மாவட்டத்தில் தொடர்ந்து விடுமுறை எடுக்கும் 475 மாணவிகள் குறித்து பெற்றோரிடம் தகவல் தெரிவிக்க கல்வித்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துள்ளனர்.
கடலூர் மாவட்டத்தில் இளம்பெண்கள் கடத்தல், காணாமல் போவது, பள்ளி நேரத்தில் மாணவ-மாணவிகள் பொது இடங்களில் சுற்றித் திரியும் சம்பவம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. குடும்ப கவுரவத்தை கருதி பலர் போலீசில் புகார் கொடுக்க முன்வராத நிலையில் மாவட்டத்தில் பெண் கடத்தல் மற்றும் காணாமல் போவது தொடர்பான வழக்கு அதிகளவில் பதிவாகி வருகிறது. அனைத்திற்கும் மேலாக சிதம்பரம் அடுத்த எம்.ஜி.ஆர். திட்டில் உள்ள வாய்க்காலில் கடந்த 10ம் தேதி நிர்வாண நிலையில் மாணவி ஒருவர் கொலை செய்யப்பட்டு கிடந்த சம்பவம் பெற்றோர் மத்தியில், தங்கள் பிள்ளைகளின் பாதுகாப்பு குறித்து அச்சம் எழுந்துள்ளது. இந்நிலையில் கல்வித்துறை அதிகாரிகள் இந்த கல்வியாண்டு துவங்கியதிலிருந்து பள்ளிக்கு அடிக்கடி விடுமுறை எடுக்கும் மாணவிகள் குறித்து பள்ளிகள் வாரியாக விபரம் சேகரித்தனர். அதில் டீன் ஏஜ் பருவத்தில் உள்ள 9ம் வகுப்பு முதல் 12ம் வகுப்பு வரையிலான மாணவிகள் 475 பேர் அதிக அளவில் விடுமுறை எடுத்திருப்பது தெரிய வந்துள்ளது. இவர்கள் பெற்றோர்களுக்கு தெரிந்தே விடுமுறை எடுக்கிறார்களா அல்லது பெற்றோர்களுக்கு தெரியாமல் பள்ளிக்கு வருவதை கட் அடித்துவிட்டு வெளியில் செல்கின்றனரா என்ற சந்தேகம் எழுந்துள்ளது. எனவே அடிக்கடி விடுமுறை எடுக்கும் மாணவிகளின் பெற்றோர்களுக்கு தகவல் தெரிவித்து, அவர்களை பள்ளிக்கு வரவழைத்து உண்மை நிலையை அறிந்துக் கொள்வதோடு, மாணவிகளை தொடர்ந்து கண்காணிக்குமாறு தலைமை ஆசிரியர்களை கல்வித்துறை அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக