திருச்சி: திருச்சி மேலசிந்தாமணியில் மாநகராட்சி துவக்கப்பள்ளி எந்நேரமும் இடிந்து விழலாம் என்ற நிலையில் உள்ள கட்டிடத்தின் மாடியில், கழிப்பிட வசதியின்றி, துர்நாற்றம் வீசும் சூழ்நிலையில் இயங்கி வருவது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திருச்சி சத்திரம் பஸ்ஸ்டாண்ட் அருகேயுள்ள மேலசிந்தாமணியில் மாநகராட்சி துவக்கப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இங்கு 30 மாணவ, மாணவியர் ஒன்றாம் வகுப்பு முதல் ஐந்தாம் வகுப்பு வரை படிக்கின்றனர். தலைமை ஆசிரியை, ஆசிரியை என இருவர் பணியாற்றி வருகின்றனர். இந்த பள்ளி கடந்த 1955ம் ஆண்டு கட்டப்பட்ட பழமையான கட்டிடத்தில் மாடியில் செயல்பட்டு வருகிறது. கட்டிடத்தின் கீழே மாநகராட்சி பிரசவ மருத்துவமனை செயல்பட்டு வருகிறது. மருத்துவமனைக்கும், பள்ளிக்கும் ஒரே நுழைவாயிலில் தான் உள்ளே செல்ல வேண்டும். குறுகலான மாடிப்படிகள் வழியாகத்தான் பள்ளிக்கு செல்ல வேண்டும். மேலே ஒரு பெரிய அறையில் தான் எவ்வித தடுப்பும் இல்லாமல் ஒன்று முதல் ஐந்தாம் வகுப்பு வரை வகுப்புகள் நடத்தப்படுகிறது. பள்ளியில் படிக்கும் குழந்தைகள் சிறுநீர் கழிக்கவும் எவ்வித வசதியும் இல்லை. இதனால் அவர்கள் தெருவோரங்களில் தான் சிறுநீர் கழிக்கும் அவலநிலையில் உள்ளனர். கட்டிடத்தின் சுவர்கள் எந்நேரமும் இடிந்து விழலாம் என்ற நிலையில் உள்ளது. மேலும் மழைக்காலங்களில் கட்டிடத்தின் மேலுள்ள ஆஸ்பெட்டாஸ் ஷீட் மற்றும் மரப்பலகையை மீறி வகுப்பறையில் மழைநீர் கொட்டும்.அப்போது மாணவர்கள் ஏதாவது ஒரு மூலையில் ஒதுங்கி நின்று கொள்ள வேண்டும். பள்ளியின் நுழைவாயிலிருந்து மாடிக்கான படிக்கட்டில் ஏறும் இடத்திலிருந்து ஒருவித துர்நாற்றம் வீசுகிறது. அது பள்ளி முழுவதும் பரவியுள்ளதால், மாணவர்கள் அந்த துர்நாற்றத்தை பொறுத்துக் கொண்டு தான் படிக்கும் மோசமான சூழ்நிலையில் உள்ளனர். குடிநீருக்காக அக்கம்பக்கத்தினரை நாடவேண்டிய அவலத்தில் மாணவர்கள் உள்ளனர். கும்பகோணம் தீவிபத்துக்கு பின் விசாலமான, பல வழியுள்ள கட்டிடங்களில் தான் பள்ளிகள் செயல்பட வேண்டும் என்ற அரசின் உத்தரவு மேலசிந்தாமணி பள்ளி விஷயத்தில் கடைபிடிக்கப்படவில்லை. கும்பகோணம் பள்ளி தீ விபத்தில் தீ பற்றி எரிந்து இறந்த மாணவர்களை விட, பள்ளியிலிருந்து வெளியேற முடியாமல் நெரிசலில் சிக்கி தீப்பிடித்து எரிந்து இறந்த மாணவர்கள் அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது. திருச்சி மேலசிந்தாமணி மாநகராட்சி துவக்கப்பள்ளி மிகவும் அவலமான நிலையில் செயல்பட்டு வருவது குறித்து மாநகராட்சி கமிஷனர் பால்சாமிக்கும் பலமுறை பள்ளி நிர்வாகிகளும், அப்பகுதி கவுன்சிலர் செந்தில்நாதனும் புகார் அளித்தும், இதுவரை எவ்விதமான உருப்படியான நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதுகுறித்து அப்பகுதி காங்கிரஸ் கவுன்சிலர் செந்தில்நாதன் கூறியதாவது: பள்ளி நிலைகுறித்து ஒவ்வொரு முறையும் கவுன்சில் கூட்டத்தில் பேசியதான் விளைவாக கடந்த இரண்டு ஆண்டுக்கு முன் மாநகராட்சி கல்வி நிதியிலிருந்து 25 லட்சம் ரூபாய் புதிய கட்டிடம் கட்ட ஒதுக்கப்பட்டது. ஆனால், அதை கட்ட எந்த ஒப்பந்தக்காரரும் டெண்டர் எடுக்கவில்லை என்று மாநகராட்சி நிர்வாகம் இப்போது வரை கூறி வருகிறது. முதலில் நிறைய மாணவர்கள் பள்ளியில் படித்தனர். அடிப்படை வசதி ஏதும் இல்லாததால் இப்போது பலர் வேறு பள்ளிகளுக்கு சென்று விட்டனர். மாநகராட்சி பள்ளி விஷயத்தில் கவனக்குறைவாக இருப்பது, அசம்பாவிதத்துக்கு தான் வழிவகுக்கும். இவ்வாறு அவர் கூறினார். பள்ளி அவலநிலைகுறித்து மாநகராட்சி மேயர் சுஜாதாவிடம் கேட்டபோது, ""அந்த பள்ளிக்கு புதிய கட்டிடம் கட்ட 25 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. பணி செய்ய ஒப்பந்தக்காரர்கள் கிடைக்கவில்லை. நாங்களும் தீவிர முயற்சி எடுத்து வருகிறோம். விரைவில் பள்ளி பிரச்னைக்கு தீர்வு காணப்படும். பள்ளிகள் விஷயத்தில் அதிக அக்கறை காட்டி வருகிறோம்,'' என்றார். மாணவர்களின் அடிப்படை வசதியான தனி வகுப்பறை, கழிப்பிட வசதி, கற்றோட்டமான வகுப்பறை, குடிநீர் வசதி, ஆபத்து காலங்களில் அவசரமாக வெளியே பலவழிகள் என்று எவ்வித அடிப்படை வசதியுமின்றி செயல்படும் மேலசிந்தாமணி மாநகராட்சி துவக்கப்பள்ளிக்கு விடிவுகாலம் பிறக்குமா?.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக