தமிழகத்தில் ஆசிரியர் பணிக்கு தகுதி தேர்வில் தேர்ச்சி கட்டாயம் என்ற சட்டம் அமல்படுத்தப்பட்டுள்ளது. கடந்த 2 ஆண்டுகளாக தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள் மட்டுமே ஆசிரியர் பணிக்கு நியமிக்கப்பட்டு வருகின்றனர். இதற்காக ஆசிரியர் தேர்வு வாரியம் ஆண்டுதோறும் தகுதி தேர்வை நடத்துகிறது. ஆனால், பல்வேறு குளறுபடி காரணமாக தொடரப்படும் வழக்குகளால் முடிவுகளை வெளியிடுவதில் பல்வேறு சிக்கல்கள் எழுகின்றன. குறிப்பாக கடந்த ஆண்ட ஆகஸ்ட்டில் நடத்தப்பட்ட டிஇடி தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டன. தொடர்ந்து இட ஒதுக்கீட்டுதாரர்களுக்கு 5% மதிப்பெண் சலுகையை அரசு அறிவித்தது. இதன்மூலம் கூடுதல் மதிப்பெண்கள் பெற்று தேர்ச்சி பெற்றவர்களையும் சேர்த்து பட்டியல் வெளியானது. ஆகஸ்ட் மாதம் நடந்த தேர்வில் மட்டும் 72 ஆயிரம் பேர் தேர்ச்சி பெற்று ஆசிரியர் பணிக்கு தகுதி பெற்றுள்ளனர்.
தமிழக பள்ளிகளில் 20 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளன. இதற்கிடையே வெயிட்டேஜ் மதிப்பெண் முறை, விடைகளில் குளறுபடி உள்ளிட்டவற்றை எதிர்த்து சென்னை உயர் நீதிமன்றத்தில் பல வழக்குகள் தொடரப்பட்டன. நீதிமன்ற உத்தரவுப்படி புதிய வெயிட்டேஜ் முறை அறிவிக்கப்பட்டது. தேர்வுக்கான விடை களை எதிர்த்து தொடரப்பட்ட 70க்கும் அதிகமான மனுக்கள் மீது உயர் நீதிமன்ற நீதிபதி நாகமுத்து இறுதி உத்தரவு பிறப்பித்துள்ளார். அதில் டிஆர்பி வெளியிட்ட விடைகள் சரியானவை என தெரிவித்துள்ளதன் மூலம் தேர்வு பட்டியலை வெளியிட தடை நீங்கியது. எனவே புதிய அரசாணை அடிப்படையில் விரைவில் தேர்வு பட்டியலை வெளியிட டிஆர்பி நடவடிக்கையில் இறங்கி உள்ளது. 72 ஆயிரம் பேர் ஆசிரியர் பணியில் சேர தகுதியுடன் இருந்தாலும் முதல் கட்டமாக 20 ஆயிரம் ஆசிரியர் பணியிடம் வரை நிரப்ப வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. எனவே, இம்மாதம் புதிய ஆசிரியர்கள் நியமனத்திற்கான பட்டியலை கல்வித் துறை வெளியிடும் என்று தெரிகிறது
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக