சென்னை: ஆசிரியர் தேர்வு வாரியத்தால் 2013ல் நடத்தப்பட்ட தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு பணி நியமன ஆணை வழங்காதது குறித்து சட்டசபையில் நேற்று எம்.எல்.ஏ. பாலபாரதி கவன ஈர்ப்புத் தீர்மானம் கொண்டு வந்தார்.
இதற்கு பதில் அளித்து பள்ளி கல்வி அமைச்சர் வீரமணி பேசியதாவது: ஆசிரியர் தகுதித் தேர்வு வாரியம் மூலம் தேர்ந்தெடுக்கப்படும் ஆசிரியர்களுக்கு தேர்ச்சிக்கான மதிப்பெண் 60 சதவீதமாக நிர்ணயிக்கப்பட்டு இருந்தது.
இட ஒதுக்கீட்டை சேர்ந்தவர்கள், மாற்றுத் திறனாளிகளுக்கு தேர்ச்சி மதிப்பெண்ணில் 5 சதவீத மதிப்பெண்கள் குறைக்கப்பட்டது. இச்சலுகையால் 2013ல் நடந்த இரு தேர்வுகளை எழுதிய 43,183 பேர் கூடுதலாக வெற்றி பெற்றனர். மொத்தமாக ஆசிரியர் தகுதி தேர்வில் வெற்றி பெற்ற 72,701 பேருக்கு சான்றிதழ் சரிபார்ப்பு பணிகள் முடிந்துள்ளன.
இதற்கிடையில் தகுதி தேர்வுக்கான கேள்விகள் தொடர்பாக வழக்குகள் தொடரப்பட்டன. இதனால் ஆசிரியர் பணியிடங்களை நிரப்ப முடியவில்லை. இப்போது இந்த வழக்குகளில் அரசுக்கு சாதகமாக தீர்ப்புகள் வந்துள்ளதால் ஆசிரியர்களை பணி நியமனம் செய்ய நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.
இன்னும் இரு வாரங்களில் 10 ஆயிரம் பணியிடங்களுக்கு ஆசிரியர்கள் நியமிக்கப்படுவர். இவ்வாறு அவர் கூறினார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக