ஆரவாரம் இல்லை...கவர்ச்சி அறிவிப்புகளும் இல்லை. பொள்ளாச்சியில் அமைதியாக நடந்து முடிந்தது அந்த தேர்தல். தேர்தல் என்றாலே மக்களை கவர அரசியல்வாதிகள் பல கவர்ச்சியான அறிவிப்புகளை கொண்ட தேர்தல் அறிக்கையினை வெளியிடுவதும், பல்வேறு சலுகைகளை வாக்குறுதிகளாக வீசியும், மக்களிடம் ஓட்டு சேகரிப்பது வழக்கம். ஆனால் இதுபோன்று எவ்வித நடைமுறைகளும் இல்லாமல், ஒரு தேர்தல் பொள்ளாச்சி அருகே சப்தமின்றி நடந்துள்ளது. பொள்ளாச்சி தாளக்கரை நல்லிக்கவுண்டன்பாளையம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி மாணவர்களிடம் தேர்தல் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையிலும், ஓட்டளிப்பதின் அவசியத்தை விளக்கும் வகையிலும் மாணவர் தேர்தல் நடத்தப்பட்டது. இதில், ஆறாம் வகுப்பு முதல் எட்டாம் வகுப்பு வரையுள்ள மாணவர்கள் 11 பேர் 'போட்டியிட்டனர்'. அவர்களுக்காக சின்னங்களும் ஒதுக்கப்பட்டிருந்தன. கடந்த இரண்டு நாட்களாக வாக்காளர்களான, மற்ற மாணவர்களிடம் அவர்கள் ஓட்டு கேட்டனர். 'வாக்குறுதி அளிக்கலாம்; ஓட்டு அளித்தால் சலுகைகள் மற்றும் மிட்டாய் வாங்கித்தருவோம் என்றெல்லாம் ஆசை காட்டினால் வேட்பாளர் தகுதி நீக்கம் செய்ப்படுவார்' என அறிவிக்கப்பட்டது. மாணவர்களிடம் ஓட்டுகளின் முக்கியத்துவம் குறித்து ஆசிரியர்கள் விளக்கினர். 'வெற்றி பெற்றால் என்ன செய்வோம்' என்று மற்ற மாணவர்களிடம் வலியுறுத்தினர். இறுதியாக, நேற்று தேர்தல் நடத்தப்பட்டது. வாக்காளர்களுக்கு ஓட்டுச்சீட்டாக பள்ளி பெயர் மற்றும் பள்ளி மாணவர் பதிவெண் அச்சிடப்பட்ட சீட்டு வழங்கப்பட்டது. ஓட்டுச்சாவடி தலைமை அலுவலராக ஆசிரியர் நாகராஜ் செயல்பட்டார். ஓட்டுச்சாவடி அலுவலர் நிலை எண் 1,2,3 என அனைத்திலும் மாணவர்களே அமர வைக்கப்பட்டிருந்தனர். ஓட்டுப்பதிவு மையத்தின் சுவரில், வேட்பாளர் பெயர், வகுப்பு மற்றும் சின்னம் ஒட்டப்பட்டிருந்தது. எந்த வித அசம்பாவிதமோ, சப்தமோ, சலசலப்போ இல்லாமல், மாணவர்கள் அமைதியாக வரிசையில் நின்று ஓட்டு போட்டனர். 'வாக்காளரின்' விரலில் மை தடவப்பட்டது. ஓட்டளிப்பது, ஓட்டுச்சாவடி அமைப்பு போன்றவை உண்மையான தேர்தல் நடப்பது போன்றே அமைக்கப்பட்டிருந்தது. இத்தேர்தல் குறித்து தலைமையாசிரியர் சந்திரா கூறியதாவது: மாணவர்களிடம் தேர்தல் குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், மாணவர் தேர்தல் நடத்த திட்டமிட்டோம். முறையான தேர்தலாக நடத்த வேண்டும் என்ற எண்ணத்தில், திட்டமிட்டு செயல்படுத்தினோம். 3ம் வகுப்பு முதல் எட்டாம் வகுப்பு வரை, 125 பேர் ஓட்டளித்தனர். 85 சதவீதம் ஓட்டுகள் பதிவாகின. இரண்டு நாட்களுக்கு பின் முடிவுகள் அறிவிக்கப்படும். வெற்றி விழா கூட்டமும் நடத்தப்படும். வெற்றி பெற்றவர் யார் என்பதை 'சஸ்பென்ஸ்' ஆக வைக்க வேண்டும் என்பதற்காக, இரண்டு நாட்கள் கழித்து முடிவுகள் அறிவிக்கப்படும். இவ்வாறு, அவர் கூறினார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக