பக்கங்கள்

இலவச SMS களை உடனுக்குடன் பெற ON TNPTFSVG அல்லது ON TNPTFMuthupandian என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு அனுப்பி இலவச குறுந்தகவல்களை(SMS) பெறுங்கள். DND (Do NOT Disturb) சர்வீஸ்ல் உள்ள எண்கள் அதனை(DND) நீக்கிய பிறகே இச்சேவையை பெறமுடியும். plz call 1909

Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

8/14/2013

முடுக்கு - முடங்காதே!

இனிய தோழர்களே! தினமும் போராட்ட களத்திற்கு அறை கூவல் விடுகிறேன் என்று என் மீது கோபப்பட்டாலும் பரவாயில்லை. ஏனென்றால் இந்த சமயத்தில் இயலவில்லையென்றால் நிச்சயம் எதிர்கால ஆசிரியர் சமுதாயம் நம்மை மன்னிக்காது. போராட்ட களத்தை ஒவ்வொரு நாளும் சூடேற்றுவது ஒவ்வொரு இயக்க உறுப்பினரின் கடமை. இப்பொழுதும் போராடாமல் வீட்டுக்குள் முடங்கினாள் நிச்சயமாக உன் இனத்தையே முடக்கி விடுவார்கள். உன் இனம் முடங்குவதற்கு நீ காரணமாக இருக்க போகிறாயா?. நீ களத்திற்கு வரத் தயங்கிவிட்டு இயக்க பொறுப்பாளர்களை வழக்கம்போல் குற்றம் சுமத்த போகிறாயா? யாரோ போரடி பெற்றுத் தருவார்கள் நமக்கென்ன? என்று நீ இருந்தால் நிச்சயம் வரலாறு உன்னை மன்னிக்காது.

பாதகம் செய்பவரை கண்டால்
 பயம் கொள்ளல் ஆகாது பாப்பா,
 மோதி மிதித்து விடு பாப்பா, 
அவர் முகத்தில் உமிழந்து விடு பாப்பா
 என்று முண்டாசு கவிஞனின் வார்த்தைகளை

 குழந்தைகளுக்கு கற்றுக்கொடுத்துவிட்டு பயந்து நடுங்கி மூலையில் முடங்க போகிறாயா? இளைஞர்களை அதிக உறுப்பினர்களாக கொண்டுள்ள தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி போன்ற முற்போக்கு சிந்தனையுள்ள இயக்கங்கள் அறிவித்துள்ள மறியல் போரில் இயக்கம் பாராமல் கலந்து கொள்வதோடு மட்டுமல்லாமல்  தாங்கள் சார்ந்துள்ள இயக்க தலைமைகளை வருகிற 18ந் தேததி நடக்கவுள்ள கூட்டுப்போராட்ட ஆய்த்த கூட்டத்தில் கலந்து கொள்ள வலியுறுத்துங்கள். இது மாற்றத்திற்கான போராட்டம். மாற்றி அமைக்கும் வலுவான படை நம்மிடம் உள்ளது.  படை திரட்டும் தலைமைகள் 18ந் தேதி ஒன்று கூடி தக்க முடிவினை அறிவிக்க இருக்கின்றன. சென்ற ஆட்சியில் நடைபெற்ற தொடர் மறியலில் வெற்றி கிட்டும் நிலையில் அரசு அறிவித்த அறிவிப்பை கூட முழுமையாக படிக்காமல் முதல்வருக்கு மஞ்சள் சால்வை அணிவிக்க அணிவகுத்து வரிசையில் நின்றதை போல் அல்லாமல் ஒரு இடைநிலை ஆசிரியரின் வாழ்வாதாரத்தை  பறித்த இக்கொடுஞ்செயலை இனிமேலும் பொறுக்க மாட்டோம் என்று சூழுரைக்க தலைமைகளை அறிவுறுத்த தயங்காதீர்கள். நம்மை காக்கவே இயக்க தலைமைகள். நமது பணத்தில் குளுகுளு அறையில் அமர்ந்து கொண்டு கோரிக்கை பற்றி விவாதிக்கிறேன் என்றால் நம்பாதீர்கள். குளுகுளு அறையில் நமது கோரிக்கையின் வலி தெரியாது. வலியை முழுமையாக உணர்ந்தவனுக்கே வாய்விட்டு அழ முடியும். எனவே வலியை அனுபவிக்கும் இடைநிலை ஆசிரியனே ஒன்று கூடி அழுவோம். நிச்சயம் நமது அழுகுரல் ஆட்சியாளரின் மனக்கதவை திறக்கும். நாம் எழுப்பப்போகும் கோரிக்கை முழக்கம் கோட்டையில் அமர்ந்திருக்கும் முதல்வரின் அறை கதவில் அதிர்வை ஏற்படுத்த வேண்டும். முதல்வரிடம் கேட்கும் உரிமை நம்மிடம் உள்ளது. நாம்தான் அவரின் ஆட்சி மாற்றத்திற்கு வித்திட்டோம் என்பது அவருக்கு நன்றாகவே தெரியும். முதல்வர் அவர்களின் தேர்தல் வாக்குறுதி ஆசிரியர்-அரசு ஊழியர்களிடம் எத்தகைய மாற்றத்தினை ஏற்படுத்தியது என்பதை  அறியாதவர் அல்ல. பசியான குழந்தைக்கே உணவளிக்க முன் வருவாள் தாய். நமது பசி என்ன என்பதை நமது போராட்டத்தின் வலிமை உணர்த்தட்டும். எனவே தோழனே போராட்டக்களத்திற்கு உன் சக தோழர்களை முடுக்கி விடப்போகிறாயா? இல்லை கோழையாய் வீட்டிற்குள் முடங்கிவிடப்போகிறாயா? சிந்தித்து பார்!!. சமரசமற்ற போராளிகளாய் சமர் செய்ய கிளம்பும் வேங்கையாய் படை திரள்வோம். கற்றுக் கொடுக்கும் இனம் கத்த தொடங்கினால் என்ன ஆகும் என்பதை மற்றவர்களுக்கு புரிய வைப்போம். ஒவ்வொரு முறையும் நீயே கத்துகிறாய். ஆனால் அறுவடை பிறர் செய்கின்றனர். இம்முறையும் நீயே போராடு, அறுவடையை நீயே செய்து கொள். முதல்வர் அவர்கள் இந்த கோரிக்கைகளை நிறைவேற்றினால் அவரின் சாதனை நு|றாண்டுகள் அல்ல உலகம் உய்யும் வரை நினைவில் நிறுத்தப்படும் என்பதை உணர்த்துவோம். இந்த படை சாதாரண படையல்ல சாதிக்கும் படை என்பதை ஆள்பவர்களுக்கும், ஆண்டவர்களுக்கும் புரியவைப்போம். நாம் கேட்பது உரிமை. உரிமையை கோர யாரிடமும் அனுமதி தேவையில்லை. ஊதிய மாற்றம் ஏற்படும் வரையில் உறுதி ஏற்போம். ஒற்றுமையுடன் போராடி வென்றெடுப்போம் என்று.  ஒன்றுபட்டு போராடினால் நாளைய வரலாறு அனைத்து சங்கங்களையும் பாராட்டும் என்று நினைத்து பாராட்டும், பட்டமும் தனக்கே வரவேண்டும் என்று நினைக்கும் சில சங்கங்களை புறம்தள்ளுவோம். ஒன்றுபட்ட போராட்டத்திற்கு வர மறுக்கும் இயக்கங்களில் தங்களது உறுப்பினர் பதிவை புதுப்பிக்க மாட்டோம் என்ற உறுதியினை ஏற்போம். உரிமை போர் வெல்ல வாழ்த்துகிறேன்.
தோழமையுடன்.......   
ஆ.முத்துப்பாண்டியன், 
மாவட்டத்தலைவர், 
தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி, 
சிவகங்கை மாவட்டம்.
www.mptnptf.blogspot.com
E-Mail: tnptfmuthupandian@gmail.com

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக