திண்டுக்கல் அரசு கல்லூரி பாடப்பிரிவை டி.ஆர்.பி. (ஆசிரியர் தேர்வு வாரியம்) ஏற்காததால் அங்கு பயிலும் மாணவிகளுக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
கொடைக்கானல் அன்னை தெரசா பல்கலை கட்டுப்பாட்டில் திண்டுக்கல் எம்.வி.எம். அரசு மகளிர் கலை கல்லூரி இயங்கி வருகிறது. இங்குள்ள பி.எஸ்.சி. விலங்கியல் (தொழிற்கல்வி) பாடப்பிரிவில் ஆண்டிற்கு 32 மாணவிகள் படிக்கின்றனர்.இங்கு படித்த 100 பேர் ஆசிரியர் தகுதித்தேர்வு எழுதியுள்ளனர். தேர்வில தேர்ச்சி பெற்றபோதும், பி.எஸ்.சி. விலங்கியல் (தொழிற்கல்வி) பாடப்பிரிவு, பி.எஸ்.சி. விலங்கியல் பாடத்திற்கு சமமானதற்கான அரசாணை இல்லை என்று கூறி, அவர்களுக்கு ஆசிரியர் பணி தர டி.ஆர்.பி. மறுத்துவிட்டது. இதையடுத்து, பாதிக்கப்பட்டவர்கள் திண்டுக்கல் கலெக்டர் வெங்கடாசலத்திடம் புகார் தெரிவித்தனர்.
பாதிக்கப்பட்டவர்கள் கூறுகையில், "பி.எஸ்.சி. விலங்கியல் பாடப்பிரிவும், பி.எஸ்.சி. விலங்கியல் (தொழிற்கல்வி) பாடப்பிரிவும் சமமான படிப்பு என கல்லூரி நிர்வாகம் தெரிவித்ததால் படித்தோம். ஆனால், பி.எஸ்.சி. விலங்கியல் (தொழிற்கல்வி) பாடப்பிரிவை டி.ஆர்.பி. ஏற்க மறுக்கிறது. இதுகுறித்து கல்லூரி மற்றும் அன்னை தெரசா பல்கலையில் முறையிட்டும் நடவடிக்கை இல்லை" என்றனர்.கல்லூரி முதல்வர் பத்மலதா கூறுகையில், "அரசாணை வெளியிடுவது தொடர்பாக அரசுக்கும், பல்கலைக்கும் அறிக்கை அனுப்பியுள்ளோம்" என்றார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக