மதுரை: ஆசிரியர் பட்டய பயிற்சி படிப்பு சேர்க்கைக்கான கவுன்சிலிங் மாணவர்கள் அதிகம் பங்கேற்காததால் எதிர்பார்த்த நேரத்திற்கு முன்பே முடிந்து விடுகிறது. இப்படிப்பு மீது மாணவர்களுக்கு ஆர்வம் இல்லாததால் மாவட்டத்தில் உள்ள அனைத்து இடங்களும் நிரம்புமா என்ற கேள்வி எழுந்துள்ளது.
2014-15 கல்வியாண்டில் மாவட்ட கல்வி மற்றும் ஆசிரியர் பயிற்சி மையங்களில் ஆசிரியர் பட்டய பயிற்சி படிப்பில் சேர்வதற்கான கவுன்சிலிங் ஜூலை 7 துவங்கி 12ம் தேதி வரை நடக்கிறது. மதுரையில் முதல் நாளில் நடந்த கவுன்சிலிங்கில் சிறப்புப் பிரிவில் (மாற்றுத்திறனாளி மாணவர்கள்) 5 பேருக்கு அழைப்பு விடுக்கப்பட்டது. இருவர் மட்டும் பங்கேற்றனர்.
இரண்டாவது நாளான நேற்று தொழிற்கல்வி, கலை மற்றும் அறிவியல் பிரிவு மாணவர்கள் 38 பேர் அழைக்கப்பட்டனர். 18 பேர் மட்டும் பங்கேற்றனர். இரு நாட்களில் 20 இடங்கள் நிரம்பியுள்ளது. இந்நிலை நீடித்தால் மாவட்டத்தில் 269 இடங்களும் நிரம்புமா என்ற கேள்வி எழுந்துள்ளது. மாவட்டத்தில் மூன்று அரசு உதவி பெறும் ஆசிரியர் பயிற்சி மையங்கள் மற்றும் 16 தனியார் மையங்கள் உள்ளன.
மாவட்ட கல்வி மற்றும் ஆசிரியர் பயிற்சி மைய ஆசிரியர் ஒருவர் கூறியதாவது: ஆசிரியர் பட்டய பயிற்சி படிப்பு முடித்து பல ஆயிரம் பேர் வேலைக்காக காத்திருக்கின்றனர். அந்த எண்ணிக்கையில் காலியிடங்கள் ஏற்பட இன்னும் பல ஆண்டுகள் ஆகும். இப்படிப்பில் இந்தாண்டும் மாணவர்களுக்கு ஆர்வம் இல்லை. மாணவர்கள் பெரும்பாலும் பொறியியல் மற்றும் பட்டப் படிப்புகளில் சேர்வதில் ஆர்வம் காட்டுகின்றனர் என்றார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக