தமிழகத்தில் தொடக்கக் கல்வி மற்றும் பள்ளிக் கல்வித் துறையின் கீழ் பணியாற்றும் தொடக்க மற்றும் உயர் தொடக்கப் பள்ளி ஆசிரியர்களுக்கு வழங்கப்படும் பல்வேறு பணியிடைப் பயிற்சிகளை, வேலை நாள்களாகக் கணக்கிட அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இது குறித்து, தமிழ்நாடு ஆரம்பப் பள்ளி ஆசிரியர் கூட்டணி சிவகங்கை மாவட்டச் செயலர் முத்துப்பாண்டியன் கூறியதாவது: அனைவருக்கும் கல்வி இயக்கத்தின் மூலம் ஆசிரியர்களுக்கு பல்வேறு பணியிடைப் பயிற்சிகள் வழங்கப்படுகின்றன. இதில், குறுவள மைய அளவில் ஆண்டுக்கு 10 நாள்கள் பயிற்சி வழங்கப்படுகின்றன.
கடந்த ஆண்டுகளில் இப்பயிற்சி நாள்கள், பணி நாள்களாகக் கணக்கில்கொள்ளப்பட்டன. ஆனால், இந்தக் கல்வி ஆண்டில் பல்வேறு குழப்பங்கள் நீடித்து வருவதால், பணி நாள்களை கணக்கிடுவதில் தலைமையாசிரியர்கள் சிரமப்படுகின்றனர்.
மேலும், கடந்த கல்வி ஆண்டுகளில் பள்ளி வேலை நாள்களை, அந்தந்த மாவட்டத் தொடக்கக் கல்வி அலுவலர்களே தயாரித்து வந்தனர்.
இதில், ஆண்டுக்கு 210 பள்ளி வேலை நாள்களுடன், 10 குறு வளமையப் பயிற்சி நாள்களையும் சேர்த்து 220 பணி நாள்களாகக் கணக்கிடப்பட்டது. ஆனால், தற்போது மாநிலம் முழுவதும் பள்ளிக் கல்வித் துறை மற்றும் தொடக்கக் கல்வித் துறை இயக்கங்கள் மூலம் பள்ளி வேலை நாள்கள் வெளியிடப்படுகின்றன.
இதில், பல்வேறு மாவட்டங்களில் குறுவள மையப் பயிற்சி நாள்கள், பணி நாள்களாகவோ அல்லது ஈடு செய்யும் தற்செயல் விடுப்பு நாள்களாகவோ கணக்கிடப்படுகின்றன.
சிவகங்கை மாவட்டத்திலும் ஒரு சில ஒன்றியங்களில ஈடுசெய்யும் சிறப்பு தற்செயல் விடுப்பு அனுமதிக்கப்படுகிறது. பல ஒன்றியங்களில் இவ்விடுப்பு மறுக்கப்படுகிறது.
சில ஒன்றியங்களில் பட்டதாரி ஆசிரியர்களுக்கு மட்டும் தற்செயல் விடுப்பு வழங்கப்பட்டு, மற்ற ஆசிரியர்களுக்கு அனுமதி மறுக்கப்படுகிறதாம். இது பள்ளியை நிர்வாகம் செய்யும் தலைமை ஆசிரியர்களை குழப்பமடையச் செய்கிறது.
எனவே, மற்ற மாவட்டங்களில் உள்ளதுபோல் ஈடுசெய்யும் தற்செயல் விடுப்போ அல்லது பணி நாளாகவோ அறிவிக்கவேண்டும். இல்லையெனில், வரும் 14.3.2015 இல் நடக்கவிருக்கும் குறுவள மையப் பயிற்சிக் கூடங்களின் முன்பாக கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் எனத் தெரிவித்துள்ளார்.
தினமணி செய்தி வெளியீடு - 11.3.2015
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக