பள்ளி திறந்து ஒரு மாதம் முடிய உள்ள நிலையில் தற்போது நடத்தப்படும் பணியிட மாறுதல் கலந்தாய்வால் ஆசிரியர்களுக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இது தொடர்பாக ஆசிரியர் பயிற்றுனர்கள் 100க்கும் மேற்பட்டோர், நேற்று சென்னையில் உள்ள கல்வித்துறை வளாகத்தில் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
ஆர்ப்பாட்டம்
ஆசிரியர் பணியிட மாறுதல் கலந்தாய்வு மே இறுதிக்குள் நடத்தினால், புதிய பணியிடங்களில் சேர்வதற்கு ஏற்ப தேவையான ஏற்பாடுகளை ஆசிரியர்களால் செய்ய முடியும். ஆனால், பெரும்பாலும் ஜூன், ஜூலை மாதங்களில் தான் கலந்தாய்வு நடத்தப்படுகிறது. இந்த ஆண்டு, லோக்சபா தேர்தல் காரணமாக தாமதமாக இப்போது கலந்தாய்வு நடத்துவதாக கல்வித்துறை வட்டாரம் தெரிவிக்கிறது.
எனினும், தற்போது நடந்து வரும் கலந்தாய்வால் பல ஆசிரியர்கள் பாதிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. ஆசிரியர் பயிற்றுனர்கள் 100க்கும் மேற்பட்டோர், நேற்று சென்னையில் உள்ள கல்வித்துறை வளாகத்தில் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
இதுகுறித்து, ஸ்ரீபெரும்புதூர் வட்டாரத்தில் பணிபுரியும் ஆசிரியை ஒருவர் கூறியதாவது: மாநிலம் முழுவதும் 4,000 ஆசிரியர் பயிற்றுனர்கள் பணியாற்றி வருகிறோம். எட்டாம் வகுப்பு வரையிலான ஆசிரியர்களுக்கு பயிற்சி அளிப்பது, கல்வி திட்ட பணிகளை மேற்பார்வை செய்வது எங்களின் பணி. எங்களுக்கு நாளை (இன்று) பணி மாறுதல் கலந்தாய்வு நடக்கிறது.
பள்ளி திறந்து ஒரு மாதம் முடியப்போகிறது. குழந்தைகளுக்கு இந்த ஆண்டுக்கான கல்வி கட்டணத்தை செலுத்தி விட்டோம். இப்போது திடீரென எங்களை பணியிட மாறுதல் செய்தால் எங்கள் குழந்தைகளை வேறு பள்ளியில் எப்படி சேர்க்க முடியும்? குடும்பத்தை மாற்றுவது உள்ளிட்ட பல பணிகளை செய்ய வேண்டி உள்ளன.
அனுமதிக்க வேண்டும்
ஒரு வட்டாரத்தில் மூன்று ஆண்டுகளுக்கு மேல் பணி செய்ய முடியாது என்பதால், தற்போது பணியிட மாறுதல் கலந்தாய்வு நடத்துவதாக அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். பிற ஆசிரியர் பல ஆண்டுகளாக ஒரே இடத்தில் பணி செய்வதை அனுமதிக்கும் கல்வித்துறை, எங்களையும் அனுமதிக்க வேண்டும். விருப்பம் இல்லாதவர்களை பணியிட மாற்றம் செய்யக்கூடாது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக