பிளஸ்-2
விடைத்தாள் களை மதிப்பீடு செய்ய அனுபவம் மிக்க ஆசிரியர்கள் வரவேண்டும்
என்று அரசு தேர்வுகள் இயக்குனர் கு.தேவராஜன் அனைத்து பள்ளி தலைமை
ஆசிரியர்களுக்கும் கடிதம் அனுப்ப உள்ளார்.
ஒரு மதிப்பெண் மதிப்பு
தமிழ்நாட்டில் மாணவ- மாணவிகள் உயர்கல்வி படிக்க, குறிப்பாக தொழில் கல்வியான
மருத்துவம், என்ஜினீயரிங், கால்நடை மருத்துவம் உள்ளிட்ட படிப்புகளில்
சேருவதற்கு பிளஸ்-2 மார்க் தேவை. இந்த மார்க்குகளில் ஒரு மார்க்
குறைந்தாலும் அவர்கள் விரும்பும் படிப்பு கிடைக்காமல் போகலாம்.
எனவே
மாணவ-மாணவிகள் பிளஸ்-2 தேர்வில் ஒவ்வொரு மதிப்பெண்ணையும் மிக மதிப்புள்ளதாக
கருதுகிறார்கள். அதுபோல எஸ்.எஸ்.எல்.சி. தேர்வில் அதிக மார்க்
எடுத்தால்தான் பிளஸ்-1 வகுப்பில் விரும்பிய பாடப்பிரிவை பெறமுடியும். எனவே
மாணவர்கள் போட்டி போட்டு படிக்கிறார்கள்.
அவ்வாறு படிக்கும்
மாணவர்களின் விடைத்தாள்களை மதிப்பீடு செய்வதில் ஆசிரியருக்கு ஆசிரியர் 2
மார்க் அல்லது 3 மார்க் வித்தியாசம் இருக்கலாம். அதுவும் கணிதம்,
வேதியியல், இயற்பியல் போன்ற பாடங்களில் அந்த வித்தியாசமும் இருக்கக்கூடாது.
ஆனால் விடைத்தாள்களை மதிப்பீடு செய்வதில் பல குளறுபடிகள் நடக்கின்றன.
அதனால்தான் மறுகூட்டல் என்றும், மறுமதிப்பீடு என்றும் நடக்கிறது.
எனவே
விடைத்தாளை சரியாக மதிப்பீடு செய்ய என்ன செய்யப்போகிறீர்கள் என்று அரசு
தேர்வுகள் துறை இயக்குனர் கு.தேவராஜனிடம் நேற்று கேட்டதற்கு, அவர் அளித்த
பதில் வருமாறு:-
விடைத்தாள் மதிப்பீடு
அரசு மற்றும் தனியார்
பள்ளிகளில் உள்ள அனுபவம் மிக்க ஆசிரியர்கள் பலர் விடைத்தாள்களை மதிப்பீடு
செய்ய வருவதில்லை. மறைந்துகொண்டிருக்கிறார்கள்.
எனவே எஸ்.எஸ்.எல்.சி. மற்றும் பிளஸ்-2 வகுப்பு எடுக்கும் அனுபவம் மிக்க ஆசிரியர்கள் அனைவரும் விடைத்தாள் மதிப்பீடு செய்ய வேண்டும்.
சிலர் உடல் நலம் இல்லாமல் இருக்கலாம். அப்படிப்பட்டவர்கள் தவிர மற்றவர்கள் எல்லோரும் வரவேண்டும்.
இதற்காக இப்போதே தயாராக இருக்கிறோம். அதாவது எந்த பள்ளியில் எத்தனை
ஆசிரியர்கள் எந்த பாடத்தை எடுக்கிறார்கள் என்ற விவரத்தை பெறுகிறோம்.
முதல் முறையாக
பள்ளிகளில் இருந்து எத்தனை மாணவர்கள் எஸ்.எஸ்.எல்.சி. மற்றும் பிளஸ்-2
தேர்வு எழுதுகிறார்கள் என்ற விவரம் தரும்போதே விடைத்தாள் திருத்துவதற்கும்
ஆசிரியர்கள் பெயர்களை தரவேண்டும் என்று அனைத்து தலைமை ஆசிரியர்களுக்கும்
கூட்டம் நடத்தி தெரிவிக்க உள்ளோம். கடிதமும் அனுப்பப்படும். 10 வருடம்
அனுபவம் உள்ள சீனியர் ஆசிரியர்கள் அனைவரும் விடைத்தாள் திருத்த கண்டிப்பாக
வரவேண்டும்.
மேலும் விடைத்தாள்களும் 6 நாட்கள் முதல் 10 நாட்களுக்குள் ஒரு பாடம் திருத்தி முடிக்கப்பட வேண்டும்.
இப்படி செய்வதால் விடைத்தாள் திருத்துவதில் நல்ல முன்னேற்றம் ஏற்படும்.
மாணவர்களுக்கு உரிய மதிப்பெண் கிடைக்கும். வருகிற அக்டோபர் மாதம் நடைபெறும்
எஸ்.எஸ்.எல்.சி. மற்றும் பிளஸ்-2 தேர்வில் முதல் கட்டமாக இந்த சீனியர்
ஆசிரியர்களை வைத்து விடைத்தாள்களை மதிப்பீடு செய்ய உள்ளோம்.
இவ்வாறு இயக்குனர் கு.தேவராஜன் தெரிவித்தார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக