சென்னை உள்ளிட்ட சில இடங்களில், இன்று தேர்தல் தொடர்பான பயிற்சி கூட்டங்கள் நடக்கின்றன. அதே நேரத்தில் பிளஸ் 2 தேர்வுப் பணியும், ஆசிரியர்களுக்கு இன்று வழங்கப்பட்டு உள்ளது. எந்த பணிக்கு செல்வது எனத் தெரியாமல், ஆசிரியர்கள் குழப்பம் அடைந்துள்ளனர்.
பிளஸ் 2 தேர்வுப் பணியில், முதுகலை ஆசிரியர் ஈடுபடுத்தப்பட்டு வருகின்றனர். இன்று உயிரியல், வணிகக் கணிதம், வரலாறு மற்றும் தாவரவியல் தேர்வுகள் நடக்கின்றன. வழக்கம் போல், இன்றைய தேர்வுப் பணியிலும், முதுகலை ஆசிரியர் ஈடுபடுத்தப்பட்டு உள்ளனர். ஆனால் இன்று காலை, லோக்சபா தேர்தல் தொடர்பான பயிற்சிக்கு, சென்னை உள்ளிட்ட பல இடங்களில், தேர்தல் அதிகாரிகள் ஏற்பாடு செய்துள்ளனர்.
இதனால் இன்று காலை, தேர்தல் பயிற்சி கூட்டத்திற்கு செல்வதா, தேர்வுப் பணிக்குச் செல்வதா எனத் தெரியாமல் முதுகலை ஆசிரியர்கள் குழப்பம் அடைந்துள்ளனர். ஒவ்வொரு அரசு பள்ளியில் இருந்தும், 10 முதல் 15 ஆசிரியர் வரை, தேர்தல் பயிற்சி கூட்டங்களுக்கு அழைக்கப்பட்டு உள்ளனர்.
துறை பணிக்கு முக்கியத்துவம் அளித்தால், தேர்தல் அதிகாரிகள் தரப்பில் இருந்து, நடவடிக்கை வருமோ என ஆசிரியர்கள் பயப்படுகின்றனர். இதுகுறித்து, சென்னையைச் சேர்ந்த ஆசிரியர்கள் சிலர் கூறியதாவது:
தேர்தல் தொடர்பாக பயிற்சி நடக்கும் நாட்களை, முன்கூட்டியே, கல்வித்துறை மற்றும் தேர்வுத் துறைக்கு, தேர்தல் அதிகாரிகள் தெரிவிக்க வேண்டும். அப்படி தெரிவித்தனரா என, தெரியவில்லை. அப்படியே தெரிவிக்காவிட்டாலும், கல்வித்துறை அதிகாரிகளாவது, தேர்தல் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தி, இரு பணிகளும் குறுக்கிடாத அளவிற்கு உரிய நடவடிக்கை எடுத்திருக்க வேண்டும். ஆனால், எதையுமே செய்யவில்லை.
நாளை (இன்று) நடக்கும் தேர்தல் பயிற்சியை, தேர்வு நடக்காத, 21ம் தேதிக்கு தள்ளி வைத்தால், யாருக்கும் பாதிப்பு இருக்காது. பத்தாம் வகுப்பு தேர்வின் போதும், இதேபோன்ற குழப்பங்கள், பட்டதாரி ஆசிரியர்களுக்கு வரலாம். அதை தவிர்க்க முன்கூட்டியே, கல்வித்துறை அதிகாரிகள், உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு ஆசிரியர்கள் தெரிவித்தனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக