சிவகங்கை, ஆக. 3:சிவகங்கை மாவட்டத்தில் 72 அரசுப் பள்ளிகளில் 6, 7, 8-ம் வகுப்பு மாணவிகளுக்கு 2 மாத தொழிற்திறன் பயிற்சி ஆகஸ்ட் 4-ம் தேதி முதல் நடைபெறுகிறது.அனைவருக்கும் கல்வித் திட்டத்தின் கீழ் தமிழகம் முழுவதும் 6, 7, 8-ம் வகுப்பு மாணவிகளுக்கு தொழிற்திறன் பயிற்சி வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது. இதன்படி, செயற்கை நகை தயாரிப்பு, கம்ப்யூட்டர் சாம்பிராணி, சாக்பீஸ் தயாரிப்பு, பொம்மைகள் தயாரிப்பு, கண்ணாடியில் ஓவியம் வரைதல், பினாயில் தயாரிப்பு, காகித கவர் தயாரிப்பு ஆகிய பயிற்சிகள் 2 மாதங்களுக்கு தினமும் 1 மணி நேரம் வீதம் வழங்கப்பட உள்ளன.இப்பயிற்சிக்கென சிவகங்கை மாவட்டத்தில் 72 அரசுப் பள்ளிகள் தேர்வு செய்யப்பட்டுள்ளன. இப் பள்ளிகளில் பயிற்சி அளிப்பதற்காக 72 தன்னார்வலர்கள் தேர்வு செய்யப்பட்டு அவர்களுக்கு சிவகங்கை மருதுபாண்டியர் மேல்நிலைப் பள்ளியில் புதன்கிழமை பயிற்சி அளிக்கப்பட்டது. இவர்களுக்கு மாதம் ரூ.1000 ஊதியமாக வழங்கப்படும்.இப்பயிற்சியை மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் எஸ்.செல்லம் தொடங்கி வைத்தார். உதவித் திட்ட அலுவலர் அப்துல் சத்தார், மாவட்ட ஒருங்கிணைப்பாளர் ராமகிருஷ்ணன் ஆகியோர் உடனிருந்தனர். கருத்தாளர்களாக சிவங்கை பெண்கள் மேல்நிலைப் பள்ளியைச் சேர்ந்த சாந்தி, இளையான்குடி வட்டார வள மைய ஆசிரியர் பயிற்றுநர் தானியலட்சுமி ஆகியோர் கலந்துகொண்டனர்.இப்பயிற்சியை அளிப்பதற்காக ஒவ்வொரு பள்ளிக்கும் தலா ரூ.10 ஆயிரம் நிதி வழங்கப்படுகிறது. இந்த நிதியில் பயிற்றுநர் ஊதியம் ரூ.2 ஆயிரம் போக எஞ்சிய ரூ.8 ஆயிரத்தில் செய்முறை உபகரணங்களை வாங்கி சுழற்சி முறையில் அவற்றை பயன்படுத்த உத்தரவிடப்பட்டுள்ளது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக