சிவகங்கையில் 5000க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் வாக்குச்சாவடி அலுவலர்களாக தேச பணியாற்றினர். இதில் சிவகங்கை மாவட்டத்தைச் சார்நத ஆசிரியர்கள் 80 சதவீதத்திற்கு மேல் பணியாற்றியதால் தொகுதிக்குள் பணியாற்றும் வாக்குச் சாவடியில் வாக்களிக்கும் விதமாக தேர்தல் பணிச் சான்று(EDC) வருவாய் துறையால் வழங்கப்பட்டது. அதற்கான முறையான படிவங்கள் முதல் தேர்தல் வகுப்பிலேயே அனைத்து ஆசிரியர்களும் தாங்கள் சார்ந்த சட்டமன்ற தொகுதியில் அளித்து விட்டனர். ஆசிரியர்களுக்கான EDC தேர்தல் பணிக்கு செல்லும்பொழுது அளிக்கப்படும் என வருவாய் துறை உறுதியளித்தது. தேர்தல் பணிக்கு அனைத்து ஆசிரியர்களும் 23.4.2014 அன்று தயாராக இருந்தபொழுது EDC வாங்க ஆசிரியர்கள் அங்குமிங்கும் அழைக்கழிக்கப்பட்டனர். குறிப்பாக சிவகங்கை மன்னர் மேல்நிலைப் பள்ளியில் ஆசிரியர்கள் தங்கள் ஜனநாயக கடமையை ஆற்றுவதற்கு தங்கள் EDC வாங்க அழைந்தது பரிதாபமாக இருந்தது. இறுதியல் மண்டல அலுவலர்கள் மூலம் தாங்கள் பணியாற்றும் வாக்குச் சாவடிக்கே சம்பந்தப்பட்ட ஆசிரியர்களின் EDC கொடுத்து விடப்படும் என வருவாய்துறை அலுவலர்களால் உறுதியளிக்கப்பட்டு வாக்குச் சாவடிகளுக்கு ஆசிரியர்கள் அனுப்பப்பட்டனர். கொளுத்தும் வெயிலில் வாக்குச் சாவடி சென்றடைந்த ஆசிரியர்கள் தங்கள் தேசிய பணியினை கடமை உணர்வுடன் ஆற்றினர். தங்கள் ஜனநாயக கடமை ஆற்றுவதற்கு தங்களின் தேர்தல் பணிச் சான்றினை(EDC) மண்டல அலுவலர்களிடம் கேட்டபொழுது அடுத்த முறை வரும்பொழுது கொண்டு வருகிறேன் என்ற பதிலை தவிர மாற்று பதில் இல்லை. நம்மை தொடர்பு கொண்டு ஆசிரியர்கள் தகவல் தெரிவித்த பின்பு தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி சார்பில் தொடர்ந்து மாவட்ட ஆட்சித் தலைவரிடம் தொலைபேசியில் தொடர்பு கொண்டு இது குறித்து புகார் தெரிவிக்கப்பட்டது. உடனடியாக நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்த ஆட்சியர் அதற்கான நடவடிக்கை எடுத்ததன் பேரில் பாதிக்கும் மேற்பட்ட ஆசிரியர்களுக்கு EDC வழங்கப்பட்டது. ஆனால் காரைக்குடி தொகுதியிலிருந்து தேர்தல் பணியில் ஈடுபட்ட ஆசிரியர்களுக்கு வாக்குபதிவு நிறைவடையும் வரையில் EDC வழங்கப்படவில்லை. இது ஆசிரியர்கள் மத்தியில் மிகப்பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியது. தேர்தல் ஆணையம் ஒவ்வொருவரும் வாக்களிக்க வேண்டிய அவசியத்தை ஊடகங்கள் வழியாக, குறுந்தகவல்கள் வழியாக, சுவரொட்டிகள் வாயிலாக வலியுறுத்தி வந்த நிலையில் ஏன் இந்த அவலம்?. இன்னும் சொல்லப் போனால் ஒவ்வொரு ஆரம்ப - நடுநிலைப்பள்ளிகளிலும் வாக்களிக்கும் விழிப்புணர்வு முகாம் நடத்தி மாணவர்களின் பெற்றோர்களிடம் கையொப்பம் பெற்று தேர்தல் ஆணையத்திடம் ஒப்படைத்த ஆசிரியர்களின், இந்த தேசத்தின் மிகப்பெரிய தேர்தலை வெற்றிகரமாக நடத்தி முடித்த ஆசிரியர்களின் வாக்களிக்கும் உரிமையை பறித்தது யார் செய்த சதி? இதற்கு தேர்தல் ஆணையம் விளக்கமளிக்க வேண்டாமா?. மாவட்ட நிர்வாகத்தை தொடர்பு கொண்டால் EDC -i பொறுத்தவரை இனிமேல் ஒன்றும் செய்ய இயலாது என்ற பதிலே வருகிறது. தபால் வாக்கும் மாவட்டத்திற்குள் பணியாற்றினால் கொடுக்க இயலாது என்கிறது தேர்தல் ஆணையம். இதற்கு விடிவே கிடையாதா? ஒவ்வொரு தேசிய பணியிலும் தன்னை முழுமையாக ஈடுபடுத்தி கொள்ளும் ஆசிரியர் இனத்திற்கு இந்த நாட்டின் ஜனநாயக கடமைகளில் பங்கெடுக்க உரிமையில்லையா?. வாக்காளர் படடியலில் பெயர் இருந்தும், வாக்குச்சாவடி அலுவலராக நியமிக்கப்பட்ட ஒரு காரணத்திற்கான வாக்களிக்கும் உரிமையை இழந்து நிற்கும் எம் ஆசிரியர் இனத்தின் உரிமையை மீட்டு தருவது யார்?. இதற்கு காரணமான அதிகாரி தண்டிக்கப்பட வேண்டாமா? தேர்தல் ஆணையம் மௌனம் காப்பது நியாயமா? எப்போது விடியல்? எங்கள் உரிமையை பறித்த அதிகாரிகளை தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி வன்மையாக கண்டிக்கிறது. இதற்கு நிரந்தர தீர்வு காண தேர்தல் ஆணையத்தை இயக்கம் கேட்டுக்கொள்கிறது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக