பக்கங்கள்

இலவச SMS களை உடனுக்குடன் பெற ON TNPTFSVG அல்லது ON TNPTFMuthupandian என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு அனுப்பி இலவச குறுந்தகவல்களை(SMS) பெறுங்கள். DND (Do NOT Disturb) சர்வீஸ்ல் உள்ள எண்கள் அதனை(DND) நீக்கிய பிறகே இச்சேவையை பெறமுடியும். plz call 1909

Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

10/23/2013

மாணவரும் ஆசிரியரும்

இந்தியாவின் வருங்காலமே இளைஞர்களின் கையில்தான் உள்ளது என அனைவரும் உரக்கக் கூறி வரும் நிலையில், இளைஞர்களின் அண்மைக்கால நடவடிக்கைகள் இந்த சமூகத்தில் எந்தவிதமான தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளன என்பதைப் பார்த்தால் அவை கவலை அளிக்கும் விதமாகவே உள்ளன.

தங்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுத்ததற்காக தனியார் பொறியியல் கல்லூரி முதல்வரை கல்லூரி வளாகத்திலேயே மாணவர்கள் வெட்டிக் கொலை செய்வது என்பதைவிட கொடுஞ்செயல் வேறு எதுவும் கிடையாது.

ஆங்காங்கே, சில கலைக் கல்லூரி மற்றும் சட்டக் கல்லூரி மாணவர்களிடம் இருந்து மட்டுமே இதுவரை வன்முறைச் சம்பவங்களை கண்ட மக்களுக்கு பொறியியல் கல்லூரி மாணவர்களின் இந்தச் செயல் மாணவ சமுதாயத்திற்கு ஒரு கரும்புள்ளி என்றே கூறலாம்.

மாணவ பருவத்தில் பெற்றோரைவிட ஆசிரியர்களுடன்தான் அதிக நேரங்களைப் பகிர்ந்து கொள்ளும் நிலையில், ஏன் இதுபோன்ற குற்றச்செயல்கள் நடைபெறுகின்றன என்பதற்கு பல காரணங்கள் கூறப்படுகின்றன.

குறிப்பாக, ஆசிரியர்கள் தங்களுடன் நண்பர்களைப் போல பழகாமல் அடிமைத்தனத்துடன் நடத்துவதாக மாணவர்கள் தரப்பில் இருந்து குற்றச்சாட்டு எழுப்பப்படுகிறது.

படி.. படித்துக் கொண்டே இரு.. என்ற வார்த்தையைக் கேட்டாலே எரிச்சல் கொள்ளும் மாணவர்கள், படிக்காமல் எந்த உயர்ந்த இடத்தையும் தங்களால் எட்ட முடியாது என்பதை உணர மறுப்பது ஏன்?

ஒரு கல்லூரியை முதல்வரின் வேலை, தவறு செய்யும் மாணவர்களைக் கண்டறிந்து அவர்களை நல்வழிப்படுத்துவதுதான். அந்தப் பணியைத்தான் அண்மையில் கொலையுண்ட கல்லூரி முதல்வரும் செய்துள்ளார். அதற்காக, அவரை கொலை செய்வது என்பது வன்முறையின் உச்சமல்லவா?

ஒரு மாணவனின் எதிர்கால வாழ்க்கையைக் கெடுக்கும் வகையில் ஆசிரியர்கள் ஒருபோதும் செயல்பட மாட்டார்கள். ஆனால், தொடர்ந்து, வேண்டாத செயல்களில் ஈடுபட்டு, படிப்பில் கவனம் செலுத்தாமல் சுற்றித் திரியும் மாணவர்களையும் சற்று கண்டிக்கும் வகையில், லேசான மிரட்டல் தோணியில் பேசுவதும் ஆசிரியர்களின் கடமையே.

கல்வி விஷயத்தில் பெற்றோருக்கு இருக்கும் கவலையைவிட ஆசிரியர்களுக்கு அதிக கவலையும் பொறுப்பும் உண்டு என்பதை இளைய தலைமுறையினர் உணர்ந்து கொள்ள வேண்டும்.

நான்கு ஆண்டுகள் தாங்கள் படித்த படிப்பு கல்லூரி முதல்வரின் நடவடிக்கையால் வீணாகிவிடுமோ என்ற அச்சம்தான் இந்த கொலைக்கு காரணம் என கூறப்படுகிறது.

கல்லூரி படிப்பை முடித்தாலும் வாழ்க்கையில் நம்மால் ஒன்றும் செய்துவிட முடியாது என நினைத்துக் கொண்டு அதற்கு பதிலாக முதல்வரை பழிவாங்கிவிட்டு சிறையில் வாழ்க்கையை ஓட்டிவிடலாமே என்ற எண்ணத்துக்கு மாணவர்களை தள்ளியது எது என்பதுதான் தற்போதைய இமாலயக் கேள்வி.

ஒட்டுமொத்த மாணவ சமுதாயமும் இத்தகைய மனநிலையில்தான் இருக்கிறது என எண்ணுவதும் தவறே. படிப்பை மட்டுமே வேலையாகக் கொண்டு புதிய புதிய கண்டுபிடிப்புகளில் கவனம் செலுத்தும் மாணவர்களையும், விளையாட்டுத் துறையில் சாதனைகளை படைக்கும் மாணவர்களையும் நாம் தினம் தினம் பார்த்துக் கொண்டுதான் இருக்கிறோம்.

கல்லூரிக்கு படிக்கத்தான் செல்கிறோம் என்ற உறுதியும், தங்களுக்கு ஆர்வம் உள்ள கலை, விளையாட்டு, அறிவியல் கண்டுபிடிப்புகள் போன்றவற்றில் கவனத்தைச் செலுத்தும் முனைப்பும் மாணவர்களுக்கு வர வேண்டும்.

ஊதாரித்தனமாக சுற்றினால் போதும் என்ற மனநிலைக்கு வரும் ஒருசில மாணவர்களால் ஒட்டுமொத்த இளைய தலைமுறைக்குமே அவப்பெயர் ஏற்பட்டிருப்பது வருத்தப்பட வேண்டிய விஷயமாகும்.

மாணவப் பருவம் என்பது கல்வியையும், ஒழுக்கத்தையும் கற்றுக்கொள்வதற்கான பருவமாகும். அதைவிட்டுவிட்டு சில அசம்பாவித சம்பவங்களில் ஈடுபடுவது இளைய தலைமுறையினருக்கு அழகல்ல.

பெற்றோரும், ஆசிரியர்களும் தங்களது நலனுக்காகத்தான் சற்று கடுமையாக நடந்து கொள்கிறார்கள் என்ற உண்மையை மட்டும் புரிந்து கொள்ளுங்கள் மாணவர்களே.

பெரியோர் சொல் கேட்டு அறிவுசார்ந்தவர்களாக உருவாகி புதிய உலைகைப் படைத்து பெற்றோருக்கும், நாட்டுக்கும் பெருமை சேர்க்கும் வகையில் செயல்படுவோம் என்ற உறுதிமொழியை இளைஞர்கள் அனைவரும் ஏற்க வேண்டும்.
தி. இன்பராஜ்/
தினமணி /22.10.2013

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக