நடப்பு கல்வியாண்டில் வகுப்புகள் இன்னமும் முடிவடையாத நிலையில், ஊராட்சி ஒன்றிய துவக்கப் பள்ளிகளில் வரும் கல்வி ஆண்டிற்கான ஆங்கில வழிக் கல்வி மாணவர் சேர்க்கை துவக்கப்பட்டுள்ளது.
ஒன்றாம் வகுப்பு முதல் ஐந்தாம் வகுப்பு வரை துவக்கப் பள்ளியாக கருதப்படுகிறது. தமிழக, அரசு துவக்கப் பள்ளிகளில் கடந்த ஆண்டு ஆங்கில வழிக் கல்வி பாடத்திட்டம் அறிமுகம் செய்யப்பட்டது. இதன் படி, ஒன்றாம் வகுப்புக்கு மாணவர் சேர்க்கை நடந்தது. ஒரே பள்ளியில் ஒரு வகுப்பறையில் தமிழ்வழிக் கல்வியும், மற்றொரு வகுப்பறையில் ஆங்கில வழிப் பாடமும் நடத்தப்பட்டது. இந்நிலையில், ஆங்கில வழி கல்விக்கான மாணவர் சேர்க்கையை அதிகரிக்க அரசு துவக்கப் பள்ளிகளில் வரும் கல்வியாண்டுக்கான மாணவர் சேர்க்கை துவங்கியுள்ளது. நடப்பு கல்வியாண்டு முடிவதற்குள் வரும் கல்வியாண்டிற்கான மாணவர் சேர்க்கை துவக்கப்பட்டுள்ளது.
அந்த வகையில், ஒன்று மற்றும் இரண்டாம் வகுப்பு ஆங்கில வழிக் கல்வி மாணவர் சேர்க்கை நடப்பதாக அரசு துவக்க பள்ளிகள் முன் அறிவிப்பு வைக்கப்பட்டுள்ளது. தனியார் பள்ளிகளில் தமிழ் வழிக் கல்வி பெரும்பாலும் கிடையாது. அரசு பள்ளிகளில் மட்டும் தான் தமிழ் வழி மற்றும் ஆங்கில வழிக் கல்வி கற்றுக் கொடுக்கப்படுகிறது. ஆங்கில வழியில் தங்கள் குழந்தைகளை சேர்க்க விரும்பும் பெற்றோர்கள் தனியார் பள்ளிகளுக்கு செல்வதைத் தடுக்கும் வகையில், தனியார் பள்ளிகளில் மாணவர் சேர்க்கை துவங்கும் முன் அரசு பள்ளிகளில் சேர்க்கை துவங்கியுள்ளது.
கல்வியாண்டு ஜூன் மாதம் துவங்கி ஏப்ரல் மாதம் முடிவடைகிறது. இந்த ஆண்டு, மார்ச் மாதத்திலேயே துவக்கப் பள்ளிகளில் மாணவர் சேர்க்கை துவங்கியுள்ளது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக