சென்னை: சமச்சீர் கல்வியை உடனே அமல்படுத்தாதற்கு அரசிற்கு கண்டனம் தெரிவிக்கும் வகையில் தமிழகம் முழுவதும் உள்ள பள்ளி, கல்லூரி மாணவர்கள் வரும் 26-ம் தேதி ஆர்ப்பாட்டம் நடத்துகின்றனர்.
சமச்சீர் கல்வியை நடப்பு கல்வியாண்டிலேயே அமல்படுத்த வேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. ஆனால் தமிழக அரசு இதை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்தது.
இந்த மனுவை விசாரித்த உச்ச நீதமன்றம் உயர் நீதிமன்றத்தின் தீர்ப்புக்கு இடைக்காலத் தடைவிதிக்க மறுத்துவிட்டது. மேலும், இந்த ஆண்டிலேயே சமச்சீர் கல்வியை அமல்படுத்துமாறும், வரும் ஆகஸ்ட் 2-ம் தேதிக்குள் அனைத்து மாணவர்களுக்கும் சமச்சீ்ர் பாடப்புத்தகங்களை வினியோகிக்குமாறும் அது உத்தரவிட்டது.
இந்நிலையில் சமச்சீர் கல்வியை உடனே அமல்படுத்தாதற்கு கண்டனம் தெரிவித்து பள்ளி, கல்லூரி மாணவர்கள் வரும் 26-ம் தேதி தமிழகம் முழுவதும் ஆர்ப்பாட்டம் நடத்துகின்றனர்.
மேலும் நீதிமன்ற உத்தரவை மீறும் வகையில் பல தனியார் பள்ளிகள் மெட்ரிகுலேஷன் புத்தகங்களை வழங்குவதைக் கண்டித்தும் இந்த ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது.
மாணவர்கள் அனைவரும் வகுப்புகளைப் புறகக்கணித்துவிட்டு இந்த ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடுவார்கள் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக