தின்படி சேர்த்துக்கொள்ளலாம். மற்றபடி பள்ளிச் செலவுகள் அனைத்தையும் நிர்வாகம் பார்த்துக்கொள்ளும். இந்தப் பள்ளியின் உள்கட்டமைப்பு வசதிகளை பள்ளி நேரம் தவிர்த்த மீதி நேரங்களில் வணிகப் பயன்பாட்டுக்காக, சிறப்புப் பயிற்சி வகுப்புகளுக்காகப் பயன்படுத்திக்கொள்ளலாம். இதன் மூலம் கிடைக்கும் வருவாய், பள்ளியின் நிர்வாகச் செலவை ஈடுகட்ட உதவும்.
மத்திய அரசு சொல்லும் இந்த விவகாரங்கள் தமிழ்நாட்டில் ஏற்கெனவே அமலில் உள்ளன. தமிழகத்தில் உள்ள அரசு நிதியுதவி பெறும் பள்ளிகளில், ஆசிரியர்களின் சம்பளத்தை அரசாங்கம்தான் வழங்குகிறது. பள்ளி மாணவர்கள் இலவசமாகப் படிக்கிறார்கள். இவர்களுக்குத் தேர்வுக் கட்டணம் மட்டுமே உண்டு. இலவச பஸ் பாஸ், விலையில்லா சைக்கிள் பெற அரசு நிதியுதவி பள்ளி மாணவர்களுக்கும் தகுதி உண்டு.
ஆனால், கடந்த 15 ஆண்டுகளில் அரசு நிதியுதவி பெறும் பள்ளிகளின் கல்வித் தரம் கீழே போய்க்கொண்டிருக்கிறது. இதற்கு நிர்வாகம் சொல்லும் காரணம், ஆசிரியர் நியமனங்களை அரசு செய்கிறது. ஆனால், வரும் ஆசிரியர்கள் திறமை இல்லாதவர்கள். இவர்களை இடமாற்றம் செய்ய இயலாது என்பதால் இவர்கள் சங்கம் அமைத்துக்கொண்டு, பாடம் நடத்துவதே இல்லை. ஆகவே எங்களால் கல்வித் தரத்தை நிலைநிறுத்த முடியவில்லை என்பதுதான் நிர்வாகத்தின் குற்றச்சாட்டு.
தனியார் பள்ளிகளை ஒப்பிடும்போது, அரசு நிதியுதவி பெறும் பள்ளி மூலம் பெரும் லாபம் கிடைப்பதில்லை. தனியார் பள்ளிகளைப்போல தன்னிச்சையாகச் செயல்படவும் முடியாது. ஆகவே, நிர்வாகமும் அதிக கவனம் செலுத்துவதை நிறுத்திவிட்டது. இதுதான் தமிழகத்தில் அரசு நிதியுதவி பெறும் பள்ளிகளில் கல்வித் தரம் குறையக் காரணம்.
இரண்டாவதாக, தற்போது முதல்வர் ஜெயலலிதா அறிவித்துள்ள, தனியார் பள்ளிகளில் 25% ஏழை மாணவர்களுக்கான கல்விக் கட்டணத்தைத் தமிழக அரசு செலுத்தும் திட்டம்.
தற்போது மத்திய அரசு சொல்லும் 1,000:1,500 விகிதாசாரத்தின் படி 40% இடங்கள் ராஷ்ட்ரீய ஆதர்ஷ் பள்ளிகளில் ஏழை எளிய மாணவர்களுக்குக் கிடைக்கும். ஆனால், இந்தி ஒரு பாடமொழியாக இருக்கும் என்பதால் இதை தமிழக அரசியல் கட்சிகள் ராஷ்ட்ரீய ஆதர்ஷ் பள்ளிகளை ஏற்காது. அதனால், மத்திய அரசின் இத்திட்டம் தமிழ்நாட்டில் இடம்பெறுவதேகூடச் சந்தேகம்தான்.
மத்திய அரசினைப் போன்றே தமிழக அரசும் இங்குள்ள தொழில் நிறுவனங்களை அழைத்துப் பேசி, அவர்களது சமூகப் பங்களிப்பாக பள்ளிகளைத் தொடங்க ஊக்கப்படுத்தலாம். 50% ஏழை மாணவர்களை இப்பள்ளிகள் சேர்த்துக்கொள்ளட்டும். மீதமுள்ள 50% மாணவர்கள் நிர்வாக ஒதுக்கீடாக இருக்கட்டும். ஏழை மாணவர்களுக்கான கல்விக் கட்டணம், பஸ் பாஸ், இலவச சைக்கிள் ஆகியவற்றை அரசுப் பள்ளிகளைப் போன்றே இங்கும் வழங்கலாம். பள்ளி நேரம் தவிர்த்து பிற நேரங்களில் இந்த வளாகத்தை வணிக நோக்கத்தில் பயன்படுத்திக்கொள்ளட்டும். பாடத்திட்டம் தமிழக கல்வித் துறை நிர்ணயிப்பதாக இருக்கட்டும்.
இப்போது ஊரகப் பகுதிகளில் தொடங்கப்பட்ட தனியார் பொறியியல் கல்லூரிகள் பலவற்றிலும் போதுமான மாணவர்கள் சேரவில்லை. ஆனால் இவர்கள் கட்டடங்களைக் கட்டிக்கொண்டு காத்திருக்கிறார்கள். இப்படிப்பட்ட பொறியியல் கல்லூரிகள் தங்கள் பணி நேரத்தை முற்பகல், பிற்பகல் என்று பிரித்துக்கொண்டு, முற்பகலில் அப்பகுதி மக்களுக்காக உயர்நிலைப் பள்ளியை நடத்த முன்வந்தால், தமிழக அரசு அவர்களுக்கு 50:50 விகிதத்தில் மாணவர் சேர்க்கையை அனுமதித்து, ஏழைமாணவர்களின் கல்விக் கட்டணத்தை ஏற்கலாம். இத்தகைய அணுகுமுறை உடனடியாக சுமார் ஒரு லட்சம் மாணவர்களுக்குத் தரமான பள்ளி வளாகம் மற்றும் கல்விக்கு வாய்ப்பைத் திறந்துவிடும்.
அரசு நிதியுதவி பெறும் பள்ளிகளில் கல்வித்தரம் தொடர்ந்து தாழ்ந்துகொண்டே வந்தால், அந்தப் பள்ளிகளை நிதியுதவி பெறும் பள்ளிப் பட்டியலிலிருந்து விடுவித்துவிடலாம். அரசு ஊழியர்களாகிவிட்ட ஒரே காரணத்துக்காகத் தரமற்ற ஆசிரியர்கள் தொடர்ந்து பணியாற்றுவது என்பது வருங்கால சந்ததியினரையே பாழ்படுத்திவிடும். அர்ப்பணிப்புணர்வுடன் தரமான ஆசிரியர்கள் உறுதி செய்யப்படாவிட்டால் அதன் பின்விளைவுகள் மிகவும் மோசமாக இருக்கும் என்பதை அரசும் உணர்ந்ததாகத் தெரியவில்லை. ஆசிரியர் சமுதாயமும் கவலைப்படுவதாகத் தெரியவில்லை.
÷அரசுப் பள்ளிகளும், அரசு நிதியுதவி பெறும் பள்ளிகளும் தரமாகச் செயல்பட வேண்டுமென்றால், அரசு ஊழியர்களும், அரசு ஊதியம் பெறும் ஆசிரியர்களும் தங்கள் குழந்தைகளை அரசுப் பள்ளிகளிலோ, அரசு உதவி பெறும் பள்ளிகளிலோதான் சேர்த்தாக வேண்டும் என்று ஊழியர் விதிமுறையில் நிபந்தனை சேர்க்கப்பட்டால் மட்டுமே சாத்தியம். அதற்கு இணங்காதவர்கள் அரசுப் பணியில் நீடிக்கக் கூடாது என்பது நடைமுறைப்படுத்தப்பட்டால், இந்தப் பள்ளிகளில் தரம் தானாக உயர்ந்துவிடும்.
அனைவருக்கும் கல்வி, சிறார் தொழில்முறை ஒழிப்பு ஆகியவற்றால் பள்ளிக்கு வரும் மாணவர்கள் எண்ணிக்கை அதிகரிக்கிறது. ஆகவே ராஷ்ட்ரீய ஆதர்ஷ் பள்ளிகள் போன்ற வாய்ப்புகளைப் பற்றி சிந்திக்க வேண்டிய அவசியம் இப்போது தமிழக அரசுக்கு இருக்கிறது.
கடைசியாக ஒரு சந்தேகம். 50 விழுக்காடு இடங்களைக் கட்டண இடங்களாகவும், நன்கொடை இடங்களாகவும் பெறும் கல்வி நிறுவனங்கள், ஏழை எளிய மாணவர்களுக்கு ஒதுக்கப்படும் 50% இடங்களுக்கான கட்டணத்தை அரசிடமிருந்து பெறத்தான் வேண்டுமா?
 Dinamani

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக