மதுரை மாவட்டத்தில் வரும் கல்வியாண்டில் பள்ளிகளில், மாணவர் சேர்க்கை மற்றும் கட்டமைப்பு மேம்பாட்டுக்கு மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்து தலைமையாசிரியர்களுடன் கல்வி அலுவலர்கள் இன்று(ஏப்., 28) ஆய்வு நடத்துகின்றனர்.
இம்மாவட்டத்திலுள்ள அரசு மற்றும் உதவி பெறும் அனைத்து உயர்நிலை மற்றும் மேல்நிலை பள்ளி தலைமையாசிரியர்கள் இதில் பங்கேற்கின்றனர். 2014-15 கல்வியாண்டில் மாணவர் சேர்க்கை, பள்ளிகளில் கட்டமைப்பு வசதி மேம்பாடு மற்றும் மேற்கொள்ள வேண்டிய திட்டப் பணிகள் குறித்து முக்கிய ஆலோசனைகள் வழங்கப்படுகின்றன. அரசு பள்ளிகளின் வளர்ச்சியானது தலைமையாசிரியரின் செயல்பாட்டை பொறுத்து அமையும். அந்த வகையில், மாணவர்கள் சேர்க்கை, அரசு நலத் திட்டங்கள் வினியோகம் குறித்து தலைமையாசிரியர்களின் ஆலோசனைகளை பெற்று, கல்வியாண்டு துவங்குவதற்கு முன்கூட்டி பள்ளிக் கல்வி இயக்குனர் பார்வைக்கு அனுப்பப்படும்.
முதன்மை கல்வி அலுவலர் அமுதவல்லி தலைமையில் மதுரை, மேலூர், உசிலம்பட்டி கல்வி மாவட்ட அலுவலர்கள் பங்கேற்கின்றனர். தலைமையாசிரியர் "ஆப்சென்ட்" ஆக கூடாது என உத்தரவிடப்பட்டுள்ளது.
தலைமையாசிரியர் ஒருவர் கூறியதாவது: அரசு மற்றும் உதவி பெறும் பள்ளிகளில் மே 6 முதல் மாணவர் சேர்க்கை துவங்க உள்ளன. பள்ளிகளை மேம்படுத்த மாணவர்கள் சேர்க்கையை அதிகரிப்பது தொடர்பான ஆலோசனைகள் ஆய்வில் வழங்கப்படும். மேலும், முதன் முறையாக பத்தாம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 தேர்வில், தேர்வுத் துறை மேற்கொண்ட மாற்றங்கள் குறித்தும் கருத்துக்கள் கேட்கப்படும். தேர்வு முடிவு வெளியான பின் மாணவர்களின் சான்றிதழ்களை பள்ளிகளில் இருந்து "ஆன்லைன்" மூலம் வேலைவாய்ப்புக்கு பதிவு செய்வது, கோடைகால பயிற்சியாக சதுரங்கம் உள்பட பல்வேறு விளையாட்டுக்களை மாணவர்களுக்கு கற்றுத் தருவது போன்றவை குறித்து விவாதிக்கப்படும், என்றார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக