நேற்று எமது ஒன்றியப் பள்ளி ஆசிரிய சகோதரியிடமிருந்து அவசர தொலைபேசி அழைப்பு. ஒரு குடிமகன்(அதீத போதை) பள்ளி வளாகத்திற்குள் வந்து காது கூசும் வார்த்தைகளுடன் வசைபாடுவதாகவும், தன் நிலை தடுமாறி அடிக்க ஓடி வருவதாகவும் தன் பாதுகாப்புக்கு மிகவும் அச்சுறுத்தலாகவும் உள்ளது என நடுக்கமான குரலுடன் நம்மிடம் பேசினார். உடனடியாக நாம் இயக்க தோழர்களுக்கு தகவல் தெரிவித்து 18கி.மீட்டருக்கு அப்பால் உள்ள அந்த சின்னஞ்சிறிய கிராமத்திற்கு விரைந்தோம். நாம் செல்லும் முன்பே நமது இயக்க பொறுப்பாளர்கள் சுமார் 10ற்கும் மேற்பட்டவர்கள் அப்பள்ளி வளாகத்திற்குள் குழுமி விட்டார்கள். உடனடியாக கிரமத்தின் முக்கியஸதர்கள் வரவழைக்கப்பட்டனர். நமது கடுமையான கோபத்தை கிராமப் பெரியவர்களிடம் பதிவு பண்ணினோம். கோவையிலிருந்து விடுமுறைக்கு வந்த அக்குடிமகன் நம் வருகையை அறிந்து கேவைக்கு தப்பிச் செல்ல பேருந்து நிறுத்தத்தில் காத்திருந்தபொழுது இயக்க தோழர்களால் பிடித்து வரப்பட்டார். நமது பொறுப்பாளர்களின் கடுமையான கோபத்தை அறிந்த அந்த நபர் தன்னை மன்னிக்கும்படியும், தன்னுடைய அதீத போதையால் தாம் நிலை தடுமாறி விட்டதாகவும், தன் செயலுக்கு வெட்கப்படுவதாகவும் நம்மிடம் மன்றாடினார். அந்த நபரின் மனைவியும் தன் குழந்தைகளின் எதிர்காலம் கருதி அவரை மன்னிக்கும்படி வேண்டினார். பின்னர் ஊர் பெரியவர்களின் முன்னிலையில் இந்த மாதிரி செயல் இனிமேல் எங்கள் கிராமத்தில் நடக்காது என்ற உறுதியான உடன்பாடின் அடிப்படையில் காவல்துறை நடவடிக்கையை நாம் கைவிட்டோம். பேருந்து வசதியில்லாத கிரமத்தில் பணியாற்றும் பல்லாயிரக்கணக்கான பெண் ஆசிரியர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்துவது சம்பந்தப்பட்ட கிராமத்தின் முக்கிய கடமையாகும். அதை செய்ய அக்கிராமம் தவறினால் அந்த இடத்தை தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி கட்டாயம் நிரப்பும். இயக்க உறுப்பினர்களின் பாதுகாப்பை தன் தலையாய கடமையாக இயக்கம் கருதி செயல்படும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக