காரைக்குடி
:இடைநிலை ஆசிரியர்களுக்கு, மத்திய அரசுக்கு இணையாக ஊதியம் வழங்கக் கோரி,
அனைத்து ஆசிரியர் சங்கங்களும் ஒருங்கிணைந்து போராட, ஆரம்ப பள்ளி ஆசிரியர்
கூட்டணி வேண்டுகோள் விடுத்துள்ளது. தமிழ்நாடு ஆரம்ப பள்ளி ஆசிரியர் கூட்டணி
கல்லல் வட்டார கிளை முப்பெரும் விழா காரைக்குடியில் நடந்தது.
இதில், மாநில பொது செயலாளர் பாலசந்தர் பேசியதாவது: 1988-ல் ஆசிரியர்
சங்கங்கள் இணைந்து "டிட்டோ ஜாக்' என்ற அமைப்பை ஏற்படுத்தி, மத்திய அரசுக்கு
இணையான சம்பளம் வழங்க வேண்டும் என கோரிக்கை விடுத்தது. அதையடுத்து
அமல்படுத்தப்பட்ட 4வது, 5வது ஊதியக்குழுவில், மத்திய அரசுக்கு இணையான
சம்பளம் வழங்கப்பட்டது. ஆறாவது ஊதியக்குழுவிற்கான உறுப்பினர்கள், இடைநிலை
ஆசிரியர்களின் கல்வித்தகுதியை குறைத்து காட்டி, அவர்கள் ஊதியக்குழு
பரிந்துரைக்கும் ஊதியம் பெற தகுதியில்லை, என தமிழக அரசுக்கு அறிக்கை
சமர்ப்பித்ததை தொடர்ந்து, அவர்களுக்கு ஆறாவது ஊதியக்குழு சம்பளம்
வழங்கப்படவில்லை.
தற்போதைய தமிழக
முதல்வர், தேர்தல் அறிக்கையில், ஆறாவது ஊதியக்குழுவில், இடைநிலை
ஆசிரியர்களுக்கு ஏற்பட்ட, சம்பள முரண்பாடு களையப்படும் என்றார். ஆட்சி
மாற்றம் ஏற்பட்ட பிறகு, அமைச்சர் அளவில் கூட இதற்கான பேச்சுவார்த்தை
துவங்கப்படவில்லை. இதனால், தமிழகத்தின் ஒத்த கருத்துடைய, ஏழு பெரிய
சங்கங்களில் உள்ள ஒரு லட்சத்து 40 ஆயிரம் ஆசிரியர்களையும் திரட்டி, கூட்டு
போராட்டத்துக்கு அழைப்பு விடுத்து வருகிறோம். இதில், ஆசிரியர் சங்கங்கள்
சேராவிட்டால், தனித்து போராடவும் முடிவு செய்துள்ளோம்.
மேலும்,
மருத்துவ காப்பீட்டு திட்டத்துக்காக, ரூ.25 லிருந்து, 150 ரூபாய் பிடித்தம்
செய்யப்படுகிறது. இதில், குறிப்பிட்ட நோய்களுக்கு, குறிப்பிட்ட
மருத்துவமனையில் தான் சிகிச்சை பெற வேண்டும் என்று உள்ளது. இதை களைந்து,
அனைத்து நோய்க்கும், இந்தியாவில் உள்ள எந்த மருத்துவமனையிலும் சிகிச்சை
பெறலாம், என அரசு உத்தரவிடவேண்டும், என்றார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக