‘கண்டனம்’ என்பது போன்ற சிறிய தண்டனைகளுக்காக, அரசு ஊழியர்களுக்கு பதவி உயர்வு மறுக்கக்கூடாது என்று மதுரை
ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
பதவி உயர்வு
விருதுநகர் மாவட்ட கருவூல அலுவலகத்தில் கண்காணிப்பாளராக வேலை பார்த்து வருபவர் வன்னியராஜ். இவர், மதுரை ஐகோர்ட்டு கிளையில் தாக்கல் செய்த மனு வருமாறு:–
நான், கடந்த 1988–ம் ஆண்டு கருவூலத்துறையில் இளநிலை உதவியாளராக பணியில் சேர்ந்தேன். 2009–ம் ஆண்டு கண்காணிப்பாளராக பதவி உயர்வு பெற்றேன். 2012–2013–ம் ஆண்டு உதவி கருவூல அலுவலர் பதவி உயர்வுக்கான பட்டியலில் எனது பெயர் சேர்க்கப்படவில்லை.
காரணம் கேட்டபோது, எனக்கு ஏற்கனவே ‘கண்டனம்’ என்ற தண்டனை வழங்கப்பட்டுள்ளதால் எனது பெயர் பதவி உயர்வு பட்டியலில் சேர்க்கப்படவில்லை என்று அதிகாரிகள் தெரிவித்தனர். சிறிய தண்டனைகளுக்கு பதவி உயர்வு மறுப்பது சரியல்ல. எனவே, எனக்கு பதவி உயர்வு வழங்க உத்தரவிட வேண்டும்.
இவ்வாறு மனுவில் கூறப்பட்டு இருந்தது.
மறுப்பது சரியல்ல
இந்த மனு நீதிபதி என்.பால்வசந்தகுமார் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. மனுதாரர் சார்பில் வக்கீல் எஸ்.விசுவலிங்கம் ஆஜராகி வாதாடினார். மனுவை விசாரித்த நீதிபதி உத்தரவில் கூறி இருப்பதாவது:–
‘‘கண்டனம் என்பது போன்ற சிறிய தண்டனைக்காக பதவி உயர்வு வழங்க மறுப்பது சரியல்ல என்று 2011–ம் ஆண்டு தலைமை நீதிபதி தலைமையிலான நீதிபதிகள் குழு உத்தரவிட்டுள்ளது. இதை எதிர்த்து அரசு சுப்ரீம் கோர்ட்டில் அப்பீல் செய்தது. அந்த அப்பீல் மனுவும் தள்ளுபடி செய்யப்பட்டது.
இதுபோன்ற சூழ்நிலையில் மனுதாரர், கண்டனம் என்ற தண்டனையை பெற்றுள்ளதாக கூறி பதவி உயர்வு வழங்க மறுப்பது சரியல்ல. எனவே, மனுதாரரின் பெயரை 2012–2013–ம் ஆண்டுக்கான உதவி கருவூல அலுவலர் பதவி உயர்வு பட்டியலில் 4 வாரத்துக்குள் சேர்க்க வேண்டும்.
இவ்வாறு உத்தரவில் கூறப்பட்டுள்ளது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக