சென்னை மாநகராட்சிப் பள்ளிகளில் பின்லாந்து நாட்டில் பின்பற்றி வரும் தரமான கல்வி முறையை விரைவில் அறிமுகப்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது. இது தொடர்பான பயிற்சிக்கு கடந்த மாதம் பின்லாந்து சென்ற 6 தலைமையாசிரியர்கள் மற்றும் ஒரு உயர் அதிகாரி, அங்குள்ள கல்விமுறையின் சிறந்த விஷயங்களை கற்று வந்துள்ளனர். அதனை சென்னை மாநகராட்சி பள்ளிகளில் விரைவில் அறிமுகப்படுத்த திட்டமிட்டுள்ளனர்.
தனித்தனி மேசை
உலக அளவில் நடத்தப்படும் கல்வி ஆய்வான “பிசா”வில் (PISA) பின்லாந்து முதல் இடத்தை பிடித்துள்ளது. இதனைத் தொடர்ந்து 6 பேர் கொண்ட ஆசிரியர் குழுவினர் பின்லாந்துக்கு சென்னை மாநகராட்சியால் அனுப்பப்பட்டனர்.
நாடெங்கும் ஒரே பாடத்திட்ட முறை பின்பற்றப்பட்டு வரும் பின்லாந்தில் வகுப்பறைகள் கற்றலை எளிதாக்கும் வகையில் உள்ளன. அதுபோன்ற சூழலை இங்கு உருவாக்க பல்வேறு மாற்றங்களை கொண்டு வர திட்டமிடப்பட்டுள்ளது. அதன்படி ஒவ்வொரு மாணவருக்கும் தனித்தனி மேஜைகள் தரப்படும். அவரவருக்கான உயரத்துக்கு ஏற்ப மேஜையின் உயரத்தை மாற்றிக்கொள்ளும் வசதி அதில் இருக்கும். அதோடு மாணவர்கள் விருப்பப்பட்ட இடத்தில் குழுவாக அமர்ந்து இயங்கவும் தனித்தனி மேஜைகள் பயன்படும் என்று பின்லாந்து சென்று வந்த உதவிக் கல்வி அலுவலர் இ.கோவிந்தசாமி கூறினார்.
ஓய்வு அறை
குழந்தைகளுக்கு உடல் நிலை சரியில்லாமல் போனால் அவர்கள் ஓய்வு எடுக்க வசதியாக ஓய்வறைகள் அமைக்கப்பட உள்ளன. மாணவர்கள் எந்த வகுப்பை கவனிக்க முடியுமோ அதில் மட்டும் பங்கேற்று மற்ற நேரங்களில் ஓய்வறையில் இருக்கலாம்.
வழிகாட்டியாக மாணவர்
மாணவர்கள் அவர்களின் வேகத்துக்கு ஏற்ப கற்றுக் கொள்ளும் முறை பின்லாந்தில் செயல்படுத்தப்பட்டு வருகிறது. வேகமாக கற்றுக் கொள்ளும் மாணவர்கள் பிறருக்கு கற்றுக் கொடுக்கிறார்கள். அனைவரும் ஒரு பாடத்தை கற்றுக் கொண்ட பின்னரே அடுத்த பாடத்தை கற்றுக் கொள்ள தொடங்குகின்றனர். இந்த 'குழு கற்றல்’ முறையையும் சென்னை மாநகராட்சிப் பள்ளிகளில் அறிமுகப்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது.
அனுபவப் பகிர்வு
இது தவிர காட்சிப் பலகைகள், செய்முறை தாள்கள், புதிய தொழில்நுட்பங்களை பயன்படுத்துதல் போன்ற பல புதிய வழிமுறைகள் அறிமுகப்படுத்தப்பட உள்ளன. இந்த அனுபவங்களை சென்னை மாநகராட்சியின் அனைத்து பள்ளி தலைமையாசிரியர்களுடனும் அடுத்த வாரத்தில் பகிர்ந்துகொள்ள இருப்பதாக கல்வி இணை ஆணையர் டி.என்.வெங்கடேஷ் கூறினார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக