மழை வலுக்கும் முன் மண்ணில் விழுந்த துளிகளால் கிளம்பும் மண்வாசனையைப்
போன்று தேர்தல் வரப்போகிறதென்றால் கட்சிகள், அமைப்புகள் சார்ந்த
போராட்டங்களும் புது வேகம் எடுக்கத் தொடங்கிவிடும்.
தேர்தலை முன்னிறுத்தி மத்திய - மாநில அரசுகளிடமிருந்து எவ்வளவு சலுகைகளை
பெற முடியும் என கணக்கிட்டு பேரணி, தர்ணா, உண்ணாவிரதம், ஆர்ப் பாட்டம்
என்றெல்லாம் அரசு ஊழியர்கள், ஆசிரியர் சங்கங்கள், பொதுத்துறை நிறுவனங்களின்
தொழிற்சங்கங்கள் போராட்டத்தில் குதித்து வருகின்றன.
தேர்தல் நேரத்தில் நெருக்கடி கொடுத்தால் கேட்டது கிடைக்கும் என்ற
திட்டத்துடன் அரசால் நிறைவேற்றமுடியாத கோரிக்கை களைகூட எழுப்பி
வருகிறார்கள். தங்கள் பகுதிக்கான திட்டங்களை நிறைவேற்ற உள்ளாட்சி
பிரதிநிதிகள் ஒருபக்கம் அரசுக்கு நெருக்கடி கொடுக்கிறார்கள். சாலை,
குடிதண்ணீர், தெருவிளக்கு பிரச்சினைகளுக்காக தேர்தல் புறக்கணிப்பு என்ற
அஸ்திரத்தையும் பொதுமக்கள் கையில் எடுக்கிறார்கள்.
சமீபத்தில், முஸ்லிம்களுக்கான இட ஒதுக்கீட்டை அதிகரிக்கக் கோரி தமிழ்நாடு
தவ்ஹீத் ஜமாத் சார்பில் நெல்லையில் நடந்த போராட்டத்தில் ’’எங்களின்
கோரிக்கைகளை நிறைவேற்றுவதாக உத்தரவாதம் தரும் கட்சி களுக்கே ஆதரவளிப்போம்;
மற்றவர்கள் வாக்குக் கேட்டு எங்கள் பகுதிகளுக்குள் வரமுடியாது’’ என்று
எச்சரிக்கும் தொனியில் பேசினர்.
இதனிடையே, கூடங்குளம் அணு உலைக்கு எதிராக போராடிவரும் இடிந்தகரை மக்களும்
இந்தத் தேர்தலை கேடயமாகப் பயன்படுத்தி அணு உலை பிரச்சினைக்கு தீர்வுகாண
நினைக்கின்றனர். தேர்தல் நெருங்கும்போது கூடங்குளம் அணுஉலை எதிர்ப்பு
போராட்ட களமும் சூடேறலாம் என்கின்றனர். இதனிடையே, தேர்தலுக்கு முன்பாக
அரசின் விலையில்லா பொருட்களை மக்களுக்கு விநியோ கித்து முடித்துவிட
வேண்டும் என ஆளும்கட்சி தரப்பில் தீவிர முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளது.
ஏழைப் பெண்களுக்கு தாலிக்கு தங்கமும் உதவித் தொகையும் நிறைய இடங்களில்
வழங்கவில்லை. பயனாளிகளை ஒரே இடத்தில் திரட்டி திட்டத்தின் பலன்களை வழங்கி
பெண்களின் வாக்கு களைப் பெற திட்டமிடுகிறது ஆளும் கட்சி.
தேர்தல் கால போராட்டங்களை எதிர்கொள்ள அரசியல் கட்சிகளும் தயாராகிவிட்ட
நிலையில், இது தொடர்பாக நெல்லையைச் சேர்ந்த எழுத்தாளர் நாறும்பூ நாதன்
கூறியதாவது: எந்தக் காலத்திலும் நியாயமான கோரிக்கைகளை மக்கள் எழுப்புவதற்கு
உரிமை இருக்கிறது. கோரிக்கை நியாய மானதாக இருந்தால் அதை நிறை வேற்றித்
தரவேண்டியது அரசின் கடமை.
அதேநேரம், நிறைவேற்ற முடியாத கோரிக்கைகளை கேட்டு அரசை நிர்பந்திப்பது
ஏற்புடையதல்ல. வங்கி ஊழியர்கள் வரும் 10,11-ம் தேதிகளில் வேலைநிறுத்த
போராட்டத்தில் ஈடுபடவுள்ளனர். தங்களது அடிப்படை ஊதியத்தை உயர்த்தி வழங்கக்
கோரி அவர்கள் கடந்த இரண்டு ஆண்டுகளாகப் போராடி வருகிறார்கள். இதுபோன்ற
நியாயமான கோரிக்கைகளை நிச்சயம் நிறைவேற்றித்தான் ஆகவேண்டும்’’ என்றார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக