சேலம்: சேலம் மாவட்டத்தில் உள்ள அரசு
பள்ளிகளில், 84 கூடுதல் வகுப்பறை மற்றும் 34 அறிவியல் ஆய்வகம் அமைக்க
அனைவருக்கும் இடைநிலைக் கல்வித் திட்டத்தில் 10.24 கோடி ரூபாய்
வழங்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் உள்ள அரசு பள்ளிகளில், 9, 10ம்
வகுப்புக்கான இடைநிலைக்கல்வியை மேம்படுத்தும் நோக்கில், அனைவருக்கும்
இடைநிலைக்கல்வி திட்டம் செயல்பட்டு வருகிறது. இதில், 2010-11ம் ஆண்டில்
தமிழகத்தில் உள்ள அரசு உயர் மற்றும் மேல்நிலைப் பள்ளிகளுக்கு, 1,851
கூடுதல் வகுப்பறைகளும், 698 அறிவியல் ஆய்வகங்களும் கட்ட, 146.78 கோடி
ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது.
இப்பணிகளை பொதுப்பணித்துறை மூலம் மேற்கொள்ள
அறிவுறுத்திய தமிழக அரசு, பற்றாக்குறை நிதியான 71 கோடி ரூபாயை ஒதுக்கீடு
செய்தது. இதன்படி வகுப்பறை ஒன்றுக்கு கட்டுமான பணிக்கு 7.53 லட்சமும்,
தளவாடங்களுக்கு ஒரு லட்ச ரூபாயும் சேர்த்து மொத்தம், 8.53 லட்சமும்,
அறிவியல் ஆய்வகத்துக்கு கட்டுமான பணிக்கு 7.53 லட்சமும், தளவாடம் மற்றும்
ஆய்வக உள் கட்டமைப்புக்கு, 1.50 லட்சமும் சேர்த்து, 9.03 லட்சம் ரூபாயும்
ஒதுக்கீடு செய்யப்படுகிறது.
சேலம் மாவட்டத்தில் 84 கூடுதல் வகுப்பறைகள்
கட்ட, 7.16 கோடியும், 34 அறிவியல் ஆய்வகம் கட்ட, 3.7 கோடி ரூபாயும்,
பொதுப்பணித்துறையிடம் வழங்கப்பட்டுள்ளது. இதனால், ஓரிரு தினங்களில்
பள்ளிகளில் கட்டுமான பணிகள் துவங்கப்பட உள்ளது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக