சேலம்: அனைவருக்கும் இடைநிலைக்கல்வித் திட்டத்தில் நேரடியாக பள்ளிகளுக்கு நிதியினை "ஃபண்ட் ட்ரான்ஸ்ஃபர்" செய்வதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
மத்திய அரசின் நிதியுதவியுடன், தமிழகத்தில் அனைவருக்கும் இடைநிலைக்கல்வி திட்டம் செயல்படுத்தப்படுகிறது. இதில் உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளிகளின் கட்டமைப்புகளை மேம்படுத்தவும், ஆசிரியர் நியமனம், ஆசிரியர் பயிற்சி மற்றும் பள்ளி பராமரிப்புக்கு மானிய நிதி உள்ளிட்டவை வழங்கப்படுகிறது.
நிதி ஒதுக்கீட்டை பொருத்தவரை, மத்திய அரசு மாநிலத்துக்கு ஒதுக்கிய பின், மாவட்டங்களுக்கு பிரித்து அனுப்பப்படும். பின் இவை பள்ளிகளுக்கு காசோலை மூலம் வழங்கப்படுவதும், செலவழித்தமைக்கான பில், ரசீதுகளை கொண்டு ஆடிட் செய்வதும் என்பது நடைமுறையாக உள்ளது.
தற்போது, ஒதுக்கீடு செய்யும் நிதி எந்த அளவுக்கு பயன்படுத்தப்பட்டுள்ளது எனவும், எங்கு தேங்கியுள்ளது என, கண்காணிக்கும் வகையில், அனைத்து பள்ளிகளும் இன்டர்நெட் வங்கி மூலம் இணைக்கப்பட உள்ளது. இதற்காக, பள்ளியின் அக்கவுண்ட் வைத்துள்ள வங்கியின் விபரம், ஐ.எஃப்.எஸ்.சி. கோடு எண், கணக்கு எண் உள்ளிட்ட விவரங்கள் சேகரிக்கப்பட்டு, மத்திய அரசின் இணையதளத்தில் பதிவு செய்யப்படுகிறது.
இதன் மூலம், பள்ளிக்கு வழங்க வேண்டிய கட்டிட நிதி, மானியம் உள்ளிட்ட அனைத்து நிதி ஒதுக்கீடும் "ஃபண்ட் ட்ரான்ஸ்ஃபர்" முறையில் நேரடியாக பள்ளியின் வங்கிக்கணக்குக்கு வரவு வைக்கப்பட உள்ளது. அதில் எந்த அளவுக்கு செலவழித்துள்ளது என்பது உள்ளிட்ட அனைத்து விவரங்களையும், திட்ட அலுவலர்கள் எங்கிருந்து வேண்டுமானாலும் தெரிந்து கொள்ளவும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக