பத்தாம் வகுப்பு வரை அனைத்து வகுப்புகளுக்கும் இந்த ஆண்டிலிருந்தே சமச்சீர் கல்வியை அமல்படுத்த வேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்றம் ஒரு அதிரடியான தீர்ப்பை நேற்று வழங்கியது.
உயர் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியதுதான் தாமதம், தமிழக அரசின் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் சி.வி.சண்முகம் இரவோடு இரவாக டெல்லிக்கு பறந்துவிட்டார். எதற்காக உயர் நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்வதற்காக. அநேகமாக இன்று மாலையே தமிழக அரசு மேல்முறையீடு செய்துவிடும் என்று தெரிகிறது.
தமிழக அரசை மேல்முறையீட்டு மனுவை தன்னிச்சையாக விசாரித்து தீர்ப்பளிக்க கூடாது என்று சமச்சீர் கல்வி திட்டத்துக்கு ஆதரவாக சில அமைப்புகள் உச்ச நீதிமன்றத்தில் இன்று கேவிட் மனுவை தாக்கல் செய்துவிட்டது.
ஒரு பக்கம் சமச்சீர் கல்வியை தமிழக அரசு நடைமுறைப்படுத்த வேண்டும் என்று தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் கேட்டுக் கொண்டும் செவிடன் காதில் ஊதிய சங்குபோலத்தான் இருக்கிறது தமிழக அரசு.
கோடை விடுமுறை கழிந்து 15 நாட்களுக்கு பிறகுதான் தமிழக அரசு பள்ளிகளை திறந்தது. திறந்தும் மாணவர்களுக்கு இன்னும் புத்தகங்கள் வழங்கப்படவில்லை. அப்படியே வழங்கப்படும் புத்தகம் பழைய பாடத்திட்டமா? சமச்சீர் கல்வி திட்டமா? என்ற குழப்பத்தில் மாணவர்கள், பெற்றோர்கள் இருக்கிறார்கள்.
இப்படிப்பட்ட சூழ்நிலையில் தி.மு.க. அரசு கொண்டு வந்த ஒரே காரணத்திற்காக சமச்சீர் கல்வியை எதிர்ப்பது எந்த விதத்தில் நியாயம் என்றும் பலரது கேள்வியாக உள்ளது.
உயர் நீதிமன்ற தீர்ப்பை கேட்டு மகிழ்ச்சி அடைந்தவர்களுக்கு மேலும் கவலையை ஏற்படுத்தி இருக்கிறது தமிழக அரசின் மேல்முறையீட்டு முடிவு.
சமச்சீர் கல்வியை நிறுத்துவதுதான் தமிழக அரசின் நோக்கம் என்று உயர் நீதிமன்றம் அளித்த தீர்ப்பின் ஒரு பகுதி கீழே, ''சமச்சீர் கல்வியின் தரம், அதை அமல்படுத்தும் முறை பற்றி ஆய்வு செய்ய வேண்டும் என்று தான் நிபுணர் குழுவுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. இந்த ஆண்டு அமல்படுத்தலாமா? என்றெல்லாம் ஆய்வு செய்ய உத்தரவிடவில்லை. ஆனால் அந்த உத்தரவை தவறாக எடுத்துக் கொண்டு, நிபுணர் குழு அறிக்கை அளித்துள்ளது. சமச்சீர் கல்வியை இந்த ஆண்டு அமல்படுத்த முடியாது என்று அதில் கூறியுள்ளனர். நிபுணர்களின் இந்த அறிக்கை, இந்த வழக்கில் தமிழக அரசு எடுத்துள்ள நிலையைத்தான் பிரதிபலிக்கிறது'' என்று உயர் நீதிமன்றம் அளித்த தீர்ப்பில் சுட்டிக்காட்டி உள்ளது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக