மாணவர் சேர்க்கையின் போது, கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படுவது தொடர்பாக அரசுப் பள்ளித் தலைமையாசிரியர்களுக்கு பள்ளிக் கல்வித் துறை எச்சரிக்கை விடுத்துள்ளதை அடுத்து, கூடுதலாக பெற்ற கட்டணங்களை அரசு பள்ளி பெற்றோரிடம் திரும்ப அளித்துள்ளது.
நாமக்கல் மாவட்டத்தில் அனைத்து அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் மாணவர் சேர்க்கை தீவிரமாக நடைபெற்று வருகிறது. தனியார் பள்ளிகளின் கல்விச் சூழலுக்கு ஏற்ப அரசுப் பள்ளிகளிலும் வசதிகளை பெருக்க வேண்டிய கட்டாய சூழல் ஏற்பட்டுள்ளது.
இருப்பினும், பள்ளிகளுக்குத் தேவையான வசதிகள், கூடுதல் ஆசிரியர்கள் நியமனத்துக்கு பள்ளிக் கல்வித் துறையிலிருந்து போதிய உத்தரவுகள் வராததை அடுத்து பல அரசுப் பள்ளிகளில் பெற்றோர்-ஆசிரியர் கழகம் சார்பில் பள்ளி வளர்ச்சி நிதி என்ற பெயரில் மாணவர் சேர்க்கையின் போது ஆயிரக்கணக்கான தொகை வசூலிக்கப்படுவது தெரிய வந்துள்ளது. அதன்படி, அரசுப் பள்ளிகளில் மாணவர் சேர்க்கையின் போது கூடுதல் கட்டணம் வசூலிப்பது தெரிய வந்தால் தலைமையாசிரியர்கள் சஸ்பெண்ட் செய்யப்படுவர் என பள்ளிக் கல்வித் துறை கடுமையாக எச்சரித்துள்ளது.
இதுகுறித்து பள்ளிக் கல்வித் துறை சார்பில், அனைத்து அரசு உயர், மேல்நிலைப் பள்ளித் தலைமையாசிரியர்களுக்கு அனுப்பப்பட்டுள்ள சுற்றறிக்கையில், பள்ளிகளில் மாணவர்கள் சேர்க்கையின் போது மாணவர்களிடம் கூடுதலாக கட்டணங்கள் ஏதும் வசூல் செய்யக்கூடாது.
மாணவர் சேர்க்கையின் போது, மாணவர்களிடம் பெற்றோர்-ஆசிரியர் கழக நிதியாக ரூ.50 மட்டுமே வசூலிக்க வேண்டும் என ஏற்கனவே அறிவுறுத்தப்பட்டுள்ளது.
எனினும், பெரும்பாலான பள்ளிகளில் கூடுதல் கட்டணங்கள் வசூலிப்பதாக புகார்கள் வந்த வண்ணம் உள்ளது.
அவ்வாறு மாணவர்களிடம் கூடுதலாக தொகை பெற்றிருந்தால் அந்தத் தொகையை சம்பந்தப்பட்ட மாணவர்களுக்கு உடனடியாக திருப்பியளிக்க வேண்டும்.
மேலும், மாணவர் சேர்க்கையின் போது கூடுதல் கட்டணங்கள் வசூலிப்பதாக புகார் பெறப்பட்டு நிரூபிக்கப்பட்டால் சம்பந்தப்பட்ட பள்ளித் தலைமையாசிரியரை தாற்காலிகப் பணிநீக்கம் செய்யவும் நடவடிக்கை எடுக்கப்படும்.
எனவே, மாணவர்கள் சேர்க்கையின் போது எவ்வித புகாருக்கும் இடமளிக்காமல் விதிகளை பின்பற்ற வேண்டும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அருகேயுள்ள ஆர். புதுப்பாளையம் அரசு மேல்நிலைப் பள்ளியில் சில வகுப்பு மாணவர்களிடம் இருந்து வசூலிக்கப்பட்ட அதிகப்படியான பள்ளிக் கட்டணம், பெற்றோர்கள் வரவழைக்கப்பட்டு அவர்களிடம் திரும்ப அளிக்கப்பட்டது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக