சேலம்: மத்திய அரசின் சார்பில் வழங்கப்படும்
கல்வி உதவித் தொகையை பெற, தகுதியானவர்கள் விண்ணப்பிக்கலாம், என்று தமிழக
அரசின் உயர் கல்வித்துறை அறிவித்துள்ளது.
தமிழக
கல்லூரிக்கல்வி இயக்ககம் விடுத்துள்ள அறிக்கை: "மத்திய மனித வள மேம்பாட்டு
அமைச்சகத்தால், திறன் அடிப்படையிலான கல்வி உதவித்தொகைக்கு மாணவ, மாணவிகள்
தேர்வு செய்யப்படுகின்றனர்.
தமிழகத்தில், 2013, மார்ச்சில்
வெளியான பிளஸ்2 மேல்நிலைப்பள்ளித் தேர்வு முடிவுகளில், 1200க்கு 955க்கு
மேல், 80 சதவீத மதிப்பெண் பெற்ற கல்வி உதவித் தொகை பெற விரும்பும் மாணவ,
மாணவிகளிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பெற்றோரின் ஆண்டு வருமானம், ஆறு
லட்சம் ரூபாய்க்கு மிகாமல் இருக்க வேண்டும். இதற்கு தேர்வு செய்யப்படும்
மாணவ, மாணவிகள் வேறு எந்தவித கல்வி உதவித்தொகையையும் பெற்றிருக்க கூடாது.
இத்திட்டத்தில், மத்திய அரசால் தமிழகத்துக்கு, 4,883 பேருக்கு கல்வித் தொகை
வழங்கப்படுகிறது.
இதில் 50 சதவீதம்
பெண்களுக்காகவும், மாநில அரசின் இன சுழற்சி முறை மற்றும் ஒவ்வொரு
இனத்திலும் மாற்றுத் திறனாளிகளுக்கு, மூன்று சதவீதம் ஒதுக்கீடு
வழங்கப்படும்.
விண்ணப்பிப்பவர்கள்
தேசியமயமாக்கப்பட்ட வங்கியில் சேமிப்புக் கணக்கு துவங்கி, கணக்கு எண்,
மாணவ, மாணவியரின் இமெயில் முகவரி, ஆதார் அடையாள அட்டை எண் மற்றும் மொபைல்
எண் ஆகிய விபரங்களை வழங்க வேண்டும்.
மாணவ, மாணவியர் ஊனமுற்றவர்களாக இருப்பின் அதற்குரிய மருத்துவ சான்றிதழ் பெற்று, விண்ணப்பத்துடன் இணைக்க வேண்டும்.
பூர்த்தி செய்யப்பட்ட
விண்ணப்பங்களை கல்லூரி முதல்வர்கள் மூலம், ஆகஸ்ட் 30ம் தேதிக்குள்,
"இயக்குனர், கல்லூரிக்கல்வி இயக்ககம், ஈ.வெ.கி.சம்பத் மாளிகை, 6வது தளம்,
கல்லூரி சாலை, சென்னை-600006." என்ற முகவரிக்கு அனுப்பி வைக்க வேண்டும்."
இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக