சென்னை : தமிழக அரசின் நடவடிக்கையை கண்டித்தும் உடனடியாக சமச்சீர் கல்வியை அமல்படுத்த கோரியும் தமிழ்நாட்டில் படிக்கும் பல்லாயிரக்கணக்கான பள்ளி மாணவர்கள் மற்றும் கல்லூரி மாணவர்கள் வரும் 26ம் தேதி வகுப்பை புறக்கணித்து பேரணி மற்றும் ஆர்ப்பாட்டங்கள் நடத்தவுள்ளனர்.
இது குறித்து இந்திய மாணவர் சங்க மாநில தலைவர் கனகராஜ், பொதுசெயலாளர் ராஜ்மோகன் ஆகியோர் நேற்று வெளியிட்ட அறிக்கையில் சமச்சீர் கல்வியை இந்த ஆண்டே நடைமுறைப்படுத்த வேண்டும். சமச்சீர் கல்விக்கான பொது பாடப்புத்தகங்களை ஜூலை 22க்குள் பள்ளிகளுக்கு வழங்க வேண்டும் என சென்னை உயர் நீதிமன்றம் தமிழக அரசுக்கு உத்தரவிட்டது. இது எல்லோராலும் வரவேற்கப்பட்ட தீர்ப்பு. ஆனாலும் இந்த தீர்ப்புக்கு தடைகோரி உச்ச நீதிமன்றத்திற்கு சென்றது தமிழக அரசு. தமிழக அரசின் பிடிவாத போக்கினால், குழப்பமான சூழல் உருவானது. பெற்றோர், மாணவர்கள் கடும் மன உளைச்சலால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனுவை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்தும், சமச்சீர் பாடப்புத்தகங்களை ஆகஸ்ட் 2க்குள் வழங்க வேண்டுமென காலநீடிப்பு வழங்கியும் உத்தரவிட்டுள்ளது. இறுதி விசாரணை 26ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
மாணவர்களின் நலனை புறக்கணித்ததோடு தொடர்ந்து சமச்சீர் கல்வியை சீர்குலைக்கும் நடவடிக்கையில் இந்த அதிமுக அரசு ஈடுபட்டுள்ளது. அரசின் நடவடிக்கையை கண்டித்தும் முழுமையான சமச்சீர் கல்வியை அமல்படுத்த கோரி தமிழ்நாட்டில் பல்லாயிரக்கணக்கான பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்கள் வகுப்பை புறக்கணித்து பேரணி மற்றும் ஆர்ப்பாட்டங்களை நடத்தவுள்ளனர் என்று அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக